சுற்றிலும் ஒலிக்கும் குரல் – கடிதம்

சற்றே குளிர்ந்த அமைதியான மாசற்ற சூழலில் பைபிளுடன் மூன்று நாட்கள். முற்றிலும் புதிய அனுபவம். முதல் நாள் : கால கோட்டின் வழியாக பார்க்கையில் பொருளடக்கமே புதிய அர்த்தம் தந்தது! பழைய ஏற்பாடு அதன் புவியியல் அமைப்பு தொன்மங்கள் வழியாக எங்கள் மனங்களில் விரிய ஆரம்பித்தது.

ஜெனிசிஸ் எனும் உலகின் தோற்றம்,தாவர, விலங்குகள் படைப்பு, ஆதாம் ஏவாளின் உருவாக்கம், அவர்கள் குடும்பம், பரம்பரை, பழைய ஏற்பட்டு பாம்புக்கும் ஒரு வரலாறு இருக்கிறது (கில்கமெஷ்), மோசேயின் பிறப்பு (அதன் வரலாற்று ஒற்றுமை – இயேசுவின் பிறப்பு, கிருஷ்ணனின் பிறப்பு ), விவசாயமும், கால்நடை வளர்ப்புமாக ஆரம்பித்த மனிதனின் பயணம் பட்டணங்களை நிர்மாணிப்பதும் கோவில் கட்டுவதுமாக வரலாற்றில் வளரதொடங்கிய நிலை,மோசேயின் பயணம், யூதர்கள் தங்கள் நாட்டை கட்டுதல் என்று முதல் நாள் ஒரு முற்றிலும் புதிய கற்றல் அனுபவத்தை தந்தது.

கூடி நின்று உரையாடல்: இந்த வகை கற்றல் எனக்கு புதியதாக இருந்தது. தூர நின்று கவனித்தால் மூன்று முறை எழுந்தடங்கும் சிரிப்பொலிகளுடன் ஆங்காங்கே இருக்கும் சிறுகுழுக்கள், சிறில் சார் முன்பு ஒன்று, தேவதேவன் ஐயா அவர்கள் முன்பு ஒன்று, அந்தியூர் மணி அவர்கள் முன்பு ஒன்று. மூன்றும் கொஞ்ச நேரத்தில் இரண்டாகி பின் ஒன்றாகும் அல்லது நேரத்திற்கிணங்க களைந்து போகும். இந்த சிறு குழு விவாதங்களில் ஒரு குறிப்பிட்ட நோக்கம் இல்லாமல் இருந்தாலும் புவி அமைப்பு, அரசியல், இறையியல், மரபியல் என்று எங்கு வேண்டுமானாலும் சென்றாலும் பைபிள் அதன் அடி நாதமாக இருந்தது.

ஆதியாகமம் முழுமையும் பிற அகமங்களிலிருந்தும் தேர்ந்தெடுத்த வசனங்கள் வாசிக்கப்பட்டதும் நல்ல வாசிப்பனுபவத்தை கொடுத்தது. இரண்டாம் நாள் மதியத்திற்கு முன் ஜோஷுவா, நியாயாதிபதிகள், ரூத், சாமுவேல்,எஸ்ரா, எஸ்தர் என்று பலரும் அவர்கள் புதிய ஏற்பாட்டில் எங்கு வர இருக்கிறார்கள் என்ற அறிமுகத்துடன் வாசிப்பின் வழி வந்து சென்றார்கள். சங்கீதம் வந்தபோது விளக்கப்பட்ட அதன் வடிவ கட்டமைப்புகள் ஆச்சர்யம் ஏற்படுத்தியது.

மதியத்திற்கு மேல் புதிய ஏற்பாடு மத்தேயு முழுவதும் வாசித்தோம். மத்தேயு -1 ல் இயேசுவின் பரம்பரை தகவல்களுக்கு பின் இயேசு பிறக்கையில் ஒரு கைதட்டல் எழுந்தது. ஒரு ஹீரோ என்ட்ரி ! அதிசயங்கள், மலை பிரசங்கம் வழியாக இயேசுவை புரிந்துகொள்ள ஆரம்பித்தோம், அவருடைய முடிவின் விவரிப்பு தொண்டையை அடைக்கத்தான் செய்தது.

மூன்றாம் நாள்; காலை சீக்கிரமே ஆரம்பித்து லூக்காவின் சுவிசேஷம் பிற சுவிஷசங்களிலிருந்து அதன் வேறுபாடு, ரோமன் கத்தோலிக், கத்தோலிக்க திருச்சபை, ப்ரோட்டஸ்டண்ட் தோற்றம் (மார்ட்டின் லூதர்), உவமை கதைகள் இறையியல் வகைகள், சவுல் பவுலானது,ஏசுவுக்கு பின் திருத்தூதர் பணிகள், ஹெலனிசம், யோவானின் கடிதங்கள் என்று விரிந்து :

“அன்பு எனக்கிராவிட்டால் சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தலம் போலவும் இருப்பேன்”,

” அன்பு ஒருக்காலும் ஒழியாது தீர்க்க தரிசனங்களானாலும் ஒளிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஒழிந்துபோம், அறிவினாலும் ஒழிந்துபோம்:,

“விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது”

என்று அன்பில் நிலை பெற்றது.

போனதே தெரியாத இந்த மூன்று நாட்கள் மீண்டும் எப்போது வருவோம் என்ற ஏக்கத்துடன் பைபிளுடன் ஒரு பயணம் வெள்ளிமலையில் முடிந்து… சிறில் சார் உடன் வரும் வழியில் இளையராஜா பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது

“தேவனின் கோவில் மூடிய நேரம்”…. ஓரிடத்தில் இதை கவனியுங்கள் என்றார். “ஒருவழிப் பாதை என்பயணம்… மனதினில் எனோ பல சலனம் …. கேட்டால் தருவேன் என்றவன் நீயே,கேட்டேன் ஒன்று தந்தாயா ….?”  மலை பிரசாங்கத்து வரிகள்…. பைபிள் நம்மை சுற்றிலும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது

நாராயண் குமார்

முந்தைய கட்டுரைசிந்தனைப் பயிற்சி
அடுத்த கட்டுரைஒரு தொடக்கம்- கடிதம்