ஆல்ஃபா மேல்!
அன்புள்ள ஜெ
ஆல்பா மேல் கட்டுரையை வாசித்தேன். வாசித்த பின் என் பகற்கனவுகளை தான் அலசி கொண்டிருந்தேன். நம் எல்லோருக்குமே அப்படியான ஆண்களின் மேல் மோகம் இருக்கத்தான் செய்கிறது. ஏதோ ஒருவகையில் அப்படியாக மாற முயற்சிக்கவும் செய்கிறோம். இப்போது உங்களையே ஒரு வெற்றிகரமான ஆல்பா மேல் என்று தானே சொல்ல வேண்டும். கட்டுரையில் யூ.ஆர்.ஆனந்தமூர்த்தியை குறிப்பிட்டிருந்தீர்கள். எனக்கு நீங்கள் ஞாபகம் வந்தீர்கள். உங்களை பின்தொடர்வதால் பகிரங்கமாகவே சொல்லி கொள்கிறேன், நானும் உங்கள் வாரிசாக உங்களை போலவே ஒரு முதன்மை ஆணாக விரும்புகிறேன் என்று :)
இந்த கட்டுரையை வாசித்து வரும் போதே இடைக்கிடையே முதன்மை பெண்களின் படங்களை பார்க்கையில் என்ன சொல்லி முடிக்க போகிறீர்கள் என்ற ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. முடித்த இடத்தில் இருந்து நினைக்கையில் என் பகற்கனவுகளின் பெண்களை அப்படித்தான் வனைந்து வைத்திருக்கிறேன் என்று சொல்ல வேண்டும். சரியான உதாரணம் வெண்முரசின் பீமன் – திரௌபதி இணையர் தான். திரௌபதி அவனுக்கு மட்டுமே காட்டும் அந்தரங்க முகமொன்றுண்டு, அது களித்தோழியின், காதல் துணைவியின் முகம். அங்கே வெல்வதற்கு மாறாக முழுமையான பரஸ்பர பகிர்தல் ஒன்று நிகழ்கிறது. அவையிலோ அவள் பேரரசி. தன் சொல்லுக்கு அல்ல, கண்ணசைவுக்கு கூட மாற்று அசைவு செய்ய முடியாதளவுக்கு தீரம் கொண்டவள். பேரன்னை. இது ஒருபக்கமிருக்கட்டும்.
வழக்கமாக உடல் வலிமையின் மூர்க்கமான வெளிப்பாட்டின் முதன்மை ஆண்களின் சினிமா சித்தரிப்பில் எனக்கு ஒவ்வாமை உள்ளது. இந்த அனிமல் படத்திற்கு முன்னர் விஜய் தேவர் கொண்டாவின் சில படங்களை நினைத்து பெண்கள் பித்தாக உருகுவதை பார்த்திருக்கிறேன். குறிப்பாக என் அத்தை மகள் ஒருத்தி. என்னை விட ஆறு மாதமே மூத்தவள். இவர்களுக்கு என்னதான் பிடிக்கிறது ? அந்த முரட்டுத்தனமான ஆதிக்கம் செலுத்தும் அன்பையா ? எப்படி பார்த்தாலும் நடைமுறையில் அப்படிப்பட்ட மணவுறவுகள் இனியவை அல்ல. இருந்தாலும் இனிய பகற்கனவுகள்.
இக்கட்டுரையில் உயிரியல்பான முதன்மை ஆண் என்ற தன்மையை கலாச்சாரம் உருமாற்றி கொண்டு வந்துள்ள இடத்தை சுட்டிக்காட்டியிருந்தீர்கள். எப்படி மகாபாரதத்தில் வெவ்வேறு குண இயல்புகள் கொண்டவர்கள் முதன்மை ஆணாக திகழ்கிறார்கள் என்று. பின்னர் சீவகனின் பெண் கொள்ளல்கள். எனக்கு கம்பராமாயணம் நினைவுக்கு வந்தது. நாம் ஐயமே இல்லாமல் தமிழ்ச்சமூகம் உருவாக்கிய மிகச்சிறந்த முதன்மை ஆணாக கம்பனின் இராமனை சொல்லலாமா ? ஏனெனில் தொடர்ச்சியாக நண்பர்களின் கம்பராமாயண கூட்டு வாசிப்பில் கலந்து கொள்ளவில்லையென்றாலும் சென்றவரைக்கும் நான் பார்த்தது. அயோத்தி நகரின் பெண்கள் இராமனை நினைத்து எப்படியெல்லாம் உருகினார்கள் என்று பல பாடல்களுக்கு கம்பன் வர்ணித்து செல்கிறான். அப்பேர்ப்பட்ட இராமன் சீதைக்கு மட்டுமே தன் உள்ளத்தை கொடுத்தவன். அது கார்க்கால படலத்து இராமனின் துயரம் மூலம் நன்றாக உணர்த்தப்படுகிறது. ஆக கட்டற்று பரவும் உயிரியல்பை சமூகத்தின் வரம்புகளுக்குள் கொண்டுவந்து இலட்சியத்தன்மையை கொடுத்திருக்கிறான்.
அடுத்து வெண்முரசை நினைத்து கொண்டேன். அதன் முதன்மை ஆண் கிருஷ்ணன் தான். அவனே பாட்டுடைத் தலைவன். எல்லோருக்குமான இடமும் விரிவாகவே உருவாகி வந்திருந்தாலும் இவனே முதன்மையானவன். எட்டு பெண்களை மணக்கும் மாவீரன், ஞானி, காதலன். மகாபாரதம் கிருஷ்ணனை பற்றி பேசி, அரசியரை பெயர் குறிப்பிட்டு செல்லும். இங்கே நீங்கள் எட்டு அரசியரையும் மிக விரிவாக முதன்மை பெண்களாக முன்னிறுத்துகிறீர்கள். அப்பெண்களின் மாண்பாலேயே எளிய ஆண்களால் தொடப்பட முடியாத தூரத்திற்கு அகன்று விடுகிறார்கள். அந்த சிகரங்களின் கைப்பிடிக்க விண்ணக பருந்தின் அரசன் வரவேண்டி இருக்கிறது. ஒவ்வொருமுறையும் அவ்வரசியரின் விருப்பப்படியே களவு நிகழ்கிறது. இந்த கதைகளை வாசித்தவனாக அவை என் குண இயல்புகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதையே பார்த்தேன்.
அன்புடன்
சக்திவேல்
பி.கு: இடையில் உங்கள் தனி அனுபங்களை குறிப்பிட்டு சொல்லியிருந்தீர்கள். படிக்கையிலேயே ஆச்சரியமாக இருந்தது, குறிப்பாக அந்த பெண்ணின் பதில்.
அப்புறம் இத்துடன் ஒரு படத்தை இணைக்கிறேன். சில நாட்களுக்கு முன் இணையத்தை தடவிக் கொண்டிருந்த போது கிடைத்தது. தேவதேவன் சாரும் நீங்களும் இருப்பது. இப்படத்தை எடுத்தவர் எவரானாலும் நன்றாக இருக்கட்டும். ஆசீர்வாதம் மிக்க ஒருகணத்தை காலத்தில் நிறுத்தி காண தந்திருக்கிறார்.