பின்னைப் பின்நவீனத்துவம்- கடிதம்

அன்புள்ள ஜெ

David Foster Wallace எழுதிய இந்த குறிப்பை அஜிதனின் டிவிட்டர் பக்கத்தில் பார்த்தேன். எனக்கு அதிலுள்ள சொற்கள் ஓர் இனிய ஆச்சரியம். ஏனென்றால் நான் பல ஆண்டுகளுக்கு முன் அறம் கதைகள் வெளிவந்தபோது இதையே சொல்லியிருக்கிறேன்.

அன்றைக்கு சிலர்இது போஸ்ட்மாடர்ன் யுகம். அறம் கதைகள் பழைய மதிப்பீடுகளை முன்வைக்கின்றனஎன்று சொன்னார்கள். 

நான் மொழியியல் ஆய்வு செய்துகொண்டிருந்தேன். ஆகவே எனக்கு கொஞ்சம் தியரி தெரியும். நான் சொன்னேன். ‘போஸ்ட்மாடர்னிஸம் பழையதாகி விட்டது. உலகம் முழுக்க அதற்கு எதிரான இலக்கியம்தான் முக்கியத்துவம் பெற்று வருகிறது. போஸ்ட்மாடர்னிசம் ஒரு சின்ன கலைப்புதான். அது முடிந்துவிட்டது. அதில் மிகப் பெரிய படைப்புகள் என ஏதுமில்லை. மாடர்னிசம் எளிமையான செண்டிமெண்டுகளுக்கு எதிரான  ஒருவகையான அறிவார்ந்த தன்மையை முன்வைத்தது. போஸ்ட்மாடர்னிடம் அறிவார்ந்த ஒரு கலகத்தை முன்வைத்தது. இன்றைக்கு அவற்றை உள்வாங்கிக்கொண்டு புதிய உணர்ச்சிநிலைகளை முன்வைக்க வேண்டியிருக்கிறது. புதிய அறத்தை உருவாக்க வேண்டியிருக்கிறது. அறம் கதைகள் அதைத்தான் செய்கின்றன. அவை போஸ்ட்மாடர்ன் சூழலை கடந்தவை

ஆனால் அவர்கள் அதையே சொல்லிக்கொண்டிருந்தனர். இதுதான் புதிசு என்ற ஒருவகையான மாயைதான் காரணம். ஒரு படைப்பு சிடுக்காக இருந்தால் ஆழமானது என நம்பும் பாமரத்தனம். ஒரு படைப்பு அதிரடியாக இருந்தால் பரவசமாகும் முதிர்ச்சியின்மை இதெல்லாம்  இருந்தன.

அதன்பின் வெண்முரசு வந்தபோதும் நான் சொன்னேன். ‘பெருங்கதையாடல் அல்லது கிராண்ட்நெரேஷன் அதிகாரத்தை  உறுதிப்படுத்துவது என்று போஸ்ட்மாடர்னிஸ்டுகள் சொன்னார்கள். ஆனால் போஸ்ட்மாடர்ன் நையாண்டியால் அதிகாரம் ஒன்றும் ஆகாது. அதிகாரத்தை எதிர்க்க எதிர் பெருங்கதையாடல்தான் தேவை. அது உருவாகி வரும். அதன் தொடக்கத்திலேயே அத்தகைய மிகப்பெரிய படைப்பாகிய வெண்முரசு வந்துவிட்டதுஎன்று

இன்றைக்கு நானெல்லாம் அன்றே சொன்னவை உலகம் முழுக்கவே பேசப்படுகின்றன என்பதை இளவல் அஜிதனின் உரை வழியாக அறிந்தேன். நான் அண்மையில் உடல்நிலைக்குறைவாலும், பணிச்சுமையாலும் வாசிக்கவில்லை.(ஆசிரியர்பணி இலகுவாக இருந்த காலம் மலையேறிவிட்டது. ஆசிரியர்கள் இனிமேல் எழுதவெ முடியாது. எதையும் படிக்கவும் முடியாது. அவர்கள் நிறுவனக்கொத்தடிமைகள். குமாஸ்தாக்களின் வாழ்க்கைதான்)  சிறந்த உரை. வாழ்த்துக்கள்

என்.ஆர். ராமையா  

முந்தைய கட்டுரைஹன்னா அரெண்ட், சைதன்யா- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅன்பெனும் பெருவெளி – கடலூர் சீனு