தண்தழல்- கடிதம்

தண்தழல் வாங்க 

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

என் முதல் நாவல் தண்தழல் வாசகசாலை பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது.

இந்நாவல் குறித்து உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம். நேரில் சந்திக்கும்போது கூறவே ஆவல். ஆனால், உங்களைச் சுற்றி எப்போதும் பலர் காத்திருக்கும் நிலையில் விரிவாக பேசுவதற்கு வாய்க்காது என்பதால்தான் கடிதம்.

வாசகசாலை நண்பர்கள் அருண் மற்றும் கார்த்திகேயன் இருவருமே சந்திக்கும் போதெல்லாம் நாவல் எழுதுங்க சார் எனக் கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் என்னால் தொடங்க முடியவில்லை. அடிப்படையில் நான் வாசகன்தான். புதுமைப்பித்தன் தொடங்கி நாஞ்சில், வண்ணதாசன், ஜெயமோகன், யுவன் போன்றோரைத் தொடர்ந்து இப்போது எழுதும் புதியவர்களின் படைப்புகளையும்  வாசிப்பதன் மூலம் கிடைக்கும் இன்பமே போதுமே. நான் எழுதி என்னவாகப் போகிறது என்றே எண்ணியிருந்தேன்.

உங்களின் எழுதுக என்ற சொற்களால் உந்துதல் பெற்று சிறுகதைகள் எழுதினேன். அதுவே வாசிக்கும் நூல் சரியாக நகராத பொழுதுகளில் மனதை உந்தித்தான் எழுத வேண்டியிருந்தது. ஒரு சிறுகதை எழுத குறைந்தது ஒருவார காலம் என்பதே என் சாதனை. சிலர் ஒரே அமர்வில் எழுதுகிறேன் எனக் கூறுவதைக் கேட்க வியப்பாக இருக்கும். இந்நிலையில் நாவல் எங்கே எழுதுவது. எனக்கு நம்பிக்கையே இல்லை.

கடந்த வருடம் நண்பர் ஜி.எஸ்.எஸ்.வி. நவீன் அவர்களுக்கு முதல் நாவல் எழுத வாழ்த்து தெரிவித்திருந்தீர்கள். அவ்வாழ்த்து அவருக்கான தனிப்பட்ட வாழ்த்தாக மட்டுமில்லை. அத்தனை இளைய எழுத்தாளர்களுக்குமான ஆசியாக இருந்தது. இரண்டு நாட்களில் நான் தொடங்கினேன்.

ஓராண்டு காலம் இந்நாவலுக்குள் இருந்தேன். மகிழ்வும் வேதனையும் ஆவேசமுமாக மனம் சுழன்று கொண்டிருந்தது. அதோடு அன்றாடம் செய்யும் செயல்கள் தனியாக நடந்து கொண்டிருந்தன. ஒரு இரட்டை நிலையில் வாழ்ந்து கொண்டிருத்தேன்.

இப்போது எண்ணிப் பார்க்கையில் நாவலுக்குள் இருந்த ஓராண்டே என் வாழ்வின் இன்பமான நாட்களாகத் தோன்றுகிறது. சிலர் ஒரு மாதத்திலேயே நாவல் எழுதி முடிக்கிறார்கள். அப்படி அவசரப்படவேண்டாம் என எனக்குத் தோன்றுகிறது. வாயினுள் இருக்கும் கல்கோனா மிட்டாயை வெடுக்கென கடித்து முழுங்காமல் மெதுவாக கரையவிட்டு ரசித்து நிதானமாக சுவைக்கவே எனக்கு பிடித்திருக்கிறது. விரைவாக எழுதுபவர்களின் பையினில் அதிகமான கல்கோனாக்கள் இருக்கக் கூடும். என்னிடம் வேறு உள்ளதா எனத் தெரியாத நிலையில் இருப்பதை நிதானமாக சுவைக்கவே மனம் விரும்பியது.

எழுத ஆரம்பித்தால் அதுவே உள்ளே இழுத்துச் செல்லும் என எழுதியவர்கள் கூறியபோது, எனக்கு அதன்மேல் நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் இப்போது அதையே நானும் கூறும் நிலை ஏற்பட்டுவிட்டது. நாவலைத் தொடங்கும்போது ஒரு துரோகத்தின் கதை என்றே ஆரம்பித்தேன். ஆனால் எங்கெங்கோ சென்று தியாகத்தின் கதையாக உருமாறி நிற்கிறது. அது மாறிவருவதை பரவசத்துடன் நோக்கி நிற்பதே நாவல் எழுதுவதன் உச்ச இன்பம் என எனக்குத் தோன்றுகிறது.

நாவலை நிதானமாக நான் எழுதினாலும் அதன் நடை விரைவானதாகவே அமைந்தது. என் மனதிலிருக்கும் இளம் வாசகச் சிறுவன் வேகவேகமாப் போ என ஊக்கியதன் காரணமாக அப்படி அமைந்துவிட்டது. ஆனால் எனக்கு எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் அவர்கள் மனைமாட்சி நாவலுக்கு கொண்டிருந்த நிதான நடையின் மேல்தான் ஆவல். அடுத்த முறை உள்ளிருக்கும் சிறுவனை மட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

என்னைப்போலவே,  என் சக இளைய எழுத்தாளர்கள் அனைவருமே பணியில் ஒரு காலும் இலக்கியத்தில் ஒரு காலுமாக பயணிப்பதால் நூலை வாசித்து கருத்துக் கூற அவர்களை அணுகுவதற்கு தயக்கமாகவே உள்ளது. இதை எழுத்தாளர் கமலதேவியிடம் ஒருமுறை கூறியபோது பரவாயில்லை எனக்கு அனுப்புங்க, பார்த்துச் சொல்றேன் என்றார். அவர் அப்போது தொடர்ந்து கட்டுரைகளும் சிறுகதைகளும் எழுதிக் கொண்டிருந்தார். அவற்றிற்கிடையே என் நாவலையும் வாசித்து சில மாற்றங்கள் சொன்னார். முக்கியமாக எங்கே முடியவேண்டும் எனக் கூறினார். அதன்படி, நான் எழுதியிருந்த கடைசிப் பக்க நிகழ்வை முடிவிற்கு முன்பாக இடம் மாற்றினேன். முடிவு கச்சிதமான புள்ளியில் நின்றுவிட்டது. கமலதேவி மேலிருந்த மதிப்பு மேலும் கூடியுள்ளது.

நாவல் முடிந்தவுடன்தான் தலைப்பைப் பற்றி யோசித்தேன். சரியாகவே அமையவில்லை. அதைப் பற்றியே எண்ணியபடி தூங்கினேன். கண் விழிக்கையில் தண்தழல் எனத் தோன்றியது. உடனே இணையத்தில் தேடினேன். இவ்வார்த்தை புழக்கத்தில் உள்ளதாவென. வெண்முரசில் காண்டீபம் நாவலில் இருந்தது. இல்லாமல் இருந்தால்தானே ஆச்சர்யம்.

நாவலின் பேசுபொருள் பெண்களின் குணங்கள் என்பதால் பெண்கள் மீதான மதிப்பையும் பிரமிப்பையும் எனக்குள் ஏற்படுத்திய என் ஆசிரியருக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்துள்ளேன்.

உங்களின் வாழ்த்தைக் கொண்டே தொடங்கினேன் என்றாலும் மீண்டும் ஓர் ஆசி கோருகிறேன். படைப்பதெல்லாம் ஆசிரியருக்கே முதல் சமர்ப்பணம்.

அன்புடன்

கா. சிவா

முந்தைய கட்டுரைநீலம் நிகழ்ந்தபோது…
அடுத்த கட்டுரைஆயுர்வேத வகுப்பு- கடிதங்கள்