நீலி மின்னிதழின் பிப்ரவரி_2024 இதழ் வெளிவந்துள்ளது. மீள் ஆவணப்படத்தை இயக்கியவரும், சூழலியல் ஆர்வலரான ஆளுமை விஷ்ணுப்ரியாவின் நேர்காணல் வெளிவந்துள்ளது. உலகப்பெண் எழுத்தாளர்களைப் பற்றிய படைப்புகளில் சைதன்யா “ஹன்னா அரென்ட்” பற்றியும், மதுமிதா “க்வாஷ்சின்ஸ்கயா சகோதரிகள்” பற்றியும் கட்டுரைகள் எழுதியுள்ளனர். ஒளவையார் பற்றி கவிஞர் இசை எழுதும் தொடரில் இம்முறை தனிப்பாடல்கள் குறித்த இரு கட்டுரைகளை எழுதியுள்ளார். எழுத்தாளர் கமலேதேவி அம்பை பற்றி எழுதும் தொடர் கட்டுரை வரிசையில் இம்முறை அவரின் துப்பறியும் கதைகள் பற்றி எழுதியுள்ளார். நிர்மால்யா மொழிபெயர்த்த சாரா ஜோசஃபின் ஆலாஹாவின் பெண்மக்கள் நாவல் பற்றி ரம்யா எழுதியுள்ளார். குருகு இதழாசிரியர்களான தாமரைக்கண்ணனும், அனங்கனும் அரவிந்தரின் ”சரஸ்வதியும்அவரது இணைத்தோழிகளும்” கட்டுரையை மொழிபெயர்த்துள்ளனர்.
.புத்தம் வீடு பற்றிய சி.சு.செல்லப்பா எழுத்து இதழில் எழுதிய விமர்சனக் கட்டுரையும், அதற்கு பேராசிரியர் ஜேசுதாசனின் எதிர்வினையும், தொடர்ந்து செல்லப்பாவின் மறுமொழியும் என 60-களில் தமிழ் இலக்கியச்சூழலில் நடந்த தீவிர உரையாடலை மீட்டு நோக்கும் எண்ணத்தில் நீலியில் மீள் பிரசுரம் செய்துள்ளோம். நூல் அறிமுகம் பகுதியில் நண்பர்கள் டெய்ஸி, சக்திவேல், விக்னேஷ் ஹரிஹரன் ஆகியோர் முறையே அ.வெண்ணிலா, ஜா.தீபா, யா க்யாஸி ஆகிய எழுத்தாளர்களின் நூல்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். புனைவுப் பகுதியில் சமகால பெண் எழுத்தாளரான கன்னட எழுத்தாளர் வைஷாலி ஹெகடேவின் கதையை மொழிபெயர்ப்பாளர் கு. பத்மநாபனும், ரஷ்ய எழுத்தாளர் ஜினைடா கிப்பியஸின் கதையை மொழிபெயர்ப்பாளர் கீதா மதிவாணனும் மொழிபெயர்த்துள்ளனர்.
*
தொடர்ந்து நேர் சந்திப்புகளில் நண்பர்கள் நீலி இதழுடன் ஒரு உரையாடல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தனர். அது சார்ந்து சில முன்னெடுப்புகள் செய்யலாம்என்று தோன்றியது. இந்த வருடம் இரு ஜூம் உரைகள் ஏற்பாடு செய்யலாம் என்று முடிவு செய்துள்ளோம். சைதன்யாவும், இசையும் உரையாற்றுவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். அந்த உரையை ஒட்டியும், அவர்கள் நீலியில் இதுவரை எழுதிய கட்டுரைகளை ஒட்டி வாசகர்களுடனான உரையாடலை நிகழ்த்தலாம் என முடிவுசெய்துள்ளோம். மார்ச் மாதத்தில் சைதன்யாவுடனான உரையாடலும், ஜூன் மாதத்தில் இசையுடனான உரையாடலும திட்டமிட்டுள்ளோம். இந்த உரைகளை ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளோம்.
பணிவன்புடன்
நீலி குழு