யானம், கடிதங்கள்

யானம் சிறுகதை

அன்பிற்குரிய ஜெ

யானம் கதை வாசித்தேன். 12 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்திருக்கிறேன். அமெரிக்காவின் அடையாளமே கார்கள்தான் என்று எனக்கு தோன்றியிருக்கிறது. ஓர் உயரமான கட்டிடத்தின் சன்னல் வழியாக அமெரிக்காவை பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நமக்கு ஒன்றுமே தெரியாது, வேறு கிரகத்தில் இருந்து வந்தவர்கள் என்று வைத்துக்கொண்டால் அமெரிக்கா விதவிதமான வண்டுகள் வாழும் ஒரு நிலம் என்றுதான் நினைப்போம். பல நிறங்களாலான பெரிய வண்டுகள்தான் கார்கள். மனிதர்களே தெரியமாட்டார்கள்.

அமெரிககவை கார்களின் நாடாக உருவகம் செய்துள்ள கதை அழகானது. அமெரிக்காவின் வாழ்க்கையே காருக்குள்தான். மிகப்பெரிய நாட்டில் மிகச்சிறிய இடத்துக்குள் மக்கள் வாழ்கிறார்கள். காரை ஃபைபர் குமிழி என்று சொன்ன இடம் அருமை. அந்தக் குமிழிக்குள் சிக்கிக்கொண்டு வாழ்கிறார்கள். ஒரு குமிழியை உடைத்துக்கொண்டு வெளியே சென்றால்கூட இன்னொரு குமிழி. அந்தக் குமிழிகளுக்குள் மூச்சுத்திணறுகிறார்கள். வெளியே செல்லவே முடியாத வாழ்க்கை.

சம்பத்குமார் நாகேஸ்வரன்

அன்புள்ள ஜெ

யானம் என்றால் என்ன என்று பார்த்தேன். ஊர்தி. அதன்பின்னர்தான் கதை முழுமையாகப் புரிந்தது.அமெரிக்கா ஊர்திகளின் நாடு. ஊர்திகள் வாங்குவது, அதைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பது இரண்டும்தான் அமெரிக்காவின் கிரிஞ்ச் என்று நினைக்கிறேன். நாலுபேர் சேர்ந்தால் இன்றைக்கு டெஸ்லா பற்றி மட்டும்தான் பேசுவார்கள். கார்தான் அடையாளம், ஸ்டேட்டஸ் எல்லாமே. ஆனால் மொத்த அமெரிக்காவும் வெளியே இருக்கிறது. அது ஒரு விண்டோ ஸ்க்ரீன்சேவர்தான். காருக்குள் இருக்கும் இடம்தான் மனிதர்கள் வாழ்வது.

உண்மையில் அந்த காருக்குள் இருக்கும் பிரைவேட் ஸ்பேஸ் பற்றி அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய ஒரு ஈர்ப்பு உண்டு. அங்கேதான் நிம்மதியாக உணர்வார்கள். காருக்குள் இருக்கையில் பாதுகாப்பாக நான்கூட உணர்ந்தது உண்டு. அதற்குள் சிக்கிக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வந்ததும் உண்டு. அமெரிக்காவின் ஒரு சாலையில் நதிபோல கார்கள் ஒழுகிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு சிறிய குமிழி. அமெரிக்க ஸ்லாங்கில் பபிள் என்றால் பல அர்த்தங்கள் உண்டு. அந்த எல்லா அர்த்தமும் இக்கதையில் அமெரிக்க வாழ்க்கைக்கும் பொருந்துகிறது.

சாந்தகுமார்

முந்தைய கட்டுரைகொஞ்சம்பித்து – கடிதம்
அடுத்த கட்டுரைவை. சுதர்மன்