அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியின் ஏரிகளால் சூழப்பட்ட இயற்கை அழகு நிறைந்த சிற்றூரை சேர்ந்த,, பிரிட்டனில் கற்பனாவாத கலையை தோற்றுவித்தவரான வோர்ட்ஸ்வொர்த் லண்டன் பெருநகருக்கு செல்கிறார், மாலை நடையின் போது அந்த சந்தடி மிகுந்த, இரைச்சலான, மாசுபட்ட தேம்ஸ் நதி இருக்கும் நகரத்தை அவரது சிற்றூரின் தூய்மையுடனும் அழகுடனும் ஒப்பிட்டுப் பார்த்து ஒவ்வாமை கொள்கிறார்.
மறுநாள் அதிகாலை அதே தேம்ஸ் நதியின் வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நிற்கும் அவர் முன்னால் கதிர் எழுந்து, திரை மூடியிருக்கும் ஒரு ஓவியத்தை திறப்பது போல மூடுபனி விலக்கி அந்நகரை காட்டுகிறது. அக்காட்சியில் மெய்மறந்து போகும் வோர்ட்ஸ்வொர்த் அவ்வுணர்வெழுச்சியில் ஒரு அழகிய கவிதையை எழுதுகிறார்
//இந்த பூமி இதைக்காட்டிலும் அழகியதாக ஒரு காட்சியை எனக்கு காட்டிவிட முடியாது// என்று துவங்கும் அக்கவிதையில் வீடுகள், கோபுரங்கள், மலைகுன்றுகள், கோவில்கள், பள்ளத்தாக்குகள் எல்லாவற்றையும் துலக்கிக் காட்டும் கதிரின் முதல் தொடுகையில் அதிகாலையை தன்மீது சூடிக்கொண்டு ஒரு அருமணி போல ஜொலிக்கும் அந்நகரின் காட்சி தனக்கு அளித்த ஆழ்ந்த அமைதியை சொல்லும் அவர் ‘’ இத்தனை அழகாக கதிர் இதற்கு முன்பு இருந்ததில்லை, நான் இப்படி உணர்ந்ததே இல்லை, நான் இப்படி ஒரு காட்சியை கண்டதே இல்லை’’ என்று அந்த சில வரிக் கவிதையில் மூன்று இடங்களில் நெவெர் என்னும் சொல்லைக் குறிப்பிடுகிறார்.
கவிதையின் இறுதியில் ‘’அந்நகரின் மாபெரும் இதயம் அங்கு உறங்குகிறது’’ என்கிறார். முந்தைய நாள் மாலை ஒவ்வாமையை அளித்த அதே நகரம் மறுநாள் அவருக்கு ஆன்மாவை கொண்டிருக்கும் ஒரு பிரதேசமாக மறக்க முடியாத ஒரு காட்சியை காட்டியது, ஏனெனில் ஒரு நகரம் என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமல்ல, அங்கிருப்போரின் வாழ்வாதாரமும் வாழ்வும் அனுபவங்களும் நினைவுகளும் சேர்ந்ததுதான் என்பதை கதிரின் தொடுகையில் மூடுபனி விலகிய அக்காட்சி அவருக்கு காட்டியிருக்கிறது.
நெல்லையில் ‘’ஊரும் இலக்கியமும்’’ என்னும் தலைப்பிலான உரையை வோர்ட்ஸ்வொர்த்தின் இந்த கவிதையனுபவத்தை சொல்லி அருணா அழகாக பொருத்தமாக துவங்கினார்
அந்த கவிதை செப்டம்பர் 3, 1802 ல் எழுதப்பட்டது. அதே இடத்துக்கு தான் 200 வருடங்கள் கழித்து சென்றபோது அன்று வோர்ட்ஸ்வொர்த் கண்டதை அவரின் கவிதைக்கண்கள் வழியெ தானும் கண்டதை குறிப்பிட்ட அருணா அந்த கவிதை வாசிப்பு ஒரு நகரை பார்க்கும் தனது கண்ணோட்டத்தையே மாற்றிவிட்டது என்றார்.
வோர்ட்ஸ்வொர்த்திலிருந்து சுரா காட்டும் நாகர்கோவில், திஜாவின் கும்பகோணம், கிராவின் இடைச்சேவல், என்று விரிந்த உரையில் புனைவெழுத்தாளனின் சித்தரிப்பு வழியாக வாசிப்பவர்கள் மனதில் உருவாகும் ஒரு பிரதேசத்தின் மற்றுமோர் அழகிய சித்திரத்தை விவரித்தார்.
சாமன்யர்களின் அகத்தில் படிந்துவிடும் பழக்கத்தின் பாசியை புலன்கள் கூர் கொண்டிருக்கும் புனைவெழுத்தாளர்களும் கவிஞர்களும் விலக்கிகொண்டே இருப்பதால்தான் அவர்களின் கண்கள் வழியே காட்டப்படும் ஊர்கள் மேலும் அழகு பெற்று வாசகர்கள் மனதில் அழியா இடம்பெற்றுவிடுவதையும் சொன்னார்
கல்யாண்ஜியின் பவளமல்லி, சோ தர்மனின் புதுமைபித்தனின் திருநெல்வேலி பாரதியாரின் பாடல்களில் அவரறியாமலேயே எட்டிப்பார்த்திருக்கும் சுலோச்சனா முதலியார் பாலம் என்று உரை சீராக தொடர்ந்தது.
புதுமைபித்தனின் காலனும் கிழவியும் கதையை சொல்கையில் அருணா நெல்லை மேடையிலிருந்து அந்த கதைக்களத்துக்குள் சென்று விட்டிருந்தார். உரையில் அக்கதையை தனது வழக்கமான அபிநயங்களுடன் விவரித்தார். அவரே அந்த கிழவியாகி வெற்றிலைப்பெட்டியை எமனிடம் நகர்த்தசொல்கிறார் அவரே எமனாகி கிழவியின்முன்னால் குழம்புகிறார், அவரே மாடசாமியுமாகிறார். அக்காட்சியின் நகைச்சுவையில் மகிழ்ந்து சிரித்துக்கொண்டே உரையை தொடருகிறார்
நிலை கதையை சொல்லுகையில் அருணாவே வீட்டில் தனித்திருக்கும், தன்னந்தனியே நிலையில் இருக்கும் தேரைப் பார்க்கும் கோமுவுமாகிறார்,சிலப்பதிகாரம், மதுரைக்காஞ்சி என நீண்ட உரையின் நடுவே அருணாவின் sigmature ஆன ரஷ்ய இலக்கியங்களையும் தொட்டுச்சென்றார்.
அ.முவின் கொக்குவில்லையும் சொன்னவர் மிக அழகாக உரையை காலம் செல்வத்தின் சொற்களில் சுழலும் உலகம் கதையை சொல்லி முடித்தார். உலக வரைபடத்திலேயே இடம்பெற்றிருக்காத இலங்கையை, சோதனைச்சாவடியில் விசாரிக்கும் பெண் அதிகாரியிடம் யானைகளையும் தேயிலையையும் சொல்லி புரியவைக்கும் அக்கதை ஊரும் இலக்கியமும் என்னும் தலைப்பிலான உரையை முடிக்க மிகப் பொருத்தமானதொன்றாக அமைந்திருந்தது.
அருணாவின் உரையை கேட்கையில் பொள்ளாச்சியை விட எனக்கு மிக அணுக்கமாகி விட்டிருக்கும் அஸ்தினாபுரியையும், இந்திரபிரஸ்தத்தையும் காந்தாரத்தையும் எண்ணிக்கொண்டேன்.
மிக சிறப்பான, தலைப்புக்கு மிகவும் நியாயம் சேர்த்த அருமையான உரை.
அன்புடன்
லோகமாதேவி