மானுட அறிவை நம்புதல்

அண்மைக்காலமாக நான் அதிகமாக எதிர்கொள்ளும் கேள்விகளில் ஒன்று அறிவியல் பற்றியது. நான் ஓர் உரையில், ஒன்றை அறிவியல்பூர்வமானது என்றோ அறிவியல் சொல்வது என்றோ சொன்னால் உடனே அந்த அரங்கில் ஒருவர் எழுந்துஅறிவியல் இவ்வாறான எல்லைகள் கொண்டது‘, ‘அறிவியல் சிலருடைய அடக்குமுறைக் கருவி‘, ‘அறிவியல் சில விஷயங்களை எட்டவே முடியாதுஎன்ற மூன்று விஷயங்களை சொல்வார். அதற்கு நான் பதில் சொல்வேன். அண்மைக்கால உரையாடல்களில் இந்தப் பதிலைச் சொல்லாத நாட்களே இல்லை. ஆகவேதான் அதைப்பற்றி மட்டும் ஓர் உரை நிகழ்த்தலாம் என எண்ணினேன். 

முதலில், அறிவியல் என்பதைப் பற்றி நமது கல்விமுறையில் மாணவர்களுக்கு சரியான வரையறை அளிக்கப்படுவதில்லை. ஆகவே பெரும்பாலும் அறிவியலை நம்மவர் தொழில்நுட்பம் (Technology) என்று புரிந்துகொள்ளும் சூழல்தான் உள்ளது. அறிவியல் என்பது தொழில்நுட்பத்திற்கு கட்டுப்பட்டது () தொழில்நுட்பமே அறிவியல் என்பது போன்று. யாரிடமாவது அறிவியல் பற்றி கேட்டால் அவர்கள் கணிப்பொறி பற்றியோ சந்திர மண்டலத்துக்கு செல்வது பற்றியோ மருத்துவம் பற்றியோதான் சொல்வார்கள். இவையெல்லாம் தொழில்நுட்பமே. அறிவியல் என்பது அதுவல்ல. அதற்கப்பால் ஒட்டுமொத்தமான அறிவியல் பார்வை என்று ஒன்றுள்ளது. அது சிந்தனையின் அனைத்துக் களங்களுக்கும் பொருந்தக்கூடியது.

அதன் பரிணாமத்தைப் பார்த்தால் ஒன்று தெரியும், மிகவும் தொல்காலத்திலேயே, அதாவது பிளேட்டோவுக்கு (Plato) முன்னரே, கிரேக்க சிந்தனையில் தேல்ஸ் (Thales) போன்றவர்கள் எதிர்கொண்ட மையக்கேள்விகள் அனைத்துமே அறிவியல் தொடர்பானவையே. இந்திய சிந்தனையில் மிக தொல்காலத்தில் ரிஷிகள் எழுப்பிய கேள்விகள் எல்லாமே ஒருவகையில் அறிவியல் கேள்விகள்தான். ஆனால் அன்று அறிவியல், தத்துவம், இலக்கியம் இம்மூன்றும் ஒன்றாகத்தான் இருந்தன. ஓர் அறிவியல் கேள்வியை தத்துவார்த்தமாக அணுகி அதை செய்யுளில் எழுதிவைக்கும் வழக்கம் அன்றிருந்தது. ஆகவே இன்று நமக்குக் கிடைக்கும் அன்றைய கவிதைகள் அறிவியலா தத்துவமா என்பதைப் புரிந்துகொள்ள முடியாததாக உள்ளன.  

தேல்ஸ் காலகட்டத்தில் ஜடப்பொருள் என்றால் என்ன,அது அணுக்களால் ஆனதா, ஆற்றல் என்றால் என்ன, அவையிரண்டுக்குமான தொடர்பு என்னஇவையெல்லாம் தத்துவத்தின் கேள்விகளாக இருந்தன. மனித சிந்தனை வளர வளர தத்துவத்தில் இருந்து ஒவ்வொரு துறையும் தனித்தனியே பிரிந்து சென்றன. ஏன் பிரிந்தன என்பது முக்கியமான கேள்வி. ஏனெனில் அறிவுத்துறைகள் வளர வளர இக்கேள்விகள் எல்லாமே மேலும் அதிகமான மனிதர்களின் களங்களில் முன்வைக்கப்பட வேண்டியவையாக  ஆயின. ஒரு சிறு தத்துவஞானிகள் வட்டத்திற்கு வெளியே அவை பேசப்பட்டாகவேண்டும். அதற்கு வெறும் தர்க்கம் மட்டும் போதாது. புறவயத்தன்மை (Objectivity) என்பது ஒரு தேவையாக மாறியது. அந்த புறவயத்தன்மையே காலப்போக்கில் நவீன அறிவியலை உருவாகியது.

ஆகையால் புறவயமாக ஆக்கப்பட்ட தத்துவக் கேள்விகளைத்தான் அறிவியல் கையாளுகிறது எனலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் நியாய சாஸ்திரம் (Nyaya Sastra) எதையெல்லாம் வகுத்ததோ அவையெல்லாம் இன்று அறிவியலின் பேசுபொருளாக உள்ளன. அறிதல் என்றால் என்ன ? அறிபடுபொருள் என்றால் என்ன ? அறிபடுபொருளுக்கும் அறிபவனுக்கும் உள்ள உறவு என்ன ?- என்பவையெல்லாம் இன்று அறிவியலின் அடிப்படைக் கேள்விகளாக உள்ளன.  

நவீன அறிவியலின் தொடக்கப்புள்ளி என்று அரிஸ்டாட்டிலை (Aristotle) சொல்லும் வழக்கம் ஐரோப்பாவில் உள்ளது. அவர்தான் அடிப்படையான தத்துவக் கேள்விகளின் வழியாக தனிப்பட்ட முறையிலான (Subjective) விடைகளை நோக்கி செல்லாமல்  ஒரு புறவயமான வரையறைக்குள், அனைவரும் விவாதிக்கக்கூடிய விடைகளை நோக்கி செல்லமுடியும் என்பதை நிரூபித்தார். இந்தப் புறவுலகை வகுத்துக்கொள்வது, பகுப்பாய்வு செய்வது ஆகியவற்றின் வழியே சில உண்மைகளை அடைய முடியும் என்றும் அவற்றை மானுட அறிதல் அனைத்துக்கும் பொதுவாக வகுத்துக்கொள்ள முடியும் என்றும் கருதினார். ஆகவே நவீன அறிவியலின் தந்தை என்று அரிஸ்டாட்டிலை சொல்லலாம். 

அதிலிருந்து நீண்ட வளர்ச்சிக்காலம் உள்ளது. இன்று நாம் பேசிக்கொண்டிருக்கும் அறிவியல் என்பது சர் பிரான்சிஸ் பேக்கன் (Francis Bacon) என்பவரின் கொள்கைகளின் அடிப்படையில் பின்னர் உருவாகி வந்தவை. அதற்கென்று சில நியதிகள் உள்ளன. 

அந்த நியதிகளை ஏதோ ஒரு குறிப்பிட்ட வகையான அறிவு என்பதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் அறிவியல் என்பது ஒரு தனிப் பாடமல்ல. பலருக்கும் அது பள்ளிக்கூடங்களில் சொல்லிக்கொடுக்கப்படும் பத்துப் பாடங்களில் ஒன்று, ஒரு குறிப்பிட்ட அறிவுத்துறை என்ற எண்ணமே உள்ளது. ஆனால் அப்படியல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித அறிதல்கள் அத்தனையும் தத்துவத்திற்குள் வந்ததைப் போல இன்று கிட்டத்தட்ட அறிதல் யாவையாவும் அறிவியலுக்குள் வந்துவிடுகின்றன. ஆகவே புறவயமாக உலகத்தை அறிவதற்கான, புறவயமான விவாதத்திற்கான ஒரு ஒட்டுமொத்த கட்டமைப்பையே இன்று அறிவியல் என்று சொல்கிறோம்.

ஆகவே இன்று அறிதல் என்பது அறிவியலாகத்தான் இருக்கமுடியும். அதற்கப்பால் ஓர் அறிதல் இருக்கமுடியுமா என்றால், முடியும். ஆனால் அது அறிவியலை உட்கொண்டு அதை முழுக்கக் கடந்துசென்று சேரக்கூடிய அறிதலாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் அறிவியலுக்கு முன்னாலேயே நின்றுகொண்டு, அறிவியலைப் பற்றி தெரியாமல் சொல்லப்படும் அறிதல்களுக்கு எவ்வித மதிப்பும் கிடையாது. இதை மீண்டும் மீண்டும் பல்வேறு மேடைகளில் நான் சொல்லிவருகிறேன்.     

அதில் சில சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. அறிவியல் என்பது பதினாறாம் நூற்றாண்டில்தான் ஓரளவுக்கு ஓர் அறிவியக்கமாக வளர ஆரம்பிக்கிறது. மானுட அறிவியக்கமாக அது மாறத்தொடங்குவது பிரான்சிஸ் பேக்கனில் இருந்தே. அதன்பிறகு பல்வேறு அறிவியல் அறிஞர்கள் அதற்குள் வந்தனர். அவர்களுடைய அறிதல்கள் தொகுக்கப்பட்டு அந்த விதிகள் மேன்மேலும் தெளிவுபடுத்தப்பட்டன. அதற்கான பயில்முறைகளும் பயிற்றுவிப்பதற்கான கல்வி அமைப்புகளும் உருவாகிவந்தன. ஆகையால் இன்று அறிவியல் என்பது மானுடம் அளாவிய ஒரு பிரம்மாண்டமான அமைப்பாக உள்ளது. இப்படியொரு பேரமைப்பு உண்டாகும்போது இயல்பிலேயே அதற்கு ஒரு அதிகாரத்தன்மை வந்துவிடும். அந்த அதிகாரத்தை அறிவுத்தலைமை ஒன்று  கைப்பற்ற முடியும். அந்த அறிவுத்தலைமையை கையாளக்கூடிய ஒருவர் அந்த அமைப்பையே தனது கருவியாக மாற்றிக்கொள்ளவும் முடியும். ஆகையால் அறிவியல் என்ற அமைப்பில் இன்று சில தீமைகள் இருக்கவே செய்கின்றன. அந்தத் தீமைகள் பலவாறு எழுதப்பட்டும் உள்ளன.

உதாரணமாக மருத்துவத்துறையை சொல்லலாம். மருத்துவ ஆய்வுகளுக்கு கோடிக்கணக்கான பணம் செலவாகிறது. அந்தப் பணத்தை தொழில்துறைதான் கொடுக்கமுடியும். தொழில்துறையின் தேவைகளுக்கேற்பவே மருத்துவ ஆய்வுகளை செய்யமுடியும். ஆகவே மருத்துவம் என்பதே ஒரு தொழிலாக ஆனாலொழிய மருத்துவ ஆய்வுகள் நிலைகொள்ள முடியாது. இது மருத்துவ ஆய்வின் பிரச்சனை. ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அது பலகோடி பேரால் பயன்படுத்தப்பட்டு அதன் வழியாக அந்த முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஆய்வுகளே உருவாக்கி விடுகின்றன. ஆகவே மருத்துவம் மேலும் மேலும் செலவேறியதாக ஆகிறது. மனித வரலாற்றிலேயே மருத்துவம் இந்த அளவுக்கு செலவேறியதாக எப்போதுமே இருந்ததில்லை.

இதையே தொழில்நுட்பத்திற்கும் சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பம் உருவாகிறதென்றால் அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை செலவிடப்படுகிறது. அதற்கடுத்து ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும் முதல் தொழில்நுட்பத்திற்கு செலவழித்த பணம் திரும்ப வரும்வரை இதை ஒத்திவைப்பர். நான் பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்றபோது அறிவியலாளர் ஒருவரிடம் பேசினேன். அப்போது சிப் (Chip) வந்துவிட்டபடியால் குறுந்தகடு (Disc) தேவையில்லை என்ற நிலை இருந்தது. ஆனால் குறுந்தகடு தொழில்நுட்பத்திற்கு முதலீடு செய்யப்பட்ட பணம் முதலீட்டாளர்களால் திரும்ப எடுக்கப்படும் வரை குறுந்தகடு சந்தையில் இருக்கும் என்று அவர் சொன்னார்.   இதெல்லாமே சிக்கல்கள்தான். 

இன்றைய கல்விமுறையில் அறிவியல்சார்ந்த கல்விக்கு முதன்மை இடம் கொடுக்கப்படுகிறது. சில விஷயங்களைப் பார்ப்பதில் அதற்கு ஒரு குறைபாடும் உள்ளது. கலாச்சார விஷயங்களை அது ஆய்வுசெய்ய முடியாத நிலை  உருவாகியிருக்கிறது. இதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், அறிவியல் மிகப்பெரிய நுகர்வை உருவாக்கியுள்ளது. அதன்வழியாக சூழலியல் அழிவு ஏற்படுகிறது. அவற்றையெல்லாம் அறிஞர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

சில ஆய்வாளர்கள் பற்றி குறிப்பிட வேண்டும். ஷுமேக்கர் (E. F. Schumacher) என்பவர் நவீன தொழில்நுட்பம் எப்படி மிகை உற்பத்தியை செய்கிறது என்றும் அதன் வழியாக மிகை நுகர்வை உண்டாக்கி எப்படி இயற்கையை அழிக்கிறது என்பதைப் பற்றிய ஒரு பெரிய சித்திரத்தை அளிக்கிறார். மற்றொருவர் இவான் இலிச் (Ivan Illich) என்பவர். இவர் இங்கு காந்தி கிராமத்தில் தங்கியிருந்தவர், காந்தியர், அமெரிக்க சிந்தனையாளர். மருத்துவம், கல்வி ஆகிய துறைகளில் எப்படி அறிவியல் ஓர் அழிவுச்சக்தியாக மாறியிருக்கிறது என்பதைச் சொல்கிறார்.

அதன்பிறகு பலரும் அறிவியலின் எதிர்மறையான தாக்கத்தை எழுதியுள்ளனர். ஆனால் இவையெல்லாமே இத்தகைய பேரமைப்பு ஒன்று உருவாகி மனிதகுலத்தை ஒட்டுமொத்தமாக தழுவும் ஒரு பெரிய அறிவியக்கமாக ஆகும்போது உருவாககும் சில பிழைகள் மட்டுமே. அவற்றை சுட்டிக்காட்டியிருப்பதும் ஒருவகையில் அறிவியலறிஞர்களே. அவற்றை எதிர்கொள்வதும் மாற்றியமைப்பதும் மனிதகுலத்தின் கடமை என்பதை நாம் மறுக்கமுடியாது. ஆனால் அவற்றை சுட்டிக்காட்டி ஒட்டுமொத்தமாக அறிவியலுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கும்போது நாம் கடந்த முன்னூறு ஆண்டுகளில் உலகில் உருவான மகத்தான ஒரு அறிவியக்கத்தை, பெரும் அறிவமைப்பை நிராகரிக்கிறோம். அதன்வழியாக நாம் மனிதகுலப் பரிணாமத்தில் இருந்தே விடுபட்டு தலைகீழான ஒரு பயணத்தை மேற்கொண்டு காலத்தில் பின்னால் சென்று அமர்கிறோம். அதை ஒருபோதும் நாம் செய்யக்கூடாது.

அறிவியலின் எல்லைகள் சுட்டிக்காட்டப்படும்போது பெரும் சிக்கல் ஒன்று உருவாகிறது. அறிவியலைப் பற்றி பேசக்கூடியவர்கள் மரபார்ந்தவர்களாகவும் அறிவியலின் எல்லைகளையும் குறைபாடுகளையும் பற்றி பேசக்கூடியவர்கள் புத்திசாலிகளாகவும் நவீனமானவர்களாகவும் கருதப்படுகின்றனர். ஒவ்வொருவருக்கும் தங்களை மேம்பட்டவர்களாகவும் முன்னுணரக்கூடிய திறன் கொண்டவர்களாகவும் காட்டிக்கொள்ளவேண்டிய தேவை உள்ளது. அறிவியலைப் பற்றி யாரோ ஒருவர் பேசினால், உடனே எதிர்வினையாகஅறிவியலில் சில சிக்கல்கள் இருக்கு‘, ‘அறிவியல் யாருடைய கருவி தெரியுமா ?’, ‘அறிவியல் செல்லமுடியாத இடங்கள் இருக்கு தெரியுமா ?’ என்று சொல்லிவிட்டால் ஒரு கௌரவம், அறிவியல் மறுப்பாளன் என்கிற பிம்பம், விவாதங்களில் ஒருபடி நுட்பமானவன் என்கிற தோரணை வருகிறது.

இந்தக் காரணங்களுக்காக கடந்த இருபது முப்பது ஆண்டுகளாக அனைத்துக் களங்களிலும் அறிவியல் மறுப்பு என்பது ஒரு மையப்பேசுபொருளாக ஒரு மோஸ்தராக ஆகியிருக்கிறது. நாம் இதை மேடைப்பேச்சுகளிலும் சமூக வலைதளங்களிலும் காணலாம். அதில் பத்துக்கு எட்டுபேராவது அறிவியலுக்கு எதிரான கருத்தை சொல்லி அதை கேலி  செய்பவராகவும் மறுப்பவராகவும் இருப்பர். இது எல்லா களங்களிலும் நிகழ்கிறது. அவ்வாறான மூன்று களங்களை சுட்டிக்காட்டலாம்.

(1) மதம், ஆன்மிகம்அறிவியலுக்கு எதிராக இங்கு எது சொல்லப்பட்டாலும் அதற்கு கைதட்டல் விழும். ‘இதையெல்லாம் அறிவியல் தொடமுடியாது’, ‘இதை மதமும் ஆன்மீகமும் ஏற்கெனவே கண்டறிந்துவிட்டன, இப்போதுதான் அறிவியல் இந்த இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளது’ என்பதாகப் பேசுவார்கள். இவை திரும்பத்திரும்ப நம் இந்திய மேடைகளில் சொல்லப்படுகினறன.

(2) நுகர்வு, சூழலியல் அழிவு பற்றி பேசும் தளங்கள்இங்கு தொடர்ந்து அறிவியலுக்கு எதிரான ஒரு குரல் உள்ளது. அறிவியல்தான் நுகர்வை இவ்வளவு பிரம்மாண்டமாக ஆக்கிவைத்துள்ளது என்றும் அதன் விளைவாக சூழல் பெரிய அளவில் அழிந்துவருகிறது என்றும் திரும்பத்திரும்ப சொல்லப்பட்டு வருகிறது. எல்லா சூழலியலாளர்களும் ஒருவகையில் அறிவியலுக்கு எதிராக பேசுபவர்களாகவே உள்ளனர். இவர்கள் மட்டுமல்லாது மாற்று மருத்துவம், இயற்கை வேளாண்மை பற்றி பேசுபவர்களும் அறிவியல் மறுப்பையே பேசிவருகின்றனர்.

(3) பின்நவீனத்துவம்பின்நவீனத்துவவாதிகள் அறிவியல் என்பது ஒரு அறிவதிகாரம், அது ஒட்டுமொத்த உலகையே ஒரு குறிப்பிட்ட வகையில் பார்க்கும்படி மக்களை கட்டுப்படுத்துகிறது எனரு, அதற்கெதிரான சிந்தனைகளை மறுக்கிறது, அதற்கொரு மைய அதிகாரம் உள்ளது, அது ஓர் அறிவுச்சுரண்டல் என்று  சொல்லிவருகின்றனர். அவர்களுடைய பார்வையில் அதிகாரம் என்பது அறிவியலை ஒரு கருவியாக்கிக்கொண்டு ஒரு பெரிய கதையை உருவாக்குவதே. அறிவியல் என்பதே ஒரு பெரிய கதையாடல்தான்.

கால்வின் & ஹோப்ஸ் (Calvin and Hobbes) எனும் கேலிச்சித்திரம் நான் அடிக்கடி பார்ப்பதுண்டு. அதில் கால்வினுக்கு கணக்கு வராது. அவன், ”கணிதம் (Math) என்பது ஒரு மதம் என்று நான் நினைக்கிறேன்  என்பான். ஹோப்ஸ்அது எப்படிஎன்று கேட்கும். அதற்கு கால்வின், ”ஒன்றும் ஒன்றும் இரண்டு, இரண்டும் இரண்டும் நான்கு. இதை யாரும் நிரூபிக்க முடியாது. இதை சிலர் சொல்கின்றனர். நீ அதை நம்பலாம் அல்லது நம்பாமல் இருக்கலாம். இதையே மதமும் சொல்கிறது. எனவே கணிதம் என்பது ஒரு மதம் (Math is a Religion). நான் ஒரு Math Atheist. எனவே எனக்கு அதிலிருந்து விதிவிலக்கு வேண்டும்என்கிறான். இம்மாதிரியான மனநிலையே பின்நவீனத்துவத்திடம் உள்ளது. அறிவியல் என்பது ஒரு பெரிய கதைதான் என்கின்றனர். அதாவது நோய், கிருமி, ஆன்டிபயாட்டிக்ஸ் இவையெல்லாமே ஒரு பெரிய அறிஞர் குழு உருவாக்கும் கதைதான், அவர்கள் மனிதகுலத்தை அதற்குள் வைத்துள்ளனர் என்று சொல்கிறார்கள்.  

இம்மூன்று தரப்பினரும் அறிவியல் மறுப்பை பெரும் அளவில் மேடை மேடையாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அது ஒருவகையில் மேலை சமூகத்தினருக்கு தேவையானதாக இருக்கலாம். ஏனெனில் அது அறிவியல்கல்வி  நிலைகொண்டு ஓங்கி இருக்கும் சமூகம். அவர்களிடம் அறிவியலால் சென்றடையமுடியாத சில கலைத்தருணங்கள், சில ஆன்மீகத் தருணங்கள் இருக்கும் என்று சொல்லலாம். அறிவியலால் நுகர்வு மிகைப்படுத்தப்படுகிறது, ஆகவே அறிவியலை நுகர்வு கோணத்தில் பார்த்து கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்லலாம். அறிவு என்பது  அதிகாரமாகவும் அறிவியல் என்பது ஒரு பெரும் அடக்குமுறை கருவியாகவும் ஆகிறது என்று மேலைச் சமூகத்தினிடம் சொல்லலாம். ஆனால் இந்திய சமூகம் இன்னும் அறிவியலுக்குள் நுழையவே இல்லை. அறிவியல் சார்ந்து அடிப்படை புரிதல் கொண்டவர்கள் இந்தியாவில் ஒரு சதவீதம்பேர் கூட கிடையாது. அப்படியிருக்க, அறிவியலுக்கு எதிரான இந்த மனநிலைகள் உருவாகிவரக்கூடிய அறிவியல் விழிப்புணர்வைக் கூட இல்லாமலாக்கிவிடும் சூழலே இன்று உள்ளது.

ஆகவேதான் இன்றைய சூழலில் அறிவியலுக்கு ஆதரவான குரல் வரவேண்டும் என்று நான் நினைக்கிறேன். அது மரபின் குரலாகவோ அமைப்பின் குரலாகவோ அல்லாமல் மக்களிடம் இருந்து வரவேண்டும். எழுத்தாளர் தரப்பில் இருந்தே அதை சொல்லவேண்டும். ஏனெனில் எழுத்தாளர் என்றால் அறிவியலுக்கு எதிராக பேசினால்தான் மதிப்பு என்ற எண்ணம் உள்ளது.   

நிரூபணவாதமோ அல்லது தொழில்நுட்பம் மட்டுமோ அறிவியல் அல்ல. அறிவியல் என்பது இன்னும் பரந்துபட்ட பார்வை கொண்டது. இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்பும் அறிஞர் கார்ல் பாப்பர் (Karl Popper). இவர் அறிவியலின் புறவய தர்க்கத்தைப் பற்றி நூல் எழுதிய பிரிட்டன் அறிஞர். அந்த நூலின் சுருக்கமான வடிவங்கள் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உயர்நிலைப் பள்ளி அளவிலேயே பாடமாக உள்ளன. அறிவியல் என்றால் என்ன என்ற கேள்விக்கு அவர் சில பதில்களை அளிக்கிறார்.

அ. புறவயத் தரவுகள்

ஓர் உண்மையை புறவயமான வழிகளினூடாக சென்றடைவது அறிவியலின் அடிப்படை என்கிறார். ‘எனக்கு தோன்றுகிறதுஎன்பதற்கு அறிவியலில் இடம் கிடையாது. எப்படி சென்றோம் என்ற படிநிலை அறிவியலில் முக்கியமானது. புறவயமாக அறியப்படும் தரவுகளே அறிவியலின் அடிப்படை

ஆ. புறவய நிரூபணம்

நாம் அடைந்த உண்மையை மற்றவர்களிடம் புறவயமாக முன்வைத்து நிரூபிக்க முடிந்தால் மட்டுமே அது  உண்மை. 

எனது மலேசிய நண்பர் சண்முக சிவா இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தினார். அந்த எந்த மருந்துக்கும் அம்மருந்தை தயாரித்தவர்கள் புறவயத்தன்மையை (objectivity) கொடுக்கவில்லை. நூறு பேருக்கு அந்த மருந்தை செலுத்தி குறைந்தபட்சம் அறுபது பேருக்காவது அது ஒரே விளைவை ஏற்படுத்துமா எனில் அவ்வாறு ஏற்படுவதில்லை. அதுபற்றி கேட்டால் அது உடலுக்கு உடல் மாறுபடும், காய்ச்சும்போது மாறுபடும், நிலப்பகுதிகளுக்கு ஏற்பவும் அவரவர் உணவுப்பழக்கங்களுக்கு ஏற்பவும் மாறுபடும் என்று சொல்கின்றனர். அவர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத வலிநிவாரணிகளை ஆய்வுக்குட்படுத்தி, இறுதியாக கண்டடைந்தது அவற்றுக்கு எவ்வித புறவயத்தன்மையும் இல்லை என்பதையே. ஒரே பெயர்கொண்ட எண்ணெய் பத்து வைத்தியர்களால் தயாரிக்கப்பட்டிருந்தால் அவை பத்து வகையாக உள்ளன. ஆகவே அவை நிரூபிக்கப்பட்டவை அல்ல. புறவயமான நிரூபணம் என்பது அறிவியலில் ஒரு முக்கியமான அடிப்படை. நூறு பேருக்கு ஒரு மருந்து அளிக்கப்பட்டால் எண்பது முதல் தொண்ணூறு பேருக்காவது அது பயனளிக்கவேண்டும். ஓர் உண்மையை நாம் சென்றடைந்தால் நூறில் எண்பது பேர் ஏற்றுக்கொள்ளும்படியாக அதை முன்வைக்கவேண்டும். 

இ. பொய்ப்பித்தல் (Falsification)

ஓர் அறிவியல் உண்மை பொய் என நிரூபிக்கும் வாய்ப்பை அளிக்கவேண்டும். நீங்கள் ஓர் அறிவியல் உண்மையை சொல்கிறீர்கள் எனில் மற்றொருவர் அதை பொய் என்று நிரூபிப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டால் அதற்கு நீங்கள் ஒரு பதிலை சொல்லவேண்டும். நீ என்ன சொன்னாலும் நான் அதை பொய் என்று ஒப்புக்கொள்ளமாட்டேன் என்பீர்கள் என்றால் அது அறிவியல் உண்மை அல்ல.

இன்னின்ன காரணங்களால் ஒருவர் ஒன்றை உண்மை என்று சொல்கிறார். மற்றொருவர் அந்தக் காரணங்களை மறுத்து நிரூபித்தால் அதை பொய் என்று ஒப்புக்கொள்வதுதான் அறிவியல் உண்மை. பொய்ப்பித்தலுக்கான வாய்ப்பில்லாத ஒரு விஷயம் அறிவியல் சார்ந்ததாக இருக்கமுடியாது. பொய்ப்பித்தல்தான் அறிவியலை உருவாக்குகிறது. ஒரு விஷயம் சொல்லப்பட்டால் ஒட்டுமொத்த சூழலும் சேர்ந்து அதை பொய் என்று நிரூபிக்க முயலும்போதுதான் அறிவியல் வளர்கிறது. அவற்றையெல்லாம் தாண்டி அது தன்னை நிரூபித்துக் கொண்டால் மட்டுமே அது உண்மை. மனிதன் நிலவில் இறங்கினான் என்று சொன்னால் மொத்த உலகமும் அது எப்படி என்றுதான் கேட்கும். அவ்வாறு  வாய்ப்பில்லை என்றுதான் சொல்லும். அவற்றையும் மீறி அது நிரூபிக்கப்பட வேண்டும்.

ஓர் உண்மைக்கு எதிராக உலகமே நிற்கும்போது மட்டும்தான் அறிவியல் மனநிலை செயல்படுகிறது. அவ்வாறு நிற்கும்போது ஓர் அறிவியலாளர் எம்மாதிரி உணர்வுநிலைகளை அடைவார் ? உலகமே தனக்கு எதிராக இருக்கிறது என்ற கோபம்கொண்டாலோ, உலகமே தனக்கு எதிராக சதிசெய்கிறது என்ற சதிக்கோட்பாட்டை சொன்னாலோ அவர் அறிவியலாளர் அல்ல. மதத்தால் ,இனத்தால், வட்டாரத்தால் உலகம் தனக்கு எதிராக உள்ளதென்று ஒருவர் சொல்வாரேயானால் அவருக்கு அறிவியல் பற்றி பேசத் தகுதியில்லை எனலாம். தமிழர்களை ஒடுக்குகிறார்கள், இந்துக்களை ஒடுக்குகிறார்கள் என்பதோடு சேர்த்து நாம் சில விஷயங்களை சொன்னால் அது அறிவியல் உண்மை அல்ல.

அறிவியல் உண்மை என்பது உலகம் முழுக்க அத்தனை தரப்பினர் மத்தியிலும் முன்வைக்கப்படுவதும், அவர்கள் அத்தனை பேரும் நினைத்தாலும் மறுக்கப்பட முடியாததும் ஆகும். அனைவரிடமும் தன்னை புறவயமாக நிரூபிப்பதற்குத் தேவையான அடிப்படைகளை அது தன்னகத்தே கொண்டிருக்கும். இதை மறுத்து நிரூபித்தால் அதை ஏற்றுக்கொள்வேன் என்ற சவாலை முன்வைப்பதுதான் அறிவியல் உண்மை. இது தொழில்நுட்பம் மட்டுமல்லாது தொல்லியல், வரலாறு, சமூகவியல் என அனைத்திலும் உண்டு.

உலகிலேயே மிகச்சிறந்த விருந்தோம்பல் பண்பு கொண்டவர்கள் தமிழர்கள்என்று ஒரு வாக்கியம் சொல்லப்படுகிறது. இது அறிவியல் உண்மையாக இருக்கமுடியுமா ? இதைச் சொன்னவுடன் உலகமே அதை இல்லையென்று மறுக்கும். அதை எதிர்கொண்டுஆம்என்று நிரூபிப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்பதே முக்கியமானது. அதுபோலஉலகிலேயே மூத்த மொழி தமிழ்என்று சொல்வதற்கு அறிவியல் நிரூபணம் உள்ளதா ? அதை மறுப்பவர்களையெல்லாம் தமிழ் விரோதி என்று சொல்லிவிட்டால் அது அறிவியல் மனநிலை ஆகாது. உலகிலேயே தொன்மையான நூல்கள் வேதங்கள் என்பது இங்கு கோடிக்கணக்கானவர்கள் நம்புவது. ஆனால் அது நம்பிக்கைதான், அறிவியல் உண்மை அல்ல. வெண்கலக் காலத்தின் தொடக்கத்தில்தான் வேதங்கள் எழுதப்பட்டன. அவற்றுக்கும் குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட மெசபடோமிய நூல்கள், எகிப்திய நூல்கள் கிடைக்கின்றன. அண்மைக் காலத்திலும் பெய்ஜிங் கலாச்சாரத்தின் இன்னும் பழமையான நூல்கள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. புறவயமான தரவுகளே அறிவியல்சார்ந்த அணுகுமுறைக்கு அடிப்படை. நம்பிக்கை அல்ல, உணர்ச்சிகளும் அல்ல. 

ஆகவே ஒரு உண்மை என்பது நம்பிக்கை சார்ந்ததாக இருக்கமுடியாது. உலகமே மறுத்தாலும் புறவயமாக முன்வைக்கப்பட்டு நிலைகொள்ளக்கூடியதுதான் அறிவியல் உண்மையாக இருக்கமுடியும். நமது அரசியல், பண்பாடு, வரலாறு, சமூகவியல் சார்ந்த சிந்தனைகள் எந்த அளவுக்கு அறிவியல்பூர்வமானவை என்பதை நாம் பார்க்கவேண்டும். ஓர் அரட்டையில் பல விஷயங்களை பேசலாம். ஆனால் ஒரு மேடையில் சொல்லும்போது அதற்கு அறிவியல் உண்மைத்தன்மை உண்டா என்பது மிக முக்கியமானது.

அதற்கடுத்ததாக, அறிவியலுக்கு அப்பால் விஷயங்கள் உண்டா என்ற கேள்வி இருக்கிறது. Frontier Science என்று ஒன்றுண்டு. அறிவியல் இன்னும் கேட்டுக்கொண்டிருக்கும் காலம், இடம், வெளி சார்ந்த சில கேள்விகள் உள்ளன. அதுபோல அறிவியல் இன்றும் திகைத்து நின்று பல புதிய கேள்விகளை கேட்கும் இடங்களும் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் சாமானியர்களும் அறிவியல் கற்காதவர்களுமான நீங்கள் சொல்லக்கூடாது. அதை அறிவியலாளர்கள்தான் சொல்லவேண்டும். இதுவரைக்குமான அறிவியலை கற்றபிறகுதான் அதன் எல்லைகளை நீங்கள் பரிசீலிக்க முடியும். உயிரியலில் இன்றுவரை மனிதர்கள் கண்டுபிடிக்காத மர்மத்தைப் பற்றி பேசுகிறீர்கள் என்றால் இதுவரைக்கும் உயிரியல் வந்திருக்கும் இடம் உங்களுக்குத் தெரியுமா என்பதுதான் கேள்வி. ஆகவே, Frontier Science ஐ அறிவியலாளர்கள்தான் பேசமுடியும்.

அதுபோலவே, நுகர்வு, சூழலியல் சார்ந்த விஷயங்களை அறிவியல் நிராகரிப்பு மொழியில் பேசுகிறீர்கள் எனில் நீங்கள் வெறும் நம்பிக்கை () மூடநம்பிக்கை சார்ந்துதான் பேசுகிறீர்கள் என்றே பொருள். சூழலியல் அழிவு எப்படி வந்தது, அதை எப்படி எதிர்கொள்வது என்கிற விழிப்புணர்வு உங்களுக்கு வேண்டும். அறிவியலானது தேவைகளிலிருந்துதான் அத்தகைய ஆய்வுகளை மேற்கொள்கிறது. உதாரணமாக, நூறாண்டுகளுக்கு முந்தைய மனித வரலாற்றை எடுத்துப்பார்த்தல் இரண்டு பெரும் பிரச்சனைகள்தான் மனிதகுலத்தை ஆட்டிப்படைத்திருக்கின்றன. ஒன்று பஞ்சம். 1870 களில் இந்தியாவில் மாபெரும் பஞ்சம் ஏற்பட்டு ஏறத்தாழ பத்துப்பதினைந்து கோடிபேர் இறந்துள்ளனர். உலகம் முழுக்க சுமார் ஐம்பது கோடிபேர் பட்டினியால் இறந்திருக்கலாம். மற்றொன்று தொற்றுநோய்கள். 1920 களில் இந்தியாவில் ஸ்பானிஷ் காய்ச்சலால் (Spanish flu) ஏறத்தாழ ஒன்றரை முதல் இரண்டு கோடிபேர் வரை இறந்தனர்.

பஞ்சம் நோய் என்னும் இந்த இரண்டு கேள்விகளைத்தான் அறிவியல் நூறாண்டுகளாக எதிர்கொண்டு வருகிறது. இன்று அறிவியலின் வெற்றியை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். உலகம் முழுக்கவே இன்று பட்டினி என்பது கிட்டத்தட்ட இல்லாமலாகிவிட்டது. இந்தியாவில் பட்டினி இல்லாமலாகக்கூடும் என்பது நினைத்தே பார்த்திருக்க முடியாத ஒரு விஷயம். முப்பதாண்டுகளுக்கு முன்னர்கூட என்னாலேயே கற்பனை செய்யமுடியாத  ஒன்றுதான். ஆனால் இன்று இந்தியாவில் பட்டினி கிடையாது. மிகவும் பிற்பட்ட பகுதிகளில்கூட ரேஷனில் தானியங்கள் இலவசமாகவோ அல்லது ஒரு ரூபாய்க்கோதான் வழங்கப்படுகிறது. உலகம் முழுக்கவே பெரும்பாலும் மக்கள் பட்டினி இல்லாமல் இருக்கும் காலகட்டம் மனித வரலாற்றிலேயே இப்போதுதான் வந்திருக்கிறது. அதுவும் கடந்த முப்பதாண்டுகளில். தொற்றுநோய்களை எதிர்கொள்ளக்கூடிய பெரும் சர்வதேச அமைப்புகள் இன்றுள்ளன. கொரோனாவை உலகம் எப்படி எதிர்கொண்டது என்பதை நாம் பார்த்தோம். 

இவ்விரு வெற்றிகளையும் அடையும்போது அதன் விளைவாக எதிர்மறை விஷயங்களும் எழுந்து வருகின்றன. இவ்வளவுபேருக்கு பட்டினி இல்லாமலாகும்போது, இவ்வளவு பேருக்கு உணவு,  உடை, உறைவிடம் வரும்போது ,நுகர்வு என்பது பெருகத்தான் செய்யும். சூழலியல் அழிவும் ஏற்படும். அத்தகைய அழிவை அறிவியலுக்கு  சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.  அறிவியல் அதற்கு எப்படி முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதையும் சொல்லவேண்டியுள்ளது. அதுதான் சூழலியலாளர்களின் கடமையேயொழிய அறிவியலையே மறுப்பதல்லஅறிவியலால்தான் இத்தகைய அழிவு ஏற்பட்டுள்ளது, எனவே இறந்தகாலத்தின் பஞ்சமும் தொற்றுநோய்களும் இருந்த வாழ்க்கையே சிறந்தது என்று ஒருவர் சொல்வாரென்றால் அவருக்கு என்ன அறிவு இருக்கமுடியும் ? நூறாண்டுகளுக்கு முந்தைய வரலாறு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதை நாம் பார்க்கலாம். ஆகவே இன்று அறிவியலாளரிடம், இன்றைக்கு உள்ள சவால் என்பது சூழலியல் சீர்கேடுதான் என்று சொல்லக்கூடிய பொறுப்பில் இருப்பவர்தான் சூழலியல் செயல்பாட்டாளராக இருக்கமுடியும்.   

மற்றொரு புறம் மனிதனுடைய ஆயுள் நீண்டுள்ளது. அதற்கான மருத்துவ செலவுகள் மிகுந்துகொண்டே செல்கின்றன. அது மனிதர்களுக்கும் அரசாங்கங்களுக்கும் சுமையாகவே ஆகிறது. இதற்கு என்ன வழி என்பதை  சிந்திக்கலாம். அதற்கான அழுத்தங்களை அரசாங்கங்களுக்கு கொடுக்கலாம். நீண்ட ஆயுள் ஏற்படும்போது மனிதர்களுக்கு ஏற்படும் உளச்சோர்வு போன்றவைகள் பற்றியும் அதற்கான சமூக அமைப்பு பற்றியும் சிந்திக்கலாம். ஆனால் நீண்ட ஆயுளே வேண்டாம் என்றும், சராசரி ஆயுட்காலம் நாற்பதாகவும் ஐம்பதாகவும் இருந்த கடந்த காலத்திற்கே திரும்பிச் செல்லவேண்டும் என்றும் எந்த சமூக செயற்பாட்டாளனும் சொல்லமுடியாது. அறிவியலின் ஒட்டுமொத்தமான அறிவாதிக்கத்தைப் பற்றி பேசக்கூடிய தகுதி பின்நவீனத்துவ சிந்தனையாளனுக்கு உண்டு. அது அறிவியல் தன்னை சரிசெய்துகொள்வதற்கான அறைகூவல்தானே ஒழிய அறிவியல் மறுப்பாக இருக்கமுடியாது.

ஒரு எழுத்தாளனாக நான் செயல்பட்டுக் கொண்டிருப்பது அழகியல் துறையில். அத்துறையில் அறிவியலின் இடம் மிகமிகக் குறைவானது என்பது எனக்குத் தெரியும். அறிவியல்பூர்வமாக ஒரு நல்ல படைப்பு என்ன என்று வகுத்துவிட முடியாது. ஒரு கலைப்படைப்பை அறிவியல்பூர்வமாக புறவயமாக நிரூபிக்க முடியாது. மௌனி கதையைவிட அகிலன் கதை ஒருபடி கீழானது என்பதை ஒரு அறிவியலாளன் புறவயமாக நிரூபிக்க முடியாது. அப்படியெனில் இலக்கிய உண்மை என்றால் என்ன ? நிரூபிக்கப்பட முடியாத உண்மைதான் (Non empirical truth) இலக்கிய உண்மையாக இருக்கமுடியும். அது எழுத்தாளனும் வாசகனும் சேர்ந்து முடிவுசெய்யக்கூடிய உண்மை.

“Happy families are all alike; every unhappy family is unhappy in its own way” (மகிழ்ச்சியான குடும்பங்கள் ஒன்றுபோல உள்ளன. துயரமான குடும்பங்களெல்லாம் ஒவ்வொரு வகையில் துயரமாக இருக்கின்றன) என்று டால்ஸ்டாய் எழுதுகிறார். இதை எப்படி நிரூபிக்க முடியும் ? டால்ஸ்டாய் சொல்வதைக் கேட்டு ஒரு வாசகன் அது சரிதான் என்று நினைக்கிறான். இதற்கு Evocation என்று பெயர். உள்ளுணர்வால் அவர் சொல்வதை உள்ளுணர்வால் வாசகன் கண்டடைகிறான். இங்கு அறிவியலுக்கு இடம் கிடையாது.

ஆகவே, நான் அறிவியலுக்குப் புறமாக இருக்கும் ஓர் உலகில் செயல்பட்டுக் கொண்டிருப்பவன். அதேசமயம் எனக்கு வெளியே உள்ள உலகில் அறிவியலுக்கு என்ன இடம் உள்ளது என்பதும் எனக்குத் தெரியும். அதை மறுக்கும் விதத்தில் நான் இலக்கியத்தை முன்வைக்கமாட்டேன். இது அறிவியலுக்கு வெளியே உள்ள ஒரு அந்தரங்கமான உலகம். இதற்கும் இந்த அறிவியல் உலகில் இடமுண்டு, இதுவும் முக்கியமானதே என்றே சொல்வேன்.

இதுதொடர்பாக சில ஆய்வாளர்களை சொல்லலாம். .என்.ஒயிட்ஹெட் (A.N.Whitehead), பெர்ட்ரண்ட் ரஸல் (Bertrand Russell), கென் வில்பர் (Ken Wilber) போன்ற தத்துவவாதிகள் தத்துவம், இலக்கியம், அறிவியல் இம்மூன்றையும் ஒருங்கிணைக்கக்கூடிய  ஒட்டுமொத்த மானுட அறிவுக்கான முயற்சியில் ஈடுபட்டவர்கள். இதுபோல பல சிந்தனையாளர்களும் பலவகைகளில் முயன்றுகொண்டிருக்கின்றனர். இவர்கள் யாருமே அறிவியல் நிராகரிப்பாளர்கள் கிடையாது. அறிவியல் அறிதலை ஒட்டுமொத்த அறிதலின் ஒரு பகுதியாக எப்படி எடுத்துக்கொள்வது என்பதுதான் அவர்களது நோக்கமாக இருந்தது.

வளர்ந்த நாடுகளில் அவர்கள் அறிவியலின் எல்லைகள் பற்றியும் குறைபாடுகள் பற்றியும் பேசுவதை புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் இந்தியா போன்ற நாடு மிக அடிப்படையான மூடநம்பிக்கைகளாலும் மூர்க்கமான இன மத மொழிப் பற்றுகளாலும் ஆட்டிவைக்கப்படும் ஒன்று. தொடர்ந்துபிறர்‘ (others) என்பதை உருவாக்கிக்கொண்டிருக்கும் நாடு இது. நான் இந்த மதத்தை, இந்த மொழியை சார்ந்தவன். அவர்கள் இதற்கு வெளியில் உள்ளவர்கள். ஆகவே எனது தரப்பில் சொல்லப்படுவது சரி, அவர்களெல்லாம் தவறு என்கிற இந்த மனநிலைதான் நமது அரசியலை ஆட்டுவிக்கிறது. இங்கு சூழலிலோ சமூக வலைதளங்களிலோ பேசப்படும் எதுவொன்றைக் கவனித்தாலும் இந்த முட்டாள்தனம்தான் ஓங்கி நிற்கிறது. எதிர்த்தரப்பை வசைபாடுவதைத்தான் சிந்தனை என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். இங்கு அறிவியல் மனப்பான்மை என்பது மிகப்பெரிய ஒரு விடுதலை சக்தி. நாம் நம் அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டியதே இந்த அறிவியல் சிந்தனையைத்தான். அப்படியிருக்க ஆங்காங்கு கிடைக்கக்கூடிய அறிவியல்மறுப்பு கருத்துகளை கொண்டுவந்து இங்கே நட்டு வளர்ப்பதென்பது உருவாகிவரக்கூடிய அந்த விடுதலையை அழிப்பதாகவே அமையும். அதை நாம் கண்டிப்பாக செய்யக்கூடாது. 

(11 ஜனவரி 2024 சிங்கப்பூர் நூலகம் ஒருங்கிணைத்த இணையவழி கருத்தரங்கில் ஆற்றிய உரை. அருண் மகிழ்நன் வழிநடத்தினார்)

எழுத்துவடிவம் விவேக் ராஜ்

முந்தைய கட்டுரைஅர்த்தநாரீச வர்மா
அடுத்த கட்டுரைசுரேஷ்குமார இந்திரஜித்- உரையாடல் பற்றி…