யானம் (சிறுகதை)
அன்புள்ள ஜெ,
“யானம்” சிறுகதை வாசித்தேன். வெளியிலே வீடும் நாடும் பெரிதாக இருந்தாலும் அமெரிக்கர்கள் காருக்குள்ளேயே வாழ்வைச் செலவழிப்பதுபோல் ராமும் லட்சுமியும் அமெரிக்கா வந்தபிறகும் குடும்பவாழ்க்கை அதன் நெறிகள் என்ற குமிழிக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். காருக்குள்ளேயே இருப்பது சலிப்பைத் தந்தாலும் அவர்களால் வெளியேறமுடியாது. சுற்றியிருக்கும் கார்கள் அவர்களை வெளியேறவிடப்போவதில்லை. அதனால் காருக்குள்ளேயே அமர்ந்து எத்தனை துன்பங்கள் வந்தாலும் சகித்துக்கொண்டு மெல்ல நகர்வது மட்டும்தான் அவர்கள்முன் உள்ள ஒரேவழி. ஒருவகையில் லட்சுமி அதைத்தான் தெரிவுசெய்கிறாள். குடும்பவாழ்வில் தொடர்வது, அதேசமயம் பிரபா கூடவும் இருப்பது என்ற முடிவுக்கு வருகிறாள். அந்த வழியைக் கண்டடைந்ததும் வஞ்சம் நிறைந்த சிரிப்பு அவள் முகத்தில் வருவதைச் சிறுகதை காட்டுகிறது.
ஆனால் இது லீகலாகப் பிரிந்துபோவதல்ல. ஏலைன் கூட உறவில் இருந்து “அயோக்கியனான” ராம் “சீட் பண்ணியது” போலத்தான் இதுவும். அவளும் அதே அயோக்கியத்தனத்தில் இறங்க முடிவுசெய்கிறாள். அதன்வழியாக அவள் முகம் அமைதியடைகிறது. ஆனால் அவர்கள் இறங்கிவிடவில்லை. இன்னும் எவ்வளவோ பயணம் மீதமிருக்கிறது. “எவ்ளோ நேரமாகும்னே தெரியலை” என்று இறுதியில் ராம் சொல்கிறான். அதற்குள் “அப்டியே எங்காவது கொண்டுபோய் அறைஞ்சிரணும்னு” ராம் முன்னால் சொன்னதுபோல் ஏதாவது நிகழ வாய்ப்பிருக்கிறது. ராம் இன்னொரு ஏலைனைத் தேடிப் போகக்கூடும். அல்லது அக்சிலரேட்டரை மிதிப்பதற்கு முன்னால் ஏதோ ஒன்று தடுக்கவும் செய்யலாம்.
இவை அனைத்திற்கும் மேல் பயணத்தின்போது ராம் மட்டும்தான் பேசிக்கொண்டே இருக்கிறான். லட்சுமி எதிர்வினை புரிவதில்லை, ஏன் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. அமெரிக்காவில் கார்கள் மனநோய் பிடித்து ஹாரன் கூட அடிக்காமல் டிப்ரஷனோடு இருப்பதுபோல் இருக்கிறாள். அவள் மொத்தமாக வெடிக்காமல் துளித்துளியாய் வெடிப்பதையே கதையில் பார்க்கிறோம். உண்மையில் கார் பயணம் இவ்வளவு தூரம் அமெரிக்க இந்தியத் தம்பதியின் வாழ்வோடு ஒத்துப் போவதே வியப்பாக இருக்கிறது. நல்ல கதை.
அன்புடன்,
த.திருமூலநாதன்.
அன்புள்ள ஜெ
யானம் வாசித்தேன். ஒவ்வொரு காரும் ஒரு வகையான வெடிகுண்டு என்ற வரிதான் கதையின் மையம். டெக்னிக்கலாகவே உண்மை. ஒரு கார் என்பது துளித்துளியாக வெடிக்கும் ஒரு வெடிகுண்டு என்னும் வரியில் இருந்து அந்தக் கதையை முழுமையாகவே விரித்து எடுக்க முடிந்தது. குடும்பம்– உறவுகள் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடிந்தது.
ராஜீவ் குமார்
யானம், கடிதங்கள்