ஆல்ஃபா மேல்!

குருவாயூர் தாரா (1938- 2023)

அன்புள்ள ஜெ

அனிமல் சினிமாவை ஒட்டிஆல்ஃபா மேல்என்னும் கருத்தை முன்வைத்து ஒரு விவாதம் ஊடகங்களில் நடந்துகொண்டிருக்கிறது. இன்றைய நாகரீக உலகில் அப்படி ஒரு ஆல்ஃபா மேல் இருக்க முடியுமா?  அப்படி இருந்தால்கூட பெண்கள் அவர்களால் கவரப்படுவது நடக்குமா? எனக்கு இந்த ஒட்டுமொத்த விவாதமே அபத்தமாகத் தோன்றுகிறது

சாந்தா பிரபாகர்

அன்புள்ள சாந்தா,

அடிப்படை உயிரியல்புகள் எந்த நாகரீக வளர்ச்சியாலும் பெரும்பாலும் இல்லாமலாமவதில்லை. அவை நாகரீகத்தால் உருமாறுகின்றன. மறுவரையறை செய்யப்படுகின்றன என்று மட்டும் சொல்லலாம்.

ஆல்ஃபா மேல் என்று உயிரியலாளர் சொல்வதை நாம் பெரும்பாலான விலங்குகளில் காணலாம். குரங்குகளில் தெளிவாகக் காணமுடியும். அதை இங்கே தாட்டான் என்பார்கள். ஒரு மந்தைக்கு அது தலைமை தாங்கும். அது அந்த மந்தையிலுள்ள அத்தனை மந்திகளையும் புணரும். பெரும்பாலும் அதன் குழந்தைகளே அந்த மந்தையில் பிறக்கும். தாக்கும்தன்மையும் ஆதிக்கத்தன்மையும் கொண்டிருக்கும். அதன் நடை, பார்வை, தோரணை அனைத்திலுமே ஆதிக்கம் தெரியும். அந்த மந்தையே அதை அஞ்சி நடுங்குவதை காணலாம். குரங்குகளில் ஒன்று தாட்டான் குரங்கு  ஆவது அதன் பருமன் மற்றும் வலிமையால் மட்டுமல்ல, சூழ்ச்சித்திறன் சூழல்மீதான அறிதல் ஆகியவற்றாலும்தான்.  

விலங்குகளில் மந்தையை ஒருங்கிணைக்கும் மையமாக அமைவது முதன்மை ஆண். பெரிய மந்தைகளில் அதற்குக் கட்டுப்பட்ட அடுத்தகட்ட ஆண்களின் தொகுப்பு உருவாகிறது. அந்த ஆணை தோற்கடிக்கும் ஆண் அடுத்த தாட்டான் ஆகிறது. ஆகவே முதன்மை இடம் என்பது தொடர்ச்சியான போராட்டம் வழியாக நிலைநிறுத்தப் படுகிறது. மிகச்சிறந்த மரபணுக்கூறுகள் மட்டுமே அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட முதன்மை ஆண் என்னும் உயிரியல்பு உதவியாக உள்ளது. இதைப்பற்றி ஏராளமான ஆவணப்படங்கள் உள்ளன.

இந்ததாட்டான்கள்நம் குடும்பங்களில் சென்ற தலைமுறையில் ஏராளமாக இருந்தனர். ‘எங்க தாத்தாவப் பாத்தா குடும்பத்தில அத்தனை பேரும் நடுங்குவாங்கஎன்று நம் அம்மாவும் அப்பாவும் பெருமையாகச் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். நம் குடும்பங்கள் முதன்மை ஆணால் தலைமை தாங்கப்பட்டவை. அவருடைய அதிகாரம் மொத்த குடும்பத்தையும் முழுமையாகக் கட்டுப்படுத்தியது. பெண்கள் அந்த அதிகாரத்தின் முன் வெறும் துகள்களாகவே இருந்தனர். அந்த முதன்மை ஆண் பால்விழைவு மிக்கவனாகவும் இருந்தான். அவனுடைய பாலியல் சுதந்திரம் கட்டற்றது, அவனுடைய மீறல்கள் மன்னிக்கப்பட்டன.  சென்ற தலைமுறையில் பல குடும்பங்களில் உறவுகளுக்கு உள்ளேயே அந்த   முதன்மை ஆணின் பாலியல் மீறல்கள் நிகழ்ந்தன.

பழைய புராணங்களில் அத்தகைய முதன்மை ஆண்களின் பலவகைச் சித்திரங்கள் உள்ளன. மகாபாரதம் மிகப்பெரிய கதைவெளி ஆகையால் பலவகையான முதன்மை ஆண்களை அது முன்வைக்கிறது. கண்ணில்லாதவரும் பேராற்றல் மிக்கவருமான  திருதராஷ்டிரர் ஓர் முதன்மை ஆண். அவருக்கு முன்வடிவமாக இருந்த தீர்க்கதமஸ் இன்னொரு முதன்மை ஆண். காமமே உருவானவர் அவர். ஆனால் மகாபாரதம் பீஷ்மரையும் முதன்மை ஆணாகவே முன்வைக்கிறது. முற்றிலும் பாலியல் ஒறுப்பு கொண்டவர் அவர். அவ்வாறு பலவகையான முதன்மை ஆண் வடிவங்கள் மரபில் உள்ளன. வீரன், அரசன், பெருங்காதலன், பெருந்ததந்தை என்னும் நிலைகள் முதன்மை ஆணின் வெவ்வேறு முகங்கள்.

சுகதகுமாரி

அந்த முதன்மை ஆணின் அடுத்த வடிவமே குலத்தலைவன். அதன் அடுத்த வடிவம் அரசன். அரசனின் நவீன வடிவம் தலைவன் அல்லது ஆட்சியாளன். வீரம் என்பதே முதன்மை ஆணின் குணச்சிறப்புதானே?  வீரவழிபாடு என்பது தொன்மையான குலங்களின் அடிப்படையான மனநிலைகளில் ஒன்று. தொன்மையான பாடல்கள் வீரவழிபாட்டுத் தன்மை கொண்டவை.  காவியங்கள் வீரவழிபாட்டில் இருந்து உருவானவை. தமிழ் இலக்கண மரபில்பாடாண் திணைவீரவழிபாட்டுப் பாடல்கள் கொண்டது. ஆணை பாடுவதே பாடாண். பாடப்பட்ட ஆண்களின் குணங்களை சங்கப்பாடல்களில் சென்று பாருங்கள், எல்லாமே முதன்மை ஆணின் குணங்கள் என நாம் என்னென்ன சொல்வோமே அவைதான். கட்டற்ற பாலியல் உட்பட.

நம் நம் காவியத்தலைவர்களை எண்ணிக்கொள்ளுங்கள். அனைவருமே முதன்மை ஆண்கள். சீவகன் என்ன செய்கிறான்? எட்டு பெண்களை வென்று அடைகிறான். காவிய நாயகர்களிலேயே மென்மையானவனாகிய கோவலன் கூட மதம்கொண்ட யானையை அடக்கியவன்தான். நம் சிற்றிலக்கியங்களின் பாடல் தலைவர்களாகிய அரசர்கள் எப்படிச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்? ஈவிரக்கமில்லாமல் எதிரியை அழிப்பவர்கள், எதிரியின் மணிமுடி பட்டுப்பட்டு தழும்பேறிய கால்கள் கொண்டவர்கள், ஆனால் தந்தை போல தன் சுற்றத்தைப் பேணுபவர்கள். பேதை, பெதும்பை, மங்கை , மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் ஏழுமுதல் நாற்பது வயது வரையிலான ஏழு வயதுநிலையைச் சேர்ந்த பெண்களும் அவனை எண்ணி காமத்தால் பரிதவிக்கிறார்கள். அவனுடைய அந்தபுரம் மிகப்பெரியதாக இருக்கிறது.

அரசனை இறைவன் என்றது நம் மரபு. இறைவனும் நமக்கு ஓர் அரசன். இறைவனுக்குரியதாக நம் மரபு உருவகித்துள்ள எல்லா குணங்களும் முதன்மை ஆணுக்குரியவை. எதிரியை வெல்லுதல், குலம்காத்தல், பெருங்காமம் கொண்டிருத்தல், மறுசொல் இல்லாத அடிபணிதலை கோருதல், பணிபவர் மேல் கருணை கொண்டிருத்தல்  என்னும் ஐந்து பண்புகள் அவை. இந்திரன் ஆனாலும் சரி முருகன் ஆனாலும் சரி. சிற்றிலக்கியங்கள் தெய்வத்தை அரசனுக்குரிய எல்லா வர்ணனைகளும் அளித்தே பாடுகின்றன.

குர்ரதுல்ஐன் ஹைதர்

நம் நாட்டார் தெய்வங்கள் எல்லாமே மூர்க்கமான முதன்மை ஆண்கள். மாயாண்டிச்சாமி கதையை அல்லது சுடலைமாடன் கதையை கவனியுங்கள். விரும்பியதை வன்முறை வழியாகக் கவர்கிறார்கள். விரும்பிய பெண்ணை தூக்கிச் சென்று புணர்கிறார்கள். மாயாண்டிச்சாமி அப்படியே அனிமல் சினிமாவில் வரும் கதைநாயகன் போலிருக்கிறார். மெய்யாகவே திருட்டுகள், கொலைகள், கற்பழிப்புகள் செய்து வாழ்ந்த பெருந்திருடர்களும் கொள்ளையர்களும் காலப்போக்கில் நாட்டார்த் தெய்வங்களாக மாறிய கதைகளும் ஏராளமாக உண்டு.

இந்த முதன்மை ஆண் எனும்டெம்ப்ளேட்நம் பண்பாட்டிலிருந்து நமக்கு கிடைத்து நம் அகத்தில் உள்ளது. நாம் அரசியல் தலைவர்களை கண்மூடித்தனமாக வழிபடுவது அதனால்தான். அவர்களின் திருட்டுத் தனமும், வன்முறையும், பாலியல்மீறல்களும்கூட நம்மால் ரசிக்கவே படுகின்றன. ஒவ்வொரு ஊரிலும் சாதித்தலைவர்கள் இதே இயல்புகளால்தான் கொண்டாடப்படுகிறார்கள். பெரிய குற்றவாளிகள் இதனால்தான் மாவீரர்களாக நம் சமூகத்தால் கொண்டாடப்படுகிறார்கள். சொல்லச்சொல்ல உங்கள் மனதில் முகங்களாக வந்துகொண்டிருக்கும் இல்லையா?

ஆல்ஃபா மேல் என்ற ஒரு அன்னியச் சொல்லை வைத்துக் கொண்டு இத்தனை குழப்பியடிக்கிறார்கள் என்றால் இங்கே இவற்றைப் பேசுபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நம் இலக்கியங்களோ, மரபோ தெரியாது என்பதே காரணம். வீரவழிபாடு, தலைமை வழிபாடு என்ற பெயர்களில் இங்கே ஓங்கியிருக்கும் மனநிலை ஆல்ஃபா மேல் வழிபாடுதான். நம் அரசியலே அதனடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறது. அதில் நமக்கு ஒவ்வாமை இல்லை.  அதை சினிமாவில் காட்டக்கூடாது என்கிறோம், சரிதானே?

சினிமா ஒரு வெகுஜனக் கலை. அதன் மூலங்கள் எங்கிருந்து வருகின்றன? முந்தைய வெகுஜனக் கலைகளில் இருந்து. நம் சினிமாவுக்கு தெருக்கூத்து மற்றும் புராணங்களுடன் நெருக்கமான உறவுண்டு. தொடக்ககால சினிமாக்கள் நாடகங்களையும் தெருக்கூத்தையும் காட்சிப்படுத்தின. நாடகங்களும் கூத்தும் மரபிலிருந்த புராணங்களையும் நாட்டார் கதைகளையும் அடிப்படையாகக் கொண்டவை. அவற்றில் நாயகர்கள் பெரும்பாலும் முதன்மை ஆண் என்னும் இயல்பை வெளிப்படுத்துபவர்கள். ஏற்கனவே சமூக ஏற்பு பெற்ற உருவங்கள். 

ஆஷாபூர்ணா தேவி

சினிமா கதைநாயகன் என்னும் உருவகம் புறநாநூறு அல்லது மகாபாரதக் காலம் முதல் இருந்து வரும் அதேவீரநாயகன்தான். முதன்மை ஆண். அதைத்தான் சின்னச்சின்ன வேறுபாடுகளுடன் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு சினிமாப் பார்வையாளனுக்குள்ளும் இரண்டு மனநிலைகள் உள்ளன. வீரவழிபாடு, வீரனாக தன்னை கற்பனைசெய்துகொள்ளுதல். இந்த இரண்டில் ஒன்றை, அல்லது இரண்டையும் நிறைவு செய்வதுதான் சினிமாக்கதையின் கட்டமைப்பு. 

சினிமாக் கதைநாயகன் மாவீரன். வெல்லவே முடியாதவன். சாகவே சாகாதவன். எதிரிகளுக்கு எமன். வேண்டியவர்களுக்கு வேண்டியவன்.எத்தனை வசனங்கள். ‘நான் நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன்என்ற பழைய வசனம் முதல்பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்என்ற அண்மைக்கால வசனம் வரை. நவீன நாகரீகமும் கல்வியும் ஓங்கிய அமெரிக்க சினிமாவிலேயே கூட கதைநாயகன் மாவீரன்தான். மேற்குலகு உருவாக்கிய நவீன ஆல்ஃபா மேல் என்றால் ஜேம்ஸ்பாண்ட்தான். எவ்வளவு சரியானடெம்ப்ளேட்’ ! .ஓர்  இயல்புகூட குறைவில்லை.

இந்த மாவீரக் கதைநாயகன் என்னும் டெம்ப்ளேட்டில் சுவை மாறுபாடுகளுக்காக பல கலவைகள் உண்டு. ‘கிரே டிஞ்ச்என்று இங்கே திரைக்கதை விவாதங்களில் சொல்வார்கள். கெட்டதன்மையும் கலந்தவன். அதாவது, எம்.ஜி.ஆர் நடித்தவை முழுக்க முழுக்க நல்ல கதைநாயகக் கதாபாத்திரங்கள். ஆனால் அவரே இரட்டை வேடம் என்றால் ஒரு கதாபாத்திரம் கெட்டவனாக இருந்து பின் நல்லவனாக ஆகும்.  சிவாஜிகணேசன் தீய அம்சங்கள் கொண்ட கதைநாயகனாகவும் வந்துள்ளார். 

அமிதாப் பச்சனும், ரஜினிகாந்தும்கெட்ட அம்சத்தைசற்று கூட்டினார்கள். கதைநாயகன் மொடாக்குடியனாகவும் கெட்ட ஆட்டம் போடுபவனாகவும் தோன்றினான். ஆனால் மாயாண்டிச்சாமியும் அப்படிப்பட்ட தெய்வம்தானே? அந்தகெட்ட அம்சம்காலம் செல்லச்செல்ல கூடிக்கொண்டே வருகிறது. மங்காத்தாவில் கதைநாயகன் வில்லன் செய்ததை தான் செய்கிறான். அதை நம் சமூகம் ஏற்றுக்கொண்டது. சுடலைமாட சாமி செய்யாத களவா என்ன?

ஆனால் மெய்யான வாழ்க்கையில் ஆல்ஃபா மேல் என ஒன்று உண்டா?  உறவுகளில் அதன் இடம் என்ன? 

நம் கூட்டுமனதில் பழைய ஆல்ஃபா மேல் என்னும் வீரநாயகன் இருக்கிறான். இளமையில் எளிய உயிரியல்பால் பெண்கள் விலங்குத்தன்மை கொண்ட  முதன்மை ஆணை விரும்புகிறார்கள். ஆகவேதான் சினிமாவிலும் விளையாட்டிலுமெல்லாம் அத்தகையோர் நாயகனாக திகழ்கிறார்கள். அவர்கள்மேல் பெண்கள் காமம் கொள்கிறார்கள். அதைத்தான் சினிமா பயன்படுத்திக் கொள்கிறது. சினிமாவில் வரும் கதைநாயகன் நம் இளம்பெண்களின் பகற்கனவிலிருந்து உருவானவன்.

பெண்களை மதிக்கும், கடமைதவறாத, நல்லொழுக்கம் கொண்ட, அன்னையையும் தங்கையையும் விரும்பும், பெண்களின் கற்பை பாதுகாக்கும் எம்ஜிஆர் பாணி கதைநாயகன் அந்தக்கால பெண்களின் ஈரக்கனவுகளில் இருந்து வந்தவன். (ஜெயகாந்தனின் சினிமாவுக்குப்போன சித்தாளு என்னும் கதை நினைவுக்கு வருகிறது) பெண்களை மதிக்காத, போக்கிரியான, வீரனான கதைநாயகன் அதற்கு எதிர் வடிவம். அதுவும் பெண்களின் கனவில் எழுந்த உருவமே. சினிமா எப்போதுமே கொஞ்சம்சாம்பிள் டோஸ்கொடுத்துப் பார்க்கும். அது வேலைசெய்தால் டோஸ் ஏறும். அப்படி ஏற்புகள்தான்  இந்த வகை உருவகங்களை உருவாக்குகின்றன. 

பெண்களால் நிராகரிக்கப்படும் கதைநாயக உருவகம் நீடிப்பதில்லை. இன்றைய பெண்கள்ரக்கட் பாய்ஸ்என்னும்கெட்ட பயல்களைவிரும்புகிறார்கள் என சினிமா கண்டறிந்துள்ளது. படித்த உயர்குடிச் சாயல்கொண்ட கதாபாத்திரம் ‘அமெரிக்க மாப்பிள்ளை’ என கேலி செய்யப்படுகிறது. பலரும் வசைபாடுவதுபோல சினிமா பெண்களுக்கு அவர்களை பரிந்துரைக்கவில்லை.பெண்களின் கனவுகளில் இருந்து கதைநாயகர்களை உருவாக்கிக் கொள்கிறது.

நான் கதைநாயக நடிகர்களின் அருகே அமர்ந்து அவர்களைப் பார்க்க வரும் பெண்களைக் கூர்ந்து கவனித்ததுண்டு. எந்த ஆணும் நடிகைகள் முன் அத்தனை அப்பட்டமாக காமத்தை வெளிப்படுத்தி கண்டதே இல்லை.  

கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்

பெண்கள் ஒருவகை பரவச நிலையில், ஒரு மெல்லிய உறவுச்சநிலையில் இருப்பதுபோல நீர்பரவிய கண்களும் சிவந்த முகமும் மூச்சிரைப்புமாக இருப்பார்கள். முதலில் சம்பிரதாயமான சில சொற்கள். மெல்லமெல்ல வெட்கம் போன்ற தடைகள் மறந்து நேரடியான புகழ்ச்சி. அது கொஞ்சம் நீடித்தால் பாலியல் பேச்சளவுக்கே நீளும். பெண்கள் அந்தக் கதைநாயகர்கள் நடித்த கெட்ட நாயகர்களை புகழ்வார்கள். அதிலுள்ள மோசமான வசனத்தை பேசச்சொல்லி கேட்பார்கள். பொதுவாக வாடி, போடி போன்ற சொற்களையும் வசைகளையும் கேட்க விரும்புவார்கள். கல்லூரிப்பெண்கள், குடும்பப்பெண்கள், படித்து உயர்பதவிகளிலுள்ள பெண்கள் என பலவகைகளில் கண்டுள்ளேன். 

நான் கண்ட ஆச்சரியமான ஒன்றுண்டு, நடிகர்கள் பெண்கள் அப்படிப் பேசுவதை விரும்புவதில்லை. தவிர்க்க முயல்வார்கள். எரிச்சல் அடைவார்கள். ஏனென்றால் தங்களை வெறுமொரு காமப்பண்டமாக பார்ப்பது அவர்களுக்கு ஒருவகை இழிவுணர்ச்சியை அளிக்கிறது. அவர்கள் தங்கள் ஆளுமைகளை முன்வைக்க விரும்புவார்கள். (இதே உளநிலைதான் நடிகையரிலும். எந்த நடிகையும் தன்னை உடலாக பிற பார்ப்பதை விரும்புவதில்லை. ஒரு நடிகையிடம் சொல்லவே கூடாத வார்த்தை என்பதுநீங்கள் அழகாக இருக்கிறீர்கள்என்பதுதான்) 

ஆல்பா மேல் என்பது விலங்குத்தன்மையால் இயல்பாக உருவாகும் ஒன்று. ஆனால் மானுடக் கலாச்சாரம் ஏறத்தாழ அரை லட்சம் ஆண்டு தொன்மையானது. இந்த பரிணாமத்தில் நாம் அந்த விலங்குத்தன்மையை பல வழியிலும் கடந்துள்ளோம். இன்றும் உடல்சார்ந்த முதன்மை ஆண் எனும் உருவகமே முதன்மையாக உள்ளது. ஆனால் அந்த உருவகம் பண்பாட்டின் வளர்ச்சி வழியாக பல வகையில் வளர்ந்து பிரிந்து வேறுவடிவங்கள் கொண்டுள்ளது.

இன்று கலாசாரம் உருவாக்கிய முதன்மை ஆண் மூன்று களங்களைச் சேர்ந்தவன். அதிகாரம் சார்ந்த முதன்மை ஆண் முதல் வகை. செல்வம், பதவி, புகழ் ஆகியவற்றால் ஆனது அதிகாரம். அதிகாரம் ஓர் ஆணை முதன்மையானவனாக ஆக்குகிறது. அது ஆணியல்பு என உணரவும் படுகிறது. ஒரே ஒருமுறை  மும்பை நட்சத்திர விடுதி ஒன்றில் இருந்து ரத்தன் டாட்டா இறங்கிச் செல்வதை தொலைவில் இருந்து கண்டேன். அங்கே உருவான அமைதி, மொத்தக் கண்களும் அவரில் பதிந்திருந்த விதம் அவருடைய முதன்மையைக் காட்டியது. சிம்மம் செல்வதுபோலத்தான். 

இரண்டு, கலை, இலக்கியம் , அறிவுத்துறைகளிலுள்ள தேர்ச்சியால் உருவாகும் முதன்மைத்தன்மை. அதுவும் முதன்மை ஆண்களை உருவாக்குகிறது. அப்படி பல ஆளுமைகளை நான் நேரில் கண்டிருக்கிறேன். யூ.ஆர்.அனந்தமூர்த்தி ஓர் அறிவார்ந்த அவையில் நடந்துசெல்கையில் டாட்டாவை விட ஆழ்ந்த கவனம் அந்த அவையில் உருவாவதை நான் கண்டதுண்டு. கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் தனித்த களிறு போல அவைக்குள் நுழைவதை கண்டதுண்டு. அப்படி எத்தனை பேர்!

அம்ருதா பிரீதம்

முதிரா இளமையில் பெண்கள் உடல்சார் முதன்மை ஆணை விரும்புகிறார்கள். ஆனால் ஒரு பெண் அறிவும் நுண்ணுணர்வும் கொள்ளுந்தோறும் அந்த வகையான ‘முதன்மை ஆண்விலங்கு’ மேல் ஒரு சலிப்பும் விலக்கமும் கொள்கிறாள். மலையாள சினிமாவில் நானறிந்த ஒரு பெண் அவள் மேல் பெருங்காதல் கொண்ட ஓர் ஆணை நிராகரிக்க ஒரு காரணம் என்னிடம் சொன்னார். அந்த ஆண் உடற்பயிற்சி செய்து திரண்ட உடல்கொண்ட பயில்வான். 

அவன்கூட எப்படி வெளியே போவது?” என்றார். 

எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. “ஏன், அவனைத்தானே பெண்கள் விரும்புவார்கள்?” என்றேன். 

அது நீங்கள் நினைப்பது. எனக்கெல்லாம் கூச்சமாக இருக்கும் 

நான் “ஏன்?’ என்றேன். 

நீங்கள் ஒரு செக்ஸ்-டாயை வெளிப்படையாக கொண்டு அலைவீர்களா?” 

நான் அயர்ந்துவிட்டேன்

அவனுடன் வெளியே சென்றால் எனக்கு அறிவோ நுண்ணுணர்வோ இல்லை, எனக்கு தேவை ஆணின் தசை மட்டும்தான் என நினைப்பார்கள்

யார் நினைப்பார்கள்?”

மற்ற பெண்கள்

அது உன் கற்பனையாக இருக்கலாம்

உண்மையாகவே இல்லை….ஒரே ஒருமுறை அவனுடன் லிஃப்டில் சென்றேன். நாலைந்து பெண்கள் என்னை கேலி செய்துவிட்டார்கள்

எப்படி?”

அவனை பீஃபி என்கிறார்கள். என்னை பீஃப் சாப்பிடுகிறாயா, ஃப்ரையா கட்லெட்டா என்றெல்லாம் கேலிசெய்தார்கள்

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் பின்னர் இயல்பு என்றும் பட்டது. அது பெண் தன் ஆளுமையில் அடையும் ஒரு முன்னகர்வு. அவள் அதிகாரம் கொண்ட முதன்மை ஆணை விரும்பக்கூடும்.  இன்னும் மேலே சென்று கலை, அறிவு ஆகியவற்றை தனக்கான அளவுகோலாகக் காணக்கூடும். அப்படி பல பெண்களை நான் சந்தித்ததுண்டு. 

தமிழ்ச் சூழலில் தீவிரமான எழுத்தாளர்கள் எவரும் பெண்களால் வாசிக்கப்படுவதில்லை என்பதனால் இலக்கிய எழுத்தாளர்கள் எவரும் பெண்களிடம் அப்படி ஓர் ஏற்பை பெறுவதை நான் கண்டதில்லை, அறிந்ததுமில்லை.  பொதுவாசிப்புத் தளத்தில் நா.பார்த்தசாரதி ஜெயகாந்தன் போன்றவர்களுக்கு அப்படி ஒரு ஆளுமை இருந்ததாக அறிந்ததுண்டு. ஆனால் மிகக்குறைவான அளவில்தான்.

மலையாளத்தில் சகரியா, எம்.டி.வாசுதேவன் நாயர் போன்றவர்கள் அப்படி ஒரு காலத்தில் வழிபடப்பட்டார்கள். கன்னடத்தில் கிரீஷ் கர்நாட் அப்படி எண்ணப்பட்டார். தமிழகத்தில் பெரும் இசைக்கலைஞர்களை பெண்களின் விழிகள் மொய்த்துச் சூழ்ந்திருப்பதைக் கண்டிருக்கிறேன். அச்சூழலில் அவர்களே முதன்மை ஆண் என உணர்ந்திருக்கிறேன். 

மேதா பட்கர்

முதன்மை ஆண் என ஓர் ஆணை ஒரு பெண் எண்ணுவதென்பது மிக இயல்பான ஒன்று. அது காமத்தின் அடிப்படையாக இருக்கும் அடுத்த தலைமுறையை உருவாக்கும் விழைவின் இன்னொரு வடிவம். உடல்நலம், வீரம், கலைத்திறன், அறிவுத்திறன் என ஒரு சமூகம் எதை முதன்மையாக கருதுகிறதோ அது தொடரவேண்டும் என்பதற்கான உந்துதல். 

ஆனால் இன்றைய கலாச்சாரச் சூழலில் நடைமுறையில் அது நேரடியாக பாலுறவு வழியாக மரபணுத் தொடர்ச்சியாக நிகழவேண்டும் என்பதில்லை. ஒரு பெண் ஓர் ஆணை முதன்மை ஆண் என எண்ணுவது அவரை ஒரு சமூக முன்னுதாரணமாக எண்ணுவதாக மட்டுமே இருக்கலாம். ஒருமுறைகூட அவரை நேரில் சந்திக்காமல் இருந்தாலும் அவள் வழியாக உளரீதியாகவே அவள் குழந்தைகளிடம் அந்த ஆணின் செல்வாக்கு செல்லும். 

ஒரு பெண் தன் மகன் ஒரு விளையாட்டு வீரன் அல்லது இசைக்கலைஞன் ஆகவேண்டும் என எண்ணுவதென்பது அவள் உள்ளம் விளையாட்டுவீரனை, இசைக்கலைஞனை முதன்மை ஆண் என கொள்ளுவதனால்தான். அன்னையரின் அந்த விழைவு குழந்தைகளை அவ்வாறாக உருவாக்குவதற்கு நம்மிடையே பலநூறு முன்னுதாரணங்கள் உள்ளன. ஆகவே ஒரு சூழலில் எவர் முதன்மை ஆண் என கொள்ளப்படுகிறார் என்பது எப்போதுமே முக்கியமான ஒன்றுதான்.

சரி, முதன்மைப் பெண் உண்டா? விலங்குகளிலேயே யானை போன்றவற்றில் முதன்மைப்பெண்தான் தலைவி. குருவாயூரில் ஒருமுறை யானைக்கொட்டடியில் இரண்டு ஆண்யானைகள் மோதிக்கொண்டன. சின்னப்பூசல். ஆனால் மொத்த யானைகளும் பிளிறி ஒரே ரகளை. என் அருகே நின்றிருந்த முதிய பெண் யானையான தாரா மிக மெல்லிய ஒரு பிளிறலோசையை எழுப்பியது. அப்படியே மொத்தச் சத்தமும் அடங்கி அமைதி உருவானது. ஒரே ஒரு சொல்! (சும்மா பேசிக்கிட்டிருந்தோம் பாட்டி!)

அப்படிப்பட்ட அன்னையரை என் குடும்பத்தில் கண்டிருக்கிறேன். என் பாட்டி லட்சுமிக்குட்டி அம்மா அத்தகையவர். அண்மையில் என் மகன் திருமணத்திற்கு அழைப்பு கொடுக்கச் சென்றிருந்தது பல மூதன்னையரை நேரில் காண நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. அவர்களின் தோரணையும் கனிவும் என்னை பரவசம் கொள்ளச் செய்தன. 

பொதுவாக அன்னைவழிச் சமூகங்களில் அத்தகைய முதன்மைப் பெண்கள் இயல்பாக உருவாகிறார்கள். ஆண்மையச் சமூகங்களில் சொத்துரிமை இல்லாமையால் அந்த சுதந்திரமும் நிமிர்வும் பெண்களுக்கு உருவாவது அரிது. ஆனால் வறுமையில் தன் உழைப்பால் குடும்பத்தை உருவாக்கிக் கொண்டுவந்த பெண்களில் அந்தஆல்பா ஃபீமேல்தன்மை உண்டு. அத்தகையோரையும் இளமை முதலே அறிந்திருக்கிறேன்.

ஒரு சமூகம் ஆல்பா ஃபீமேல் மேலும் பெரும் கிளர்ச்சி கொண்டிருக்கவேண்டும் என நான் நினைக்கிறேன். ஆண்கள் மட்டுமல்ல, பெண்கள்கூட. சினிமாவில் பானுமதி முதல் நயன்தாரா வரை பலரும் முதன்மைப் பெண் கதாபாத்திரமாக நடித்துள்ளனர். பானுமதி மெய்யான வாழ்க்கையிலும் ஒரு ஆல்ஃபா ஃபீமேல் என சொல்வார்கள். அவருடைய நிறுவன ஊழியர்கள்அம்மகாருஎன பெரும் பிரியத்துடன் அவரைப்பற்றிச் சொல்வதுண்டு. 

அந்த முதன்மைப் பெண்ணியல்பு நான் கண்டவரை பெரும் கனிவு. அணைத்துச்செல்லும் போக்கு. அதேசமயம் எதிர்விசைகளுக்கு முன் அடங்காமை. அவ்வாறு உடல்சார்ந்து அல்லாமல், அதிகாரம் சார்ந்து அல்லாமல், அறிவால் அல்லது சேவையால் நிமிரும் பெண்களே ஒரு சமூகம் கொண்டாடவேண்டிய முதன்மைப்பெண்கள் என நான் நினைக்கிறேன்குர்ரதுலைன் ஹைதர், ஆஷாபூர்ணா தேவி போல. அமிர்தா பிரீதம், சுகதகுமாரி போல. மேதாபட்கர், கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் போல. 

அன்றாட வாழ்க்கையில் எளிய பெண்களின்  முதன்மைத்தன்மை வசீகரமானதாகவே எனக்கு என்றும் இருந்துள்ளது. அதை வெவ்வேறு வகையில் எழுத முயன்றிருக்கிறேன். என்னைப்போலவே சுந்தர ராமசாமிக்கும் அந்த ஈர்ப்பு உண்டு. அவரும் பல கதைகளில் அத்தகைய ஆல்ஃபா ஃபீமேல் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

சுந்தர ராமசாமி சொன்ன ஒரு நிகழ்வு. இந்திராகாந்தி கொல்லப்பட்ட தருணம். அன்று சுதந்திர சிந்தனையாளர், இடதுசாரிகள் இந்திராகாந்தியை கடுமையாக வெறுத்தனர். ரயிலில் ஒருவர்இந்திராகாந்தி கொல்லப்பட வேண்டியவர்தான்என்று வாதிட்டார். கூடச்சேர்ந்து பல குரல்கள் ஆதரித்து எழுந்தன.  பெட்டிக்குள் மீன்விற்கும் பெண்கள் கூடையுடன் நின்றிருந்தனர். அவர்களில் ஒரு வயதான பெண்மணி உக்கிரமாக கையை காட்டிபேசாதேஎன்றார். அவ்வளவுதான். அமைதி. மறுபேச்சு இல்லை.

அதே ஒரு சொல்.

முந்தைய கட்டுரைஅம்பலவாண நாவலர்
அடுத்த கட்டுரைஆன்லைனும் குருகுலமும்