பிரபந்தரசனை, கடிதம்

வணக்கம்,

நம் நாஞ்சில்நாட்டுப் பகுதியில் பாசுரங்கள் காதில் விழுதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை எனக்கு. மாதமொருமுறை திருக்குறுக்குடி  திவ்யதேசம் செல்வேன். பக்தியையும் தமிழின் அழகும் தாண்டி பாசுரங்களில் ஏதோ இருப்பதாகவேத் தோன்றும். தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் ஆலயத்தில்,

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி  தாமரைக் கண்ணன்என் நெஞ்சினூடே

புள்ளைக் கடாகின்ற ஆற்றைக்  காணீர்   என்சொல்லிச்  சொல்லுகேன்  அன்னைமீர்காள் 

வெள்ளச் சுகம்அவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழா ஒலியும்,

பிள்ளைக் குழா விளையாட்டுஒலியும்  அறா  திருப்பேரெயில் சேர்வன் நானே!”

என்பதைக் கேட்டதிலிருந்தே பாசுரங்களின் மீது ஆர்வம் வந்தது. ஆனால் அவ்வேளையில் பாசுரங்களின் அர்த்தம், அது இட்டுச் செல்லும் இடம் பற்றி பெரிய அளவில் புரியவில்லை.

ஆனால் இம்மூன்று நாட்களில் ராஜகோபாலன் அவர்களின் வகுப்புகள் பாசுரங்களைப் புரிந்து கொள்வதில் புதிய வழிமுறைகலைக் காட்டின. தத்துவச் செறிவுடன் கூடிய எளிமையான விளக்கம், துணைத்தகவல்கள், கருத்துப் பரிமாற்றம் என சிறப்பாக  நடத்தினார். மேலும், அதிகம் கேள்விப்பட்டிராத பாசுரங்களின் தொகுப்பினைப் பாடத்திட்டத்தில் வைத்திருந்தார், அதுவே அனைவருக்கும் ஓர் ஆர்வத்தினைத் தூண்டியது. எவ்வித குறிப்பும் இல்லாமல் மாலோலன் அவர்கள் பாசுரங்களை அதற்குரிய முறையில் பாடியதும் சிறப்பு.

வழக்கம்போலவே அந்த மலைத்தங்குமிடத்தின் ரம்யமும் தனிமையும் பாசுரங்களில் லயிப்பதற்கு உதவியது. வைணவத்தின் பால்  ஈடுபாடு இல்லாதோருக்கும் பயனளிக்கும் நிகழ்வு இது,ஈடுபாடுடைய என்போன்றோருக்கு மிகச்சிறந்த அனுபவம். நித்யவனம் செல்லும் பாதை கொஞ்சம் துலங்கி வருகிறது. பின்னாட்களில் மாமெரும் விருட்சமாக நித்யவனம் திகழும் என்பதை இப்போதே கணிக்க முடிகிறது. உங்களுக்கும், ராஜகோபாலன், மாலோலன், அந்தியூர் மணி ஆகியோருக்கும் நன்றிகள் பல.

ஆலயக்கலை வகுப்பின் அறிவிப்பிற்காகக் காத்திருக்கிறேன்.

 

அன்புடன்,

Bala. R

முந்தைய கட்டுரைபழ.கருப்பையா, அரசியல் மாற்று அரசியல்: உரை
அடுத்த கட்டுரைரூமி வாசிப்பு- மணிமாறன்