சுற்றம்

(அஜிதனின் திருமண அழைப்பிதழை முடிந்தவரை அனுப்பினேன். ஆனால் ஒரு தடுமாற்றம் நடுவே வந்தது. ஓர் எழுத்தாளராக என் மேல் மதிப்பு கொண்டவர்களுக்கு அவ்வாறு அனுப்புவதன் வழியாக அவர்கள் வந்தேயாகவேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறேனா? அது சங்கடமாக ஆகிறதா? ஆகவே இப்போது பொதுவில் போடுகிறேன். வரமுடியும் நிலையில் இருப்பவர்கள் நண்பர்கள், வாசகர்கள் அனைவரையும் வரவேற்கிறேன்)

அஜிதனின் திருமணத்திற்கு வரவிருப்பவர்கள் மூன்று வகை. முதல்வகை அழைப்பே விடுக்காதவர்கள். அப்படி எண்ணமே வரவில்லை. அவர்களில் பாதிப்பேரிடம் அருண்மொழி கூப்பிட்டு எல்லா வேலைகளையும் ஒப்படைத்து, மேற்கொண்டு வேலைகளை ஏவிக்கொண்டிருந்தாள். பலசமயம் எதுவுமே சொல்லாமல், அவர்களே ஊகித்து ஏன் அந்த வேலையைச் செய்யவில்லை என்று கோபம் வேறு. நான் வழக்கம்போல திருமண வேலைகள்  எதிலுமே தலையிடாமல் இலக்கியச் சேவையில் இருந்தேன். நமக்கெதற்கு தேவையில்லா வம்பு? ‘நாமுண்டு நம் சோலியுண்டுன்னுட்டு இருக்கோம்’.

இரண்டாம் வகையினருக்கு வாட்ஸப் அல்லது மின்னஞ்சல் அழைப்புகளுடன் ஒரு வரி நானே சொன்னேன். சிலருக்கு தபாலில் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. இதில் பல ஐயங்கள். ஓருடல் ஈருயிர் ஆன சுதா- சீனிவாசன் தம்பதிகளில் சுதாவை அழைத்தபின் சீனிவாசனுக்கு அழைப்பு தேவையா? கிருஷ்ணனிடம் கேட்டேன். சுதாவை அழைத்தால் கால்வாசி சீனிவாசனுக்கு போய்விடும், அவர் ‘லெவலுக்கு’ அதுவே கொஞ்சம் அதிகம் என்று சொன்னார். அழைப்பின் எடை தாளாமல் அவர் கஷ்டப்படுவார். செல்வேந்திரனை அழைத்தபின் திருக்குறளரசியை தனியாக அழைக்கவேண்டுமா? செல்வேந்திரன்தான் என் சார்பில் பாதிபேரை அழைக்கிறார், ஆகவே அவரே திருவுக்கும் அழைப்பு விட்டுக்கொள்வார் என அருண்மொழியிடம் சொன்னேன்.

மூன்றாம் வகைதான் நேரில் சென்று அழைக்கவேண்டியவர்கள். பெரும்பாலும் சொந்தக்காரர்கள் அவர்கள். சொந்தக்காரர்களை திருமணத்துக்கு அழைப்பதென்பது எல்லா ஊர்களைப்போலவே எங்களூரிலும் கொஞ்சம் சிக்கலான ‘கொடுக்கல் வாங்கல்’ ஏற்பாடு. கணிசமான திருமணங்களுக்கு நான் செல்ல முடிந்ததில்லை. சினிமா வேலைகள் அல்லது வெளிநாட்டுப் பயணங்கள். சினிமாவில் நம் நேரம் என்பது முப்பது பேரின் நேரத்துடன் தொடர்புடையது. அவர்கள் சிலர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சில லட்சங்கள் ஊதியம் பெறுபவர்கள். ஆனால் எல்லா திருமணத்திற்கும் அருண்மொழி சென்றிருப்பாள். என் அண்ணா இல்லாமல் எங்கள் ‘சாதிசன’த்தில் ஒருவர் திருமணம் செய்யவே முடியாது. ஒரு பாட்டிக்கு முட்டுவலி என்றால், ஒரு குடும்பத்தில் கோர்ட் விவகாரம் என்றால் அண்ணாதான் முதலில் சென்று நின்றாகவேண்டும். இரண்டாவதாகச் சென்றால்கூட மனஸ்தாபம் ஏற்படும்.

ஆகவே சிக்கல் இல்லை. அருண்மொழி, அண்ணா இருவர் பின்னாலும் மங்கலான சிரிப்புடன் நின்றிருந்தால் போதும். பொதுவாக அண்ணா முன் நான் ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை. அவரிடமும் சரி, அவர் இருக்கையில் பிறரிடமும் சரி. அது ஐம்பது அறுபதாண்டுக்கால வழக்கம்.( என்னைப்பற்றி ‘அவனுக்கு என்ன மண்ணாங்கட்டி தெரியும், பேசுவதற்கு. மடப்பயல்’ என ஶ்ரீ பாலசங்கரப் பிள்ளை கருதுவதற்கு அறுபதாண்டுக்கால நிரூபணங்கள் உள்ளன. யுவன் சந்திரசேகரும் அப்படி கருதுவது ஏன் என்று புரியவில்லை). அண்ணா ஆண்டுக்கு நாலைந்து முறை வெவ்வேறு திருமணங்களுக்கான அழைப்புகளுடன் பயணம் செய்பவர். ஆகவே எப்போது கிளம்பி, எங்கே எந்த வழிகளினூடாக சுருக்கமாக எல்லா வீடுகளையும் ‘கவர்’ செய்யலாம் என ஒரு திட்டவட்டமான வரைபடம் அவர் உள்ளத்தில் உண்டு.

காலை ஏழுமணிக்கு சரத்சந்திரனின் காரில் கிளம்பினோம். என் அண்ணன் மகனும், என் தீவிர வாசகனும், அஜிதனுக்குப் பின் எங்கள் குடும்பத்தில் ‘வீடுநிறைந்து’ காத்திருக்கும் ‘எலிஜிபிள் பேச்சிலரும்’, வங்கி ஊழியருமான சரத்தே வண்டியை ஓட்டினான். குமரிமாவட்டத்தை ஒரே நாளில் சுழன்று முடித்தோம். நாகர்கோயில் வாத்தியார்விளையில் என் தாய்மாமாவின் மகள் குமாரி இல்லத்தில் தொடங்கி வடிவீஸ்வரம், நாகராஜா கோயில் பகுதிகள் என சுழன்றோம். என் அக்கா பிரேமகுமாரியின் மகன் மதுசூதனன் என்னால் கடுமையாக அடிக்கப்பட்டு ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கப்பட்டவன். என் எழுத்துக்களை வாசிப்பான். அப்படியே மறைந்த என் பிச்சை அண்ணாவின் மகன்கள், மகள்களின் இல்லங்கள்.

அதன்பின் ஆளூர்,நட்டாலம், திருவிதாங்கோடு, பாகோடு, அருமனை, குலசேகரம், திருவட்டார், மாத்தூர் என சுழன்று அந்தியில் முடித்தோம். குமரிமாவட்டத்தில் நிலம் விலைமதிப்பு மிக்கது. ஆகவே அதை சாலையாக ஆக்கி வீணடிப்பதில்லை. குமரிமாவட்ட நிலத்தில் 90 சதவீத நிலம் வீடுகளாகத்தான் இருக்கிறது என நினைக்கிறேன். சரத் ஸ்டீரிங்கை சுழற்றிச் சுழற்றி வண்டியை ஓட்டியது அவனுக்கு ‘கம்ப்யூட்டர்கேம்’ களில்  இருந்த தேர்ச்சியை காட்டியது.

வீடுவீடாக அழைப்பது அலுப்பூட்டும் வேலை என பலரும் பயமுறுத்தியிருந்தனர். ஆனால் எனக்கு அது மிக மகிழ்ச்சியும் நிறைவும் அளித்த பயணமாக இருந்தது. ஒன்று, நீண்ட நாட்களாகச் சந்திக்காமல் இருந்த பெரியவர்களை, குறிப்பாக என் பெரியம்மாக்கள், சித்திகள், மாமிகளை பார்த்தது. பலரும் எண்பது தொண்ணூறு கடந்து நடமாட்டம் குறைந்து வீடுகளில் வாழ்கின்றனர். சென்று பார்த்தால்தான் உண்டு. என் பெரியம்மாதான் என் அம்மாவுடன் பிறந்தவர்களில் இன்று நிறைவாக இருப்பவர். 98 வயது ஆகிறது. உற்சாகமாக நலமாக நட்டாலத்தில் அம்மாவின் குடும்ப வீட்டில் இருக்கிறார். என்னை கண்டதும் மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டே இருந்தார். கையால் என் உடலெங்கும் வருடி வருடி மகிழ்ந்தார்.

பெரியம்மா அருண்மொழியிடம் என்னை ‘குழிமடியன்’ என்றார். (படுசோம்பேறி என்று பொருள். வளைக்குள் பதுங்கி சோம்பி இருக்கும் உயிர்) ‘முதல்முறை இங்கே வந்தான். நாலைந்துநாள் இருப்பதாகச் சொன்னான். ஆனால் மறுநாள் இங்கே குடும்ப கோயிலை எடுத்துக் கட்டும் வேலை தொடங்கியது. அண்ணன்கள் எல்லாம் செய்யும் வேலையை கைகட்டி வேடிக்கை பார்த்தான். தன்னையும் வேலைசெய்யச் சொல்வார்களோ என மதியம் வாக்கில் ஐயம் வந்தது. உடனே நைஸாகக் கிளம்பி ஆரியநாட்டுப் பெரியம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டான்’ என்றார். 1978 ல் நடைபெற்ற நிகழ்வு. அரைநூற்றாண்டு ஆகப்போகிறது. ‘அவங்க சொல்றது அஜியைப்பத்திச் சொல்றது மாதிரி அப்டியே இருக்கே’ என அருண்மொழி ஐயப்பட்டாள். ‘அப்டியா?’ என்று கேட்டேன்.

சொந்தக்காரர்களின் இல்லங்களில் மூத்த தலைமுறைக்கு என்னை நன்றாக தெரிந்திருந்தது – நாற்பதாண்டுகளுக்கு முந்தைய என்னை. இளைய தலைமுறையினருக்கு சர்க்கார், 2.0, பொன்னியின் செல்வனுக்கு பிந்தைய என்னை தெரிந்திருந்தது. நடுவே நிகழ்ந்த என்னை பெரும்பாலும் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. என்னை அண்ணா அறிமுகம் செய்தார். பலர் உடனே அருண்மொழியை அடையாளம் கண்டுகொண்டார்கள். அதுவே போதும் என மேற்கொண்டு உசாவல்கள் நிகழ்ந்தன. அவ்வப்போது இல்லங்களில் டீ. பலவகையான நினைவுகூரல்கள். எவர் எங்கே இருக்கிறார்கள், என்னென்ன செய்கிறார்கள் என்னும் விரிவான தகவல்கள். நான் தலைக்குமேல் தூக்கிப்போட்டு பிடித்த பொத்துப்பொத்து குழந்தைகளுக்கெல்லாம் குழந்தை இருக்கும் செய்தி திகைப்படையச் செய்தது. 

மறுநாள் காரிலேயே திருவனந்தபுரம் ஜில்லாவை சுற்றிவந்தோம். திருவனந்தபுரம் செல்லும் வழியில் என் அம்மாவின் அக்கா வழியில் வந்த பெரியம்மா மகனும், எங்கள் சகோதரர் நிரையில் பெரியபெரியம்மாவின் மகன் கிருஷ்ணபிள்ளைக்கு அடுத்தபடியாக மூத்தவரும், என் நல்ல வாசகரும், என் ஒவ்வொரு எழுத்துக்கும் கூப்பிட்டு வாழ்த்துச் சொல்பவருமான பிரசாத் அண்ணனை பாலராமபுரம் சென்று காரில் ஏற்றிக்கொண்டோம். அவர் ஐ.எஸ்.ஆர்.ஓ ஊழியராக இருந்து ஓய்வுபெற்றவர். கொஞ்சம் முதுகுவலி உண்டு என்றாலும் என் அண்ணாவுக்காக காரில் உடன் வந்தார். அவர் மகன் திருவனந்தபுரத்தில் புதுவீடு கட்டி குடியேறி சிலநாட்களே ஆகியிருந்தன. பிரசாத் அண்ணா இப்போது ஓய்வுக்கால வாழ்க்கையை இந்தியா முழுக்கச் சுற்றியலைந்து அனுபவிக்கும் உளநிலையில் அதற்கான குழுக்களுடன் இருக்கிறார்.

மலையின்கீழ் என்னும் ஊருக்குச் சென்றோம். அங்கேதான் அம்மாவின் அண்ணா ஆரியநாடு கேசவபிள்ளையின் குடும்பம் இருந்தது. அவர் மகன் கோபி எனக்கு எப்போதும் மிக அணுக்கமானவர். அவர் ஆணையிட்டதனால்தான் கேரளக் கல்லூரிகளுக்குச் செல்வதில்லை என்னும் சபதத்தை உதறி திருவனந்தபுரம் கல்லூரிக்குச் சென்று பேசினேன். மலையின்கீழ் மாமனின் மனைவி  வாழும் என் மாமிகளில் மூத்தவர். 90 வயது கடந்துவிட்டது. நினைவு கொஞ்சம் முன்பின் இருந்தாலும் நலமாக இருந்தார். நான் அவரை பற்பல ஆண்டுகளுக்குப்பின் பார்க்கிறேன். ஓர் அலைபோல எத்தனையோ நினைவுகள்.

அப்படியே திருவனந்தபுரம். அங்கே என் பெரியம்மா மகனும் ஓய்வுபெற்ற காவலதிகாரியும் இப்போது முழுநேர ஆலயத்திருப்பணி செய்பவருமான சசி அண்ணாவை சந்தித்தேன். அங்கிருந்து வேங்கவிளை. என் இளைய தாய்மாமா மணி என்னும் காளிப்பிள்ளை மறைந்து ஓராண்டு கடக்கவில்லை. மாமி இருந்தார். அவருக்கு மாமாவின் பென்ஷன் தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு மாற்றி அளிக்கவேண்டும். அதை என் அண்ணாதான் பார்த்துக்கொண்டிருந்தார். மாமிக்கு பஞ்சபாண்டவர் என அழைக்கப்பட்ட ஐந்து மகன்கள். ஐந்துபேருடன் அக்காலத்தில் உள்ளூர் குன்றில் ஏறியிருக்கிறேன். ஒருவன் இப்போது இல்லை. அவர்களின் மனைவிகள் எல்லாம் எனக்கு அடுத்த தலைமுறை. இனிய பெண்கள் .

அங்கிருந்து ஆரியநாடு. என் பெரியம்மா மகன் ராதாகிருஷ்ணன் என்னும் ராதன் ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்று டிவியில் ஈரான் மீது பாகிஸ்தான் குண்டு போடும் பழைய செய்தியை பிரியமாக பார்த்துக்கொண்டிருந்தான். அப்படியே திருவட்டாரில் அண்ணாவின் ஆப்த நண்பர் முருகேசனின் இல்லம். என் அப்பாவின் தங்கையின் மகன்கள் திருவட்டார் ஆலயம் அருகே வாழ்கின்றனர். அவர்கள் இல்லத்திற்குச் சென்றேன் . அவர்களின் பெண்களுக்கு பொன்னியின் செல்வன் பிடித்திருந்ததாக அறிந்தேன். பலருக்கு நான் தாத்தா முறை. அவர்களுக்கு அப்படி என்னை அழைக்க கொஞ்சம் தயக்கம் இருந்தது.

என்  அண்ணி ரமாதேவியின் அப்பா அம்மா வாழும் மாத்தூர் சென்றோம்.  அண்ணியும் அருண்மொழியும் முப்பத்திரண்டு ஆண்டுக்காலமாக நீடிக்கும் அணுக்கமான நட்பு கொண்டவர்கள். அருண்மொழிக்கு அந்த இல்லம் அடிக்கடிச் செல்வதனால் மிகநன்றாகப் பழக்கம். ஓரகத்தியர் நடுவே உள்ள இந்த அபாயகரமான நட்பு குறித்து நானும் அண்ணனும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்கிறோம். திருவட்டார் திரும்பியதும் அண்ணா களைப்புடன் அவர் இல்லத்தில் சாய்ந்து அமர்ந்து அடுத்து அழைக்கவேண்டியவர்களின் குறும்பட்டியலை தயாரிக்க நான் ‘எனக்கென்ன’ என்று அமர்ந்திருந்தேன்.

அந்த அளவு இல்லை என்றாலும் கோவை அழைப்புகள் முழுக்க நடராஜன் துணையுடன். நடராஜன் என் சார்பில் எல்லாரையும கைகூப்பி அழைக்க அருகே நான் ‘வழிமொழிகிறேன் ஐயா’ என்னும் பாவனையில் நின்றேன். சென்னையில் அழைப்புகளில் செல்வேந்திரனை அதேபோல வழிமொழிந்தேன். 

இந்த பயணங்களில் என்னை மிகக்கவர்ந்தவை வீடுகள். விதவிதமான இல்லங்கள். ஒவ்வொன்றிலும் அங்கே வாழ்க்கை நிகழ்வதனால் உருவான ஓர் ஆளுமை இருந்தது. மனிதர்களைப் போலவே ஒரு முகம். சில வீடுகளுக்கு காலையில் சென்றோம். வீடுகள் விழித்தெழுந்த உற்சாகத்துடன் இருந்தன. மதியம் ஒருவகை இனிய சோம்பல் மயக்கத்தில். பின் மதியம் திருவனந்தபுரம் பகுதிகளில் கொஞ்சம் நீராவி அதிகரித்து மழை வரப்போவதுபோல் இருக்கும். அந்தியில் சட்டென்று குளிர்காற்று மலையில் இருந்து வீச ஆரம்பிக்கும். ஒவ்வொரு இல்லத்திலும் சற்றுநேரம் வாழ்ந்து வாழ்ந்து மீண்டேன்.  

என் உறவினர்கள் அனேகமாக அனைவருமே சென்ற இருபதாண்டுகளில் புதிய இல்லங்களை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். பெரிய குடும்பவீடுகள் தோட்டங்களுக்கு நடுவே இருந்தன என நினைவு, இப்போது அந்நிலம் பங்கிடப்பட்டு உடன்பிறந்தவர்களின் பெரிய இல்லங்கள் வரிசையாக இருந்தன. எல்லா இல்லங்களிலும் கார்கள். ஆனால் இன்னும் பெண்கள் கார் ஓட்ட ஆரம்பிக்கவில்லை. பெரும்பாலான உறவினர்களின் பிள்ளைகள் நகரங்களில்தான் இருந்தனர். ஊரில் வேலைசெய்பவர் என சிலரே.

ஒவ்வொரு இல்லமும் மனிதர்கள் போலவே முகமன் உரைத்து அணுக்கமாக ஆகிறது. பலரை அவர்களின் இல்லங்களில் சந்தித்தது இன்னும் அணுக்கமாக உணரச்செய்தது. சென்னை சில்க்ஸ் சந்திரனின் பெரிய  மாளிகையில் ஓர் அழகான நூலகம். அமெரிக்க ஐரோப்பிய நூலகங்களைப்போல மகோகனி மரத்தாலான அடுக்குகள். புத்தகங்களுக்கு ஆழ்பழுப்பு மரநிறம் ஓர் அழகிய பின்னணியை அளிக்கிறது.

நடராஜன் அவருடைய கனவு இல்லத்தை கட்டி முடித்திருந்தார். இருபதாண்டுகளுக்கு முன் அத்தகைய பங்களாவை நான் பார்த்தது கொடைக்கானலில். மணி ரத்னத்தின் இல்லம். ஒரு பிரெஞ்சு சிற்பி வடிவமைத்தது. இப்போது அதே வடிவில் கமல்ஹாசன், சங்கர் எல்லாம் கட்டிவிட்டனர். முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டது இவ்வகை கட்டிடம். பல தனிப்பகுதிகளின் இணைப்பாக அமைவது. நடராஜன் இல்லத்திலும் ஓர் அழகிய நூலகம், அமர்ந்து வாசிக்கும் இடங்கள்.

இளமையில் சுற்றம் என்பது அவ்வளவு முக்கியமல்ல என்று தோன்றுகிறது. கிளைகள் அடிமரத்தை விட்டு விலக விரும்புவதுபோல. ஆனால் ஓர் அகவையில் சுற்றம் என்பது நம்முடைய விரிவே என்னும் எண்ணம் உருவாகிறது. நான் என்பதில் இருந்து விரிந்து நாம் என உணரத்தொடங்குகிறோம். அந்த உவகை மிகமிகத் தொன்மையானது. உங்கள் சுற்றம் சிறக்கட்டும் என ரிக்வேதம் ஏன் மீண்டும் மீண்டும் சொல்கிறது என்று புரிகிறது.

 

முந்தைய கட்டுரைஷாநவாஸ்
அடுத்த கட்டுரையானம், கடிதங்கள்