முருகனின் ஆடல் – கடிதம்

அன்புள்ள ஜெ

குருகு இதழில் தாமரைக்கண்ணன் புதுச்சேரி எழுதிய செவ்வேள் ஆடல் என்னும் ஐந்து அத்தியாயக் கட்டுரைத் தொடரை வாசித்தேன். அண்மையில் நான் வாசித்த அழகான, ஆழமான கட்டுரைத்தொடர் அது. அதிலுள்ள நுணுக்கமான அழகுசார்ந்த ஆராய்ச்சியும், அதை நல்ல மொழியில் வெளிப்படுத்தியிருப்பதும் அரிய அனுபவமாக அமைந்தன.

நாம் ஆடவல்லான் என்று எப்போதுமே சிவனையே எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம் தெய்வங்கள் எல்லாமே ஆட்டர்கள்தான். பிள்ளையார் கூட நடனமிடுபவர்தான்

‘கொடுகொட்டியும் பாண்டரங்கமும் சிவபெருமான் முப்புரம் எரித்த காலத்தில் ஆடியவை, அல்லியமும் மல்லியமும் கண்ணபெருமான் மதுரா நகரில் யானையை கொம்பொடித்து கொன்றதையும், சாணுரன் முஷ்டிகன் என்ற மல்லர்களை மற்போரிட்டு வென்றதையும் நினைவுறுத்துபவை.இறுதியாக உள்ள குடையும் துடியும் முருகன் ஆடியவை’ என தாமரைக்கண்ணன் அக்கட்டுரையில் சொக்ல்கிறார்.

முருகனின் ஆடல்களைப் பற்றிய கட்டுரை பெரிய பரவசத்தை அளித்தது. சங்கம் மருவிய காலம் முதல் முருகனின் ஆடல்கள் பற்றி இவ்வளவு இலக்கியக்குறிப்புகள் இருந்தாலும் ஆட்டனாக முருகன் கோயில்கொண்ட ஒரு சன்னிதிகூட தமிழகத்திலே இல்லை. ஆச்சரியமான விஷயம்தான் இது.

ஆனால் இந்தக் கேள்விக்கு தாமரைக்கண்ணன் அழகான விடையைச் சொல்கிறார். நாம் இன்று கொண்டாடும் சூரசம்ஹார விழாக்களில் முருகன் நடனம் ஆடிக்கொண்டேதான் இருக்கிறார். குடையும் துடியும் இங்கே ஆண்டுதோறும் ஆடப்படுகின்றன.

ஏன் நம் தெய்வங்கள் ஆடுகின்றன? அதற்கு நம்முடைய நாட்டார் மரபிலேயே வேர் உண்டு. அங்கே தெய்வம் சன்னதம் வந்து ஆடுகிறது. பழைய குகை ஓவியங்களில் சன்னதம் வந்து ஆடும் பூசாரியே தெய்வ வடிவமாகவும் இருக்கிறான். அந்த நீட்சிதான் இன்றைக்கும் நம் தெய்வங்கள் ஆடிக்கொண்டிருப்பதாக வெளிப்படுகிறது

மிகச்சிறந்த அழகான ஒரு கட்டுரை. குருகு அணியினருக்கு என் வாழ்த்துக்கள்

செல்வக்குமார்

 செவ்வேள் ஆடல்- தாமரைக்கண்ணன் குருகு

முந்தைய கட்டுரைகுரல் கதைகள் – கடிதம்
அடுத்த கட்டுரைஆரியசங்காரன்