கொஞ்சம்பித்து – கடிதம்

அன்புள்ள ஜெ,

புத்தாண்டு வாழ்த்துகள்.

ஒரே ஒரு நாள் கூட விடாமல் தினமும் வாசித்தது என்பதை போன வருட பெரும் வெற்றி என்று நானும் பெரியவனும் ஒரே மனதாக முடிவு செய்துள்ளோம். இப்போது தானும் எழுந்து வாசிப்பதாக சின்னவள் சொன்னது (இப்போதுதான் எழுத்து கூட்டி வாசிக்கிறாள்) அந்த வெற்றியின் அடையாளம்.

பல்வேறு ஆசிரியர்கள், பலவகை நூல்கள், கொஞ்சம் எழுதவும், மொழிபெயர்க்கவும் அமைந்த வாய்ப்புகள், ரஷ்ய இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளை தேடி வாசித்தது, அனைத்துக்கும் மேலாக ஆஷாபூர்ணாதேவியை கண்டுகொண்டது என இனிய வருடம்.

புத்தக கண்காட்சியை ஒரு மொழிப்பெயர்ப்புக்காக அழிசி ஶ்ரீனிவாசகோபாலன் கேட்டிருந்தார். அதை முடித்ததை தொடர்ந்து அவர் கொடுத்த நம்பிக்கையில் புதுமைப்பித்தனின் நாரத ராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கும் முயற்சியில் இருக்கிறேன். ரம்யாவிடம் சொன்னது போல, செயலில் திளைக்கும் மகிழ்வுக்கு ஈடில்லை.

அன்புடன்,

மதுமிதா.

அன்புள்ள மதுமிதா

வாழ்த்துக்கள்.

செயலூக்கம், ஒருமுகப்படுதல் ஆகியவற்றை நிகழ்த்தும்போது அவற்றின் விளைவாக நாம் ;சாதனை;’களைச் செய்யவில்லை. அவற்றையேகூட சாதனையாக எண்ணும்படியாக நம் வாழ்க்கை இன்று மாறிவிட்டிருக்கிறது.செயல் வழியாகவே இன்று நாம் நம்மை ஓர் ஆளுமையாகத் தொகுத்துக் கொள்ள முடியும். நமக்கான மகிழ்வை தேடிக்கொள்ள முடியும். இல்லையேல் இன்றைய தகவல்வெள்ளத்தில் நாம் புயலில் சருகென அலைபாய்ந்து அழிவோம்.

கலையிலக்கியச் செயல்பாடுகள் உலகியல் கோணத்தில் கொஞ்சம் கிராக்குத்தனமானவையே. ஆனால் நாம் வணங்கும் தெய்வம் மண்டையில் நிலவை வைத்த பித்தன் அல்லவா?

வெற்றி நிகழ்க

ஜெ

முந்தைய கட்டுரையானம் (சிறுகதை)
அடுத்த கட்டுரையானம், கடிதங்கள்