அகவாழ்வின் நெரிசல் – கோ.புண்ணியவான்

 

யானம் சிறுகதை

அகத்திலும் புறத்திலும் ஒரு நெருக்கடியான சூழலை உண்டாக்கிக்கொண்டு யானம் கதையை நகர்த்துகிறீர்கள். அகத்தில் உண்டான கொந்தளிப்பு கொழுந்துவிட்டு எரிய   புறத்தே இருந்து வரும் வாகன நெரிசலும் அந்த எரிச்சலை அதிகரிக்கிறது.. அதன் காரணமாக அவர்களின் உரையாடல் வெப்ப நிலைக்குச் செல்கிறது. புலம்பெயர்ந்தவர்கள் அமெரிக்காவில் (வேறு நாட்டிலும்கூட) எதிர்கொள்ளும் கலாச்சார அதிர்ச்சி அவர்கள் பிறந்து வளர்ந்த நாட்டின் பண்பாட்டை அவர்களுக்குள் எந்த அளவுக்குச் சிதைத்திருக்கிறது என்பதாக எடுத்துக்கொள்ளலாம். 

வாகன நெரிசலை ஒரு பொருத்தமான குறியீடாக வைத்து அவர்களின் விரிசல்கண்ட தாம்பத்தியத்தை அழகுற சொல்கிறீர்கள். பெரும் பெரும் நகரங்களில் கார் ஓட்டுபவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய இன்னல் அது உண்டாக்கும் சாலை நெரிசல்தான். பாதி வாழ்க்கையை அதிலேயே கழிந்துவிடும். அடுத்தடுத்த என்னென்னவோ பணிகளை வைத்துக்கொண்டு நேரவிரையமில்லாமல் அவற்றைச் திட்டத்தோடு செய்து முடிக்கவேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த நெரிசல் பாழாக்கிவிடும். அது பொறுமையின்மையையும் சினத்தை ஒருசேர குவித்து யாரை கோபிப்பது என்று தெரியாமல் புயலின் இலைபோல அலைபாயும். அனைத்து உணர்வையும் சமன் இழக்கச் செய்யும். இந்த பம்பரை பம்பர் மோதும் இடுக்கில் சிக்கிய எந்த ஓட்டுனரும் பொறுமையாக இருக்க முடியாது. கோலாலம்பூரில் வாகன நெரிசலில் சிக்கிக்கொள்பவர்களை வாழ்க்கையின் சிக்கல்களில் பொறுமையாக இருந்து நேர்கொள்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கும் என அனுபவசாலிகள் சொல்வார்கள்.

நெரிசல் உண்டாக்கிய கோபத்தை யாரிடம் காட்டுவது? பக்கத்து இருக்கையில் இருக்கவே இருக்கிறான் கணவன். அவனிடன் இந்தச் சந்தர்ப்பத்தை உண்டாக்கிக்கொண்டு பாய்கிறாள் லட்சுமி.

இந்த சாலை நெரிசல் கொடுத்த சினம் கதையின் வரும் தம்பதிகளின் புரிந்தின்மையை நேர்த்தியாகச் கோடிகாட்டிச் சொல்லிவிடுகிறது. சாலை நெரிசலைப் போலவே அவர்கள் வாழ்க்கையிலும் நெரிசலையும் விரிசலையும் உண்டாக்கிவிடுகிறது. நான் அவனோடு (அவளின் காதலன்) போய்விடுவேன் என்று மனைவி கட்டிய கணவனிடம் நேரடியாக முகத்தைப் பார்த்துச் சொல்லும் அளவுக்குப் சீர்கெட்டுப் போயிருக்கிறது. அவர்கள் சினம் சுயத்தைச் சீண்டும் வார்த்தைகளாக வடிவம் கண்டு சீற்றம் கொண்டதாக வாசகனுக்கு அதிர்ச்சியை உண்டாக்குகிறது. கார் அவ்வப்போது அங்குல அங்குலமாக நகர்வதைப்போலவே அவர்களின் மணவாழ்க்கையும் சீராக இல்லாமல் இருப்பதைக் கோடிகாட்டுவது நல்ல அழகியல். நெரிசலில் சிக்கிக் கார்கள் நகராமல் இருப்பது தமபதிகளின் வாழ்க்கையும் அவ்வாறே ஆகிவிட்டதையும் குறியீட்டின் வழியே சொல்வதையும் ரசிக்கமுடிகிறது. அவளின் முடிவை பெற்ற பிள்ளைகளிடம் சொல்லிவிடவும் முடியவில்லை. பிரிவுக்குப் பின்னர் பிள்ளைகளின் வாழ்க்கை திசையற்றதாகிவிடும் சீர்குலைந்துவிடும் என்ற எண்ணமும் அவர்களின்  உரையாடல்களின் ஊடே புரிந்துகொள்ள முடிகிறது. காதலனிடம் போய்ச்சேரவும்வேண்டும் அதே வேளையில் பெற்ற பிள்ளைகளின் கதிபற்றி சிந்திக்கவும் வேண்டும் என்ற நிலை வாகன ஸ்தம்பிப்பின் குறியீடாக உணரமுடிகிறது. 

நகர மறுக்கும் வாகன நெரிசலை  போலவே அவர்களின் வாழ்க்கையும் ஒரு முடிவில்லாமல் நிலைகுத்தி நின்று தவிப்பதை யானம் நிரூபிக்கிறது. தொடர்ந்து பயணித்து வாழ்க்கையின் இலக்கை அடைய முடியாத தவிப்பை உணரவைக்கும் நல்ல எடுத்துக் காட்டு. புரிந்துணர்வற்ற எல்லாத் தம்பதிகள் எதிர்நோக்கும் சிக்கலைப் பிரதிபலிக்கவும் செய்கிறது. 

யானம் எளிய கதை ஆனால் அதன் வலிமையான வைப்பு முறையின் வழி எழுந்து நிற்கிறது..

கோ.புண்ணியவான்

மலேசியா.

அன்புள்ள ஜெ

ஒரு நவீனச் சிறுகதை ஒரு சுருக்கமான புதுக்கவிதைபோல அமைவதை பல கதைகளில் பார்த்திருக்கிறேன். யானம் அத்தகைய ஒரு கதை. அவரவர் குமிழிகளுக்குள் ஒவ்வொருவரும் வாழ்வதை, வாழ்க்கையில் வெளியேற முடியாமல் அடைபட்டிருப்பதை காட்டிய கதை. உலகியல் பெரும்பாலும் இப்படிப்பட்ட சின்னஞ்சிறு கூடுகளில் ஒடுங்கிக்கொள்வதுதான்.

ஆ.கிருஷ்ணசாமி

 

முந்தைய கட்டுரைமருத்துவர் ஜீவா அறக்கட்டளை விருதுகள்
அடுத்த கட்டுரைஆக்காண்டி – வாசிப்பு அனுபவம்