இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் முதல்முறையாக இந்தியாவை விட்டு வெளியே சென்றேன், அந்த கனடா பயணம் என் நினைவுகளில் ஒளிரும் ஒன்று. ஆனால் இன்னொரு வெளிநாட்டுப் பயணம் எனக்கு அமையுமென நான் எண்ணவில்லை. ஏனென்றால் நான் எந்த அமைப்புக்கும் உவப்பானவனாக அன்று இருக்கவில்லை. என் விமர்சனங்களால் எரிச்சலுற்ற எதிரிகளே மிகுதி.
ஆனால் அந்தப் பயணம் எழுத்தாளனாக எனக்கு மிக முக்கியமானதாக இருந்தது. நான் புதிய உலகமொன்றை கண்டேன். ஆகவே என்னையும் புதியதாக அறிமுகம் செய்துகொண்டேன். ஓர் எழுத்தாளனின் விழி என்பது பிறருடையது அல்ல. அவன் காணும் நுண்மைகள், அவன் எதிர்பார்க்கும் கனவுகள் தனியானவை. அதை நானே உணர்ந்த தருணம் அது. ஆகவே நான் எந்த வெளிநாட்டுப் பயணத்தையும் இப்போது தவிர்ப்பதில்லை.
அன்று என்னை அழைத்த அ.முத்துலிங்கம் சொன்னார். “இது உங்க முதல் உலகப்பயணம். இனி நிறைய போவீங்க” . அதுவே நிகழ்ந்தது. இனி நான் செல்லவிரும்பும் நாடுகள் சீனா, ருஷ்யா, எகிப்து. ஆனால் உடனடியாகச் செல்ல விரும்பும் இரண்டு இடங்கள் இலங்கை மற்றும் பாலி தீவுகள். பலமுறை திட்டமிட்டும் நிகழாது போயின.
முதல் பயணத்தின்போது புலம்பெயர்ந்த குடும்பங்களின் குழந்தைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர்களெல்லாம் அங்கே வந்து பத்தாண்டுகளுக்குள்தான் ஆகியிருந்தன. ஆகவே தமிழ்ப்பற்று, கடந்தகால ஏக்கம் ஆகியவற்றால் கொதித்துக் கொண்டிருந்தனர். ஆனால் குழந்தைகள் வேறொரு உலகில் வாழ்ந்துகொண்டிருந்தன. அவர்களில் எவரும் தமிழ் பேசவோ தமிழ் வாசிக்கவோ போவதில்லை என நான் ஊகித்தேன்.அதை பின்னர் சென்ற பயணங்களில் உலகமெங்கும் கண்டேன்.
அது இயல்பு. அக்குழந்தைகளைச் சூழ்ந்துள்ள மேற்குச்சமூகம் மிக நவீனமானது. மிக ஆற்றல்வாய்ந்தது அவர்களின் பண்பாடு. மிகமிகச் சிறந்தது அவர்களின் கல்விமுறை. அது அவர்களை அப்படியே அள்ளி எடுத்து ஆழ்ந்து வைத்துக் கொள்ளும். தவிர்க்கவே முடியாது. தவிர்ப்பது நல்லதும் அல்ல.
ஆனால் அந்தக் குழந்தைகளை அவ்வாறே வளரவிட்டால் அவர்கள் வேரற்றவர்கள் ஆவார்கள். ’உலகக்குடிமகன்’ என்பது ஓர் அழகிய உருவகம். அது ஓர் இலட்சியம். ஓர் எல்லையில் ஒருவர் அவ்வாறு திகழவும்கூடும். ஆனால் ஒருவரின் ஆழம், அவருடைய கனவுலகம், குறிப்பிட்ட பண்பாட்டிலேயே வேர்கொண்டிருக்கும். ஒரே இல்லத்தில் வரவேற்பறையும் சமையலறையும் இருப்பதுபோல. இலக்கியம், கலை போன்றவை சமையலறையில் இருந்து வருபவை.
குடியேறிய நாட்டின் பண்பாட்டை ஒருவர் தன் நிலமென ஏற்க முடியுமா? முடியும், அதற்குச் சில தலைமுறைகள் ஆகலாம். ஒருவர் தன் வாழ்க்கைக்காலத்தில் ஒரு மண்ணில் பிறந்து வளர்ந்து அவருடைய அகநிலமென அதை கொள்ளவே இயலாது. ஏனென்றால் ஆழுளம் என்பது ஒரு தலைமுறைத் தொடர்ச்சியாகவே நிகழ முடியும். ஒரு நிலத்தில் குடியேறியவர்களில் பற்பல தலைமுறைகள் இரண்டு பண்பாடுகளுக்கும் நடுவே அலைக்கழிபவர்களாக வாழ்ந்து மெல்ல மெல்லத்தான் ஒரு தலைமுறை முழுமையாக குடியேறிய நிலத்தை இயல்பாக தன் அகமாகக் கொண்டதாக ஆகமுடியும்.
ஆனால் இதுகூட ஓர் ஊகம்தான். அமெரிக்க இலக்கியத்தைக் கூர்ந்து வாசித்து வருபவன் என்ற வகையில் அப்படி ‘முற்றிலும் அமெரிக்கன்’ ஆன ஒரு பண்பாட்டுத் தன்னிலை என் வாசிப்பின் வழியாகக் கண்டடையப்படவில்லை என்றே சொல்வேன். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் அவருடைய முன்னொர் எந்நாட்டிலிருந்து வந்தார்களோ அந்த நிலத்தின் தனித்தன்மை, அகத்தொடர்பு இருந்துகொண்டேதான் இருக்கிறது.
ஆகவே இந்தியர்கள், தமிழர்கள் குடியேறிய நிலத்தில் பிறந்து வரும் குழந்தைகளுக்கு தங்கள் நிலத்தின் சாரத்தை அளித்தாகவேண்டும் என்றும், அக்குழந்தைகள் அந்நிலத்தை தங்கள் கனவெனக் கொண்டிருக்க வேண்டும் என்றும் நான் எண்ணினேன். 2001லேயே அதை எழுதியுள்ளேன். அக்கனவில் இருந்தே அவர்களின் கலையும் இலக்கியமும் பிறக்க முடியும். அந்த அகநிலம் அவர்களின் செல்வம். அவர்களுக்கு அகழத்தீராத ஒரு படிமவெளியை அளிக்கிறது. அவர்களை பிறரிடமிருந்து தனித்தன்மை கொள்ளச் செய்கிறது.
மேலைநாட்டுச் சூழலில் அந்தத் தனித்தன்மைக்கு மதிப்பு மிகுதி. ஜப்பான், சீனா அல்லது கொரியா நாடுகளைச் சேர்ந்தவர்களின் தனித்தன்மை அவர்களுக்கு கலையிலக்கியத்தில் மட்டுமல்ல சிந்தனையிலும் தொழில்நுட்பத்துறையிலும்கூட ஒரு தனியிடத்தை அளிப்பதைக் காணலாம்.
ஆனால் அதற்கு வலுக்கட்டாயமாக தமிழை அல்லது இந்தியை (அல்லது சிலர் சம்ஸ்கிருதத்தை) கற்பிப்பது தீர்வல்ல. அவர்கள் வளரும் சூழலில் இன்னொரு மொழியை கற்பது பெரும் சுமை. அந்த மொழி அவர்கள் புழங்குவதல்ல என்பதனால் நீடிக்கவும் வாய்ப்பில்லை. ஓர் இளமைக்கால கட்டாயப்பயிற்சியாகவே அது நின்றுவிடும்.
அவர்களுக்கு தாய்நிலத்தின் பண்பாட்டையே அறிமுகம் செய்யவேண்டும் . இலக்கியம், இசை, கலைகள் மற்றும் மெய்யியல். அவற்றினூடாக அடிப்படையான படிமங்களே அவர்களைச் சென்றடையவேண்டும். மனிதர்களின் ஆழுலகம் படிமங்களாலானது. அங்கிருந்தே படைப்பூக்கம் உருவாகிறது. எதிர்காலத்தில் அறிவை விட படைப்பூக்கமே முதன்மையானதாகக் கருதப்படும்.
அதற்குரிய வழி அவர்கள் அறிந்துள்ள ஆங்கிலம் வழியாக அவர்களைச் சென்று சேர்வதுதான். ஏற்கனவே கலைகள் அவர்களுக்குச் சென்றுசேர்கின்றன. மெய்யியல் ஐரோப்பியர்களாலேயே விரிவாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் நம் இலக்கியம் மிகக்குறைவாகவே அவர்களிடம் சென்றடைந்துள்ளது. நவீனத் தமிழிலக்கியத்தின் ஒரு பெரும்பகுதி அவர்களுக்கு வாசிக்கக் கிடைக்கவேண்டும். அவர்கள் அவற்றை விவாதிக்கவேண்டும். அவர்களின் ஒரு தரப்பு அதில் என்றுமிருக்கவேண்டும்.
ஆனால் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் வாசிப்பே அற்ற வெறும் தொழில்நுட்பர்கள். வாசிப்பின் தேவைகூட அறியாத ஒருவகையான பாமரர்கள். அங்குள்ள கல்விச்சூழல் அவர்களின் குழந்தைகளுக்கு வாசிப்பை அறிமுகம் செய்து அக்குழந்தைகளை அவர்களை விட பலமடங்கு முன்னால் கொண்டுசென்றிருப்பதை அவர்கள் அறிவதில்லை. அவர்கள் தாங்களறிந்த தமிழக அரசியல், தமிழக சினிமாவை அக்குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கிறார்கள். பட்டிமன்றங்களுக்கு கொண்டுவந்து அமரச்செய்கிறார்கள். அவ்வாறாக அவர்களை மேலும் அயலவராக ஆக்கிவிடுகிறார்கள்.
அவர்களிடம் அவர்களின் சிக்கல்களைச் சொல்லிப் புரியவைக்கவும் இயல்வதில்லை. அவர்கள் அறிந்த எளிய இனவாத அரசியலை கொண்டே அதைப் புரிந்துகொண்டு மூர்க்கமாக எதிர்வினையாற்றுகிறார்கள். ஒவ்வொரு முறை இதையெல்லாம் எழுதும்போதும் அப்படி சில மொண்ணை எதிர்வினைகளை நான் சந்திப்பதுண்டு.
எல்லா குழந்தைகளும் கலையிலக்கியத்துக்குள் வர முடியாது. தத்துவமோ மெய்யியலோ அனைவருக்கும் உரியவை அல்ல. தொழில்நுட்பக்கல்வி, பொருளீட்டுதலே பெரும்பாலானவர்களுக்கு உகந்தது. ஆனால் கூர்மையான ஒரு சிறு பகுதியினர் கலையிலக்கியத்திலும் மெய்யியலிலும் ஆர்வமுடையவர்களாக உருவாகி வர வேண்டும். அவற்றில் ஈடுபடவேண்டும். அவர்களே பிறரிடம் பேசமுடியும்.
இதை மீளமீளச் சொல்லிக் கொண்டிருந்தேன். முப்பதாண்டுகளில் மெல்ல மெல்ல ஒரு சாராரை என்னால் அதை ஏற்கச்செய்ய முடிந்தது என நினைக்கிறேன். அவர்களின் குழந்தைகள் அந்த தீவிரத்துடன் உருவாகி வருவதைக் கண்டேன். அது குறித்த என் நிறைவை எழுதியுமிருந்தேன்.
மேகனா, சஹானா, சங்கரி (Megana, Sahana, and Shankari dive )ஆகியோரின் இந்த யூடியூப் ஊடகத்தில் அவர்கள் தமிழ்நூல்களைப் பற்றி உரையாடுவதை கண்டேன். அவர்களின் உற்சாகம் மட்டுமல்ல அந்த நிகழ்வை அவர்கள் வழங்குவதிலுள்ள ஊடகத் தேர்ச்சியும் என்னை மகிழச்செய்தது. சரளமான மொழி, ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்வதிலுள்ள இயல்பான உடல்மொழி, அத்துடன் ஓர் யானைக்குறியீட்டை உருவாக்கிக்கொண்டிருக்கும் விதம் எல்லாமே அற்புதம்.
மிகச்சிறிய தொடக்கம்தான். ஆனால் தொடக்கங்கள் தங்கள் தீவிரத்தாலும் தொடர்ச்சியாலும்தான் சாதனைகள் ஆகின்றன.