நான் உங்கள் வாசகன் என்று சொல்ல முடியாது. உங்கள் பயிற்சிப்பட்டறைகளின் பயனர் என்று சொல்லலாம். உங்கள் வாசிப்பு வட்டத்தின் ஆழம் எனக்கு ஓரளவு தெரியும். நான் கரையோரத்தில். என்னை வாசிப்பினோரம் இழுத்து வந்திருப்பது உங்கள் பயிற்சிப்பட்டறைகளே. இப்படியும் ஒரு வாசிப்பு வட்டம் அமைவது உங்கள் கவனத்தில் உண்டா?
என் குழந்தைகளுக்கு கதை சொல்ல இணையத்தில் தேடி, Google எனக்கான கதைகளையும் காண்பிக்க அதன் மூலம் பவா அறிமுகமாகி, அவர் வழியே யானை டாக்டரும் ஜெயமோகனும் அறிமுகமாகி, பின்னர் பவா சொன்ன சிவமயம் கதையை வாசிக்க எண்ணி உங்கள் இணையதளம் வந்தடைந்தவன். கதையை ரசித்தாலும் கூடவே உங்கள் கட்டுரைகள் என்னைக் கவர்ந்தன. பிறகு உங்கள் சொற்பொழிவுகளைத் தேடினேன். Spotify செயலியில் சில சிற்றுரைகள், ஓஷோ பற்றிய பேருரை கேட்டேன். அப்போதும் வாசிப்பில்லை.
பின்னர் உளவியல் சார்ந்த உங்ள் கட்டுரைகளை மட்டும் வாசிக்கலானேன். என் மனச்சிக்கல்கள் இத்தனைத் துல்லியமாய் இவருக்கு எப்படித் தெரியும்? தலையில் குட்டுகிராறே.. தவறை உணர்த்தும் இவரிடமே திருந்தும் வழியும் கிடைக்கும் என நம்பி திருவண்ணாமலை செயல் எழல் முகாம் வந்தேன். நம்பிக்கை கைகொடுத்தது. அங்கு தான் எனக்கு வாசிப்பு வட்டமும் அறிமுகமாகியது.
அதன்பின் யோக முகாம். தவறாக செய்தால் யோகத்திலும் பக்கவிளைவுகள் உண்டு என்று குரு சௌந்தர் சொன்னார். ஆனால் இப்படியொரு பக்கவிளைவை எதிர்பார்க்கவில்லை. வெள்ளிமலை இரவுகள் பற்றி என் முந்தைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். அந்த இரவு நேர அரட்டைகளில் போதையோ, சினிமாவோ, கிரிக்கெட்டோ இல்லை. வாசிப்பு பற்றியும், எழுத்தாளர்களைத் தேடிச்சந்திப்பது பற்றியும் அத்தனை மகிழ்ச்சியான உரையாடல்கள் எனக்கு முற்றிலும் புதிது. இப்படி ஒரு உலகமா என்ற வியப்பு. அதன்பொருட்டு சென்னை புத்தக கண்காட்சிக்கு புறப்பட்டுச் சென்றேன்.
யோக முகாமில் எனக்கு பல புத்தகங்களை அறிமுகம் செய்த நண்பர்கள் பலரும் அதே நாளில் புத்தக கண்காட்சி வந்தது மீண்டும் சந்திக்க வாய்ப்பாக அமைந்தது. இன்ப அதிர்ச்சியாய் குரு சௌந்தரையும் சந்திக்கக்கிடைத்தது. யோக முகாம் நண்பர்களில் ஒருவர் தீவிர சாரு வெறியர். அவர் பரிந்துரையில் சாரு நிவேதிதாவின் உரையையும் கேட்டு பின்னர் அது பற்றி சாருவுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைத்தது. எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களையும் நேரில் பார்த்தேன்.
தற்போது நான் புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களோடு அமர்ந்துள்ளேன். எத்தனை படிப்பேன் என்று தெரியாது. ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்னர் என் மேசையில் புத்தகங்கள் இல்லை. சிறு வயதில் ஒரு சில புத்தகங்கள் படித்திருக்கிறேன். எண்ணிக்கை குறைவெனினும் அவற்றின் தாக்கத்தை என் எண்ணங்களிலும் செயல்களிலும் உணர்கிறேன், பின்னோக்கி பார்த்து. இந்த புதிய புத்தகங்களும் மீட்டெடுத்த பழைய பழக்கமும் உங்கள் பயிற்சிப்பட்டறைகளுக்கு வந்ததன் பக்கவிளைவுகள். இவை என்னுள் பெரும் விளைவுகளை உண்டு பண்ணும் என நம்புகிறேன்.
நன்றியுடன்,
பாபநாச கார்த்திக்
பாண்டிச்சேரி