இனிய ஜெயம்
வள்ளலார் கவிதைகளுக்கு முற்றிலும் புதிய இசை வடிவம், குரல் வடிவம், காட்சி வடிவம் கொடுத்து இன்றைய தலைமுறைக்கு காட்சிக் கலை வழியே ஒரு புதிய உவகையை அளித்திருக்கிறார் இயக்குனர் ரத்த சாட்சி ரஃபீக் அவர்கள். அந்த ஆல்பத்தில் இந்த பாடல் சிகரமுனை.
வேண்டும் வேண்டும் வேண்டும் என்று மீண்டும் மீண்டும் எழும் சஞ்சய் குரலை ஏங்கும் அகத்துடன் கண்ணீர் திரையிடாமல் கேட்க இயலவில்லை. ஷான் ரோல்டன் அவர்களின் வித்தியாசமான இசை. சஞ்சய் சுப்ரமணியம் முதன் முறையாக செவ்வியல் மேடையை விட்டு வெகு மக்கள் மேடை நோக்கி வந்திருக்கிறார். சஞ்சயின் குரல் மேஜிக் அலைகழிக்க வைக்கும் ஒன்றாக இருக்கிறது. (குறிப்பாக வெண்ணிலா பாடலில்.) அற்புதமான ஒளிப்பதிவு, ப்ரேமிங், ஷாட் டிவிஷன், ஸ்டேஜிங்கில் ஆடல் கலைஞர் ( ருசி அவரது பெயர் என நினைக்கிறேன்) பாடலையே வேறு உயரத்துக்கு கொண்டு போகிறார்.
பெருவெளியில் துடிக்கும் சிற்றகலின் தீபச்சுடர் போலும் ஒரு நடனம். சஞ்சய் குரல் வேண்டும் வேண்டும் என்று மன்றாடுகயில் சூபி மரபின் தலை சாய்ந்த, கைகள் விதமாய் அமைந்த அந்த உடல் சுழல் நடனம் வருவது அருமை.
ரஃபீக் அவர்களின் அவரது முந்தைய ஆவணப்படமான சென்னை கோட்டைக்குள் இருக்கும் புனித மேரி தேவாலயம் குறித்த படத்தை பார்த்திருக்கிறேன். சீரோ பட்ஜட் அற்புதம் அது. அதை போலவே இந்த அன்பெனும் பெருவெளி பிராஜக்ட்டயும் குறைந்த செலவில் வைத்து அற்புதம் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார் ரஃபீக்.
ஆவணப்படத்தில் பன்னீர் செல்வம் அவர்கள் துவங்கி, ஆய்வாளர் சரவணன், வீ அரசு, ஆ ரா வெங்கடாஜலபதி, எம் டி முத்துக்குமார சுவாமி, வரை பல முக்கிய ஆளுமைகள் வழியே வள்ளலாரின் வாழ்வும் பணியும் விவரிக்கப் படுகிறது. குறிப்பாக ஆறுமுக தமிழன் அவர்கள் தமிழ் நிலத்தின் பஞ்சகாலம் குறித்தும் அங்கே துவங்கிய வள்ளலாரின் மாற்றம் குறித்தும் பேசும் தருணம் முதன் முறையாக எழுத்துக்கு வெளியிலாக ஆவணம் கொள்கிறது. ஆவணத்தில் விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் அவர்களின் பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் கொள்கிறது.
அணையா அடுப்பையும், அன்னதானத்தையும், கவளம் கவளமாக உண்ணும் ஒரு சிறுமி ஒரு முத்தியவள் என இரண்டு பெண்களின் முகம் வழியே காட்சிப் படுத்திய அழகு, அங்கே நிகழும் பின்னணி இசை, வள்ளலார் சபை மீதான ட்ரொன் ஷாட்டுகள், இதமான ஒளிப்பதிவு, சீர்மை கேடாத எடிட்டிங் என இனிய அனுபவம் நல்கிய ஆவணம். எனக்கு மிக மிக பிடித்தது ஆவணத்தின் ஒலிக் கலவை. உதடுகள் பிரியும் ஒலி கூட கேட்கும் உச்ச துல்லியம், கை மீறிய ஒரு சிறு உபரி ஒலி கூட குறுக்கிடாத நுட்பம்.
சில மெல்லிய விமர்சனங்கள் எனக்கு உண்டு எனினும் அவற்றுக்கான வேளையோ இடமோ இல்லை இது. இது முதலில் பெருவாரியாக மக்களை சென்று சேர வேண்டும். தீவிர கலையாகவும் இந்த தலைமுறைக்கான அறிமுகமாகவும் மிக முக்கிய நிகழ்வு இது.
அன்பெனும் பெருவெளி பிராஜக்ட் முழுமையாக இங்கே காணலாம்.