ரம்யா தன் கடிதக் கட்டுரை ஒன்றில் சில வினாக்களை கேட்டிருந்தார். அதில் முக்கியமான ஒன்று இன்று உளவியல் ஆலோசகர்கள் சிலரால் முன்வைக்கப்படும் தன்முனைப்பாளர்கள் (Narcissists) X அன்பாளர்கள் (empaths) என்ற பகுப்பு. பெண்கள் தங்கள் உறவுகளில் இரண்டாவது வழிமுறையை கையாண்டால் வெல்லமுடியும் என்பதும், முதல் வழிமுறை மோதலையே உருவாக்கும் என்பதும் ஆலோசகர்களால் சொல்லப்படுகிறது.
ஓர் எழுத்தாளராக என் நோக்கில் இந்த பகுப்பே பிழையான ஓர் உருவகம். இத்தகைய எளிய பிரிவினைகளை மனிதர்கள், மானுட உறவுகளில் செய்யமுடியாது. உறவுகள் சிக்கலான செயல்பாடு கொண்டவை. உறவுகளில் எப்போதுமே ஒரு முரணியக்கம் உள்ளது. அதைப் புரிந்துகொண்டாக வேண்டும்.
உதாரணமாக, பெரும்பாலான அன்பானவர்கள் கூடவே தன்முனைப்பும் கொண்டவர்களே. (ஆகவேதான் பலசமயம் அன்பு நிராகரிக்கப்படும்போது கடும் சீற்றமும் அடைகிறார்கள்) தன் முனைப்பு அவர்களின் ஆளுமையை உறுதியாக நிலைநாட்டுகிறது. ஆகவே அவர்கள் தன்னடையாளமும் தனக்கான சுதந்திரமும் கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த தன்முனைப்பை நாம் நிராகரித்தோம் என்றால் அவர்களின் அன்பை இழந்தவர்களாவோம்.
அதேசமயம், பெரும்பாலான அன்பற்றவர்கள் தன்முனைப்பும் அற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ஒருவகையான ஆளுமை மங்கல் கொண்டவர்களாக (நாம் டல்லான ஆளுமைகள் என்போமே அந்த வகை) இருப்பதைக் காணலாம். அவர்கள் பிறரைச் சார்ந்திருப்பார்கள். அப்படிச் சார்ந்திருப்பதைத்தான் அவர்கள் அன்பு என நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் சார்ந்திருக்க இன்னொருவர் அமைந்தால் எளிதில் முந்தையவரை விட்டுச்சென்றுவிடுவார்கள். சார்ந்திருக்கும் இடம் சார்ந்தே அவர்களின் மனம் அமைந்திருப்பதனால் எளிதாக முன்னர் சார்ந்திருந்தவர்களை மறந்தும் விடுவார்கள்.
தன்முனைப்பை ஆயுதமாகக்கொண்டு தன்னை உருவாக்கி எடுத்துக்கொண்டு, ஓர் ஆளுமையாக (Personality) நிலைகொள்பவர்களே அன்பு செலுத்தும் தகுதி கொண்டவர்கள். அவர்கள் செலுத்தும் அன்புக்கே ஏதேனும் பயனும் உண்டு. ஒரு நாட்டின் கரன்ஸிக்கு மதிப்பு வேண்டுமென்றால் அது சுதந்திரநாடாக இருக்கவேண்டும். ‘எனக்கு உன்மேல் அன்புண்டு, ஆனால் என் மனைவி ஒத்துக்கொள்ளமாட்டாள், ஆகவே அன்பை செலுத்தமாட்டேன்’ என சொல்பவரிடம் இருப்பது அன்பா என்ன? என் அன்பு என்னுடையது, அதை எவரும் கட்டுப்படுத்த உடன்பட மாட்டேன் என்பவரின் அன்புக்கே மதிப்பு, ஏனென்றால் அது மட்டுமே அன்பு.
தன்னடையாளமும் சுதந்திரமும் இல்லாதவர்களிடம் பரிவு அல்லது பிரியம் உண்மையில் இருப்பதில்லை. அவர்கள் உலகை எதிர்கொள்ள முடியாதவர்கள். பலவீனமான ஆளுமைகள். ஆகவே அவர்கள் எப்போதும் ஒருவகையான பதற்றத்திலேயே இருந்துகொண்டிருப்பார்கள். மூழ்குபவர்கள் எதையாவது அள்ளிப் பற்றிக் கொள்வதுபோல அவர்கள் அருகிருக்கும் மனிதர்களை பிடித்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் காட்டும் அன்பு என்பது பெரும்பாலும் நெகிழ்வு, கண்ணீர்மல்கல் ஆகிய உணர்வுநிலைகளிலேயே இருக்கும். அத்தகைய உணர்வுநிலைகள் நீடிப்பவை அல்ல. மட்டுமல்ல மிக விரைவிலேயே எதிர்மறையாகச் செல்லக்கூடியவை. ஆகவே நெகிழ்வானவர்கள் எளிதில் நம்மை புண்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள்.
தன்முனைப்பு என்பது எதிர்மறைப் பண்பு அல்ல. அதுவே ஆளுமைத்திறன், செயலூக்கம் மற்றும் சிந்தனைச்சுதந்திரம் ஆகியவற்றுக்கான அடிப்படை. தன்முனைப்பு, தன்னலம் என்பவை ஓர் எல்லைவரை இயல்பானவையே. ‘தன்னலமில்லா அன்பு’ என்பதெல்லாம் ஓர் இலட்சிய உருவகமே அன்றி ,உலகியலில் இயல்பானது அல்ல. ஒருவரின் தன்னலத்தை இயல்பாக எடுத்துக் கொண்டோம் என்றால்தான் நாம் அவருடைய மெய்யான அன்பையும் அறியமுடியும். நம் மேல் அன்பு செலுத்துபவர் தன்னலமே இல்லாமல் அந்த அன்பைச் செலுத்தவேண்டும் என நினைத்தோமென்றால் நாம் அன்பையே அறியப்போவதில்லை.
அந்த தன்னலம் என்பது என்ன? ஒருவர் தன்னுடைய உலகியல் வெற்றி, தன்னுடைய இன்பம் ஆகியவற்றை முன்வைத்து யோசிப்பது தன்னலம். அது ஓரளவேனும் இல்லாமல் உலகியலில் ஒருவர் இருக்கமுடியுமா? நாம் ‘தன்னலமற்ற அன்பு’ என அடிக்கடிச் சொல்வது அம்மாவின் அன்பு பற்றி. அதுவும் நடைமுறையில் உண்மை அல்ல, அம்மாவுக்கும் தன்னலநோக்கு உண்டு என நம் அனைவருமே அனுபவத்தில் அறிந்திருப்போம். உலகியலை துறந்தவரால் மட்டுமே தன்னலமற்ற அன்பை கொள்ள முடியும். எந்த அளவுக்கு உலகியலை துறக்கிறோமோ அந்த அளவுக்கு தன்னலமின்மை கைகூடும். அது வேறொரு வழி, யோகிகளின் ஞானிகளின் பாதை.
தன்னலம் என்று நாம் பலசமயம் முத்திரையடிப்பது எதை? ஒருவர் தனக்கான ஒரு பார்வை கொண்டிருந்தால் அவர் அதை முன்வைத்துக் கொண்டேதான் இருப்பார். ஒருவர் தனக்கான செயல்திட்டம் ஒன்று கொண்டிருந்தால் அச்செயலுக்கு அனைவரையும் ஈர்ப்பார். அவரையெல்லாம் நாம் உடனே தன்னலமி என சொல்லிவிடுவோம். அதாவது தன்னலமற்றவர் என நாம் நினைப்பது பலசமயம் சொந்தச் சிந்தனையோ, சொந்த செயல்திட்டமோ இல்லாத மழுங்கிய ஆளுமைகளை. அவர்களை ‘கள்ளமற்ற அன்பு’ கொண்டவர் தன்னலமில்லாதவர் என எண்ணிக்கொள்கிறோம். அவர்கள் பலவீனமான ஆளுமைகள், ஆகவே அன்பே இல்லாதவர்கள் என அறியும்போது மண்டையில் அடிவாங்கியவர்களாக உணர்கிறோம்.
தன்னலம் அல்லது தன்முனைப்பு எங்கே நோய்க்கூறாகிறது? ஒருவர் தன்னை மட்டுமே எண்ணிச் செயல்படுகையில். தன்னையன்றி அனைவரையும் முழுமையாகவே தனக்குப் பயன்படுத்திக்கொள்கையில். அதுதான் தன்னலத்தின் நோய்க்கூறான திரிபு நிலை. அது சிலருக்கு உண்டு. ஆனால் அன்றாடநிலையில் தன்முனைப்பும் தன்னலமும் எதிர்மறையானவை அல்ல, இயல்பானவையும் அவசியமானவையும்தான். தன்முனைப்பை எதிர்மறையாக எண்ணுவது, தன்முனைப்பே இல்லாத ஒரு ‘வெள்ளைநிலை’ உன்னதமானது என எண்ணுவது நம் சூழலில் நமக்குப் பழக்கப்படுத்தப்பட்டுள்ள ஒரு கருத்து மட்டுமே.
மனிதர்களை தன்மையப் பார்வை கொண்டவர்கள் – அன்பானவர்கள் என இரண்டாக பிரிக்கவே முடியாதென்று சொல்லவந்தேன். எல்லா மனிதர்களிலும் தன்மையப் பார்வை இருக்கும். மிகப்பாமரர் கூட ‘நான், நான்’ என்றுதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். (ஒருவர் நான்லாம் ஒண்ணுமே இல்லீங்க, நான் ரொம்பச் சாதாரணமானவன், நான் சாமானியன் என்று சொன்னாரென்றால் அது நடிப்பு. அதுதான் நோய்க்கூறான தன்மையப் பார்வை அல்லது தாழ்வுணர்ச்சி. அவரிடம் பழகவேகூட முடியாது)
மெய்யான அன்பு தன்மையப் பார்வையின் இன்னொரு பக்கமே ஒழிய அதற்கு எதிரானது அல்ல. நான் அன்பு செலுத்துகிறேன், நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன் என்பதிலுள்ள அந்த ‘நான்’ தான் அன்புக்கு அடிப்படை
ஆகவே ஒவ்வொருவருக்கும் இரண்டு கைகள் போல இந்த இரண்டு மனநிலைகளும் இயல்பாக உள்ளன. எங்கே தன்முனைப்பு தேவை, எங்கே பரிவுப்பார்வை தேவை என்பதை நாம் வாழ்க்கையின் அந்தந்த தருணங்களைக் கொண்டே முடிவுசெய்யவேண்டும். அந்த முடிவை எடுக்கும் உரிமை நமக்குண்டு. அந்த சுதந்திரமே நம் வாழ்க்கையின் அடிப்படைத்தேவை. எப்படி அம்முடிவை எடுப்பது என்று கற்றுக்கொள்வதையே விவேகம் என்று சொல்கிறோம்.
என் பார்வையை மட்டும் சொல்கிறேன். என் ஆளுமையை ஒடுக்கும் தன்மை கொண்ட எந்த உறவிலும் தன்முனைப்பு கொண்ட அணுகுமுறையையே நான் மேற்கொள்கிறேன். அங்கே அன்பு,பாசம் என்று சொல்லி என்னை இழப்பதில்லை. எனக்கு என் வாழ்வின் நிறைவு முக்கியம். இந்த வாழ்க்கையை எவர் பொருட்டும் எதன்பொருட்டும் வீணடிக்க நான் சித்தமாக இல்லை. இதை எப்படி அர்த்தப்படுத்திக்கொள்வது என்று எனக்குத் தெரியும். அதற்கான கனவுகளும் செயல்திட்டங்களும் எனக்கு உண்டு. அதை தடுக்கும் எதையும் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அங்கே பரிவு, கனிவு, பொறுமை என எதுவும் என்னிடம் இருக்காது. திட்டவட்டமான எதிர்ப்பு அல்லது முழுமையாக விலக்கிச்செல்லுதலே என் வழி. இதை இடதுகை வழி என சொல்வேன்.
ஆனால், என்னுடன் தொடர்புள்ளவர்களிடம் கூடுமானவரை பரிவும், கனிவும் கொண்ட அணுகுமுறையே என்னுடையது. அதை என்னுடைய பலவீனம் என்று சொல்லும் நண்பர்களும் உண்டு. பெரும்பாலான நண்பர்களின் தனிப்பட்ட குணச்சிக்கல்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒருவரின் குறைகளால் அவரை நிராகரிப்பதுமில்லை. பரிவுதான் என் வழி. அது எனக்கு இன்றுவரை கைகொடுத்துமுள்ளது. கைகொடுக்காத இடங்களுமுண்டு- என் பரிவை மூர்க்கமாக தட்டிவிட்டுச் சென்றவர்கள் உண்டு. பயன்படுத்திக் கொண்டு வெறுக்க ஆரம்பித்தவர்களுமுண்டு. அது அவர்களின் பிரச்சினை. எனக்கு அதில் இழப்பேதுமில்லை. என் தன்முனைப்பையோ பரிவையோஒ நானே இழந்தால்தான் நான் இழப்பு கொண்டவன்.
இரு கைகள். இரண்டு கைகளுக்கும் அவற்றுக்கான இயல்புகளும் வேலைகளுமுண்டு. இரண்டு கைகளாலும் செய்யத்தக்க பணிகளுமுண்டு.