தேவகிச்சித்தி- கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்

தங்கள் கதை தேவகிச் சித்தியின் கதை வாசித்தேன். அக்கதை பற்றிய என் அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். இதுவே என்னுடைய முதல் அனுபவ பகிர்வு.

இந்த கதை ஒரு கூட்டுக் குடும்பத்தில் நடக்கக் கூடிய நிகழ்வுகளை ஒட்டி நகர்கிறது. குடும்பத்தில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி மற்றும் இரண்டு சிறுவர்கள் அடங்கிய ஒரு கூட்டுக் குடும்பம். இக்கதை குடும்பத்தில் இருக்கும் ஒரு சிறுவன் கூறுவது போல அமைந்துள்ளது. குடும்பத்தில் பெண்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதற்கான காரணம் ஆண்கள் மட்டும் அல்ல பெண்களும் கூட என்ற கோணத்தில் கதை நகர்கிறது என்று எனக்குத் தோன்றியது.

இக்கதையில் தேவகி சித்தி, ரகசியமாக ஒரு நாட்குறிப்பு எழுதுகிறாள்.   அதை எழுதும்போது அவளது முகம் மிகவும் மகிழ்ச்சியுடனும் பொலிவுடனும் தோற்றமளிக்கின்றது. சித்தி நாட்குறிப்பு எழுதுவதை வீட்டில் இருக்கும் சிறுவன் பார்த்துவிடுகிறான். சித்தியை அம்மா காபி குடிக்க கூப்பிட்டதும் அதைப் பீரோவில் வைத்து விட்டுச் செல்கிறாள். சித்தியோ வேலைக்குச் செல்பவள். அடுத்தநாள் வேலைக்குச் செல்லும்போது சிறுவனின் அம்மா, பாட்டி, அத்தை மூவரும் ஓரிடத்தில் அமர்ந்து கதைபேசிக்கொண்டு இருக்கிறனர். சித்தியைப் பார்த்து “எலிசபத் ராணி புதிய புடவை வாங்கி இருக்கப் போல” என்று வசைபாடுகிறார்கள். இந்த வரி நம்மைச் சற்று யோசிக்க வைக்கிறது. வேலைக்குச் செல்லும் பெண்களைக் கண்டால் வீட்டில் இருக்கும் பெண்களுக்குப் பிடிக்காதோ? அல்லது இது தான் பெண்களின் இயல்பா? என்று. வசைபாடுவது தொடர்ந்து நடைபெற, அச்சிறுவன் சித்தி எழுதும் சிவப்பு நிற நாட்குறிப்பைப் பற்றிக் கூறுகிறான். மூவருக்கும் முகம் மாறியது.

அம்மா அச்சிறுவனை திட்டி அனுப்பிவிடுகிறாள். பாட்டியோ இதற்கும்  சேர்த்து வசைபாடினார். அம்மா அந்த டைரியை தேடி கிடைக்கவில்லை. அப்பாவிடம் இதைச் சொல்கின்றாள். அப்பாவிற்கு இது பெரிய விஷயமாக தெரியவில்லை. இருப்பினும் அம்மாவும் பாட்டியும் அப்பாவை கேட்கத் தூண்டும் விதமாக பேசுகின்றனர்.  பாட்டியின் பேச்சில் கடுமையான வன்மம் தெரிந்தது.  வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் நகர்புரத்துப் பெண்கள் எல்லாம் மோசமான பெண்கள் என்ற விதத்தில் நினைக்கத் தோன்றியது அந்த பேச்சு. இப்பேச்சு அப்பாவை மேலும் கோபப்படச் செய்தது. பிறகு தாத்தா வீட்டிற்கு வருகிறார். அம்மாவிற்கு டைரியில் என்ன இருக்கிறது என்று தெரிந்தே ஆகவேண்டும் என்ற ஒரு ஆவேசம்போல. தாத்தா வந்தவுடன் , அவர் உங்களிடம் ஏதோ பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொல்லி அனுப்பி வைத்து விடுகிறாள்.

அப்பா, தாத்தாவிடம் ஏதோ சொல்ல, தாத்தா கோபம் அடைந்தார்.  சித்தியும் சித்தப்பாவும் வந்தார்கள். அப்பா, சித்தப்பாவிடம் இதைப்பற்றி கூற, சித்தப்பாவும் இதை எப்படி கேட்பது என்று தயங்கினார். கேட்டால் தான் இதைப் பற்றின ஒரு தெளிவு வரும் என்று கடுமையாக தாத்தா சாடினார். பிறகு அந்த டைரியை படிக்க முடிவு செய்து அம்மா, சித்தி பையில் இருக்கும் சாவிகொண்டு அந்த டைரியை கொண்டு வந்தால். சித்தி பதறிப் போனாள் , இதை யாரும் படிக்க கூடாது அது என்னுடைய டைரி. அதில் எந்த ஒரு தவறான விஷ்யமும் இல்லை என்று கதறுகிறாள். இதை பார்க்கும் பொது இங்கே அந்த பெண்ணிற்கான் சுதந்திரம் பறிபோனதோ அல்லது ஒருவரின் அந்தரங்கத்தில் மற்றவர்கள் அனுமதி இல்லாமல் வற்புறுத்தலின் மூலம் நுழைவது ஒரு அநாகரீகமான செயல் என்று எனக்குத் தோன்றுகிறது.

இது என்னுடைய டைரி, இதை கணவன் கூட படிக்க அனுமதி இல்லை என்று சொல்லும்போது அது எந்த அளவிற்கு அந்தரங்கம் என்று உணர முடிகிறது. அதே சமயம் அதில் என்ன இருக்கும் என்ற ஆர்வத்தையும் அதிகரிக்கச் செய்கின்றது.  சித்தப்பா டைரியை படிக்க முற்படும்போது அதைப் பிடுங்கி சமையல் அறைக்குச் சென்று கதவை பூட்டிக் கொள்கின்றாள். அனைவரும் பதற்றம் அடைகின்றனர்.  ஏதோ எரிவது போன்ற மணம் வருகிறது. கதவை உடைத்து உள்ளே செல்கின்றனர். சித்தி அந்த டைரியை எரித்து சாம்பலாக்கி விட்டிருந்தாள் . இதனால் சித்தப்பா மிகுந்த கோபமடைந்து, சித்தியை அவளது தாய் வீட்டிற்கு அனுப்பி விடுகிறார். வேறு திருமணமும் செய்து கொள்கின்றார். இதில் சித்தப்பாவின் தோல்வி அவரை இந்த ஒரு தவறான முடிவை எடுக்க தூண்டி இருக்குமோ என்று எனக்கு தோன்றுகிறது. அவரது  ஈகோ அவரை இந்த முடிவுக்கு தள்ளி இருக்குமோ?

இதில் பல  இடங்களில் பெண்கள் வன்மத்தோடு  பேசுவது போல தோன்றுகிறது. ஆண்கள் அவர்களை அடக்கி வைத்து வைத்து , அதையே பழகிப் போனவர்களாக ஆனதாலோ என்னவோ அவர்கள் அதை விட்டு வெளியே வார முடியவில்லை. இயல்பாக அம்மா “ஆம்பள பையன் கைல என்ன துடைப்பம் என்று கேட்பதிலும், பாட்டி, தாத்தா வந்தவுடன் காலை மடக்கி கொள்வதும், சித்தி, அப்பாவைப் பார்ததும் பேசாமல் அமைதியாவதும்  ஆண்களின் மேல் உள்ள மரியாதையினாலா ? அல்லது ஆண்கள் அவர்களின் மீது ஆதிக்கம் செலுத்தியதினாலா ?  அந்த சிறுவன் செய்யும் செயல் கூட ஒரு சில சங்கடங்களை உருவாக்குகின்றது. முருங்கை மரத்தின் மேல் ஏறிப் பார்ப்பதும், சித்தி உடை மாற்றும் காட்சி கண்முன்னே வந்து செல்வதும்.

இவ்வாறாக ஒவ்வொரு கதை வாசிக்கும்போதும் ஒரு அனுபவம் ஏற்படுகின்றன.

அன்புடன்

தண்டபாணி

ஈசா பள்ளி ஒருங்கிணைப்பாளர்

முந்தைய கட்டுரைமற்றொரு வகை கதைகள் -கடிதம்
அடுத்த கட்டுரைதீன் விளக்கம்