கமல் கடிதங்கள்

கமல் முதல் கமல் வரை

ஜெ

கமல்ஹாசன் உங்கள் நண்பர். அவர் படங்களுக்கு எழுதுகிறீர்கள். ஆனால் அவருடைய ஒரு சாதனை பற்றிச் சொல்லும்போது ஒரு வார்த்தைகூட ஜாஸ்தியாகச் சொல்லிவிடக்கூடாது என்ற அதீத கவனம் கட்டுரையில் தெரிகிறது. அவரப்பற்றிச் சொல்லாமல் சூழலை மட்டுமே சொல்லி அவருடைய இடமென்ன என்று சொல்கிறீர்கள். அதற்காக அந்த மொத்த இதழியல்சூழலையும் சொல்லிவிட்டீர்கள். இந்தக் கவனம் இன்னொரு இலக்கியவாதி என்றால் இருக்காது. தாராளமாகப் பாராட்டியிருப்பீர்கள். புகழ்பெற்ற நடிகர் என்றால் இலக்கியவாதிகள் எல்லாவற்றையும் அளந்தே சொல்கிறீர்கள். இந்த மனநிலை சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் கட்டுரை நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்

முருக சுப்பையா

அன்புள்ள ஜெமோ

கமல் முதல் கமல் வரை நம் இதழியல் பற்றி எழுதப்பட்ட ஒரு சுருக்கமான வரலாறாக இருந்தது. நானும் 1970 முதல் இதழ்களை விரும்பி வாசித்து வருபவன் என்பதனால் மிகுந்த சுவாரசியத்துடன் வாசித்தேன். ராணி, தேவி எல்லாம்கூட வாசித்திருக்கிறேன். என் அம்மா ராணிமுத்து கலெக்‌ஷன் வைத்திருந்தார்கள். அதில்தான் நீலபத்மநாபனின் பள்ளிகொண்ட புரம், அநுத்தமாவின் கேட்டவரம் எல்லாம் நான் வாசித்தேன். ஆர்.ஷண்முகசுந்தரத்தின் சட்டிசுட்டது கூட அதில்தான் வாசித்தேன்.

தமிழில் சீரியஸ் இலக்கியத்தை அறிமுகம் செய்ததில் ராணிமுத்துக்கு உள்ள பங்கை சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இங்கே ராணிமுத்து மய்யம் எல்லாமே கொஞ்சநாள்தான் நீடிக்கமுடிகிறது. பெரிய செல்வப்பின்புலம் இருந்தாலும்கூட இந்தியா டுடே நீடிக்கவில்லை. மிகப்பெரிய நிறுவனம் நடத்தினாலும்கூட சுபமங்களா நீடிக்கவில்லை. தினமணி தமிழ்மணியே நீடிக்கவில்லை.

ஏனென்றால் தமிழ்ச்சமூகத்தைப் பொறுத்தவரை இலக்கியம் மீது அவர்களுக்கு ஈர்ப்பு இல்லை. வாசிப்பின்மேல் மதிப்பும் இல்லை. சினிமாதான் அவர்களின் உலகம். இன்றைக்கு யூடியூப் அடிக்‌ஷன். அவர்கள் சீரியஸாக வாசிக்க மாட்டார்கள். வாசிப்பதை மட்டம்தட்டவும் எதிர்க்கவும் செய்வார்கள். இது என் அனுபவம். ஆகவே எல்லா முயற்சிகளும் தோல்வி. கொண்டுசென்று சேர்த்தால்போதும் வாசிப்பார்கள் என்று நினைத்துச் செய்யப்பட்ட முயற்சிகள் எல்லாமே தோல்வி அடைந்தன. கமல் அவர்களின் மய்யம் அப்படிப்பட்ட ஒரு தோல்விதான். அதற்கு ஒரு பங்களிப்பு உண்டு, அவ்வளவுதான்.

கமல் செய்த முயற்சியாகிய மய்யம் பற்றிச் சொல்லும்போது அதைப்போன்ற எல்லா முயற்சிகளையும் ஒரே வீச்சில் சொல்லிவிட்டீர்கள். அதுதான் அக்கட்டுரையின் சிறப்பு. எல்லாருக்கும் அவர்களுக்குரிய இடத்தை அளிக்கிறீர்கள். மாலன், வாசந்தி (இந்தியா டுடே) ஐராவதம் மகாதேவன் (தமிழ்மணி) கோமல் சுவாமிநாதன் (சுபமங்களா) அ.மா.சாமி (ராணிமுத்து) நா.பார்த்தசாரதி (தீபம்) பகீரதன் (ஞானகங்கை) ஆகிய ஒரு வரிசையில் கமல் (மய்யம்) அவர்களையும் வைக்கலாம்.

எஸ்.ஆர். சண்முகராஜ்

முந்தைய கட்டுரைஆல்ஃபா மேல்- கடிதம்
அடுத்த கட்டுரைபாலையும் காதலும்- கடிதம்