ஆல்பா மேல் – கடிதங்கள்

 

மெய்யான ஆல்ஃபா மேல்…

ஆல்ஃபா மேல்!

ஜெ

இன்று ஆல்ஃபா மேல் பதிவை வாசித்ததும் புனைவில் நான் சந்தித்துள்ள ஆல்ஃபா மேல்களின் பட்டியலை யோசித்துக் கொண்டிருந்தேன்

பெரும்பாலும் உங்கள் புனைவுலகிலிருந்து அவர்கள் எழுந்து வந்தபடியே இருந்தனர். ஒவ்வொருவரும் ஒருவகையில் பட்டியலில் இணைந்துகொண்டே போக பட்டியலை எப்படி சுருக்குவது என்பதில்தான் குழம்பிப் போனேன். ஒருகணம் உங்கள் புனைவுலகம் முழுதுமே நாயக நாயகிகளை உருவாக்கி வாசக மனதில் மீட்ட நல்கும் செயல்பாடாகவேத் தோன்றிவிட்டது. ஆம், என்றுமே பாணனின் வேலை அதுதானே. ஆச்சர்யமாக இவர்கள் புனைவின் சாத்தியங்களாக மனதில் தோன்றவில்லை, அனைவரும் மெய்யுருக்களே.

இன்று ஒரு அறிதலாகவே இதை உணர்கிறேன். புனைவில் நிகழ்ந்தவர்கள் மெய்யில் நிகழ்ந்தவர்களே. இந்தக் காலை அனைவரையும் சந்திந்து ஒருசொல் பேசினேன். அல்லது  அவர்களின் ஒரு கணநேர  பார்வையை மட்டும் பெற்றுக் கொண்டேன். அவர்கள் மலைமுடிகளென வீற்றிருக்க அகம் பணிந்து அலையடங்கியது. இலக்கியம் மட்டுமே அருளும் நல்லூழ் அது. நன்றி ஜெ

சுருக்கப்பட்ட பட்டியல்:

வெண்முரசின் அரிஷ்டநேமி

சுகர்

ஜேகேவின் ஹென்ரி

வணங்கான் நேசமணி (அல்லது டாக்டர் கேயா?)

நினைவின் நதியில் சுரா

சிங்கரின் கிம்பெல்

மருபூமி பஷீர்

டி.. பாரி

அன்புள்ள ஜெ

ஆல்ஃபா மேல் பற்றிய கட்டுரை எந்த திசைநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று பார்த்துக்கொண்டே இருந்தேன். ஒருபோதும் நீங்கள் நேராகஆண்மை மையபார்வை நோக்கிச் செல்ல மாட்டீர்கள் என எனக்கு தெரியும். ஏனென்றால் உங்கள் படைப்புகளில்தான் தமிழிலேயே மிகச்சிறந்த ஆல்ஃபா ஃபீமேல் கதாபாத்திரங்கள் வந்துள்ளனர். கன்யாகுமரி , அனல்காற்று, இரவு போன்ற சமூக நாவல்களும் சரி; கொற்றவை, விஷ்ணுபுரம், வெண்முரசு போன்ற தொன்மநாவல்களும் சரி அழுத்தமான ஆல்ஃபா ஃபீமேல் கதாபாத்திரங்களை முன்வைப்பவை. உங்கள் பார்வை விரிந்துசென்று எல்லாவற்றையும் கடந்த மனிதனை ஆல்ஃபா மேல் ஆக முன்வைக்கிறது. அது எதிர்பார்த்ததுதான். உங்கள் உலகில் அப்படிப் பட்ட கதாபாத்திரங்களே மையங்கள். ஏழாம் உலகத்தின் மாங்காண்டிச்சாமி கூட அப்படிப்பட்டவர்தான். முதுநாவல் , படையல் கதைகள் ஆஃல்பா மேல் பற்றியவைதான்.

ரா. மாரிச்செல்வம்

 

முந்தைய கட்டுரைஆக்காண்டி – வாசிப்பு அனுபவம்
அடுத்த கட்டுரைஷாநவாஸ்