ததும்பும் சொற்கள்…

நீலம் மின்னூல் வாங்க

நீலம் வாங்க


வெண்முரசு முழுத்தொகுப்பு வெளியீடு : முன்பதிவு

சொற்கள்.. சொற்கள்… சொற்கள்… பெருகி வரும் சொற்கள்… அணியணியான  சொற்கள்…. மணிமணியான சொற்கள், உயிருக்குள் உயிர் நுழைந்து உயிரறுத்து வெளியேறி உயிரென எஞ்சி நிற்கும் உயிர் சொற்கள், மெய்யென திரண்டு மெய்யுள் நிறைந்து மெய்யே அறுதியென்றாகும் காமம் கொண்ட மெய் சொற்கள், தாபமும் தவிப்பும் மோகமும் காதலுமான உயிருள் மெய் கலந்த உயிர்மெய் சொற்கள்… ததும்பி நிற்பன, பொங்கி வழிவன, திகைத்து நிற்பன, உயிரறுப்பன… சொற்கள்…  சொற்கள்… சொற்களுக்குள் நீலம் வழிந்தோடுகிறது. அதில் ராதை பிச்சியென உறைகிறாள், நிறைகிறாள், மிதக்கிறாள், திரள்கிறாள், அமிழ்கிறாள், ஆனந்திக்கிறாள்… பெருகி நிற்கும் தன் உறவுலகுள் தன்னுலகு ஒன்றை கண்டுக் கொள்ளும் பித்தி அவள். பெற்றவளிடமிருந்து வளர்க்க போகிறவளுக்கு கை மாறும் நாளன்று சின்னஞ்சிறு பிஞ்சுப் பாதங்களோடு அவளுலகில் நுழைகிறான். நுழைந்தவுடன் அவ்வுலகு மூடிக் கொள்கிறது. அவளுக்கும் அவனுக்குமான அவ்வுலகில் யாருக்கும் அனுமதியில்லை. புத்தம்புதிதாக குடிநிறைந்து நிற்கும் அவளை ஊரும் உறவும் கொண்டாடி களித்திருக்க அவளோ உஷை பொழுதில் தன் மைந்தனை, காதலனை, நண்பனை, பித்தனை தேடியோடுகிறாள். எண்ணமெல்லாம் அவனே… சொந்தமெல்லாம் அவனே… சித்தமெல்லாம் அவனே… ஒவ்வொரு சொல்லும் அவனே. ஒரு சொல்லும் அவனல்ல.

காளிந்தியின் கரையோரத்திலிருக்கும் பர்சானபுரியை சேர்ந்த ஆயர்குடித்தலைவர் ரிஷபானுவின் ஒரே மகள் அவள். ராதையின் தாய் கீர்த்திதை. தவிப்பும் பெருமிதமும் கொள்ளும் பெற்றோர்களோடு ரிஷபானுவின் தம்பிகள் ரத்னபானு, சுபானு, பானு மற்றும் கீர்த்திதையின் தங்கைகள் தீர்த்திமதி, மேனகை, ஷஷ்தி, தாத்ரி, கௌரி, தாதகி, இவர்களோடு  ரிஷபானுவின் தாய் சுகதை, கீர்த்திதையின் தாய் முகாரை, தாத்தா மகிபானு, பாட்டி இந்து. தாய்மாமன்கள் பத்ரகீர்த்தி, மகாகீர்த்தி, மாமியரை மணந்த மாமன்கள் குசன், கசன், இவர்களோடு தமையன் ஸ்ரீதமன் போதாதென தோழியர் கூட்டமும் சேர்ந்துக் கொள்ள மலர்க்கிளையை காற்று அசைப்பது போன்ற அந்த இனிய நிகழ்வில் குலமே கூடுகிறது. கொண்டாடுகிறது, நெகிழ்கிறது, களிக்கிறது… ஆனால் அவளுடைய எண்ணமெல்லாம் அந்த பச்சிளம் குழந்தையின்பால் ஒடுங்குகிறது. வளரிளம் பருவத்தில் தாயுடனான விலக்கம் கொண்டு குழந்தைமை உதிர்ந்து கள்ளம் புகும் தருணத்தில் அவள் உள்ளம் புகுகிறான் அவன்.

ஆயர்குடியின் அழகான இளங்காலையில் பசுக்கள் தொழுவங்களிலிருந்து அழைக்கும் குரலே இனிய நாதம். அந்நாதவொலியில் அடியார்கள் நாதனை பற்றுவது போல ஆயர்கள் பசுவின் காம்பை பற்றுகின்றனர். ஆனந்தமாக தலையசைத்து புல்லுண்ணும்போது எழும் கழுத்து மணியசைவில் ஆயர் குழந்தைகள் விழிக்கின்றன. கரையோர சோலைகளில் பறவைகள் கிளர்ச்சிக் கொண்டு குரலெழுப்புகின்றன. இளந்துாறல் பரவிய மென்வெளிச்சத்தில் பொங்கிப் பொங்கி எழுகிறது புள்வேதம். மையல்கொள்கிறது மணிப்பொழில். கிழக்கின் இளங்கதிர்களால் யமுனை ஒளிப்பெருக்காக மாறியபோது ராதை குசவனத்தையும் கொன்றைவனத்தையும் செண்பகவனத்தையும் கடந்து பர்சானபுரியிலிருந்து கோகுலம் வருகிறாள்.

எவர் நடந்து செல்வதற்கான பாதை அவள்? அவள் யாதொன்றும் அறிந்திருக்கவில்லை. அன்னை பசுக்கள் கன்றை அருகழைக்க குரலெழுப்புவதுபோல கால் சலங்கைகள் இசையெழுப்ப, அவள் நீலம் தேடி நிலம் தாண்டுகிறாள். கோகுலம் அன்னைப்பசு நக்கிநக்கித் துவட்டிய ஈரநாத்தடம் படிந்த மென்மயிர் உடலுடன் சிலிர்த்து நிற்கும் சிறு கன்றெனகுளிர்வானிலிருந்து எழுந்த தென்றலில் புல்பரப்புகள் படிந்து நின்றிருந்தது. கொதிக்கும் எண்ணையில் நீர் விழும் ஒலிபோல பால் கறக்கும் ஒலியெழும்ப, இலைகள் தென்றலில் சலசலக்க, கன்று அன்னையே… என அழைக்க… பசு, மகவே என குரலிசைக்க, புல்கூரை கவிழ்ந்த இல்லங்களின் முற்றத்துத் துாண்களில் கட்டப்பட்ட மத்துக்களால் முந்தைய பால் வெண்ணையாகி நெய்யாய் உருகி மணமாய் காற்றை நிறைக்க, நேற்றைய பால் வெண்ணையாய் திரள, புத்தம்புதிய பாலை நுரைத்து நிறைத்து ஞானத்தின் அமைதி கொண்ட சிறுபாற்குடங்கள் பெருங்கலத்தில் ஒழிந்தபின் முக்தியின் வெறுமையை அள்ளிக் கொள்ள அவளோ நிறைவை தேடி ஓடினாள். அது ஊர் நடுவிலிருக்கும் இரண்டடுக்குக் கூரை கொண்ட புல்வீட்டில் வசிக்கும் ஊர்த்தலைவர் நந்தகோபனுடைய இல்லத்திலிருந்தது. வாயிலில் அண்ணாந்து அன்னையின் அடிவயிற்றை நக்கும் இளம்கன்றென வானைத் துழாவியது நீலக்கடம்பும் காதல் தேங்கிய விழிகளென பளபளத்து  நின்றன இரட்டை மருதுகளும் வரவேற்பு தோரணமிட, அதிகாலைப் பசுஞ்சாணி தெளிக்கப்பட்ட முற்றத்தில் ஓரிரு வெண்மலர்களுடன் ஒரு பொற்தகடென பழுத்த இலை ஒன்று விழுந்து கிடக்க, அவள் அவ்வில்லம் நுழைகிறாள்.

அரையிருளில் தரையிலிட்ட புல்பாயில் மரவுரி விரிப்பின் மீது ஒருக்களித்து விழிவளர்ந்தது வானாளும் விரிநீலம். ஓடும் கால்கள் என ஒன்றிலிருந்து ஒன்று தாவி எழுந்து நின்றன செவ்வல்லியிதழ்ப் பாதங்கள். முக்குற்றி மலரிதழே நகங்கள். தெச்சிப்பூங் கொத்தே விரல்கள். பாதங்களும் புன்னகைக்குமோ? மெல்ல உட்குவிந்து முகம் சுளித்து செல்லம் சிணுங்குமோ? கட்டைவிரல் விலகி உடல் நெளித்து நாணுமோ? நீலக்குவளை மலர்க்குழாயென கணுக்கால். கரண்டையில் எழுந்த சிறுமடிப்பு. நீலம் செறிந்த முட்டுக்கள். இப்புவியாள இரு பாதங்களே போதுமே. ஏன் முழுதாக வந்தாய்? அவள் நெகிழ்ந்து உருகினாள். உருகி மயங்கினாள். மயங்கி மயங்கி அவனது படிந்த சிறுபண்டியின் செவ்வரிக்கு நூறுமுறை இறக்கிறாள். மடிந்த சிறு புயங்களில் விழுந்த கோடுக்கு ஆயிரம் முறை இறக்கிறாள். பிரிந்த செவ்விதழ்களுக்குள் பால்விழுது தங்கிய ஈறுநுனி மொட்டுக்கு பல்லாயிரம் முறை இறக்கிறாள். அவனின் கண்நீலக்கருமணியின் மூக்குவளைவின் அழுந்தலில் கோடி முறை இறக்கிறாள். அவனை ஆறத்தழுவி அள்ளியுண்டு அதன் பெருங்களிப்பில் ஏதும் எஞ்சாமல், சொல்வெளி திகைத்து பொருள்வெளி மலைத்து பி்த்தின் பெருவெளியில் விளிம்பில் நின்று அவள் அவனாகிறாள்.

விருஷ்ணிகுலத்து விடூரதரின் கொடிவழி வாரிசும் வசுதேவனின் தந்தையுமான சூரசேனர் மதுராவுக்கு உரிமைக் கொண்டவர். ஆயினும் ஆட்சி விடூரதரின் தம்பி குங்குரரிடம் கைமாறுகிறது. குங்குரரின் வாரிசானஉக்ரசேனர் மதுராபுரிக்கும் தேவகர் உத்தரமதுராபுரிக்கும் அரசர்களாயினர். விதர்ப நாட்டு வேடர்குல இளவரசி பதுமாவதியை மணக்கும் உக்ரசேனர் கம்சதேவரை பெற்றெடுக்கிறார். சூரசேனரின் ஆண் வாரிசான வசுதேவர் ஆயர்குடி வாழ்க்கையின் மீது இலயிப்பற்று மதுராபுரிக்குச் சென்று உக்ரசேனரின் அமைச்சராகிறார். பெண் வாரிசான பிருதை மார்த்திகாவதியின் போஜர் குல அரசர் குந்திபோஜரின் மகளாக தத்தெடுக்கப்படுகிறாள். குந்தியை மணந்து போஜர்களை இணைத்து யாதவகுலங்களணைத்தையும் ஆளும் முதன்மை கொள்ளலாமென்பது கம்சதேவரின் திட்டம். ஆனால் குந்தியோ அஸ்தினபுரியின் இளவரசனை மணந்துக் கொள்கிறாள். அஸ்தினபுரியின் மீது பகைமைக் கொள்ளும் கம்சன், அவர்களின் பொது எதிரியான மகதத்தின் அரசன் ஜராசந்தனின் மகள்களான ஆஸ்தி, பிராப்தி என்ற மகள்களை மணந்துக் கொள்கிறான். உத்தரமதுராபுரியை மதுராவுடன் இணைக்க வேண்டுமெனில், அதன் அரசரான தேவகர்களின் நான்கு பெரு வீரர்களான மகன்களை வெற்றிக் கொண்டாக வேண்டும். ஆகவே உத்தரமதுராபுரியின் இளவரசியும் ஒன்று விட்ட தங்கையுமான தேவகியை தனது அமைச்சர் வசுதேவருக்கு மணமுடிப்பதன் மூலம் அம்மண்ணை தனதாக்கிக் கொள்ளும் எண்ணத்தோடு சுயம்வரத்தில் வசுதேவருக்காக தேவகியை வெல்லுகிறார் கம்சதேவர்.

வென்றெடுத்த மணமகளோடு மதுராபுரிக்கு செல்லும்வழியில் கம்சதேவருக்கு முதுமகளொருத்தி பித்தி போலாகி கொடுஞ்செய்தி ஒன்றை சொல்கிறாள். யாதவகுலங்கனைத்தையும் இணைத்து அதன் மையத்தில் அரியாசனம் அமைக்க விழையும் மன்னனுக்கு தற்போதிருக்கும் ஆசனமே ஆட்டம் கண்டு விடுமாம். தேவகியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை தாய்மாமனின் உயிர் குடித்து தலைமுறை பழி தீர்ப்பான், என்றுமழியா பெரும்புகழ் பெறுவான், என்கிறாள். கம்சதேவன் அப்பெருங்கேடு நிகழ்ந்து விடாதிருக்க, தங்கையையும் அமைச்சரையும் சிறையிலடைத்து, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஒவ்வொன்றையும் கொன்று விடுகிறான். எட்டாவதாக ஆவணி மாதம்  அஷ்டமிரோகிணி நாளில் பிறக்கும் குழந்தையான கிருஷ்ணன் மறைத்து வைத்து கோகுலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு யசோதை என்ற ஆயர்க்குல பெண்ணின் அருகில் மகவாக வைக்கப்படுகிறான்.

எட்டாவதாக பிறக்கும் குழந்தைக்கு மணிமுடிச் சூடி, சூடிய கணமே அதனை கொன்று அம்முடியை தான் சூடிக் கொள்வதன் மூலம் அக்கொடுஞ்சொல்லிலிருந்து தப்பிக்கும் திட்டத்தோடு குழந்தையை தேடி வருகிறான்.ஆனால் அங்கிருப்பதோ பெண்குழந்தை. அது யசோதையின் பெண்மகவு. அதிர்ச்சிக் கொண்டாலும் அப்பெண்மகவை பலி பீடத்தில் வைத்து வாளுருவும்போது கால்களை உதைத்து மேலெழுந்த அச்சிறுகுழவி தலையால் மணிமுடியைத் தட்டி மறுபக்கம் மண்ணில் விழ செய்வதோடு, அவன் வாளுக்கெட்டாமல் காலுத்தை மேலெழுந்து பலிபீடத்திலிருந்து மணிமுடி மேல் விழுந்து இறந்து போகிறது. அது எட்டாவது மகவால் சூடா மணிமுடி அல்லது கம்சர் இதுவரை சூடிக் கொண்டிருந்த மணிமுடி. அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத கம்சதேவன் எட்டாமானவன் எங்கோ இருக்கிறான் என்று நிமித்திகர் சொல் கேட்டு திகைத்து வெகுண்டெழுகிறார். அக்குழவியை தேடி நாடெங்கிலும் அன்றைய அஷ்டமிரோகிணி திதியில் பிறந்த குழந்தைகளை கொன்று குவிக்கிறார்.

கண்நீலப்புள்ளிகள் மட்டுமே ஒன்றாகி ஒரு கண்ணாகிக் கிடந்தது என்றுணர்ந்து அள்ளி தன் முகம் சேர்த்து ஆவி உருகிக் குளிர்ந்து சொட்டும் அகக்குரலில் “கண்ணா!” என்றழைக்கிறாள் ராதை.“ஆம் அதுவே நான்” என்று அசைவிழந்து அவள் கூந்தலிழை பற்றியது குழந்தை. உலகத்தின் குறும்பனைத்தையும் குணமாக கொண்டவனின் திறந்த வாயுனுள் புடவியே விரிகிறது. வளருகிறான். வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணிக்கும் வசுதேவருக்கும் பிறந்த பலராமன் அவனுக்கு மூத்தவனாகிறான்.

இதற்கிடையே தன் இல்லத்தின் குலதெய்வங்களான நிற்கும் மருதமரங்கள் விழுந்து விட, அச்சம் கொள்ளும் நந்தகோபரின் குடும்பம் கோகுலத்திலிருந்து விருந்தாவனம் செல்கிறது. இப்போது தாகமும் தவிப்பும் கொண்ட பர்சானபுரி கால்கள் விருந்தாவனம் நோக்கி நடக்கின்றன. அவனை அவள் துரத்தவில்லை. அவளைத் துரத்துவது அவளேதான். கருநாகத்தை விழுங்கிய பொன்நாகம். இரண்டும் இணைந்து ஒன்றாகும் வரை வலிகொண்டு நெளியத்தான் வேண்டும்.

திமிறும் காளைக்கன்றை இளந்திமில் சேர்த்து அணைப்பதுபோல ராதை கண்ணனைத் தழுவுதல் கண்டு ஒருநாள் தோழி லலிதை கேட்டாள் “கோகுலத்தின் இளமன் வளர்ந்துவிட்டான். அதை உன் விழியறியவில்லை என்றாலும் கையறியவில்லையா?” ராதை விழிசுருக்கி “யார் வளர்ந்தது? கண்ணனா? நானறியேனடி” என்கிறாள். லலிதை சற்றே சினந்து, “பிச்சி, மலையில் மழை விழுந்து யமுனை பெருகுவதை நீர்நோக்கி அறியமுடியாது. கரையோர மரம் நோக்கி அறியவேண்டும். கண்ணனை நோக்காதே, உன்னை நோக்கு” என்கிறாள்.

பருவம் வரைந்த அழகை அவள் உணராவிடினும் குடும்பமும் குலமும் அவளை நோக்குகிறது. அபிமன்யூ என்ற ஆயர் மகனுடன் திருமணம் நடக்கிறது. கண்ணனின் குழல்நாதம் அவனின் அரூப இருப்பும் அவளை ஏதொன்றிலும் ஒட்ட விடவில்லை. அவள் பித்தேறி நிற்கிறாள்.வீடும் குலமும் நெறியும் முறையும் துறந்து இங்கு வந்த நானொரு அபிசாரிகை. என் இல்லம் புகுந்து இருளில் வந்து உள்ளம் கவர்ந்துசென்ற நீயும் ஒரு அபிசாரன். மாண்பிலாதோன். மானசசோரன். களவுக்கு நிகராக களிப்பூட்டுவதேது? காரிருளோனே, கள்வனே, கள்ளத்தில் இருப்போர்க்கு ஐந்தாயிரம் புலன்கள். ஐந்து லட்சம் மனங்கள். ஐந்தாயிரம் கோடி கற்பனைகள். கல்லை மணியாக்குகிறது களவு. கண்படுவதில் எல்லாம் ஒரு கதை கொண்டு நிறைக்கிறது. ஓர் உடலுக்குள் ஒன்றை ஒன்று ஒளிக்கின்றன இரு அகங்கள். ஒன்றை ஒன்று கண்டு திகைக்கின்றன இரு விழைவுகள். பெருகிவழிகின்றன முகம்கொண்டமைந்த ஆடிகள் இரண்டு. கள்ளத்தில் களியாடும் கரியவனே, இதோ நீ பெருகி நுரைத்த கள்குடம் நான், என்கிறது அவளுள்ளம்.

ஜராசந்தன் கை விட்ட நிலையில், பன்னிரு யாதவக் குலங்களும் கம்சதேவன் மேல் சினந்திருந்த நிலையில், இந்நகரும் இதன் முடியும் அன்னை வழியில் நந்தகோபனின் வளர்ப்பு மைந்தனுக்குரியவை என்ற உண்மை எடுத்து வைக்கப்படுகிறது. அதனை ஏற்பதுபோல நயவஞ்சகமாக பேசி நந்தனின் இளமைந்தனையும் அவன் மூத்தவனையும் மதுராபுரிக்கு வரவழைக்கிறார் கம்சன். கள்குடமென ராதேயனாக ததும்பி நிற்குமவன், தாய்மாமனான கம்சனை தேடி மதுராபுரி செல்கிறான். அங்கு மாமன்னான மாமனை நெஞ்சுடைத்துக் கொல்கிறான்.செங்குருதி வழியும் நீலத்திருமேனியுடன் கைவிரித்து “இந்நகரும் முடியும் இமிழ்முரசும் கோலும் நான் கொள்கின்றேன். எதிர்ப்பவர் எவரெனினும் என் முன் எழுக!” என்றெழுகிறான். குலங்கள் பணிகின்றன. கண்ணனுக்கே அடைக்கலம் கன்றோட்டும் இக்குலங்கள் என்கின்றன. மதுராபுரியின் அரசன் கற்சிறையிலிருக்கும் அன்னை தந்தையை மீட்கிறான்.

மதுராபுரியின் மன்னரும் ஆயர்குலத்து அதிபரும் மாநகர் துவாரகையை ஆளும் மாமன்னருமான கிருஷ்ண தேவரின் அரசபடகு அன்று பர்சானபுரிக்கு வருகிறது. வாழ்த்தொலிகளுக்கிடையே கருமுகம் விரிய இருகரம் கூப்பி கால்களை எட்டி வைத்து நடந்து வந்தார் கிருஷ்ணர். அவரின் குழல் சூடிய பீலியில் நீல வழியை மட்டுமே ராதை நோக்கியிருந்தாள். ராதையின் தமையனான ஸ்ரீதமனின் மகனும் தற்போதைய ஊர்தலைவருமான சக்திதரன் கன்னி அன்னையான ராதை தெய்வமாகி குடிக் கொண்ட கோவிலுக்கு அவரை அழைத்துச் செல்கிறான். பீலிவிழி விரிந்த தலையும் புன்னகை பெருகும் இதழுமாக யமுனைப் பெருங்கரையில் யாதவர்தம் அரசியின் முன் குழலூதி நின்றிருந்தான் கண்ணன்.

அவள் தேடியது எதை? கண்டடைந்து நிறைந்தது எதை? அது மண்ணில் காலூன்றும் மானுடர் அறியாத மந்தணம். அவளை அறிந்தோர் இப்புவியில் எவருமில்லை.

அன்புடன்

கலைச்செல்வி.

முந்தைய கட்டுரைதேவை இரண்டாவது பகுத்தறிவியக்கம்
அடுத்த கட்டுரைவிடுதலைக்கான தரிசனம்-அமிர்தம் சூர்யா