ஹன்னா அரெண்ட், சைதன்யா- கடிதங்கள்

அன்புநிறை ஜெ,

நீலி இதழில் சைதன்யாவை தொடர்ந்து வாசித்து வருகிறேன். அவ்வரிசையில் இந்த மாதம் (பிப்ரவரி ’24) 

சைதன்யா எழுதி வெளியாகி இருக்கும்ஹன்னா அரென்ட்மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும் ஒரு கட்டுரை (.https://neeli.co.in/2757/) இத்தகைய  அரிய சிந்தனைவாதிகளைத் தேர்ந்தெடுத்து எழுதுவதில் அவரது வாசிப்பின் பரப்பும் தேர்வுகளும் தெரிகிறது

உலக வரலாற்றின் முக்கியமான நிகழ்விலிருந்து ஒரு ஆர்வத்தைத் தூண்டும் தொடக்கம்; அதில் தொடர்புடைய ஹன்னா

அரெண்ட்டின் பின்புலத்தை அறிமுகப்படுத்தி, அதன் பின் அவரது சிந்தனைப் பள்ளி குறித்து அளவான வார்த்தைகளாலான அறிமுகம்; அரெண்ட்டின்  தேடல், அவரது வாழ்வின் தெரிவுகளை விருப்பங்களை வடிவமைப்பதைக் குறித்த சில வரிகள்; மனித குல வரலாற்றின் சிக்கலான கட்டத்தில் தான் ஆற்ற வேண்டியதென்ன என அரெண்ட் உணரும் விதம்,, அதை அவர் தேடிச் சென்று ஆற்றுவது, அவரது கண்டடைதல்கள் என முழுமையான வடிவம் கொண்ட கட்டுரை.

ஒரு மாபெரும் கலைஞன் சின்னஞ் சிறு எளிய கோடுகளும் தீற்றல்களும் கொண்டு நம் கண்முன் உருவாக்கிக் காட்டும் தேர்ந்த ஓவியம் போல இருக்கிறது சைதுவின் கட்டுரைஹைடகரின் தத்துவ நோக்கின் கருத்தையோ காண்ட்டின்முழுமுதல் தீமைபோன்றவை குறித்தோ எழுதும் போது கூட அதை சிக்கலாக்கி விடாமல் அதிலுள்ள  சொற்தேர்வுகளும் தெளிவும் சிறப்பு

புனித அகஸ்டின் கேள்வியுடன் ஹன்னாவின் வாழ்க்கையை  தொடர்புறுத்தி அவர் முன்வைத்திருக்க சாத்தியமான பதிலுடன் முடித்திருப்பது அருமை!

செறிவான கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதும் சைதன்யாவுக்கு வாழ்த்துக்கள்!

அன்புடன்,

சுபா

அன்புள்ள ஜெமோ

சைதன்யா ஹன்னா அரெண்ட் பற்றி எழுதிய கட்டுரை முக்கியமான ஒன்று. அதிலுள்ள பிற தத்துவசிந்தனையாளர்களான ஹைடக்கர், செயிண்ட் அகஸ்டின் பற்றிய குறிப்புகள்தான் முக்கியமானவை. ஹன்னாவை அறிமுகம் செய்யும்போது அவருடைய சிந்தனைகளை எந்தெந்த சிந்தனையாளர்களுடன் தொடர்புபடுத்தி யோசிக்கவேண்டும் என்ற ஒரு தீர்க்கமான வழிகாட்டுதலை ஆசிரியர் அளிக்கிறார்.

அக்கட்டுரை சிந்திப்பதை அப்படியே பதிவுசெய்ததுபோல இல்லை. சிந்தனை முடிந்து தெளிவாக உணர்ந்த விஷயங்களை நேர்த்தியாகச் சொன்னதுபோல உள்ளது. கச்சிதமான குறிப்பான மேற்கோள்கள் வழியாக சிந்தனையாளர்களை தொடர்புபடுத்தியிருந்ததும் கட்டுரையை அழகான வடிவம் கொண்டதாக ஆக்கியது

எம்.பாஸ்கர் 

முந்தைய கட்டுரைபுலித்துணை
அடுத்த கட்டுரைபின்னைப் பின்நவீனத்துவம்- கடிதம்