சுஷீல்குமாரின் சுந்தரவனம்- கா.சிவா

 

சுந்தரவனம் வாங்க

ஆசிரியருக்கு வணக்கம்,

எழுத்தாளர் சுஷில்குமார் பாரதியின் சுந்தரவனம் நாவல் வாசித்தேன்மூன்று சிறுகதைத் தொகுப்புகளுக்கு பின் அவர் எழுதிய முதல் நாவல் இது.

  முதலில் வாசிக்கும்போது நாவலின் வகைமை எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அதிகமாக எழுதும் மாய யதார்த்தம் அல்லது மாற்று மெய்மை என்றே தோன்றியது. ஆனால் கடைசி அத்தியாயம் வாசித்து முடிக்கும்போது நாவலின் வகைமையே வேறொன்றாக மாறிவிடுகிறது.

எம். சி. என்று தன்னை சுருக்கமாக அழைத்துக் கொள்பவரின் வாழ்விற்குள் வைத்தியர் எனக் கூறிக் கொண்டு அரிய பரிசுடன் ஒரு பெரியவர் வருகிறார். அதன்பின் எம். சி. யின் வாழ்வில் ஏற்படும் நல்லதும் கெட்டதுமான மாற்றங்களை விவரிக்கிறது நாவல்.

காடும் அதன் நடுவே அமைந்துள்ள மாளிகையும் அங்கு பணிபுரிபவர்களும் வைத்தியரின் மனைவியும், வைத்தியரைக் காணவரும் நோயாளிகளும், வைத்தியரை வசை பாடும் அவர் மகளும், காட்டின் உச்சியில் அமைந்துள்ள கோபுரமும் என ஆசிரியர் ஓர் மெய்நிகர் மாய உலகத்தை கட்டமைத்து வாசகனை உள்ளே உலவ விடுகிறார்.

வைத்தியரின் வாழ்க்கை துண்டு துண்டு காட்சிகளாக காட்டப்படுகிறது. துண்டுக் காட்சிகளாக வாசிப்பவற்றை கற்பனையில் விரிவாக்கிக் கொள்ளும்போது மனதில் பிரமாண்ட சித்திரத்தை காணமுடிகிறது. நாவலின் நாயகன் ஆவணப்பட இயக்குநர் என்பது இந்தத் துண்டு துண்டு காட்சிகளாலான வடிவத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளது.

ஒவ்வொரு அத்தியாயமும் எதையும் திட்டவட்டமாக முன்வைத்துவிடாமல் திறப்பான முடிவுகளுடனேயே உள்ளன. சுஷில்குமார் பாரதியின் சிறுகதைகள் பெரும்பாலும் முடிவென ஒன்றைச் சுட்டாமல் வாசகரின் யூகத்திற்கு விடப்பட்டதாக இருக்கும். நாவலும் அவ்வாறே வாசகனின் யூகத்தையும் கற்பனையையும் கோருகிறது. பல சாத்தியங்களை நோக்கி மனதை அலைபாய வைக்கும்  இவ்வடிவத்தில் அமைந்த சிறுகதைகள்  வாசிப்பவருக்கு சற்று அயர்ச்சியை உண்டாக்குவதாக இருக்கும். ஆனால் அதே வடிவம் நாவலில் மிகச் சிறப்பான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. இதற்கு ஒரு அத்தியாயத்தின் விடுபடல்களுக்கான குறிப்புகள் முன் பின் அத்தியாயங்களில் இடம்பெறுவது முக்கிய காரணமாக அமைகின்றன.

பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும் எம்.சி. யின் பாத்திரத்திலிருந்து வேறுபட்டதாக வைத்தியரின் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் வைத்தியரின் வெவ்வேறு பரிமாணங்கள் வெளிப்பட்டு கதை சொல்லியோடு வாசிப்பவர்களும் பல்வேறு உணர்வுநிலைக்கு ஆட்படுகிறோம். மனைவியிடம், பணியாட்களிடம், நோயாளிகளிடம், பழங்குடியினரிடம், தம் பிள்ளைகளிடம் என ஒவ்வொருவரிடமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தன் வெவ்வேறு குணாம்சத்தை காட்டும் வைத்தியரின் பாத்திரத்தை உருவாக்கியதில் சுஷில்குமார் பாரதியின் திறன்  வெளிப்படுகிறது. இந்தப் பாத்திரத்தின் புதிர்த் தன்மையும் தாவித் தாவி செல்லும் கதை கூறலும் ஆசிரியர் கைகொண்டுள்ள வடிவம் என்றே முதலில் தோன்றுகிறது.

வைத்தியரின் முன் வாழ்க்கையை பற்றிய விவரணைகள் நாவலுக்கு ஒரு அமானுஷ்யத் தன்மையை அளிக்கின்றனஒரு அத்தியாயத்தில் வைத்தியரைப் பற்றி எம்.சி. க்கு சந்தேகமும் அடுத்த அத்தியாயத்தில் அவர்மேல் நம்பிக்கையும் மதிப்பும் கொள்ளுமாறும் மாறி மாறி அமைந்திருப்பது வாசிப்பதற்கு சுவாரசியமானதாக உள்ளது.

கடைசி அத்தியாயம் வாசித்தவுடன் இது பின்னுரையா அல்லது நாவலின் பகுதிதானா என ஒரு கணம் குழப்பம் ஏற்படுகிறது. அதை இரண்டாம் முறையும்  வாசித்துதான் உண்மையில்  உள்வாங்க முடிகிறது. மாய யதார்த்த நாவல்களில் ஆர்வமுள்ளவர்கள்  இந்தக் கடைசி அத்தியாயத்தை வாசிக்காமல் தங்களுக்கான தனிப் பிரதியுடன் வெளியேறலாம். அதுவே ஒரு தன்னளவில் முழுமையான வாசிப்பனுபவத்தை தருகிறது. கடைசி அத்தியாயம் வாசித்தவுடன் நாவலின் வகைமையே தலைகீழாக மாறுகிறது. முழு நாவலையும் மீண்டும் ஓட்டிப் பார்க்க வேண்டியுள்ளது. முன் அத்தியாயங்களின் விடுபடல்களுக்கு புதுபுது அர்த்தங்கள் தோன்றுகின்றன. அவை ஆசிரியர் மேற்கொண்ட வடிவமல்ல நாவலின் தன்மைதான் அது என்பது புரிகிறது.

  பிரமாண்ட கதைக்களம் பலப்பல பாத்திரங்கள் என விரிவான நாவலாக இல்லாவிட்டாலும்   அடிப்படையில் வாசகனான எனக்கு இந்நாவல் மிகச்சிறப்பான வாசிப்பின்பத்தை தருகிறது. இதற்குமேல் விவரித்தால் நாவலின் மர்மங்கள் வெளிப்பட்டுவிடும் என்பதால் வாசிப்பவர்கள் வாசித்து அவ்வின்பத்தை அடையவேண்டும் என்பதற்காக இங்கே நிறுத்திக் கொள்கிறேன். எழுத்தாளர் நண்பர் சுஷில்குமார் பாரதிக்கு வாழ்த்துகள்.

   அன்பன்
கா. சிவா 

சுந்தரவனம் வாசிப்பு பவித்ரா

முந்தைய கட்டுரையாப்பு
அடுத்த கட்டுரைதமிழுக்கு ஔவையென்றும் பெயர்