ஊரும் இலக்கியமும்- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

அருண்மொழிநங்கை உரை கேட்டேன். வழக்கமான உற்சாகமும் வேகமும் இருந்தாலும் நீங்கள் சொல்வதுபோல ஆங்காங்கே அரங்கின் எதிர்வினையின்மையால் ஒரு கவனக்குறைவு உருவாகிறது. ஒரு நிலம் எப்படி எழுத்தின் வழியாக உருவாகிறது என்பதை அழகாகச் சுட்டிக்காட்டிச் சொன்னார். எதையோ பேசவேண்டுமே என்றில்லாமல் மிகவும் தயாரிப்புடன் வந்து பேசியிருப்பது மதிப்பிற்குரிய செயல். 

எழுதுவது என்ற செயல் வழியாக நிலம் பதிவாகிறது என பலர் நினைத்துக்கொண்டிருப்பார்கள். உண்மையில் அதன் வழியாகத்தான் நிலம் உருவாகியே வருகிறது. ஒரு நிலம் அல்லது ஊர் என்பது என்ன? பொருட்கள்தானே. ஒன்றுக்கொன்று எந்த தொடர்பும் இல்லாத பொருட்கள். ஒரு மலை, அதன் அருகே ஓர் ஓடை, அதன் அருகே ஒரு கோயில். இவை மூன்றும் மூன்று தனித்தனிப் பொருட்கள். அவற்றுக்கிடையே எந்த தொடர்பும் இல்லை. தொடர்பை உருவாக்குவது அவற்றைப் பார்ப்பவர்தான். அவருடைய மனதில்தான் அவை ஒரெ காட்சியாக ஆகின்றன. அவருடைய உணர்ச்சிகளால்தான் அவை பொருள் ஏற்றம் பெறுகின்றன. அவர்தான் அதைஅழகான லேன்ஸ்கேப்ஆக மாற்றுகிறார். அவர் அதை பிறரிடம் சொல்லி நூறுபேர் ஏற்றுக்கொண்டால் அது அழகான இடமாக ஆகிவிடுகிறது.

கவிஞர்களால்தான் மலைகள் அழகானவையாக ஆகின்றன என்று சொல்வார்கள். நாங்கள் வகுப்புகளில் சொல்லும் வரி அது. ஓர் இடம் அழகானதாக உணரப்படும்போது அது சப்ஜெக்டிவானது. அது எழுதப்படும்போது அது அப்ஜெக்டிவான ஓர் உண்மையாக ஆகிவிடுகிறது. ஓர் இடத்தின்மேல் மனச்சித்திரத்தை ஒரு ஸ்தூலமான கருத்தாக மாற்றுவது எழுத்துத்தான். அதிலும் கட்டுரைகளை விட கதைகளும் கவிதைகளும்தான். அப்படித்தான் கலாச்சாரமே உருவாகிறது. அண்மையில்தான் நாம் மலைகளை அழகான இடங்களாகப் பார்க்க ஆரம்பித்தோம். இருநூறாண்டுகளுக்கு முன்புவரை அழகைப்பார்க்க எவரும் மலைகளுக்குச் செல்வதில்லை. மலைகள் நோய் அளிக்கும் இடங்களாகவும் கொடிய விலங்குகள் வாழுமிடங்களாகவும் கருதப்பட்டன. அதேபோல இப்போது கோயில்களை கலைக்கூடங்களாகப் பார்க்க ஆரம்பித்துள்ளோம்.

எழுதி எழுதி நம்மை நாம் எப்படி உருவாக்கிக்கொள்கிறோம் என்பதை அழகாக உற்சாகமான கையசைவுகளுடன் சொல்லியிருக்கிறார் அருண்மொழி நங்கை. வாழ்த்துக்கள்

ஶ்ரீனிவாஸ்  

முந்தைய கட்டுரைஆன்மபலத்தின் ஊற்றுமுகம் – நரம்பியல் பார்வையில்
அடுத்த கட்டுரைஅர்த்தநாரீச வர்மா