தேவியின் பாதம் -கடிதம்

கன்யாகுமரி வாங்க

கன்யாகுமரி மின்னூல் வாங்க

அன்பு ஜெ,

சொல்புதிது இதழில் “உணர்ச்சிகள்” கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டுருந்தீர்கள். “இலக்கியப் படைப்பியக்கத்தின் உணவு மானுட உணர்ச்சிகள். உணர்ச்சிகளின் சிக்கலான ஊகித்தறிய முடியாத இயக்கங்களை அடையாளப்படுத்தவே படைப்புலகம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது” என. மானுட உணர்வுகளை விஞ்ஞான ரீதியாக குறிப்பாக உளவியல், நரம்பியல் வழியாக உளப்பகுப்பாய்வு செய்யும் ஒன்றின் வளர்ச்சிப் போக்கை அதில் காண முடிந்தது. ஆண் பெண் உறவுச்சிக்கலை இத்தகைய உணர்ச்சிகளின் இயக்கங்களைப் பேசாமல் அணுக முடியாது. கன்னியாகுமரி நாவல் அத்தகைய உணர்வுச் சிடுக்குகளைப் பற்றி பேசும் நாவல்.

“பாலியல் வன்முறை, மீட்சி” கட்டுரை வாசித்தபோது கன்னியாகுமரி நாவலை ஒட்டிய ஒரு நீண்ட உரையாடல் பயணத்தைப் பார்க்க முடிந்தது. சென்ற வருடம் துவக்கத்தில் கன்னியாகுமரி நாவலை வாசித்தேன். ரவியின் அந்த செய்கைகள், சிந்தனைகளே எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. பெண் இந்தப் பெரும்பான்மை ஆண்கள் உலகை அறிய ரவி மாதிரியான ஒருவனின் முகத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ரவிக்கள் விரும்பும் பெண்ணின் வீழ்ச்சி எத்தகையது என்றே பார்த்திருந்தேன். ஆண்களுடைய ஆணவம் சீண்டப்படுவது பெண்கள் அவர்கள் தயவு இல்லாமல் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக இருப்பது மட்டும் தானா? என்று சிந்தித்திருந்தேன்.

2021 புதியவாசகர் சந்திப்பில் நடையின் போது நீங்கள் கொரனா காலகட்டத்தில் சந்தித்த ஒரு நர்ஸ் பெண் பற்றி சொல்லிக் கொண்டிருந்தீர்கள். கவச உடைக்கு மேல் தாலி அணிந்திருந்த அக்கா என அவர்களை மனதில் பதித்திருக்கிறேன். கொரனா காலத்தில் இந்த நர்ஸ் பணி செய்ய வேண்டாம் என்று சொல்லிய கணவனிடம் சண்டை பிடித்துக் கொண்டு ”என் பிள்ளையை நானே பார்த்துக்கறேன். நீ வேண்டாம்” என்று சொன்னவள். அதற்குப்பின் அந்தக்கணவன் அவளிடம் அதைச் சொல்லவில்லை என்பதை பரிகாசத்துடனே சொல்லிக் கொண்டிருந்தீர்கள். உங்கள் தொனியில் அதைச் சொல்லும் போது பெருமிதம் இருந்தது. பொருளாதாரம் பெண்ணுக்குத் தரும் சுதந்திரத்தை நீங்கள் எப்போதும் எங்களிடம் வலியுறுத்துவதை கவனித்திருக்கிறேன். ”சிறகு” சிறுகதை அப்படியான ஒன்று தான்.

ஆனால் பெரும்பாலும் கைவிட்டவர்களிடம் பெண்கள் கையேந்தும் ஆயுதம் “இறைஞ்சலும், மன்றாட்டுக்களும்” மட்டுமே. சங்கத்திலிருந்து இன்று வரை அவ்வாறு இறைஞ்சி நிற்கும் பெண் சித்திரத்தை கற்பனை செய்து கொண்டேன். வெண்முரசின் அம்பை அதனால் தான் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறாள். அவளின் கனலை குருஷேத்திரப் போர் வரை நம்மால் நினைவுகூற முடிவது அதனால் தான். திரெளபதி என்பது படிமமாக மாறி நிற்பதும், உங்கள் கதைகளில் தென்கோடியில் கன்னித்தெய்வமாக காத்து நிற்கும் ஒருவளின் சித்திரத்தையும் நினைத்துக் கொண்டேன். வெறும் இறைஞ்சல் மட்டுமல்ல. இறைஞ்சலுக்குப் பின் கனலானவர்கள்.

ஆனால் நீங்கள் இங்கு வேறொரு மாற்று வழியைக் காண்பித்திருந்தீர்கள். ஆண்கள் மிகவும் அதிகமாக மதிப்பிடக்கூடிய விஷயங்கள் பணம், அதிகாரம், புகழ், அறிவு. இது இருக்கும் பெண்களை பெரும்பாலும் அவர்கள் சீண்டுவதில்லை அல்லது பகைத்துக் கொள்வதில்லை. ஒரு வேளை விமலா ரவி முன் கண்ணீர் மல்கி பால்யத்தை நினைவுகூர்ந்தால் அவன் நிறைவாக இருந்திருக்க முடியும் என்பதே ஆச்சரியமளித்தது. ஆனால் பெரும்பாலும் பெண்கள் அதையே இயல்பாகச் செய்கிறார்கள். தன் நல்லதன்மையை உறவிற்கான விசுவாசத்தைக் காண்பிப்பதற்கான சந்தர்ப்பம் என்று கருதியோ, உன்னைவிட இன்னொன்றை உயர்வாக நான் இவ்வளவு நாளில் நினைக்கக் கூடவில்லை என்று சொல்வதால் வருவதாக அவர்களே நினைத்துக் கொள்ளும் பெருமையுமே முதலில் வருவது. ரவி போன்ற கைவிட்டவர்களைப் பழிவாங்குவது என்பது அவர்களுக்கு முன் நன்றாக வாழ்ந்து காண்பிப்பது என்ற அப்பட்டமான உண்மை நாவல் வழியாக முன் நின்றது. அது தெரிந்தபோது மனம் அமைதியடைகிறது. நியாயமாக உறவுகளில் கிடைக்க வேண்டிய மரியாதையும், அன்பும் இல்லாத போது நாம் சுயமாக முன்னேறுவதற்கான பாதையே முதலில் தேர்ந்தெடுக்க வேண்டியது.

இயல்பிலேயே துக்க நிவர்த்தியாக நான் செயலையே எப்போதும் வைத்திருந்திருக்கிறேன். அதனால் விமலாவை நான் ரசித்திருந்தேன். ஆற்றல் ஒன்றே இருப்பை உணர்த்துவது. சோர்ந்திருப்பதல்ல. நீங்கள் எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருப்பதும் கூட அதைத்தான்.

பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட விமலாக்களின் வேறு பல தரப்பட்ட முடிவுகளை யோசித்திருந்தேன். முதலாவதாக தற்கொலை. பாலியல் வல்லுறவின் அதிர்ச்சியால், அதன்பின் தான் விரும்பியவன் கைவிட்டதின் சோகத்தால், குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளாததால் மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் விமலாக்கள். இந்த நீண்ட மனித வரலாற்றில் அப்படி முதலில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட விமலாவிலிருந்து இன்று வரை ஒரு கோடு இழுத்து அதை பார்த்திருந்தேன். பின் மனப்பிறழ்வுக்கு உள்ளாகும் விமலாக்கள். தற்கொலையும் அதுவும் ஒன்று எனுமளவு எங்கோ ஒரு புள்ளியில் காலத்தில் நின்றுவிட்டவர்கள் இவர்கள். கைவிடப்பட்டு அப்படி வீதியில், சாலைகளில் காலந்தோறும் இவர்கள் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

இங்கு நீங்கள் இந்தக் கதையில் காட்டிய விமலா ரவியை அதிர்ச்சிக்கு உள்ளாக்குபவள். ரவியைத் தோற்கடிப்பவள். இங்கு விமலாவை ரவி அவளை விட்டுப் போவதற்கு முன், பின் என பிரித்துக் கொள்ளலாம். ரவி விமலாவை அந்த வல்லுறவு நடந்து கொண்டிருக்கும்போதே கைவிட்டுவிட்டான். ஆனால் அது விமலாவை வந்தடைய அவள் மேலும் மேலும் அவனிடம் அவமானப்பட வேண்டியிருந்தது. அந்த அவமானத்தின் உச்சப்புள்ளிக்கு முன் வரை அவள் நம்பிக்கை இழக்கவில்லை. அவள் அவனை அவன் குரூரத்தை உணர்ந்து கொள்ளவில்லை. அவன் விலக்கத்தின் காரணத்தை அவள் விளங்கிக் கொள்ளவில்லை. ரவிக்களிடம் விமலாக்கள் தன் தன்மானத்தை விட்டு கதறும் தருணத்திற்குப் பிறகு அவர்கள் அந்த வழியைக் கை விடுகிறார்கள். பின் எப்போதும் மீட்டுவிட இயலாத ஒரு முறிதல் தருணம் நிகழ்ந்தபின் அவர்கள் தங்களுக்கு முன் உள்ள சாத்தியமான வழிகளில் ஒன்றையே தேர்வு செய்கிறார்கள். விமலாவுக்காக நீங்கள் தேர்ந்தெடுத்த பாதை ஒளி நிரம்பியது.

விமலாவுக்கு படிப்பும், சுதந்திரமும் கையளிக்கிறது. ஆனால் இங்கு இக்கதையில் உணர்வுத்தளம் சார்ந்து முன்வைக்கப்பட்ட ஒன்று விமலாவின் பாலியல் சுதந்திரம்.  கட்டற்ற பாலியல் சுதந்திரமும், அதைப் பொருட்படுத்தாமையும் விமலாவிற்கு இயல்பாக அமையவில்லை. அவள் உண்மையில் காதலின் மீது, ஆண்களின் உறவின் மீது நம்பிக்கை இழந்திருக்கலாம். ஒன்றை மறக்க இன்னொன்றைப் பற்றுவது போல அவள் அறிவை, பொருட்டின்மையைக் கைக் கொண்டிருக்கலாம். பின் எப்போதும் திரும்பிவிட முடியாத அந்த குழந்தைத்தன்மையை இழந்து தான் இவற்றையெல்லாம் அடைய வேண்டும் என்பது மனதை கனக்கச் செய்தது. ரவியும் வாழ்வு சார்ந்து வீழ்ந்து விடவில்லை. ஆனால் அவன் விமலாவை வீழ்த்துவதற்கு எடுக்கும் முயற்சிகளையும், அதில் தோற்றதையும் பார்த்தபோது அவன்மேலும் பரிதாபம் வந்தது. ஒரு மனப்பிறழ்வனைப் போலவே அவனைப் பார்த்தேன். அவனை அணைத்துக் கொள்ள வேண்டும் என்றே நினைத்தேன்.

நீங்கள் பதினைந்து வருடத்திற்கு முன் எழுதியது இது. ஆனால் இது தான் இன்றைய நிலைமை. பதினைந்து வருடங்களுக்கும் முன் ஒரு தீர்க்க தரிசனம் போல இந்த தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனால் ஏற்பட்ட பாதிப்பை ஒரு தலைமுறையே அனுபவிக்கவேண்டியுள்ளது. இன்று ரவியைப் போல பெண்களும் உருவாகிவிட்ட காலமிது. விமலாவின் முடிவு ஒரு காலகட்டத்தின் தேவை எனலாம். இன்று வேறொரு கேள்வி வந்து முன் நிற்கிறது.

இன்று எந்த சோஷியல் மீடியா பக்கத்தைத் திறந்தாலும் வரும் இரு சொற்கள் “தன்முனைப்பாளர்கள்” (Narcissists), “அன்பாளர்கள்”(empaths). இதைக் கொண்டு இந்த உலகையே பயன்படுத்துபவர்கள், பயன்படுத்தப்படுபவர்கள் என இரு வகையாகப் பிரிக்கலாம். அநேகமாக மக்கள் யாவரையும் சந்தையாகப் பார்க்கும் மனநிலை ஆரம்பித்ததிலிருந்து இவ்வகையான போக்கு ஆரம்பித்திருக்கலாம். ஒவ்வொரு நபரும் அவரின் பயன்பாடு கருதியே மதிப்பிடப்பட்டார்கள். எவ்வளவு பொருளாதாரத்திற்கு பயனளிக்கிறார்கள் என்பது சார்ந்து உருவானது, அதன்பிறகு தான் பெண்களின் வீட்டு வேலை, குடும்ப நிர்வாகம் சார்ந்தவைகளுக்காக அவர்கள் ஏன் மதிப்பிடவில்லை. அதற்கும் ஊதியம் ஒன்று நிர்ணயிக்க வேண்டும் என்ற கருத்துரு உருவானது. அவ்வாறு வீட்டு வேலை செய்து பராமரிக்க விரும்பும் ஆண்களையும் மதிக்க வேண்டும் என்ற குரல் எழுந்தது.

ஏன் விமாலாவுக்கு உணர்வுகளற்ற, கட்டற்ற பாலியல் சுதந்திரம் கொண்ட உறவு மட்டுமே சாத்தியமா? அதுவல்லாத ஒன்றை ரவி அவளின் வீழ்ச்சியாகக் கருதுவது ரவியின் கீழ் மனநிலையை/ குன்றிய மன நிலையையே காண்பிக்கிறது இல்லயா. புகழ், வெற்றி, அறிவு, அறிவுஜீவித்தனம், செயல் இவையாவற்றிற்கும் நாம் ஏன் அன்பைக் காவு கொடுக்க வேண்டும். அன்பு என்பதை காலம் முழுமைக்குமான உணர்வு சார்ந்த உறவு என்ற பொருளில் இங்கு பயன்படுத்துகிறேன். அத்தகைய ஒன்று விமலாவிற்கு ஏன் நிகழக்கூடாது. அல்லது அப்படி ஒன்று நிகழ்ந்து அவள் வாழ்க்கையில் வெற்றியடையக் கூடாதா. அப்படியான வெற்றியை ரவிக்கள் அங்கீகரிக்காமல் போனால் தான் என்ன?

இங்கு நான் விமலா என்று சொல்வது இக்காலத்தில் ஆண்/பெண் இருவரையும் குறிக்கிறது. பொதுவாக ”அன்பாளர்கள்”. இப்பெரும்பான்மையினரே உங்களின், செவ்வியல் இலக்கியவாதிகளின் தீவிர வாசகர்கள். கைவிடப்பட்டவர்கள் தரப்பில் இருக்கும் அத்தகையவர் குழு ஒன்று உள்ளது. அத்தகையவர் சார்பாக இக்கேள்வியை முன் வைக்க விரும்புகிறேன் ஜெ.

இன்று ரவிக்கள் பல விமலாக்களை அவ்வாறு சிதைவுக்கு உள்ளாக்குகிறார்கள். பயன்படுத்தி தூக்கியெறிகிறார்கள். ஒருமுறை தம்பி வீரபத்ரனிடம் “என்றாவது அவர்கள் இந்த அன்பாளர்களின் வலியை உணர்வார்களா?” என்று கேட்டேன். அவன் ” நிச்சயமாக இல்லை. அது தான் அவர்களின் பலம். எதையுமே உணராமல் அப்படியே வாழ்ந்து பொய்யான மகிழ்ச்சியைக் கை கொண்டு அப்படியே இறந்துவிடுவார்கள்.” என்றான். சிறு இடைவெளிவிட்டு “ஒருவேளை அவர்கள் உணர்வார்களேயானால் அந்த நொடிக்குப் பின் அவர்கள் இந்த உலகிலேயே நரகத்தில் தான் உழல்வார்கள். உணராதவரை அவர்களுக்கு நல்லது” என்றான்.

இலக்கியப் புனைவுகளில் காட்டப்படும் மனிதர்கள் நுண்மையானவர்கள். மிக மோசமான மனிதர்கள் கூட. அதன் வழியாகவே அவர்களின் ஆழத்தை உணரமுடிகிறது. ஆனால் இதற்கு சமமாக இன்னொன்று உள்ளது. அதை நான் சாருவின் நாவல்களைப் படித்தபோது தான் உணர்ந்தேன். தவறு செய்பவன், கைவிடுபவன், பயன்படுத்திக் கொள்பவன் இத்தனை ஆழமாக சிந்திப்பதில்லை. அவன் சிந்திப்பதேயில்லை. அதனால் அவன் விடுதலையாக இருக்கிறான். சுதந்திரமாக மகிழ்ந்து கழிகூர்ந்து முன் சென்று கொண்டே இருக்கிறான். வாழ்வின் அந்தந்த நொடியை முழுமையாக வாழ்ந்துவிட்டதாக கற்பனையில் இருக்கிறான். இதுவே பெரும்பான்மை மனிதர்களின் நிலைமை. இதுவரை இலக்கியம் காட்டாத நுண்மையற்ற முகம், இலையைத் தின்பவர்களிடம் தேனின் மதுரத்தை விளங்கவே வைக்க முடியாது என்பது தரும் பரிதவிப்பை அவர்களை உணர்ந்த போது அடைந்தேன். ரவிக்கள் இவ்வளவு யோசிப்பதில்லை. மெனக்கெடுவதில்லை. பொருட்படுத்துவதில்லை என்றே தோன்றுகிறது.

இன்னொருபக்கம் நீங்கள் காட்டும் ஆழம் நிறைந்த உலகம் வழியான பார்வை. தஸ்தாயேவ்ஸ்கி, டால்ஸ்டாய் என அனைத்து கிளாஸிக் எழுத்தாளர்களிடமும் இருக்கும் ஆழம். இந்த ஆழம் வழியாக நான் இவ்வுலகனைத்தையும் மேலிருந்து பார்க்கும் பார்வையை அடைகிறேன். அனைத்தையும், அனைத்து மனிதர்களையும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும் உணர்ந்தபின்னும் எஞ்சும் வலியொன்று உள்ளது. அதை அவர்கள் புனைவுகளில் வடிக்க வில்லை என்றே இன்று தோன்றுகிறது. மறுபாதி உண்மை ஒன்றை விட்டு வைத்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது ஜெ.

சென்ற வருடம் அன்பு சார்ந்த கடிதத்திற்குப் பின் ஒரு ஃபேக் ஐடியிலிருந்து ஒரு கேள்வி. சிவம் சிறுகதையில் தான் ஆசான் சொல்லிவிட்டாரே என. சிவம் சிறுகதையின் போதே இந்த விலக்கம் எனக்கு இருந்தது. உண்மையில் குரு நித்யாவால் அப்படி இருக்க முடியும். அவர் ஆன்மிகவாதி. குடும்பம், கடமைகள், அன்பின் சுமைகள் இல்லாதவர். எளிய வாழ்க்கையில் குடும்பத்துடன், பிற மனிதர்களுடன் உடலையும் உள்ளத்தையும் கொண்டு தொடர்பிலிருக்கும் நாம் அவ்வாறு விலக்கமாக இருக்க இயலுமா? அப்படி இருக்க முடியும் என்பது பாவனை தானே. கலைஞன் இந்த உலகியலில் ஒரு கால் வைத்திருப்பதாலேயே அத்தகைய உணர்வு சார்ந்த விலக்க மன நிலையை அடைய இயலாது தானே. அவன் கலைஞன் என்பதால் கூடுதலாகவே உணர்ச்சிவசப்படக் கூடியவனாக இருப்பான்.  செயலை பாதிக்காத வண்ணம் அவை இருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வதையும் புரிந்து கொள்ள முடிகிறது. மிகப்பெரிய இடத்தை அடைந்தவர்கள் தனியர்களாக இருந்து மட்டுமே அதை அடைந்திருக்கிறார்களா? அதற்கு இணையாகவே உணர்வு சார்ந்து இறுக்கமில்லாதவர்களும் உணர்ச்சிவசப்படுபவர்களும் அடையவில்லையா? அடைய இயலாதா ஜெ.

ஆனந்தகுமாரசாமி தமிழ்விக்கி பதிவு எழுதி முடித்த போது ஜெயராம் அவரின் தனிவாழ்க்கை சார்ந்து மிகவும் பதற்றத்திற்கு உள்ளாகியிருந்தான். அவருக்கு இன்னும் அமைதியான வாழ்க்கை அமைந்திருந்தால் இன்னும் நிறைய செய்திருக்கலாம் என சொல்லிக் கொண்டே இருந்தான். அன்று எனக்கும் அவ்வாறே தோன்றியது. உணர்வு சார்ந்து உறவு சார்ந்து ஒரு சமநிலை இருந்தால் தான் இன்னும் சிறப்பாக பணிகள் செய்ய முடியும் என்பது. அது இறுக்கமான பணிகள் செய்பவர்களுக்கு சாத்தியப்படலாம். ஆனால் கலைஞர்கள், சிந்தனையாளர்களுக்கு சாத்தியமா? இத்தகைய அலைக்கழிதல்கள் வழியாகக் கூட அவர்கள் கலைஞர்கள் ஆகியிருக்கலாம் தானே.

உணர்வுச்சுதந்திரம், விடுதலை என நீங்கள் சொல்வது அறைகுறை ஆட்களும் கை கொண்டால் இங்கு கைவிடப்படுபவர்களின் எண்ணிக்கையே அதிகமாக ஆகும் என்ற கவலை உள்ளது. வெற்றியின் பொருட்டு, உலகியலின் பொருட்டு, அதிகாரத்தின், புகழின் பொருட்டு இந்த உணர்வுகளின் மீதான விலகல் தன்மையால் அவர்களைச் சார்ந்த, பாதிக்கப்படுபவர்களின் தரப்பு பரிதாபத்திற்குரியது இல்லயா. கட்டற்ற பாலியல், உறவுகளுக்குள்ளான விலகிய மனநிலை, கடமைகளைத் துறத்தல் ஆகியவை ஒரு போதும் இந்த உலகத்திற்கான தீர்வு இல்லை தானே.

கூந்தல் மின்னூல் வாங்க 

கூந்தல் வாங்க

ஒரு காலகட்டத்தின் மகா புருஷர்கள் மட்டும் அப்படி இருந்து கொள்ளட்டும். பிறவர்கள் தங்கள் கடமையை சரியாகச் செய்யட்டும். இதையே சாக்காகக் கொண்டு கடமையைத் துறப்பார்களோ என்ற பயம் வருகிறது. எழுத்தின் உச்சத்தில் இருக்கும் நீங்களே கூட குடும்பம் சார்ந்து, உறவுகள் சார்ந்து அவ்வாறு விலக்கமாக இல்லை. கட்டற்ற பாலியலை எங்களுக்கு எப்போதும் வலியுறுத்துவதில்லை. குடும்பத்தின் கடமைகளை முடித்த பின்னரே உலகியலில் ஒரு கால் ஊன்றிக்கொண்டு தான் இங்கு அமைதியாகச் செயல்பட முடியும் என்பதை எங்களுக்கு வலியுறுத்தியிருக்கிறீர்கள்.

உணர்வுகளின்று விலகி இருந்து மட்டுமே அல்லது பொருட்டின்றி கைவிட்டால் மட்டுமே கலையின், வெற்றியின் உச்சத்தை அடைவது சாத்தியமா ஜெ, விமலா ஒரே சமயம் உணர்வுப்பூர்வமானவளாகவும், வெற்றியாளராகவும் ஏன் இருக்கக் கூடாது. அவள் கைவிடப்பட்ட தருணத்திற்கு முன் இருந்த அந்த குழந்தைமையை மீண்டும் கை கொண்டு இந்தப்பயணத்தில் அவள் ரவியை வீழ்த்தியிருக்கலாம் அல்லவா. அல்லது அவன் வீழவில்லையெனினும் கூட அவள் தன் உச்ச சாத்தியத்தை தன் உடலையும் மனதையும் தன் வாழ்நாள் முழுவதும் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒருவனுடன் இணைந்து, ஒரு குடும்ப அமைப்பில் இருந்து கொண்டு அடையலாம் தானே. காலங்காலமாக இறைஞ்சி நிற்கும் பெண் தெய்வமாகவோ கட்டற்று சென்று உச்சத்தை அடையும் பொருட்டு தன் குழந்தைமையும், இயல்பையும் இழப்பவளாகவோ இருக்க வேண்டாமே. மாற்றாக இக்காலகட்டத்திற்கென ஒன்று சொல்ல இயலுமா ஜெ. உணர்வுகளினின்று விடுபட இயலாதவர்களுக்கும், இன்று தன்முனைப்புடன் அப்படி விடுபட்டு சென்றுகொண்டிருக்கும் பெரும்பான்மையானவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதியும் மாற்றான ஒன்றைச் சொல்ல இயலுமா ஜெ.

பிரேமையுடன்

ரம்யா

*

அன்புள்ள ரம்யா

கன்யாகுமரி ஒரு நாவல். நாவல்கள் ஒரு வாழ்க்கைக் களம். அங்கே எழும் வினாக்களுக்கு அவற்றுக்குள் முழுமையாகவே பதில்களும் இருக்கும். உங்கள் வாசிப்பும் வினாக்களும் கன்யாகுமரியை நீங்கள் ஆழமாக தொடர்வதைக் காட்டுகின்றன.

கன்யாகுமரி நாவலின் நேர் எதிரான தீஸிஸ் அல்லது அப்படிப்பட்ட ஓர் ஆளுமை வெளிப்படும் கதை அறம் தொகுதியில் வரும் தாயார் பாதம். அதை அப்படி ஒப்பிட்டு வாசித்தவர்கள் மிகக்குறைவு. விமலா உண்மையில் தாயார்பாதம் பாட்டியின் சிதைவில் இருந்து உருவான நவீனப்பெண்.

கூந்தல் என இன்னொரு கதை எழுதியுள்ளேன். அக்கதையில் இத்தகைய இரு கதைமாந்தருமே வந்து ஒருவரை ஒருவர் வரையறை செய்கிறார்கள்.

கன்யாகுமரி வெளிவந்த காலகட்டத்தில் அதை இங்குள்ள பழையபாணி வாசகர்களால் உள்வாங்க முடியவில்லை. மிக எளிய மதிப்பீடுகளே வந்தன. ஆனால் அடுத்த தலைமுறைப் பெண்கள் மிக விரிவாக விவாதித்துள்ளனர்.

இவை என்னுடைய தொடர்தேடல், என் கண்டடைதல்கள் சார்ந்தவை. இக்கதைகள் வழியாக நான் ஒரு நகர்வை அடைந்துகொண்டே இருந்திருக்கிறேன்.

இன்று சொல்லப்படும் இரண்டு அடிப்படைகள் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். அவற்றை மட்டும் பின்னர் தனியாகப் பேசுகிறேன்

ஜெ

கன்யாகுமரி 1-ஆண்மையின் குரூரம்

கன்யாகுமரி 2 -உன்னதமாக்கல்

முந்தைய கட்டுரைஒரு பிரம்மாண்டமான பிரார்த்தனை
அடுத்த கட்டுரைசிறுமைகளும் அவமதிப்புகளும், உரையாடல்