ஆல்ஃபா மேல்- கடிதங்கள்

 

மெய்யான ஆல்ஃபா மேல்…

ஆல்ஃபா மேல்!

ஜெ,

ஆல்பா மேல் பற்றிய கட்டுரையை வாசித்தேன். ஒரே ஒரு விஷயம்தான் என் மனதில் உதித்தது. ஆயிரம் யானைகளைக் கொன்றார் என அறியப்படும் கொள்ளையன் வீரப்பனை நம் சமூகம் வழிபடுகிறது. காரணம் அவர் ஓர் ஆல்ஃபா மேல். அவரை பற்றி ஆவணப்படங்கள் எடுக்கப்படுகின்றன. வீரவணக்கம் நிகழ்கிறது. ஆனால் பல்லாயிரம் யானைகளை காப்பாற்றிய யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி (டாக்டர் கெ) உங்கள் கதை இல்லையென்றால் மறைந்தே போயிருப்பார். அவர் ஆல்ஃபா மேல்தான் வீரப்பனை விட பலமடங்கு துணிவும் உறுதியும் கொண்ட ஆளுமை அவர். ஆனால் அவர் நமக்கு ஆல்பா மேல் என தோன்றவில்லை. அதற்கான விளக்கம் உங்கள் கட்டுரையில் இருந்தது. நாம் இன்னும்கூட உடல்சார்ந்த பண்பாடு கொண்ட பழங்குடிச் சமூகம்தான். அறிவுசார்ந்த பண்பாடு கொண்டவர்கள் அல்ல.

ராகவேந்தர்

 

அன்புள்ள ஜெ

ஆல்பா மேல் பற்றிய கட்டுரையை கண்டேன். சில நாட்களுக்கு முன் இந்த விவாதம் எழுந்தது. ஜெயமோகன் ஓர் ஆல்ஃபா மேல் என ஓர் எழுத்தாளர் எழுதியிருந்தார். என் நண்பர் ஒருவர் (அதிகம் இலக்கியமெல்லாம் படிக்காதவர்) சொன்னார். ‘எவராவது இதை ஜெயமோகனிடம் கேட்பார்கள். அவர் சுற்றி வளைத்து ஆம் நான் ஆல்ஃபா மேல் தான் என்று பதில்சொல்வார்’ என்று. இன்னொரு நண்பர் சொன்னார், இந்தமாதிரி விஷயங்களிலெல்லாம் ஜெயமோகன் கருத்துச் சொல்ல மாட்டார் என்று. நான் சொன்னேன். ‘சொல்வார். இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டு இலக்கிய ஆளுமைகளை பொதுவான வாசகர்களுக்கு அறிமுகம் செய்யவும், அவர்களை போற்றி முன்வைக்கவும் முயல்வார்’ என்று. நீங்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஓர் இலக்கிய அறிமுகத்தை நிகழ்த்துகிறீர்கள். இலக்கியத்தை ஓர் இயக்கமாக முன்வைக்க முயல்கிறீர்கள். அதையே அக்கட்டுரைகளிலும் கண்டேன். நன்றி

செல்வராஜன் குமரேசன்

முந்தைய கட்டுரைதமிழுக்கு ஔவையென்றும் பெயர்
அடுத்த கட்டுரைசுப்பா ஞானியார்