ஆன்மபலத்தின் ஊற்றுமுகம் – நரம்பியல் பார்வையில்

அன்பின் ஜெ,

நரம்பியல் துறையில் நான் வாசித்த ஒரு செய்தியை உங்களிடம் பகிர விரும்புகிறேன். ஆன்மபலம்  (Willpower) என்பதற்கு மூளையில் ஒரு உறுப்பு ஊற்றுமுகமாய் இருக்கிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை மூளை நரம்பியலாளர் ஆண்ட்ரூ ஹூபர்மேன் (Andrew Huberman) அவரது பாட்கேஸ்ட்டில் கூறியுள்ளார். ஒரு சில ஆய்வாளர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயத்தை, பொதுவெளியில் பகிர்ந்திருக்கிறார்.

மூளை நரம்பியலில் ஒரு குணாதிசயத்துக்காக ஒரு உறுப்பை சுட்டிக்காட்டுவது என்பது இப்போது அரிதாகி வருகிறது எனக்கூறுகிறார். ஏனெனில் மூளையில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றிற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட செயல்திறன்கள் உள்ளன. அத்தகைய சூழலில், இப்படி ஒரு உறுப்பு தொடர்ந்து ஆய்வில் ஒரு செயல்திறனுக்காக செயல்புரிகிறது என்பது அரிய விஷயம்.

இதன் பெயர் Anterior Mid-Singulate Cortex. இதன் வேலை, அனைத்து மூளை உறுப்புகளுக்கு resource-ஐ பிரித்து வழங்குவது. எதற்கு நிறைய கொடுக்கவேண்டும், எதற்கு குறைவாக கொடுக்கவேண்டும் என்பதை இது தீர்மானிக்கிறது. ஆகவே இது மூளையின் அனைத்து பகுதிகளுடனும் தொடர்பில் இருக்கிறது.

நாம் ஒரு செயலை செய்யவேண்டும் என தீர்மானித்து, அதை செய்யத்துவங்கினால், அதற்கு தேவையான மூளை-உறுப்புகளுக்கு  இது அதிகமான resource-ஐயும், அதேபோல, செய்யவேண்டாம் என தீர்மானித்தால், அதற்கு தேவையான மூளை-உறுப்புகளுக்கு குறைவான resource-ஐயும் கொடுக்கிறது. காரின் ஸ்ட்ரீங் போல, மூளைக்கு செயல்படுகிறது.

யார்யாருக்கெல்லாம் இந்த உறுப்பு வளர்ந்து பெரிதாய் இருக்கிறதோ அவர்கள் அதிக ஊக்கத்துடனும், வாழ்வில் அதிகம் சாதித்தவர்களாகவும், யார்யாருக்கெல்லாம் இது குறுகி கட்டிகளுடன் இருக்கிறதோ அவர்கள் உளச்சோர்வுடனும், உணர்ச்சிகளற்றும் இருப்பதாய் ஆய்வுகள் கூறுகின்றன. கற்றுக்கொள்ளப்பட்ட உதவியின்மை (Learned Helplessness) எனும் ஒன்று இருக்கிறது, இந்த பண்பு உடையவர்கள், தான் எந்த விஷயம் செய்தாலும் அது தோல்வியில் தான் முடியும் எனும் நம்பிக்கையில் இருப்பவர்கள். கசப்பில் ஊறியவர்கள். இவர்களுக்கும் இது குறைவாக வளர்ந்திருப்பதை கண்டறிந்துள்ளனர்.

சூப்பர் – ஏஜர்ஸ் (Super-gers) எனும் ஒரு வகையினர் உண்டு, நூறுவயது வரை வாழ்வதற்கு சாத்தியக்கூறுடன் இருப்பவர்கள். இவர்கள் அறுபதை தாண்டியபின்னரும், அவர்களின் காக்னிட்டிவ் அமைப்பு நாற்பது, முப்பது வயதோரை போல, சில சமயம் மத்திய-இருபதுகளில் இருப்போரை போல இருக்கிறது. இவர்களுக்கும் இந்த பகுதி, அவர்களின் சமவயது ஒத்தோரை ஒப்பிடுகையில், குறிப்பிடத்தக்க அளவு வளர்ந்திருப்பதை கண்டுள்ளனர்.

ஒரு ஆய்வில், மின்னலைகளை வைத்து இந்த பகுதியை தூண்டியுள்ளனர். இது தூண்டப்படும் போது,‘ஏதோ நடக்கப்போகிறது, அதை நான் தடுக்கவேண்டும்’ எனும் உத்வேக உணர்வு வந்ததாய் ஆய்வில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர்.

இவர் கூறியவற்றில் முக்கியமான ஒன்று, இந்த உறுப்பு அதிக நியூரோபிளாஸ்டிக் தன்மையுடன் இருக்கிறது என்பது தான். அதனால் நாமே முயன்று இந்த உறுப்பை வளர்த்துக்கொள்ளமுடியும். சரியான தூக்கம், உடற்பயிற்சி செய்வது, புதிதாக ஏதேனும் கற்றுக்கொண்டே இருப்பது, தொடர்ச்சியாக சிறுசிறு கடினமான செயல்கள் செய்வது ஆகியவை இந்த உறுப்பை வளர்க்கும் என ஹூபர்மேன் கூறுகிறார். இதே வழிமுறைகளையே நீங்களும் உங்கள் கட்டுரைகளில் பரிந்துரைக்கிறீர்கள். அதற்கு, அறிவியல் சான்று வந்திருப்பதை மகிழ்வுடன் பகிர்கிறேன்.

நன்றி

சுந்தரபாண்டியன் தண்டபாணி.

பி.கு: அந்த பாட்கேஸ்ட் எபிசோடின் லிங்கை கீழே பகிர்ந்திருக்கிறேன்.

https://youtu.be/cwakOgHIT0E?si=eWm2jqZdo940oVQY

முந்தைய கட்டுரைஒரு செயல் தொடக்கம்
அடுத்த கட்டுரைஊரும் இலக்கியமும்- கடிதம்