மெய்யான ஆல்ஃபா மேல்…

கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர்

ஆல்ஃபா மேல்!

ஜெ

ஆல்ஃபா ஃபீமேல் என்னும் பட்டியலைக் கண்டேன் (ஆல்ஃபா மேல்! )ஆல்ஃபா மேல் என நீங்கள் வழிபடும் சிலரைச் சொல்லமுடியுமா? ஓர் உதாரணத்துக்காகச் சொன்னால் போதும். உங்கள் எண்ணங்களைப் புரிந்துகொள்வதற்காகக் கேட்டேன்

சாந்தா

அன்புள்ள சாந்தா ,

நான் என் இளமையில், அதன்பின் என் வாழ்க்கை முழுக்க, அத்தகைய ஆண்களைத் தேடி அலைந்து சந்தித்துக் கொண்டே இருப்பவன். யானைக்கூட்டத்திலுள்ள குட்டியானை பெருந்தந்தங்கள் கொண்ட, தலையெடுப்புள்ள, ஆண் யானையை நோக்கியே சென்று கொண்டிருக்கும். ஆண் யானை தனித்தலைவது. அது குட்டிகளை ஒன்றும் செய்வதில்லை. ஆனால் மதம்கொண்ட நிலையில் கொன்றுவிடக்கூடும். ஆகவே யானைக்கூட்டத்தில் உள்ள தலைமைப்பாட்டி (ஆனமுத்தச்சி என மலையாளம்) அந்த குட்டிகளை தட்டித்தட்டி தன் கால்களுக்குக் கீழேயே வைத்துக்கொள்வாள். ஆனாலும் தந்தம் முளைக்காத குட்டி யானையால் அந்தக் கவற்சியை வெல்லமுடியாது.

1976 ஆம் ஆண்டு திருவட்டார் கோயிலில் கதகளி ஆட கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் வந்தார். என்னால் அவரை அன்றி எவரையுமே நினைக்க முடியவில்லை. அணியறை எனப்படும் ஒப்பனை இல்லத்திலேயே சுற்றி வந்தேன். அவர் செல்லுமிடமெல்லாம் சென்றேன். மேடையில் அவருடைய நிமிர்வு. எப்போதுமிருக்கும் நடனத்தன்மை. சாதாரணமாக இருக்கையில் அவரிடமுள்ள பணிவும் தணிவும். ஆனால் கண்கள் மட்டும் இலேசாகச் சிவந்து, நான் ஒருகணத்தில் துரியோதனன் ஆகிவிடுபவன் என காட்டும் வசீகரம்.

ஆற்றூர் ரவிவர்மா

என் தாய்மாமன் சொன்னார். ‘அது வாய்க்கொம்பின் தினவு’. (வாய்த்தரிப்பு) அந்த உருவகம் அப்போதுதான் எனக்கு தெரியவந்தது. ஆண் யானைக்குட்டியின் கடைவாயில் முளைக்கவிருக்கும் தந்தம் இருக்கும். அது அந்த குட்டியை நிம்மதியாக இருக்க விடாது. மற்ற குட்டிகளை சண்டைக்கு அழைத்துக்கொண்டே இருக்கும். மரத்தில் கொண்டுசென்று மண்டையை முட்டும். அதுதான் என்னிடமுள்ளது என்றார். நான் ஒரு மாபெரும் கதகளி நடிகனாக ஆசைப்பட்டேன். வெண்முரசில் ஆடி முடித்துவிட்டேன்.

அதன்பின் நான் முன்னுதாரணங்களில் இருந்து முன்னுதாரணங்கள் நோக்கிச் சென்றுகொண்டே இருந்தேன். ஒருபோதும் ஒரு விளையாட்டு வீரரும், நடிகரும், அரசியல்வாதியும் என் முன்னுதாரணமான ஆண் வடிவமாக இருந்ததில்லை. தொடக்கத்தில் நடனக்கலைஞர்கள். கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் முதல் கேளுசரண் மகாபாத்ரா வரை. அதன்பின் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள். அவர்கள் மட்டும்தான். உண்மையில் என் உலகில் மற்றவர்களே இல்லை. அவர்கள் வெறும் உடல்கள் மட்டுமே.  

.நா.சு கையில் ஒரு ரூபாய் கூட இல்லாத நிலையில் சக்ரவர்த்தியின் தோரணையுடன் நடப்பதை நான் எழுதியிருக்கிறேன். (சக்ரவர்த்தி உலா) எம்.கோவிந்தன் பீடியை ஆழ இழுத்தபடி ஒவ்வொரு வரியும் ஒரு அபாரமான மேற்கோளாக அமையும்படி பேசிக்கொண்டே செல்வதைக் கண்டு வைரங்களே கூழாங்கற்களாகப் பரவிக்கிடக்கும் ஒரு நிலத்தில் நடப்பதுபோல் திகைத்திருக்கிறேன். வைக்கம் முகமது பஷீர் ஒரு தளர்ந்த கொம்பன் யானை போல அமர்ந்திருக்கக் கண்டு அடிபணிந்து ஆசிபெற்றிருக்கிறேன். தங்கப்பூச்சு கொண்ட மெல்லிய சிலைபோல் துலங்கிய சிவராம காரந்தை கண்டு அவர் சொன்ன ஒரு சொல்லும் செவியில் நுழையாமல் அமர்ந்திருக்கிறேன். 

சுந்தர ராமசாமி தன் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் சிற்றவையில் அவர் மட்டும் தனித்த ஓர் ஒளியில் இருப்பதுபோல் தோன்றுவார். ஜெயகாந்தன் சட்டென்று உறைந்து சிலையாகி , ஒரு சொல்லால் பற்றிக்கொண்டு உயிர்பெற்று, எப்போதுமே காலப்பெருக்கிடம் உரையாற்றுவதுபோல பேசுவதை கேட்டிருக்கிறேன். பி.கே.பாலகிருஷ்ணனிடம் எவரையும் தூக்கி வீசும் அபாரமான திமிர் ஒன்று உண்டு. ஆற்றூர் ரவிவர்மாவின் அடக்கமான நகைச்சுவைஇதோ இவர்தான் என் தலைவன்என நான் ஓடிச்சென்று அக்கணமே அடிபணியச் செய்துள்ளது. 

எம் கோவிந்தன்

பொதுவாக இங்கே வழிபடப்படும் பல புகழ்பெற்ற ஆளுமைகளை எனக்குத் தெரியும். அதிகார உச்சத்திலிருப்பவர்களையும் சந்தித்ததுண்டு. எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களிடம் வந்துகூடும்  நிமிர்வும் ஒளியும் வேறவரிடமும் திகழ்வதைக் கண்டதில்லை. அதை பாமரர் உணர முடியாது. அவர்களிடமிருந்து அந்த நிமிர்வையும் ஒளியையும் பெற்றுக்கொள்ளும் அடுத்த தலைமுறையே உணரமுடியும். அது தொல்வியாசன் முதல், கபிலன் வள்ளுவன் கம்பன் என தொடர்ந்து இங்கே நிகழும் ஒரு பெருக்கு. அப்படி ஒன்றிருப்பதையே பெரும்பாலானவர்கள் அறிவதில்லை. அறியத்தேவையுமில்லை. 

ஒருமுறை பாறசாலை கோயிலுக்குள் வைக்கோலால் செய்யப்பட்ட ஏராளமான பெரிய யானைப் பொம்மைகளை வைத்திருந்தனர். வண்ணமயமானவை, இருபதடி உயரமானவை. அருகே நான்கடி உயரமான இரண்டு கல்யானைகள். சட்டென்று ஓர் உவமை தோன்றியது. அந்த வைக்கோல் யானைகள் ஊர்வலமாக ஊரெங்கும் செல்லும். கொண்டாடப்படும். ஓரிரு நாட்களுக்குள் வைக்கோலாகி மறையும். கல்யானைகள் அங்கு அப்படியே இருந்துகொண்டிருக்கும். அறிவியக்கவாதிகள் அந்தக் கல்யானைகள். சமகாலத்துக் கொண்டாட்டம் பெறும் வைக்கோல் யானைகளை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை.

முதன்மை ஆண் என நான் உணரும் இன்னொரு வகையினர் உண்டு. அவர்களைப்பற்றிச் சொல்லவே அவர்களுக்குச் சற்றுமுன் நிலைகொள்பவர்களைப் பற்றிச் சொன்னேன். நான் சந்தித்துள்ள சில துறவிகள், யோகிகளை எண்ணிப்பார்க்கிறேன். அவர்களில் பலர் வாழ்க்கையில் உள்ள உறவு என்பது அன்னையும் தந்தையும் மட்டுமே. அதுவும் இளமையில். பின்னர் அந்த உறவையும் முழுமையாகத் துறந்துவிட்டனர். எந்த உறவும் அதன்பின் அமைவதில்லை. முற்றிலும் தனிமையானவர்கள். தனிமை என்றால் மலையுச்சிப் பாறையின் தனிமை. சுற்றிலும் வான்வெளி மட்டுமே. உலகமே பார்க்கும் தனிமை.

அதை இப்படிச் சொல்கிறேன். என்னுடைய ஆளுமையில் என் மனைவி, என் நண்பர்கள் நிறைக்கும் ஓர் இடம் உள்ளது. ஆனால் சிலர் அப்படி அல்ல, அவர்கள் நிறைந்து விளிம்பு கவிந்த கலம் போன்றவர்கள். ஒரு துளி சேர்க்க முடியாது. அவருடைய ஆளுமையில் இன்னொருவர் அளித்துப்பெற வேண்டிய ஒன்றுமே இல்லை. தன்னளவிலேயே முழுமையானவர்கள். ஆகவே ‘சமூகம் அற்றவர்கள்’. விளைவாக சமூகத்தின் வெளியே நிற்பாவ்ர்கள். காலம் முழுக்க அவர்கள் இருந்துகொண்டிருக்கின்றனர். மலையுச்சிக் குகைகளில் தவம் செய்கின்றனர். மடாலயங்களில் தனித்து உறைகின்றனர். மூன்றுநாட்களுக்குமேல் எங்கும் நிலைக்காமல் அலைகின்றனர்.

இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்  என்னிடம் ஒரு துறவி பௌத்தம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். இளம் மாணவர் ஒருவர் ஓடிவந்து அந்த துறவியின்  அன்னை இறந்துவிட்டதாகச் சொன்னார். உரையாடல் நிகழ்ந்தது வற்கலாவில். சாவு நிகழ்ந்தது அருகே கொல்லத்தில். துறவி திரும்பி நோக்கி ‘ஓ’ என்றபின் ‘…அதாவது மாயை என்ற சொல் பௌத்தத்தில் இன்னொன்றாக இருக்கிறது…’ என அவர் சொல்லிக்கொண்டிருப்பதை தொடர்ந்தார். ஒருகணம், அரைக்கணம்கூட அன்னையை நினைக்கவில்லை. செல்லவுமில்லை.

வைக்கம் முகம்மது பஷீர்- பழைய படம்

உலகியல் பார்வையில் அவர் முற்றிலும் அன்பற்றவர். துளிகூட கருணை அற்றவர். ஒரு கீற்றாகக் கூட பரிவு வெளிப்படாதவர். ஆனால் மானுடம் மீதான பேரன்பு  கொண்டவர். பெரும் அறப்பணிகளையும் சேவைகளையும் ஆற்றியவர். தன்னலம் என்பதே இல்லாதவர். இன்னொருவருக்காக ஒரு கணம் தயங்காமல் தன் உயிரை அளிக்கச் சித்தமான சிலர் உண்டு, அவர் அத்தகையவர்.

ஆனால் தனிப்பட்ட முறையில் எவர் மீதும் அவருக்கு உள ஒட்டுதலும் இல்லை. அடர்காட்டுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் எவரும் பார்க்காத ஓடை போன்றவர். அவரை அறிந்தவர் அவருடைய குரு மட்டுமே. ஆனால் குருவிடமும் அன்பு எல்லாம் இல்லை. தன் குரு மறைந்தபோதும் அவர் ஒரு கணமும் பொருட்படுத்தவில்லை. ‘நான் அவரை தின்றுவிட்டேன். செரித்து என் உடலாக ஆக்கிக்கொண்டேன்’ என்றார். 

அவர்கள் அப்படியே பிறக்கிறார்கள். உள்ளே ஏதோ இறுகி வைரம் பாய்ந்திருக்கிறது. பஞ்சுமூடிய இரும்புத்தடி போல அவர்களின் ஆளுமை. உள்ளிருக்கும் அந்த உருக்குத்  தனிமையை எதுவும் தொட்டுக் கரைப்பதில்லை. ஆகவே அவர்கள் தங்களை கட்டுப்படுத்திக்கொண்டு துறவியாக வாழவில்லை. அவர்களால் வேறெப்படியும் இருக்க முடியாது என்பதனால்தான் துறவிகளாக இருக்கிறார்கள். கல்வி வழியாக அவர்கள் மேலும் தனிமைப்படுகிறார்கள். யோகம் வழியாக இன்னும் தனியராகிறார்கள். இறுதியில் தன்னுள் சுருங்கி ஒரு சிறுபுள்ளியென ஆகி மறைகிறார்கள்.

இங்கே அவர்கள் ஏன் வருகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் நம்மால் சொல்லிவிட முடியாது. பெரும் சமூகப்பணிகளை ஆற்றியவர்கள் உண்டு. பெரும் போராட்டங்களை நிகழ்த்தியவர்கள் உண்டு. ஏராளமான நூல்களை எழுதியவர்களும், மாபெரும் ஆசிரியர்களாகத் திகழ்ந்தவர்களும் உண்டு. ஒன்றுமே செய்யாதவர்களும் உண்டு. அவர்கள் செய்வதும் செய்யாமலிருப்பதும் சமம்தான். அவர்கள் இங்கிருப்பதே ஒரு பெரும் கொடை என நான் நினைக்கிறேன். ஒரு முன்னுதாரணமாக, ஒரு மானுட சாத்தியமாக அவர்கள் திகழ்வதே அவர்களின் முதன்மைப் பங்களிப்பு. அதற்குமேல் அவர்கள் ஏன் நிகழ்கிறார்கள் என்பதற்கு இயற்கையில்தான் விடைதேடவேண்டும்.

நித்ய சைதன்ய யதி அப்படிப்பட்டவர். நான் நேரில் கண்டவர்களில் அவரே மாபெரும் ஆல்ஃபா மேல். அவருக்கு இன்னொருவர் தேவையில்லை. அவரை அவருடைய அணுக்கர்கள் ஒரு காலகட்டத்தில் பாறை என்று அழைத்து வந்தனர். ஈவிரக்கமற்றவர் என்னும் பொருளும் அதற்கு உண்டு, பற்றிக்கொள்ள உறுதியானவர் என்னும் பொருளும் அதற்கு உண்டு

ஆல்ஃபா மேல் என்பதன் உச்சம் அவர்களே. அவர்கள் இருக்குமிடத்தில் அவர்கள் மட்டும்தான் இருப்பார்கள். முதிய, நல்ல தோற்றமே இல்லாத, துறவிகளை சூழ்ந்திருக்கும் பெண்களின் விழிகள்கூட பெரும் பித்து கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவற்றிலுள்ளது காமமா, காதலா, பக்தியா அல்லது இயற்கையின் அடிப்படையான விசைகளில் ஒன்றா? எவரும் சொல்லிவிட முடியாது. வெவ்வேறு அறிஞர்கள் இதை எழுதியுள்ளனர்.

ஆன்மிகம் அத்தகைய மனிதர்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. அல்லது அவர்களே ஆன்மிகத்தை நிகழ்த்துகிறார்கள். மதங்கள் அவர்களுக்கு ஒரு படி கீழே நிகழ்கின்றன. எல்லா மதங்களிலும் அவர்கள் உண்டு. சூஃபிகளும் ஞானிகளும் என அவர்கள் திருவுருக்களாகிறார்கள். மனிதன் செல்லத்தக்க உச்சமென நான் எண்ணுவது அந்நிலையே

ஜெ

 

முந்தைய கட்டுரைசாமி சிதம்பரனார்
அடுத்த கட்டுரைஒரு செயல் தொடக்கம்