காட்டின் ஆற்றல்- கடிதம்


வான்நெசவு மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெ

நான் மின்வாரியத்துறையில் 32 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றேன். அணைக்கட்டுப் பகுதிகளில் தனியாக வேலைபார்த்திருக்கிறேன். மலை அனுபவம் பல உண்டு. ஒரு காட்டுப்பகுதியில் ஓர் அணைக்கட்டு உருவாகி வந்து அந்த இடமே உருமாறி ஒரு நகரம் மாதிரி ஆகும். பின்பு பத்தாண்டுகளில் மெயிண்டென்ஸ் மட்டும் மிச்சமாகும்போது அப்படியே மீண்டும் காடாகிவிடும்.

இதையெல்லாம் எழுதவேண்டும் என நினைப்பேன். ஆனால் இன்றைக்கு அதற்கான பாஷை இல்லை. அதோடு என்ன எழுதவேண்டும் என்றும் தெரியவில்லை. இப்படிப் பலருக்கும் அனுபவங்கள் இருக்கும்.

வான்நெசவு கதைத்தொகுதியை என் பழைய கொலீக் உங்கள் நண்பர் மணிவாசகம் அளித்தார். பலமுறை வாசித்துவிட்டேன். ஒவ்வொரு கதையும் டெக்னிக்க்கலான ஒரு அம்சத்தை எப்படி அற்புதமான கவிதையாக ஆக்கியிருக்கிறது என்பதை பேசிக்கொண்டே இருக்கிறோம். வானத்தில் இருந்து குரல்கள் மண்ணுக்கு வருவதுதான் டெலிகம்ட்யுனிகேசன். அதை பல கதைகளில் ஆன்மிகமான கவிதையாக ஆக்கியுள்ளீர்கள்.

நான் அப்படி நினைத்ததில்லை. ஆனால் இன்றைக்கு நினைக்கிறேன். மலையில் இருந்து மின்சாரம் எடுப்பதென்றால் என்ன ? காட்டில் ஒரு சக்தி உள்ளது. காற்று, நீர் எல்லாமே அந்த சக்தி கொண்டவைதான். மிருகங்களிலும் அந்த சக்தி உண்டு. அந்த சக்தியைத்தான் எடுத்து நகரங்களில் விளக்காக எரிக்கிறோம். இயந்திரங்கள் ஓடுவது அதனால்தான். அப்படி எவ்வளவோ யோசிக்கலாம்.

இனிமேல் டெலி டவர்களை என்னால் வெறும் இரும்பாக பார்க்கமுடியாது என நினைக்கிறேன்.

திருநாவுக்கரசு செல்வம்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

முந்தைய கட்டுரைபின்நவீனத்துவமும் பிறகும்- கடிதம்
அடுத்த கட்டுரைஅஞ்சலி: காந்தியர் விவேகானந்தன் – சிவராஜ்