சுதீரின் அம்மா – விவேக் ஷன்பேக்

1

ஓரிரு ஸ்பூன் கீர் குடித்ததோடு சரி, சுதீரின் அம்மா விருந்தில் பரிமாறப்பட்ட எந்த இனிப்பையும் தொட்டே பார்க்கவில்லை.  பேரப்பிள்ளையின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக ஏகப்பட்ட இனிப்புகள் வாங்கிய விஷயம் அவளுக்கு தெரியும்.  ஆனால் ”போதும் வயிறு  ஒத்துக்கொள்ளாது” என்று சொல்லிவிட்டாள்.  ஆனால் மருமகள் கௌசல்யா இதை வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு புறக்கணிப்பாக நினைத்தாள்.  அவளுக்கு பயங்கரமான கோபம். ”எல்லாம் சாப்பிட வேணாம்.  கொஞ்சம் கொஞ்சம் வாயில போட்டு ருசியாவது பாத்திருக்கலாமே?”  கௌசல்யா சொன்னாள்.  இன்றைக்கும் வழக்கம்போல சரோஜினி கொஞ்சம் சோறு, ரசம், தொட்டுக்கொள்ள கூட்டுடன் முடித்துக்கொண்டாள்.  நாலுவகை பதார்த்தம் இருந்தாலும் சரி நாற்பதுவகை இருந்தாலும் சரி சரோஜினி எப்போதும் ஒரே வகையுடன் நிறுத்திக்கொள்வாள்.  “ஏகப்பட்டதை சாப்பிட்டா வாயில் ருசியே போயிடும்” என்பாள்.  கௌசல்யாவுக்கு அதைக்கேட்டாலே கடுப்பு.  சரி, அதெல்லாம் வழக்கமாகச் சொல்வது.  இன்றைக்கு அப்படியா? அதைக்கூட அவள் விட்டுவிட்டாள்.   ஆனால் பேரனுடைய பிறந்தநாளைக் கொண்டாடும்போது பாட்டி ஒரு நல்ல புடவையைக்கூட கட்டிக்கொள்ளவில்லை என்றால்?  வரும் விருந்தாளிகள், அதுவும் அர்ஜுனுடைய நண்பர்களின் அம்மாக்கள், என்ன நினைப்பார்கள்?  அன்று மாலை முழுக்க கௌசல்யா புகைந்துகொண்டே இருந்தாள்.

”மத்தவங்க என்ன சொல்வாங்கன்றதை விட்டுடலாம்.  அவளுடைய சொந்த மகன் ஏகப்பட்ட சாரிகளை வாங்கிக் கொடுத்திருக்காரு. கல்யாணங்களுக்கும் விசேஷங்களுக்கும் சொந்தக்காரங்க நிறைய சாரி வாங்கிக்கொடுத்திருக்காங்க.  அதில எதையாவது ஒண்ணை எடுத்து கட்டிக்கிட்டா என்ன?   சத்தியமாச் சொல்றேன் அம்மா.   நான் பொய்சொல்லல. சாயங்காலம் வேலைக்காரிகூட நல்ல சாரியை உடுத்திக்கிட்டு பளிச்சுனு இருந்தா.  அவ வீட்டில் இருந்தே கொண்டுவந்திருந்தா தெரியுமா?”  கௌசல்யா அவளுடைய அம்மாவுக்கு அன்றிரவு ஃபோனில் ஒரு விரிவான அறிக்கையை அளித்துக்கொண்டிருந்தாள்.  ‘சரிதான். அனுபவிக்கறதுக்கும் ஒரு யோகம் வேணும்.. வாழ்க்கை முழுக்க கஷ்டப்பட்ட ஒருத்தி எதுக்காக அவள் பையன் நல்ல நிலையில் இருக்கும்போது இப்படிச் செய்யணும்?  இதெல்லாம் ஒரு சில்லறைத்தனம்.  நாளெல்லாம் கழுவித் தேச்சாலும் வடு போகுமா என்ன?  நல்லவேளை.  சுதீர் அந்தமாதிரி இல்லை” பக்கத்தில் யாரும் இருக்கவில்லை.  ஆனாலும் கௌசல்யா மாமியாரைப்பற்றிய வம்பு என்பதால் கிசுகிசுப்பாகத்தான் பேசினாள்.

அவள் அம்மா மேலே பேசிக்கொண்டே சென்றாள். ”சிலர் அப்படித்தான்.  பேராசை, வேறென்ன. நாளைக்கு நாளைக்குன்னு சேர்த்து வெச்சுகிட்டே இருப்பாங்க.  கிடைச்சதை எல்லாம் கொண்டு போய் ஒளிச்சு வெப்பாங்க.  அவங்க முன்னால என்னதான் கொண்டு கொட்டு, திருப்தியே இருக்காது. அவங்களுக்கு சேர்த்து வைக்கிறதுலதான் சந்தோஷம்.  அந்தக் குவியல் வளர வளர ஆனந்தம்.  இதைத்தான் பிச்சைக்காரத்தனம்னு சொல்வாங்க.’  இது அவள் அடிக்கடி பேசும் ஒரு விஷயம்.  அதற்குள் அர்ஜுன் அவனுடைய புதிய பொம்மையுடன் அறைக்குள் பாய்ந்து வந்தான். அதை வைத்துக்கொண்டு எப்படி விளையாடுவது என்று கேட்க விரும்பினான்.  ஆனால் கௌசல்யா மெத்தையில் சாய்ந்து உட்கார்ந்து பேசும் தோரணையைக் கண்டதும் வந்த வேகத்திலேயே திரும்பிப் போய்விட்டான்.  கௌசல்யா ஃபோனை காதில் இடுக்கியபடியே எழுந்து பையன் திறந்து வைத்துவிட்டுப்போன  கதவை மூடிவிட்டு வந்தாள்.  பேச்சு தொடர்ந்தது.

2

சரோஜினி அப்போது எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள்.  ஒரு சனியன்று காலை வகுப்பு முடிந்து அப்போதுதான் வீட்டிற்குத் திரும்பி கஞ்சி குடிப்பதற்காகக் காத்திருந்தாள்.  அன்றுதான் கிமானியிலிருந்து கெளரக்கா வந்திருந்தாள்.  அவள் சரோஜினியின் அத்தை; அவளது தந்தை விட்டோபாவின் அக்கா.    வேறொருத்தியை மணப்பதற்காக அவளை விட்டுச் சென்று விட்ட அவளது முன்னாள் கணவனிடமிருந்து ஜீவனாம்சத் தொகையை வாங்கிக் கொள்வதற்கென ஆண்டுதோறும் கிமானியிலிருந்து அவள் மேற்கொள்ளும் வருடாந்திரப் பழி வாங்கும் படலப் பயணங்களில் ஒன்று அது.  அவளிடமிருந்து உடனடியாக விலகிக் கொள்ள நினைத்த அவள் புருஷன், அவள் பெயரில் சில தோப்புகளையும் நெல் வயல்களையும் விட்டுச் சென்றிருந்த போதும் அது போதாதென்று கோர்ட்டுக்குப் போனாள் கெளரக்கா.  பல வருடங்கள் அலையாய் அலைந்த பிறகு, வருடத்திற்கு 15 ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் எனத் தீர்ப்பானது.  இதை வாங்க வருடம் ஒரு முறை அங்கோலாவுக்கு வரலானாள் கெளரக்கா.  ”வண்டிக் கூலிக்கே ஆகாது இந்தப் பணம்.  ஆனாலும் சாகும் வரை இந்தப் பணத்தை வாங்கத்தான் போறேன்.” எல்லோருக்கும் இந்த வசனம் மனப்பாடம் என்றாலும், ஒவ்வொரு முறை வரும்போதும் இதை ஆங்காரத்துடன் சொல்லாமலிருப்பதில்லை அவள்.  “அப்போ… வர எவ்வளோ செலவு கெளரக்கா?”, அவளிடம் கொஞ்சம் உரிமையுடன் பழகுவோர் கேட்பது இது.

கெளரக்காவிற்கு கேட்கும் திறன் குறையத் துவங்கியதும் குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.  அவள் வந்தாலே வீட்டில் களேபரம்தான்.  மூன்று நான்கு நாட்கள் அவள் தங்கி இருக்கும்போது, அவளது வசவுகளுக்கும் அவதூறுகளுக்கும் ஆளாகாமல் வீட்டில் உள்ள எவரும் தப்பமுடியாது.  பிறந்த வீட்டுடன் உறவை முறித்துக் கொண்டதைப் பற்றி உடன் பிறந்தவனுடன் சண்டை போடாமல் ஒரு முறையும் அவள் திரும்பிச் செல்வதில்லை.

எல்லோரும் கஞ்சி குடிக்க அமர்ந்த போது, கெளரக்காவிற்கு சரோஜினியை அடையாளம் தெரியவில்லை.  அறிந்து கொண்டவுடன், “அடக்கடவுளே.. சரோவா இது?  இப்படி வளந்துட்டே போனா என்ன ஆகுறது?  எங்க போயி இவளுக்கு மாப்பிள்ளை தேட?  விட்டோபாதான் திண்டாடப் போறான்.  நடையா நடந்து நாலு ஜதை செருப்பு தேஞ்சா கூட பொருத்தமா சம்பந்தம் கிடைக்கப் போறதில்லை.  பெண்ணே, அவ தலையிலெ தினமும் குட்டிகிட்டே இரு, இதுக்கு மேலயும் அவளை வளர விடாதே” என்று தன் மைத்துனிக்கு நாடகத்தனமாய் அறிவுரை வழங்கினாள்.  சொல்லிக்கொண்டே சரோஜினியிடம் சென்றவள், சரியாய் அவள் கஞ்சியைக் குடிக்க ஆரம்பித்தவுடன் அவள் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்தாள்.  நடு மண்டையில் இடியென இறங்கிய குட்டு, அவளுக்கு புரைக்கேற வைத்தது.  மூச்சடைத்து இருமத்துவங்கினாள்.  குரல் கரகரத்து, கண்கள் செருக ஆரம்பித்தன.  வீட்டில் இருந்த பெண்கள் எல்லோரும் ஒடி வந்து அவள் தலையிலும் முகத்திலும் தண்ணீரைத் தெளித்தனர்.  மிகுந்த சிரமத்திற்குப் பின் மூச்சு சீரடைந்தபோது அங்கிருந்தவர்கள் அரண்டு போயிருந்தனர்.  அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த கெளரக்கா, சரோஜினியின் நிலைமை சீரடைந்தவுடன் “செல்லம் ரொம்ப பூஞ்சை” என்றாள்.  சரோஜினி ஒன்றும் சொல்லாமல் தட்டருகே டம்ளரில் இருந்த தண்ணீரை எடுத்து கெளரக்காவின் முகத்தில் வீசினாள்.  அவ்வளவுதான்!  கெளரக்கா பேயாட்டம் ஆடத் துவங்கினாள்.  தான் செய்ததை மறைத்து, சரோஜினி தன் மேல் தண்ணீரைக் கொட்டியதைப் பெரிது படுத்தி தனக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகளில் உள்ளதிலேயே மோசமானவற்றைக் கொண்டு சரோஜினியை வசை பாடினாள்.  சிறுமி என்றும் பாராமல் அவளைப் புண்படுத்தினாள்.  சரோஜினியின் அப்பா மதிய உணவுக்காக வந்தபோது, வீடே கொந்தளித்துக் கொண்டிருந்தது.  நடந்தவற்றைக் கேட்டபோது அவருக்கு எரிச்சலாக வந்தது.  எல்லோரையும் திட்டித் தீர்த்து மேலும் பேசாமல் அடக்கினார்.

ஆனால் கெளரக்காவின் வசைகள் வடுக்களாய் சரோஜினியின் உள்ளத்தில் பொதிந்தன.  அன்று முதல் உயரத்தைக் குறிக்கப் பயன்படும் அனைத்து சொற்களும் – மூங்கில் குருத்து, பனைமரம், பாக்கு மரம், தென்னை மரம், ஒட்டகம், கொக்கு – எல்லாம் அவளுக்காகவே உருவானதாகத் தோன்ற ஆரம்பித்தது. பள்ளியில் வழிபாட்டின்போதும் அணி வகுப்பிலும் கடைசி வரிசையில்தான் அவளுக்கு இடம்.  வகுப்பில் சுவரில் படம் மாட்டவேண்டும் என்றால் அவள்தான் நாற்காலியில் ஏறி மாட்ட வேண்டும்.  முதலில் இயல்பாகத் தெரிந்த எல்லாம் இப்போது கிண்டலாகத் தோன்றியது.  பொதுவான பேச்சுக்கள் எல்லாம் இப்போது இரட்டை அர்த்தங்கள் கொண்டன.  எவரும் எதுவும் சொல்லாத போதும் பள்ளிக்குச் செல்வதே சரோஜினிக்கு நரகமாகத் தோன்றத் தொடங்கியது.  உயரத்தைக் குறைத்துக்காட்ட கூன்போட்டு நடமாடத் துவங்கினாள்.  “கூன் போடாதே” என்று மிரட்டும் அவளது உடற்பயிற்சி ஆசிரியருக்கு அவளது கஷ்டம் எங்கே தெரியப்போகிறது?  நெடிது வளர்ந்த தங்கள் மகளை நினைக்கும்தோறும் அவளது பெற்றோருக்கு நெஞ்சில் பெரிய பாரம் அழுத்தும்.  அவள் இன்னும் வளர்ந்து விடக் கூடாதே என மனதிற்குள் வேண்டத் துவங்கினர்.  அதற்கு எந்தப் பலனும் இருக்கவில்லை.

மான் விழிகளும், நல்ல உயரமும், சிக்கென்ற உடலும் சரோஜினியைப் பேரழகியாக்கின.  அவள் வளர்ந்த வேகத்தினால் கவலை அடைந்த விட்டோபா கூடிய விரைவில் அவளைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்தார்.  அவள் இப்போதே நல்ல உயரம்.  ஏற்கனவே தாமதமாகிவிட்டது என்று நினைத்த விட்டோபா, மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேறியவளை மேலும் படிக்க அனுமதிக்கவில்லை.  படித்து மும்பையில் வேலையிலிருந்த அவள் அண்ணன், தங்கைக்குத் திருமணம் முடிந்த பின்னரே தான் திருமணம் செய்து கொள்வதென முடிவு செய்திருந்தான்.

சரோஜினியின் படிப்பு நின்றுபோய் அவள் வீட்டிலேயே முடங்கிப்போனாள்.  வீட்டுப் பொறுப்புகளைத் திறமையுடன் கவனித்துக் கொண்டாள்.  அப்பொழுதுதான் பிரச்சனைகளும் துவங்கின.  வீட்டிற்கு வருவோர் கண்ணில் முதலில் அவள்தான் தென்பட்டாள்.    ஒருவர் விடாமல் அவள் திருமணம் குறித்தும் உயரம் குறித்தும் அறிவுரை வழங்கிச் சென்றனர்.  அல்லது அவளைப் பார்த்து பரிதாபப்பட்டனர்.  அது அவர்களுக்குப் பொழுது போக்காகவும், சரோஜினிக்கு வாழ்வின் சாபமாகவும் ஆனது.  சில சமயங்களில், இந்த அர்த்தமற்ற பேச்சுக்கள் சரோஜினியின் பெற்றோரைக் கடுப்படையச் செய்தன.  ஒரு முறை, கெளரக்கா வரப்போகிறாள் என்பதை அறிந்ததும், சரோஜினியை ஹொன்னவராவிலிருந்த அவளது மாமா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சரோஜினியால் இதையெல்லாம் தாங்கவே முடியவில்லை.  முதல் வேலையாக இதிலிருந்தெல்லாம் தப்பியோடி விடவேண்டும் என்று முடிவு செய்தாள்.

ஒவ்வொரு முறையும் அவளது அண்ணன் மும்பையிலிருந்து வரும்போது அவனுக்கு வரன்கள் வந்து குவியும்.  அவனும் நல்ல உயரம்.  ஆனால், உயரம் ஆணுக்கு அழகல்லவா?  தங்கைக்கு முன் அவன் மணம் செய்து கொள்வதாயில்லை என்று எல்லோருக்கும் தெரிந்திருந்தபோதும், மனதை மாற்றிக்கொள்ளமாட்டானா என்ற நப்பாசையில் வரன்களைக் கொண்டு வந்தனர். சுற்றி வளைத்து, தங்கைக்கு மணமாக வேண்டும் என்று அண்ணன் ஒன்றும் காத்திருக்கத் தேவையில்லை என்று சொல்லிப் பார்த்தனர்.  ’தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தால் கிழவியைத்தான் கட்டிக் கொள்ள வேண்டும்.  வயதாக ஆக டெளரியும் குறையும்…’  லேசாக மிரட்டியும் பார்த்தனர்.

இவையெல்லாம் சரோஜினியின் காதில் விழாமல் இல்லை.  சில சமயம் அவளது பெற்றோரும் இப்பேச்சுக்களுக்கு மயங்கி முதலில் ரத்னாகருக்கு மணம் செய்வதில் என்ன தவறு என்று யோசித்தனர்.  ஆனால், உடனேயே அதனால் வரக்கூடிய பிரச்சினைகளும், சரோஜினிக்கு கல்யாணம் நடக்காமலேயே போய் விடுமோ என்ற பயமும் அவர்களை நடுக்கியது.  முதலில் பிடிவாதமாக இருந்த ரத்னாகரும் மெதுவாக இளகத் தொடங்கினான்.  மாப்பிள்ளை தேடும் படலம் பத்து வருடங்கள் நீடித்தது.  இரண்டு விரலளவாவது மாப்பிள்ளை அவளை விட உயரமாக இருக்க வேண்டாமா?  வேறெந்தக் குறையையும் மறைத்து விடலாம்.  அவள் உயரத்தை என்ன செய்வது?  முன்பெல்லாம் அவள் இருக்கும்போது பேசப்படாதது, இப்போது அவள் முன்னிலையிலேயே விவாதிக்கப்பட்டது.  விட்டோபா ஒரு முறை தொலைதூரத் தென்கன்னடத்திற்குப் போய் வந்தார்.  மகளின் உயரத்தைப் பற்றி மற்றவர்கள் பேசியபோதெல்லாம் தர்மசங்கடத்தில் நெளிந்தார்.  “இதை ஏன் முதலிலேயே சொல்லல”  மக்கள் கேட்ட கேள்வியிலிருந்த அழுத்தம் விட்டோபா மீது இடியாய் இறங்கியது.

 3

உப்பா என்கிற உபேந்த்ரா பெண் பார்க்க வருவதைப் பற்றி சரோஜினிக்கு யாரும் சரியாகச் சொல்லவில்லை.  இந்த வரனைப் பரிந்துரைத்தவர்களே பிறகு ’ஏண்டா சொன்னோம்’ என்று வருந்தினர்.  அவன் நல்ல உயரம் என்பதைத் தவிர, அழகும் அறிவும் நிறைந்த சரோஜினிக்கு அந்த முட்டாள் எந்த விதத்தில் பொருத்தமாக இருக்க முடியும்?  சுதந்திரத் தியாகியான உப்பாவின் அப்பா, இஷ்னடராயரு குறிக்கோள்களுடன் வாழ்ந்த மனிதர்.  பணத்தைப் பெரிதாக மதிக்காத அவர் லோகாயத ஞானம் சிறிதும் இல்லாதவராகக் கருதப்பட்டார்.  அவர் கையில் எப்போதும் ஒரு புத்தகம் இருக்கும்.  அதற்கு முரணாக அவரது மகன் புத்தகங்களின் பக்கமே போவதில்லை.  படிப்பைப் பாதியில் நிறுத்தியவனுக்கு எப்படியோ தத்தப்பாவின் மளிகைக் கடையில் ஒரு வேலை கிடைத்தது.  இஷ்னடராயரு மகனுக்கு எவ்விதத்திலும் உதவுவதாக இல்லை.  அவன் காலில் அவன் நிற்க வேண்டும் என்று ஒதுங்கிக் கொண்டார்.  அவர் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் உப்பாவுக்கு நல்ல வேலை கிடைத்திருக்கும்.  அவர் செய்வதாயில்லை.  அவரைப் பொறுத்தவரை செய்யும் தொழிலே தெய்வம், எந்த வேலையும் இழிவானதல்ல.  கூலி வேலை செய்தாகிலும் அவன் பிழைத்துக் கொள்ளட்டும் என்று சொல்லி விட்டார்.

ஆனால், உப்பா ஒன்றும் மோசமான ஆளில்லை.  சூதுவாதற்றவன், மந்தமானவன்.  பெரிய காதுகள், தடித்த உதடுகள்.  காதுவரை நீளும் வாயில் கோணல்மாணலான பற்கள் தெரியச் சிரிப்பான்.  இவை எல்லாம் சேர்ந்து அவன் எது செய்தாலும் ஏறுமாறாகவே தோன்றும்படி செய்தன.  ஆறடிக்கும் மேலான உயரம்.  ஐயா, ராஜா, அப்பா, மாமா என்று அதி மரியாதையுடன் அவன் பிறரை விளிப்பது கூட கொஞ்சம் அதிகமாகவே தோன்றும்.  இப்படி தேவைக்கதிகமாக மற்றவர்களிடம் கெஞ்சலாகப் பேசும்போது, அவனுடைய உயரமே ஓரடி குறைந்துவிட்டாற்போல் தோன்றும்.

பல வருடங்களுக்கு முன்., ரத்னாகர் உப்பாவைக் கிண்டல் செய்ததுண்டு.  ஒருமுறை அவனுடைய சைக்கிள் பின்னால் ஒரு கயிற்றைக் கட்டி விட்டான்.  அசட்டு உப்பா அதை கவனிக்காமல் சைக்கிளை ஓட்டி கீழே விழுந்தபோது எல்லோரும் சிரித்த சிரிப்பிருக்கிறதே!

இடது தொடை இடுக்கை சதா சொறியும் வழக்கம் “சொறி உப்பா” என்ற பட்டப் பெயரை அவனுக்குப் பெற்றுத் தந்தது.  இரண்டு நொடிக்கொரு முறை அவன் கை தானாகவே தொடைக்குப் போய்விடும்.  சிர்ஸியில் ஒரு கடையில் வேலைக்குப் போனபோது, வாடிக்கையாளர்களுக்கு அவன் வேடிக்கைப் பொருளானான்.  “ம்… பருப்பு கொடுத்தேன்.  வேறென்னய்யா வேணும்?”  கேட்டுக் கொண்டிருக்கும்போதே கை சொறியத் தொடங்கிவிடும்.  “ஐயோ…. முதல்ல கையை எடு.  அப்புறம் சொல்றேன் என்ன வேணுமின்னு”  வாடிக்கையாளர் அலறுவார்.  அசடு வழிந்துகொண்டே கையை எடுப்பான்.  ஒரே நிமிடம்தான்,  கை புனிதப் பயணத்தைத் தொடங்கிவிடும்.  இதனால், அவனது கால்சட்டையின் இடதுகால் எப்போதும் கறைபடிந்து வெளுத்துக் கிடக்கும்.

உப்பா, சரோஜினியைப் பெண் பார்க்க வந்தது ஒரு ஞாயிற்றுக்கிழமையில்.  தந்தையும் மகனும் மட்டுமே வந்திருந்தனர்.  அவனிடம் இருந்ததிலேயே புதிய கால்சட்டையை அவன் அணிந்திருந்தான்.  ஆனால் அதிலும் இடது கால் நைந்து போயிருந்தது.  அவர்கள் வரப்போவது சரோஜினிக்கு முந்தைய நாள்தான் தெரிய வந்தது.  அவள் எதுவும் சொல்லவில்லை.  ரத்னாகரும் மும்பையிலிருந்து வந்திருந்தான்.  அவனும் அவளிடம் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் சரோஜினி முடிவு செய்துவிட்டாள்.  வருவது யாராயிருந்தாலும் மணம் முடித்து இந்த வீட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும்.  பிறகு கடவுள் விட்ட வழி.  உப்பாவின் தரம் வீட்டில் எல்லோருக்கும் தெரிந்தே இருந்தாலும் இந்த வரனை நிச்சயம் செய்வதென முடிவு செய்துவிட்டனர்.  ‘இனிமேல் நான் சொல்ல என்ன இருக்கு?’ என்று அவளுக்குத் தோன்றியது.

அவர்கள் வந்தபோது மணி நான்கு.  எப்படியும் இந்த இடத்தை முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து விட்டதால், பெண் பார்ப்பது வெறும் சம்பிரதாயத்திற்காகவே நிறைவேறியது.  அவர்கள் வீட்டில் இருந்த நேரம் முழுவதும் உப்பாவின் முகத்தில் இருந்த அசட்டுச் சிரிப்பு மாறவேயில்லை.  ரத்னாகர் உப்பாவிடம் அதுவரை பேசியிராத முறையில் பேசினான்.  ”அவனுக்காக இல்லைன்னாலும் என் தங்கை புருஷன்னு அவனை மதிக்க வேண்டியிருக்கு” என்று பின்னாளில் அவன் சொல்வதை சரோஜினி கேட்டிருக்கிறாள்.  யாரும் அதைத் தெளிவாகக் கூறவில்லையென்றாலும் சரோஜினிக்கு அன்று ஒரு விஷயம் தெளிவாகியது.  உயரம் உப்பாவின் ஒரே தகுதியாகவும் அதே உயரம் அவளது குறையாகவும் கருதப்பட்டது.  இஷ்னடராயரு சாய்வு நாற்காலி ஒன்றில் வசதியாக உட்கார்ந்து கொண்டு நாட்டின் சீரழியும் அரசியல் பற்றி முனைப்புடன் பேசிக்கொண்டிருந்தார்.  எதற்கு வந்திருக்கிறோம் என்பதையே அவர் மறந்துவிட்டதாகத் தோன்றியது. அவலக்கியும் டீயும் சாப்பிடும்போது உப்பா அவளை திருட்டுத்தனமாக அடிக்கடி பார்த்துக்கொண்டான்.  தனக்கு அடித்த அதிர்ஷ்டம் குறித்து வெளிப்படையாக மகிழ்ந்தான்.  இடைவிடாத அவனது சிரிப்பு சுற்றியிருந்தவர்களை சங்கடப்படுத்தியது. ஒருவிதமான இறுக்கம் பரவியது.  எல்லாம் சீக்கிரம் முடிந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.  இல்லாவிட்டால் இந்த வரன் கை நழுவிவிடுமோ என்ற பயமும் எல்லோருக்கும் தோன்றத் தொடங்கியது.  அதன் பிறகு ஒரு மாதத்திற்குள் எல்லாம் நடந்து முடிந்தன.  சரோஜினியின் திருமணம் முடிந்த ஆறுமாதத்தில் ரத்னாகரும், ஒரு வியாபாரியின் மகளான மாலதியை மணந்தான்.  அவர்கள் திருமணம் கும்தாவில் நடைபெற்றது.

4

சிர்ஸியில் உள்ள அவர்களது வீட்டிற்குச் சென்ற நாளில் சரோஜினி அரண்டு போனாள்.  விட்டலராயரின் பழைய வீடு ஆறு குடும்பங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது.  வீட்டின் பின்புறம் ஆறு சமையலறைகள் அடுத்தடுத்து கட்டப்பட்டிருந்தன.  பெரிய கொல்லைப்புறமாக இருந்தது ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு கூரை போடப்பட்டிருந்தது.  வீட்டிற்குள் படுக்கையறைகள் வெவ்வேறு இடத்தில் பரவிக் கிடந்தன.  பழைய இருளடைந்த அந்த வீட்டில் கண்ட நேரத்திலும் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொள்வது சகஜம்..

உப்பாவின் சமையலறையில் சரியாக நாலே பாத்திரங்கள் இருந்தன. இரண்டு தட்டுக்கள், கரி படிந்த ஸ்டவ், ஒரு கரிய பலகை.  வீட்டின் ஒரு கோடியில் இருந்த உப்பாவின் படுக்கையறையில் முற்றத்தை நோக்கித் திறக்கக் கூடிய ஒரு பெரிய ஜன்னல் மட்டுமே இருந்தது.  ஒரு திரை போடப்பட்டிருந்தாலும் கூட தனிமைக்கான இடமாக அது ஆகவில்லை.  முற்றத்தில் கடந்து போகும் யாரும் அறைக்குள் எட்டிப் பார்க்கலாம்.  வேண்டுமானால், திரையை விலக்கிக் கூட பார்க்கலாம்.  முதல் நாள் சரோஜினியால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  போதாக்குறைக்கு, குடித்தனக்காரர்கள் எல்லாம் உப்பாவின் மணப்பெண்ணைப் பார்க்கும் ஆவலில் ஏதோ ஒரு சாக்கை வைத்துக்கொண்டு ஜன்னலுக்கு வந்தனர்.  உப்பா முற்றத்திற்கு வந்தபோது நாசூக்கில்லாத ஒரு குடித்தனக்காரர், “என்ன உப்பா, அடிச்சுது யோகம்…” என்று கூவினார்.  “ஹி.ஹி…” என்று உப்பா வழிந்ததையும் அறைக்குள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்தாள் சரோஜினி.  யாராவது எட்டிப்பார்த்துவிடுவார்களோ என்று பயந்துகொண்டே, புடவையை மாற்றிக்கொள்ள சரியான நேரத்திற்காக பிற்பகல் நெடுநேரம் வரை காத்திருந்தாள்.  மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு வீடு அமைதியான பிறகு கதவைத் தாளிட்டுக் கொண்டு உள்ளதிலேயே இருட்டான மூலைக்குச் சென்று, ஜன்னலில் ஒரு கண் வைத்துக் கொண்டு, அவசர அவசரமாகக் கட்டி இருந்த புடவையைக் களைந்து, வேறொன்றை உடுத்திக் கொண்டாள்.  தலைப்பால் மறைத்துக் கொண்டு ரவிக்கையை மாற்றிக் கொண்டாள்.

பெயருக்குதான் அது அவர்களது இடம்.  கிட்டத்தட்ட நடுத்தெருவில் வசிப்பது போல்தான்.  இந்த வீட்டில் தன்னைப் பொருத்திக் கொள்வது சரோஜினிக்கு பெரும் பாடாக இருந்தது.  நான்கு சுவர்களுக்குள் எதுவும் நிற்பதில்லை. காதல் பேச்சோ, விவாதமோ, கொஞ்சம் குரல் உயர்ந்தாலும் எல்லாம் பொதுவில் வந்துவிடும்.  காலை டிஃபன் போன்ற உப்புப் பெறாத விஷயமானாலும் சரி, மிக அந்தரங்கமான அவளது மாத விலக்கானாலும் சரி, எதையும் மறைக்க முடியாது.  இது அவளுக்கு மட்டுமல்ல.  பிற குடும்பங்களின் அல்ப விஷயங்களும் பொதுவில் சிதறிக் கிடக்கும்.  என்ன ஆனாலும் தாய் வீட்டிற்குச் செல்வதில்லை என்ற அவளது முடிவுதான் எந்த இக்கட்டையும் தாண்டிச் செல்லும் தெம்பை அவளுக்கு அளித்தது.

ஆரம்பத்தில் சரோஜினியும் உப்பாவைத் திருத்த முயன்றாள்.  கடைக்கு வேலைக்குப் போகும்போது துவைத்த உடையை போட்டுக்கொண்டு போகவேண்டும் என்று அவனுக்குப் புரிய வைக்க அவளுக்கு ஒரு வாரமானது.  எப்படியும் அழுக்காகத்தானே போகிறது என்று அவன் முணுமுணுத்ததை அவள் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.  தினமும் சுத்தமாய் உடுக்க வைத்தாள்.  அவன் குளித்துவிட்டு வரும்போது, துவைத்த உடையுடன் அவள் காத்திருக்கவில்லையென்றால் பக்கத்தில் என்ன கிடக்கிறதோ அதை எடுத்து போட்டுக்கொண்டு போய்விடுவான்.  அவளுடன் வாய் வளர்க்க வேண்டாமென்று நினைத்தோ என்னவோ, ஏற்கனவே நரைத்துவிட்ட முடியை சீவிக்கொள்ள ஆரம்பித்துவிட்டான்.  “இப்படி ரொம்பப் பணிவா பேசறத நிறுத்துங்க.  குழந்தைங்களக் கூட ஐயா, எஜமான்னு கூப்பிடாதீங்க..” என்று சொல்லிப் பார்த்தாள்.  “அதனாலென்ன… நான் கூப்படறதனாலேயே அவங்க அப்படி ஆகிடப் போறாங்களா என்ன?” என்று கேட்பான்.  ”அவங்க அப்படி ஆகிறாங்களோ இல்லையோ, நம்மை ஏன் தாழ்த்திக்கணும்?” என்பாள் சரோஜினி.  “யாராவது பெரியவங்களா ஆனா, நாம எப்படி சின்னவங்களா மாறிடுவோம்?  இதிலெல்லாம் தலையிடாதே…” என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டுவான்.

இரவில், உப்பா நடுங்கிக் கொண்டே சரோஜினியைத் தொடுவான்.  அவளுக்கு அவன் மேல் எந்த மதிப்பும் இல்லாததால், காதலும் வரவில்லை.  அதைப் பெரிதாக்க விரும்பாததால், அவனைப் பொறுத்துக் கொள்ளக் கற்றுக்கொண்டாள்.  வெறி பிடித்த அசைவுகளுடனும் விநோத ஒலிகளுடனும் ஐந்து நிமிடங்களில் சோர்ந்து போவான் அவன்.  சரோஜினி எவ்வளவோ முயன்றும் அவன் மீது விருப்பம் ஏற்படவே இல்லை.   அவனது அதிகப்படியான இச்சையை அவள் சகித்துக்கொண்டாள்.  ஆனால் இத்தனை அழகான பெண்ணை அனுபவிக்கத் தனக்குத் தகுதியில்லை என்ற எண்ணத்தை உப்பாவால் கடக்க முடியவில்லை.  அக்குளடியில் இருந்த பெரிய மச்சம், வருடக்கணக்கில் சொறிந்து கருஞ்சிவப்பாய் மாறிப்போன இடது தொடையின் தோல், தொப்புளின் அசிங்கமான வீக்கம் – அவன் உடலில் இருந்த குறைகளை மறைக்கப் பெரும்பாடு பட்டான்.

எல்லாம் இருக்க, கல்யாணமாகி சில மாதங்களிலேயே சரோஜினி கருவுற்றபோது, உப்பாவுக்கும் குடும்பம் உண்டு என்பது மக்களுக்குத் தெளிவானது.  “பயலே தெளிவா வேலையை முடிச்சிட்டயே..” என்று பிறர் சீ்ண்டியபோதும் “ஹி ஹி” என்று அசடு வழிந்தான்.  வார நாட்களில் கடையில் இராப்பகலாகக் கடுமையாய் உழைத்தான்.  ஞாயிற்றுக் கிழமைகளில் ஓட்டலுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு ஒரு சினிமாவுக்குப் போவான்.  கல்யாணமாகியும் இது தொடர்ந்தது. முதல் முறை சரோஜினியைத் தன்னுடன் படம் பார்க்கக் கூப்பிட்டபோது, தான் சினிமா பார்ப்பதில்லை என்று சொல்லி மறுத்துவிட்டாள்.  பிறகு ஒருபோதும் அவளை உப்பா கேட்டதேயில்லை.  மசால்தோசையின் சீரக வாசனை அவன் மூச்சில் வரும்போது அவளுக்குத் தலைசுற்றுவது போலிருக்குமே ஒழிய, ஒரு முறை கூட அதை சாப்பிட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியதேயில்லை. அவனுக்காக அவள் ஒருபோதும் ஏங்கவில்லை.  இருவருக்குமிடையே இருந்த இடைவெளி அவளுக்கு வசதியாக இருந்தது.

5

சரோஜினிதான் மகனுக்கு சுதீர் என்று பெயர் வைத்தாள்.  இரவும் பகலும் அவளே அவனை கவனித்துக் கொண்டாள்.  அவன் எட்டாம் வகுப்பில் இருந்தபோது அவள் வரதாம்பா பிரஸ்ஸில் வேலைக்குச் சேர்ந்தாள்.  முதலில் பசை தடவுவது, ஃபாரம் மடிப்பது போன்ற எளிய வேலைகளைச் செய்தாள்.  சீக்கிரமே அச்சு கோப்பதைக் கற்றுக் கொண்டாள்.  மொழித் திறனும் புத்திசாலித்தனமும் இருந்ததால், தவறில்லாமல் அச்சுகோக்கலானாள்.  ஒரு புதிய வாழ்க்கை அவள் முன் விரிந்தது.  சொற்களின் உலகம், பல வருடங்களுக்குப் பிறகு அவள் வாழ்வில் ஒரு புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியது.

தொடக்கத்தில் எழுத்துக்கள் அவளைத் தலை கீழாக அலைக்கழித்தன.  பின்னர் எழுத்தச்சுக்களை தேடிச் சேர்ப்பதில் அவள் பேரின்பம் கொண்டாள்.  மெதுவாகச் செய்தாலும், தவறில்லாமல் செய்தாள்.  வரதாம்பா பிரஸ்ஸில் அச்சிடப்பட்ட ஓரிரு மாவட்டச் செய்தித்தாள்கள் சரோஜினிதான் தங்களுக்கு அச்சுக் கோக்க வேண்டும் என்று வற்புறுத்தின.  சரோஜினிக்கு இப்போது தன் வாழ்வின் மீது தனக்கு ஏதோ அதிகாரம் இருப்பதாகத் தோன்றியது.  இடைவிடாமல் அச்சுக் கோர்ப்பதால் அவளது விரல்கள் சொரசொரப்பாகின.  ஆனாலும், சுதீர் அந்தக் கைகளை ஆசையுடன் பிடித்துக்கொண்டு முகத்தில் தேய்த்துக் கொள்வான்.  அவளது விரல் நுனி வெடிப்புகளில் கருப்பு மை புகுந்துகொண்டு கறை போக மறுத்தது.  புதிய தாள், மை, பசை ஆகியவற்றின் கலவையாய் வரும் பிரஸ்ஸின் வாசனை அவள் துணிகளிலும் உடம்பிலும் ஒட்டிக்கொண்டது.

ஒரு ஞாயிறு மதியம், சாப்பிட்ட பிறகு வழக்கமாய் போகும் சினிமாவுக்குப் போகாமல் வீட்டில் உட்கார்ந்துகொண்டு கொஞ்சம் ரூபாய் நோட்டுக்களை வைத்து எண்ணிக் கொண்டிருந்தான் உப்பா.  இதைப் பார்த்த சரோஜினிக்கு ஏனோ பற்றிக்கொண்டு வந்தது.  சுதீரின் படிப்பைப் பற்றிய கவலையோ என்னவோ!  “உங்க சம்பளத்தை கூட்டச் சொல்லி கடை முதலாளியிடம் கேக்க மாட்டீங்களா?  இப்போ வர சம்பளத்தை வச்சிகிட்டு சுதீரை காலேஜுக்கு எப்படி அனுப்பறது?  அதே பாழாப்போன கடைக்குதான் வேலைக்கு அனுப்பணும்.  இவ்வளவு குறைவான வருமானத்தில எந்தக் குடும்பத்தையும் நடத்த முடியாது.  இவ்வளவு வருஷமாச்சு, நம்மகிட்ட ஒரு ரெண்டாயிரம் ரூபா கூட கிடையாது…” என்று முழங்கினாள்.  அவனுக்கு அது ஒன்றும் புதிதில்லை.  ஒரு நூறு முறையாவது சரோஜினி இதை சொல்லியிருப்பாள்.  ஒவ்வொரு முறையும் அவன் எரிச்சலடைந்திருக்கிறான்.  அந்தக் கணங்களில் கூட “உன்னை… உன்னை..” என்று திக்குவதைத் தவிர வேறெதுவும் அவன் சொன்னதில்லை.  “பாழாப்போன கடை” என்று சரோஜினி சொன்ன கணம் அவனுக்குள் ஏதோ வெடித்தது.

ஆனால் அவன் இன்று அமைதியாக இருந்தான்.  ”நான் ஒரு சைடு பிசினஸ் ஆரம்பிச்சிருக்கேன்.  பொறுமையா இரு…” என்றான்.  அவனது கிறுக்குத்தனங்களையே பார்த்து வந்த சரோஜினி, “அந்த அளவுக்கு உங்களுக்கு தைரியம் இருந்தால், நான் ஏன் பிரஸ்ஸுக்குப் போய் கஷ்டப்படணும்?” என்றாள்.

பணத்தை எண்ணி அவள் கையில் கொடுத்துவிட்டு “ஆயிரம் ரூபாய் இருக்கு.  பத்திரமா வை..” என்று தாழ்ந்த குரலில் சொன்னான்.  சரோஜினிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.  அவள் இதை எதிர்பார்க்கவில்லை.  எல்லாம் நூறு ரூபாய் நோட்டுக்கள்.  அவளால் தன் கைகளை அசைக்க முடியவில்லை.  “எங்கேயிருந்து வந்தது இந்தப் பணம்?” மிகுந்த சிரமத்திற்குப் பின் கேட்டாள்.

”என்ன நினைச்சிட்டிருக்கே?  இதை நான் எப்பவோ செஞ்சிருப்பேன்.  வேண்டாம்னு இருந்திட்டேன்.  நல்லபடியா நடந்தா கடை வேலையை விட்டுடுவேன்..  நீயும் உன்னுடைய பாழாப் போன வேலையை விட்டுடு.  அந்தப் பக்கமே போக வேணாம்” என்றான்.  பணத்தை அவள் கையில் திணித்துவிட்டு, தோளைக் குலுக்கிக் கொண்டு வெளியேறினான்.  அவன் வெளியேறிய விதம், அக்கணத்தில் அவன் நடந்துகொண்டது, “உன்னோட பாழாப்போன பிரஸ் வேலை” என்று அவன் சொன்னது எல்லாம் அவள் மனதில் ஆழமாகப் பதிந்தன.  அந்தப் பணத்தை ஒரு பழுப்பு கவரில் போட்டு அவளது புடவைகளின் இடையில் வைக்கும்போது பதட்டமாய் உணர்ந்தாள். பயத்தில் கைகள் நடுங்க வேகமாக டிரங்குப்பெட்டியைப் பூட்டினாள்.

அன்று பிற்பகல் போன உப்பா திரும்பவேயில்லை. ‘சைடு பிசினஸ்’ விஷயமாக எங்காவது போயிருப்பான் என்று பதினோரு மணி வரை காத்திருந்தாள் சரோஜினி.  பின்னர், புளிச்சகாய்ப் பச்சடி சாப்பிடும்போது அவன் நினைவு திரும்பத் திரும்ப வந்தது.  நள்ளிரவில் அவளுக்கு விழிப்பு வந்தது.  உப்பா வந்திருக்கவில்லை.  மறு நாள் காலையிலும் வரவில்லை.  எங்கே போனாலும், தூங்குவதற்கு வீடு திரும்பிவிடுவான் அவன்.  ஒரு நாள் ஆகியும் உப்பா வருவதற்கான அறிகுறியே இல்லை.   சரோஜினிக்கு பயம் பிடித்துக்கொண்டது.  அன்றிரவு கடை முதலாளியின் வேலைக்காரனும் வந்து உப்பாவைத் தேடிவிட்டுப் போனான்.  சரோஜினிக்கு ஒவ்வொருவரும் ஒரு ஆலோசனை சொன்னார்கள்.  அதற்கடுத்த நாள் அவள் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனாள்.

அதன் பின்னர், பல வகையிலும் வதந்தி பரவ ஆரம்பித்தது.  ஆனால், உப்பாவைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை.  மரக்கடத்தல்காரர்களால் அவன் கொல்லப்பட்டுவிட்டான்; காட்டில், வனத்துறை அதிகாரி என்று நினைத்து அவனைக் கொன்றுவிட்டதாக ஒரு செய்தி வந்தது.  மரக்கட்டைகளைக் கட்டியிருந்த கயிறு பிரிந்து அவன் மீது கட்டைகள் விழுந்து இறந்துவிட்டதாக இன்னொரு கதை கிளம்பியது.  அவன் தனது கூட்டத்தோடு தண்டேலியை நோக்கித் தப்பியோடியபோது வனக்காவலர்கள் துரத்தி வந்ததாக இன்னொரு தரப்பு.  இந்தத் தகவல்களையெல்லாம் போலீசார் எவ்வளவு தூரம் கணக்கிலெடுத்துக் கொண்டார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.  பலரும் உப்பா வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டதாகவே நினைத்தனர்.  போதாக்குறைக்கு, குடிகாரன் சாதுவுடன் அவன் போட்ட சண்டை காட்டுத்தீயாய் பரவியது.  சாது உப்பாவுக்கு தூரத்து சொந்தம்.  உப்பா வீட்டைவிட்டுப் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் சாது அவன் கடைக்கு வந்து பணம் கேட்டபோது, உப்பா தன்னிடம் ஏதுமில்லை என்றான்.  “உன் பெண்டாட்டியும் வேலைக்குப் போறப்ப உனக்கு என்ன கஷ்டம்?”, சாது விடவில்லை.  குடி போதையில் அவன் எவ்வளவு வற்புறுத்தியும் உப்பா வளைந்து கொடுக்கவில்லை.  ஆத்திரமடைந்த சாது, “நீ இப்போ பணம் கொடுக்கலைன்னா ஊர் முழுக்க போய் பிரெஸ்ஸில அந்தக் கிழட்டுப்பய லக்‌ஷ்மிநாராயணா உன் பொண்டாட்டிய குஜாலா ‘பிரெஸ்’ பண்ணிட்டிருக்கான்னு சொல்லுவேன்…  பிரெஸ்… பிரெஸ்..  பாம் பாம்….. நீ இங்க நின்னுகிட்டு தொடையிடுக்க சொறிஞ்சுகிட்டிருக்கன்னு சொல்லுவேன்” என்று உப்பாவை கேலி செய்தான்.  உப்பா அவனைத் துரத்த, விரல்களை மூடித் திறந்து ஹார்ன் அடிப்பதைப் போல சைகை செய்துகொண்டு ‘பாம் பாம்’ என்று கத்திக்கொண்டே ஓடிப்போனான் சாது.

உப்பா வீட்டை விட்டுச் சென்ற பின், சரோஜினி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவனைப்பற்றி நினைக்கலானாள்.  யோசிக்க யோசிக்க, அவன் புதிராகிக் கொண்டே இருந்தான்.  ’சாது சொன்னதை அப்படியே நம்பிவிட்டாரா?  அவர் செய்த ’சைடு பிசினஸ்’ என்னவாக இருந்திருக்கும்?  அந்த ஆயிரம் ரூபாய் அவருக்கு எங்கிருந்து கிடைத்திருக்கும்?  எல்லோரும் சொன்னதைப்போல கடத்தலில் இறங்கிவிட்டாரா?  நான்தான் அவரை அதில் இறங்கச் செய்தேனோ?  அவர் வீட்டைவிட்டுப் போய்விடக்கூடும் என எனக்கு ஏன் தோன்றாமலே போனது?   கண நேரத்தில் அந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.  அப்படித் தோன்றிய கணத்தில் தெருவில் வந்த பஸ்ஸிலோ லாரியிலோ ஏறிப் போயிருக்க வேண்டும்.’  அவனிருந்தபோதே அவனது அன்றாட வேலைகள் சரோஜினியையும் சுதீரையும் சார்ந்து இருந்ததில்லை.  அதனால், அவன் விட்டுச் சென்ற பிறகு தாய்க்கும் மகனுக்கும் தினசரி வாழ்க்கையில் எந்த மாற்றமும் இருக்கவில்லை.  சுருட்டி வைக்கப்பட்டிருந்த அவனது படுக்கை பல நாட்கள் அப்படியே கிடந்தது.  கடைசியில் ஒரு நாள் சரோஜினி அதை எடுத்து அலமாரியில் வைத்தாள்.  அவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.

6 

சுதீர் மும்பையில் ஒரு வேலையில் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆன பிறகு ஒரு நாள் ரத்னாகரும் அவள் மனைவியும் சரோஜினியின் வீட்டிற்கு வந்தார்கள்.  தங்கள் பெண்ணை சுதீருக்குக் கல்யாணம் செய்துகொடுக்க ஆசைப்படுவதாகச் சொன்னார்கள்.  போன முறை சுதீர் ரத்னாகர் மாமாவைப் பற்றிப் பேசும்போது அவன் குரலில் வழக்கமாக இல்லாத ஒரு பரபரப்பை சரோஜினி கவனித்திருந்தாள்.  அவள் அவனைப்பற்றி நல்லதாக ஏதாவது ஒன்று சொன்னால், மகன் புதிதாக இரண்டைச் சேர்த்தான்.  அவர்களது வீட்டிற்கு அவன் அடிக்கடி போய் வந்தான் என்பது நன்றாகத் தெரிந்தது..  கல்யாணமாகாத பெண்களிருக்கும் வீட்டிற்குப் போய் வருவது காரணமில்லாமல் நடக்காது என்று அவளுக்குத் தெரியாதா என்ன?  இது சரோஜினிக்குத் தெரி்ந்தே இருந்ததால் அவள் பதிலேதும் சொல்லவில்லை.   ”நான் சுதீரைக் கேக்கணும்” என்று சொல்லிப் பேசாமல் இருந்துவிட்டாள்.  இதைக் கேட்டு கணவனும் மனைவியும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டது கூட சரோஜினிக்குக் கேட்டது.

அடுத்த 15 நாட்களில், வினாயக சதுர்த்தியை சாக்காக வைத்துக் கொண்டு சுதீர் வீட்டிற்கு வந்தான்.  “அந்தப் பெண்ணுக்கு உன் மேல எவ்வளவு மதிப்புன்னு எனக்குத் தெரியாது.  நீதான் அதை முடிவு செய்யணும்.  நீ இங்க வளர்ந்தவன், அவ அங்க வளர்ந்தவ…  நீ அதை மறந்துடக்கூடாது”  சரோஜினி சொன்னது இது மட்டுமே.

சரோஜினி அப்படி சொன்னதற்குக் காரணம் இருந்தது.  கெளசல்யா ஒரு திமிர்பிடித்த பெண்ணாக அவளுக்குத் தோன்றினாள்.  பல வருடங்களுக்கு முன், ரத்னாகரும் அவன் குடும்பமும் சிர்ஸியில் அவர்களது வீட்டில் ஒரு இரவு தங்கினார்கள்.  இதற்கு முன் வந்தேயிராத தன் அண்ணன் தங்களோடு தங்கப் போகிறான் என்பதில் சரோஜினிக்குப் பேரானந்தம்.  அப்போது கெளசல்யாவிற்கு 12 வயது.  வீட்டில் ஏதோ ஒரு வாடை அடிக்கிறது என்று சொல்லி அந்த வீட்டில் தங்க மாட்டேன் என்று ஒரேயடியாகப் பிடிவாதம் பிடித்தாள்.  ரத்னாகரும் மாலதியும் அவள் வாயை அடைக்க என்னென்னவோ செய்து பார்த்தனர்.  அவள் குரல் மேலும் ஓங்கியது.  “இது நம்ம மும்பை மாதிரியில்ல”, கெளசல்யாவின் பெற்றோர் அவளை சமாதானப்படுத்தியதை சரோஜினி கேட்டுக் கொண்டிருந்தாள்.  அவள் மூக்கைத் தூக்கிக் கொண்டு மோப்பம் பிடித்துக் கொண்டே சுற்றிச் சுற்றி வந்தது சரோஜினியின் மனதில் பதிந்துவிட்டது.

அவர்கள் சாப்பிட உட்கார்ந்தபோது, தட்டுக்களும் டம்ளர்களும் வெவ்வேறு அளவில் இருந்ததைப்பார்த்து கெளசல்யா தன் அம்மாவின் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.  மூன்றே மூன்று தட்டுக்களும் டம்ளர்களும் இருந்ததால், வந்தவர்கள் சாப்பிட்ட பிறகு சுதீர் அவன் அம்மாவுடன் சேர்ந்து சாப்பிட்டான்.  தங்கள் வாழ்க்கையை கெளசல்யா வெறுக்கிறாளோ என்ற சந்தேகம் சரோஜினியை அரித்துக் கொண்டிருந்தது.  இரவில், உப்பாவின் படுக்கையை இறக்கி, அறையில் அவர்களுக்குப் படுக்கை விரித்துத் தந்தாள்.  சுதீரும் சரோஜினியும் முற்றத்தில் ஒரு பாயை விரித்துப் படுத்துக்கொண்டனர்.  இருந்ததிலேயே நல்ல விரிப்பையும் தலையணையையும் கெளசல்யாவுக்குக் கொடுத்து அவளை மகிழ்விக்க முயன்றாள் சரோஜினி.

மறுநாள் காலையில் 9 மணி பஸ்ஸில் அவர்கள் கும்தாவிற்குப் போக வேண்டியிருந்தது.  விழித்ததுமே, கெளசல்யாவின் அடம் ஆரம்பித்தது.  “இந்த டாய்லெட்டுக்கு நான் போகமாட்டேன்… ஊவே …ஊவே” என அழத்தொடங்கினாள்.  ”பாத்ரூம் கதவை மூடவே முடியல, தாப்பாளே இல்ல”, என்று குளிக்காமல் ஓடி வந்தாள்.  ”இங்க யாரும் வர மாட்டாங்க, பாதி மூடியிருக்கிற கதவை யாரும் திறக்க மாட்டாங்க..” அவர்கள் அவளை சமாதானப்படுத்த முயல, அவளது அடம் அதிகமானது.  ஒரு வழியாக, அவளை இணங்க வைத்தனர்.

அவர்களை வழியனுப்ப சரோஜினி பஸ் ஸ்டாண்டுக்குச் சென்றிருந்தாள்.  சிர்ஸிதான் பஸ் புறப்படும் இடம் என்று தெரிந்து முந்தைய நாளே மூன்று டிக்கட்டுகள் பதிவு செய்திருந்தான் ரத்னாகர்.  பேருந்தில் அவர்கள் ஏறியபோது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் ஏற்கனவே யாரோ உட்கார்ந்திருந்தனர்.  “பஸ் காலியாதானே இருக்கு.  ரிசர்வேஷன் எதுக்கு?  உங்களுக்கு எங்கே வேணுமோ உக்காருங்க” என்றனர்.  ரத்னாகர் அங்கும் இங்கும் பார்த்தான்.  என்ன சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை.  “இந்த ஊர் ஜனங்களே இப்படித்தான்” மாலதி முணுமுணுத்தாள்.  இதைக் கேட்டவுடன் சரோஜினிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.  தன் கோபத்தை அவர்கள் மீது காட்டினாள்.  இடத்தைப் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் அவளது கோபத்தைப் பார்த்து அரண்டு போய் வேகமாக பின்பக்க இருக்கைகளுக்குப் போனார்கள்.  பச்சைவண்ண இருக்கையில் பெருக்கல் குறி போட்டிருப்பதைக் காட்டி, “இதைப் பாருங்க…  ரிசர்வேஷனுக்கு இப்படிதான் குறிச்சிருப்பாங்க… உக்காரும் முன்னால பாக்க மாட்டீங்களா…?” சரோஜினி விளக்க முற்பட்டாள்.  சரோஜினியின் கோபத்தைப் பார்த்து மாலதி நடுங்கிப்போனாள்.  இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, சரோஜினி பார்ப்பதற்கு சூதுவாதில்லாதவளாகத் தெரிந்தாலும் அப்படிப்பட்டவளல்ல என்ற முடிவுக்கு வந்தாள் மாலதி.

பேருந்து கிளம்பிய பின் பிரஸ்ஸை நோக்கி நடக்கும்போது, சரோஜினிக்கு தான் தவறு செய்துவிட்டதாகத் தோன்றியது.  யாரும் உப்பாவின் பெயரைக்கூட சொல்லவில்லை.  தான் சுதீரின் அறிவைப் புகழ்ந்தது, அவன் படிப்பில் எவ்வளவு கெட்டிக்காரன் என்று சொன்னது, அவனது மதிப்பெண் பட்டியல், அவனது கையெழுத்து இதையெல்லாம் காண்பித்தது… சரோஜினிக்கு தான் எல்லாவற்றையும் அளவுக்கதிகமாகச் செய்துவிட்டதாகத் தோன்றியது.  அப்படி எல்லை மீறி நடந்துகொண்டதனால் தனது தரம் தாழ்ந்து போனதாகத் தோன்றியது.

அவளுடன் தங்கியிருந்த ஒரு நாளில் கெளசல்யா அவளது அறியாமையுடனும் ஆண்பிள்ளைத்தனத்துடனும் “எங்க அப்பா மாதிரி நானும் உயரமா வளர்வேன்” என்று அறிவித்தாள்.  இதைக் கேட்ட சரோஜினிக்கு கெளரக்காவின் நினைவு வந்தது. 

7 

சுதீருக்குத் திருமணமாகி எட்டு வருடங்களுக்குப் பிறகு சரோஜினி மும்பைக்கு வந்தாள்.  அவள் வயிற்றில் ஒரு கட்டி வளர்ந்து தாங்க முடியாமல் வலிக்கத் தொடங்கியது.  கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்யவேண்டுமென டாக்டர் சொல்லிவிட்டதால் மும்பைக்கு வர வேண்டியதாயிற்று. ஓரிரு நாட்களுக்காக வந்தவள் அங்கேயே தங்க வேண்டியதாயிற்று.  அவள் திரும்பிச் சென்று தனியாக வசிப்பது இனி நடக்காது என்று கறாராகச் சொல்லிவிட்டான் சுதீர்.  தான் திரும்பிப்போக சரியான காரணம் ஒன்று கண்டிப்பாக உருவாகும் என்றும் தான் யாரையும் சார்ந்து வாழ வேண்டியிருக்காது என்றும் சரோஜினியின் உள்ளுணர்வு சொன்னது.

சரோஜினி ஒரு சிறிய டிரங்குப் பெட்டியுடன் மும்பையில் வந்திறங்கினாள்.  படுக்கையைத் தவிர, அவளிடமிருந்த எல்லாப் பொருள்களும் அந்தப் பெட்டிக்குள் அடங்கிவிட்டன.  சுதீரின் வீடு மூன்று படுக்கையறைகளுடன் அவ்வளவு பெரிதாக இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.  அவர்கள் சேர்த்திருந்த பொருட்களைப் பார்த்து பிரமித்துப் போனாள்.  சமையலறையில் பலவிதமான பாத்திரங்கள், கிண்ணங்கள், தட்டுக்கள், கரண்டிகள், டின்னர் செட்டுகள், இன்னும் பிற இருந்தன.  அலமாரியின் மேல் தட்டில் திறக்காத பெட்டிகளில் பாத்திரங்கள் நிரம்பியிருந்தன.  இன்னும் பயன்படுத்தப்படாத பாத்திரங்கள் யாரோ முக்கியமான விருந்தினரின் வருகைக்காகக் காத்திருந்தாற்போல் தோன்றியது.  வரவேற்பறையில் சோஃபா, டிவி, நாற்காலிகள், கண்ணாடி மேசைகள் எல்லாம் இருந்தன.  வீட்டில் ஒவ்வொருவருக்கும் மூன்று அல்லது நான்கு ஜோடி செருப்புகள் இருந்தன.  சட்டைகள் சுதீரின் அலமாரியில் அடுக்கப்பட்டிருந்தன. கெளசல்யாவிடம் இரண்டு துணி அலமாரிகள் நிறைய புடவைகளும் சல்வார்களும் இருந்தன.  வீடு முழுவதும் பொருட்கள் இறைந்து கிடந்தன.  இவை போதாதென்று, மூன்று பெரிய பெட்டிகள் முழுக்க அர்ஜுனுடைய விளையாட்டுப் பொருட்கள்.  தங்களிடம் எல்லாமே அளவுக்கதிகமாக இருப்பதாக யாருமே உணராததுதான் சரோஜினிக்குப் பெரும் ஆச்சரியமாக இருந்தது.

ரத்னாகரோ மாலதியோ வரும்போது தங்கள் பேரனுக்காக ஒரு பெட்டி நிறைய சாக்கலேட்டுகள் வாங்காமல் வருவதில்லை.  அந்த ஒரு குழந்தைக்காக, பத்து குழந்தைகளுக்குப் போதுமான அளவு ஐஸ்கிரீம் வாங்கி வருவார்கள்.   ஃப்ரிட்ஜ் நிறைய உணவுப்பொருட்கள் நாளாக ஆக சத்தின்றிப் போய் கடைசியில் வேலைக்காரி லக்ஷ்மிபாயைப் போய்ச் சேரும்.  ரத்னாகர் எப்போது வந்தாலும் பேசும் ஒரே விஷயம் சுதீர் வகிக்கும் உயர்ந்த பதவியைப் பற்றி மட்டுமே.  ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தாலும், சுதீருக்கு நிறைய பொறுப்புகள் இருப்பது பற்றியும் அவனுக்கு எதற்குமே நேரமில்லாதது பற்றியும் தன் தங்கையிடம் விளக்கத் தொடங்கிவிடுவான்.  அவனுக்கிருக்கும் வேலைகளைப் பார்க்கும்போது அவன் ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டில் இருப்பதே நம் அதிர்ஷ்டம் என்பான்.  இதைக் கேட்டதும் சரோஜினிக்கு சுதீர் பத்தாம் வகுப்பில் இருந்தபோது விடியற்காலையில் எழுந்து படித்தது நினைவுக்கு வரும்.  அவளும் அவனுடனேயே எழுந்துவிடுவாள். அந்த வருடம் சங்கராந்தியை ஒட்டி மாதம் முழுக்க விடிகாலையில் எழுந்து கரி அடுப்பின் முன் உட்கார்ந்து சர்க்கரை அச்சும் எள்ளுப் பணியாரமும் செய்து கொண்டிருப்பாள்.  குளிருக்கு இதமாக அடுப்பின் பக்கத்தில் உட்கார்ந்து அவனும் படித்துக் கொண்டிருப்பான்.  அந்த டிசம்பர் மாதப் பனிக்காலம், சூரியனின் முதற் கிரணங்கள், கரி அடுப்பின் இதமான வெப்பம், எள்ளைப் புடைக்கும்போது எழுந்த சர்….சர்…. ஓசை, அவன் புத்தகப் பக்கங்களைத் திருப்பும் ஓசை… எல்லாம் நேற்று நடந்ததைப் போல் அவள் நினைவில் தங்கிப்போயின.  ”நீ நல்லாப் படிச்சு முன்னுக்கு வரணும்”  “படிச்சு பெரியாளாகணும்” என்று ஏதாவது சொல்லுவாள்.  இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று சரோஜினிக்கு அப்போது தெரியாது.  “இன்னாரைப் போல இருக்கணும்” என்று சுட்டுவதற்கு உதாரண புருஷர்கள் யாரையும் அவள் அறிந்திருக்கவில்லை.  அவள் சொன்னது பணம் சம்பாதிப்பதையா?  நல்ல வேலை தேடிக் கொள்வதையா?  பிறருக்கு உதவக் கூடிய வகையிலான ஒரு பதவியில் இருப்பதையா?  “பெரிய ஆளாவது” என்றால் என்ன? ”வாழ்க்கையில் முன்னுக்கு வருவது” என்று எதைக் குறிக்கிறோம்?  சரோஜினிக்குள் இந்தக் கேள்விகள் எழுகையில், தேவையில்லாமல் தான் உப்பாவைத் தொந்திரவு செய்துவிட்டதாகத் தோன்றும்.  அவளே அறியாத ஒன்றை அவன் தேடிச் செல்லும்படி செய்துவிட்டாள்.  உப்பா வீட்டை விட்டுச் சென்றதற்கு இதுதான் காரணம் என்று அவள் அடிமனதில் உறுத்திக் கொண்டே இருந்தது.  திடீரென்று, இந்நாள் வரை இல்லாத ஒரு குற்றவுணர்ச்சி தன்னுள் எழுவதை உணர்ந்து வேதனைப்பட்டாள்.

ஒரு முறை ஷிரூரில் நடந்த திருமணம் ஒன்றிற்கு அவள் சென்றிருந்தாள்.  சாப்பாட்டுப் பந்தியில் அவளெதிரில் உட்கார்ந்திருந்தவள், இவள் உப்பாவின் மனைவி என்று கண்டு கொண்டதும், “இப்போ அவன் எப்படி இருக்கான்?  வீட்டு ஆம்பிள்ளை எதுக்கும் லாயக்கில்லைன்னா பொம்பிளை கதியைப் பாரு” என்றாள்.  சரோஜினிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.  ”ஆமா… என் புருஷன் லாயக்கில்லைதான். உன் புருஷன் எதுக்கு லாயக்கு?  உன் புருஷன் வேலைக்குப் போறாரு, சம்பாதிக்கிறாரு, குழந்தை பெத்தாரு… என் புருஷனும்தான் இதெல்லாம் செய்யிறாரு.  உன் புருஷன் நிறைய பணம் சம்பாதிச்சிருக்கலாம்.  எல்லாம் கரியாப் போக” என்று சரியான பதிலடி கொடுத்தாள்.  அதற்கு அவள், “இஷ்னடராயரு சரியான மருமகளதான் பிடிச்சிருக்காரு.  அவரு நெருப்புன்னா, இவ காட்டுத் தீயால்ல இருக்கா” என்று சரோஜினி காதுபடக் கூறினாள்.  தன் கணவனை விட்டுக் கொடுக்காமல் சரோஜினி பேசியது அந்த ஒரு முறை மட்டுமே.  பழையதெல்லாம் இப்போது நினைவுக்கு வரும்போது, சரோஜினிக்குத் தன் புருஷன் ஒன்றும் அவ்வளவு மோசமில்லை என்று தோன்றத் தொடங்கியது.  குறைவாக சம்பாதிப்பது அத்தனை பெரிய குற்றமா?  பல ஆண்களை விட அவன் மதிக்கத் தக்கவனாகத் தோன்றத் தொடங்கினான்.

கெளசல்யா தன் மாமியாரை தந்திரமாகக் கையாண்டாள்.  தங்களிருவருக்கிடையே ஒரு போதும் பூசல் வராமல் பார்த்துக்கொண்டாள்.  சில சமயங்களில், தன்னைப் போலவே உயரமான கெளசல்யாவிடம் சரோஜினிக்கு ஒரு தனி பாசம் தோன்றும்.  அப்போதெல்லாம், தான் உயரமாக இருந்ததால் பட்ட கஷ்டங்களை எல்லாம் அவளிடம் கொட்டத் தோன்றும்.  நீண்ட கால்களைப் பெருமையுடன் காட்டிக்கொண்டு உயரமான பெண்கள் டிவியில் தோன்றும்போது, உயரம் அழகின் அடையாளமாகக் கருதப்படும் இந்த நாட்களில் தான் பிறந்திருக்கக் கூடாதா என்று சரோஜினிக்குத் தோன்றும்.  இம்மாதிரி தருணங்களில்தான், காலம் மாறிவிட்டது நன்மைக்கே என நினைப்பாள்.

கெளசல்யாவின் மனதில் இருந்த சரோஜினியின் பிம்பம், அவளது அம்மாவால் அவளுக்காக உருவாக்கப்பட்டது.  ஆனாலும், சரோஜினியிடம் பிடிக்காதது எத்தனை இருந்தாலும், “அவ எவ்வளவு அழகாயிருப்பா தெரியுமா…” என்று சொல்ல மறக்கமாட்டாள்.  இதுபோன்ற பேச்சுக்கள் சரோஜினியின் துரதிருஷ்டத்தைப் பெரிதாக்கிக் காட்டின.  உப்பாவை எவ்வளவு மோசமானவனாக வர்ணிக்கிறார்களோ, பேச்சு அவ்வளவு சுவாரசியமானதாக ஆகும்.  ஒரு நாள், இப்படி அவர்கள் பேசிக்கொண்டிருந்தது ரத்னாகர் காதில் விழுந்தபோது, அவனும் தன் பங்குக்கு சைக்கிள் கதையை சொல்லி உப்பாவை மட்டம் தட்டத் தவறவில்லை.

கெளசல்யா, அவர்களது சிர்ஸி வீட்டிற்குச் சென்றதை மறந்திருக்கவில்லை.  அதனாலேயே, அவள் மாமியாரிடம் ஜாக்கிரதையாக நடந்து கொண்டாள்.  எப்போதும் கொஞ்சம் விலகியிருப்பதே நல்லதெனப் புரிந்துகொண்டாள்.  ஆனால், சரோஜினி எதிலும் கலந்துகொள்ளாமல் இருக்கும்போது கெளசல்யாவிற்கு சங்கடமாக இருந்தது.  எப்படியோ, தெளிவாகத் தெரியவில்லையென்றாலும், கடைசியில் என்றாவது நிகழக்கூடிய மோதலுக்குத் தன்னை அமைதியாகத் தயார் செய்துகொண்டிருந்தாள் கெளசல்யா.  அவளால் இந்த உணர்வுகளை சுதீரிடம் பகிர்ந்துகொள்ள முடிந்ததேயில்லை.

சுதீரின் குடும்ப வாழ்க்கையைப் பார்த்தபோது சரோஜினிக்கு உப்பாவின் நினைவுதான் வந்தது.  உப்பா ஒரு கடையில் வேலை செய்தார், சுதீர் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறான்.  இதில் அவளுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.  அவனும் தன் வேலையில் முனைப்பாக இருந்தாலும், வேறெந்தப் பொறுப்பையும் எடுத்துக் கொள்ளவில்லை.  அவ்வப்போது கணவனும் மனைவியுமாகக் கடைகளுக்குச் சென்று துணிமணிகளும் வீட்டுக்கான பொருட்களும் வாங்கி வருவார்கள்.  ஒரு நாள் அவர்கள் ’ம்யூசிக் சிஸ்டம்’ ஒன்றை வாங்கி வந்தபோது, “ஏற்கனவே இருக்கறதிலேயே நீங்க பாட்டுக் கேட்டு நான் பார்த்ததில்ல. இன்னும் ஒண்ணு எதுக்கு வாங்கினீங்க?” அவளால் கேட்காமல் இருக்க முடியவில்லை.  “அது பழசும்மா.  டிராயிங் ரூமுக்கு அது.  இது எங்க ரூமுக்கு… பாட்டு கேக்கணும்னு எங்களுக்குத் தோணினா ரூமிலேயே கேக்கலாமில்லையா…” சுதீர் விளக்கினான்.

நாளாக ஆக, இம்மாதிரி தேவையில்லாதவற்றை வாங்கிக் குவிப்பதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியாமல் போனது.  இடம் பற்றிய உணர்வே இல்லாமல் கண்ட பொருட்களுடன் வீடே அடைசலாகிப் போனது.  தனக்குத் தோன்றுவதை எப்படி வெளிப்படுத்துவது என்பது கூட அவளுக்குத் தெரியவில்லை.  வார்த்தைகளால் யாருடைய குணத்தையும் மாற்ற முடியாதென்பதை சரோஜினி நன்கறிவாள்.  ஆனாலும், ’ஒண்ணு தேவைன்னா ரெண்டு வாங்காதே… தேவையில்லாத பொருளை வாங்காதே… தேவைக்கு மேல பொருள் வாங்கறது அருவருப்பானது…’ பல விதங்களில் சொல்லிப் பார்த்தாள்.  எப்படிச் சொன்னாலும் அது வீட்டின் அமைதியைக் குலைப்பதாயிருந்தது.  ஏதோ ஒரு வகையில் அது மருமகளைக் குறை கூறுவதாக எடுத்துக்கொள்ளப்பட்டது.  ஒவ்வொரு நாளும் நான்கு வகைப் பதார்த்தங்களுடன் சாப்பிடுவதை சரோஜினியால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.  எவ்வளவு சமைத்து வைத்திருந்தாலும், ஒரு கறியும் ரசமும் சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்வாள். ஒருமுறை ஒன்றாக சாப்பிட உட்கார்ந்தபோது, “நீ உலகத்தையே துறந்துட்ட மாதிரி நடந்துக்கறம்மா” என்றான் சுதீர்.  “என் காலம் முழுக்க நான் இப்படித்தான் இருந்திருக்கேன்.  எதைத் துறவுன்னு சொல்றே?  என் வாழ்க்கைக்கு இவ்வளவுதான் தேவை.  இத்தனை வருஷமா இவ்வளவுதான் சாப்பிடறேன்.  எத்தனையோ வருஷமா வெறும் ரெண்டு சாரியோட காலம் தள்ளியிருக்கேன்.  அதுக்கு நான் வெக்கப்பட்டதும் இல்ல.  என் மகன் நிறைய சம்பாதிக்கிறான்னு என் வயிறு ஒரு நாள்ல பெரிசாயிடுமா என்ன?” என்று திரும்பக் கேட்டாள் சரோஜினி.

8 

சரோஜினி புதுப் புடவை கட்டிகொள்ள மறுத்ததால், அர்ஜுனுடைய பிறந்த நாள் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகும், கெளசல்யா முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அலைந்தாள்.  அந்த சமயத்தில் சிர்ஸியிலிருந்து ஃபோனில் ஒரு அழைப்பும் அதைத் தொடர்ந்து ஒரு கடிதமும் வந்தது.  உப்பாவைப் போல் தெரியும் யாரோ ஒருவர் ஊருக்கு வந்து சித்ரபுரா மடத்தில் தங்கியிருப்பதாகவும், சரோஜினி வந்து அந்த ஆளைப் பார்த்தால் நல்லது என்றும் எழுதப்பட்டிருந்தது.  இந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்ததுபோல, உடனடியாகக் கிளம்பிவிடத் துடித்தாள் சரோஜினி.  “ஆபரேஷன் செய்துக்கத்தான் வந்தேன்.  என்னால சமாளிக்க முடியலைன்னா கண்டிப்பா திரும்ப வந்துட்டுப் போறேன்….எப்படியுமே வந்திருக்கிறது அவர்தான்னா, வேறெதுக்கும் கவலைப்பட வேண்டாமே..” இதைச் சொல்லும்போதே அவள் தனக்குள் ஒரு ஆர்வம் துளிர்ப்பதை உணர்ந்தாள்.  முதலில் சரோஜினி போவதென்றும் பிறகு விஷயம் உண்மையாய் இருக்கும்பட்சத்தில், சுதீர் போகலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.  உப்பா வந்திருப்பாரோ இல்லையோ, தான் சிர்ஸிக்குப் போகப் போகிறோம் என்பதே அவளுக்கு சொல்லமுடியாத அளவு தெம்பை அளித்தது.

கிளம்புவதற்கு முந்தைய நாள், தனது பெட்டியிலிருந்து நாலு புடவைகளை கெளசல்யாவுக்கும் இரண்டு புடவைகளை லக்ஷ்மிபாய்க்கும் எடுத்துக்கொடுத்தாள்.  பெட்டியை மூடுவதற்கு முன் பழுப்பு கவரை எடுத்து அதிலிருந்த ஆயிரம் ரூபாயைப் பார்த்தாள்.  கஷ்டகாலத்தில் தேவைப்படலாம் என்பதற்காக சேமிக்கப்பட்டது அது.  அதை திரும்ப உள்ளே வைத்தாள்.

அன்றிரவு உறங்கப்போனபோது, ரத்னாகர் வீட்டில் சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் அவளுக்கு நினைவு வந்தது.  அன்று, கெளசல்யாவின் பழைய தோழிகள் சிலரும் வந்திருந்தனர்.  அர்ஜுனும் விளையாடிக் கொண்டிருந்த மற்ற குழந்தைகளும் தங்களது தாத்தா பாட்டியைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.  அர்ஜுன் தன்னுடைய அப்பாவின் அப்பா எங்கே என்று கேட்டான். மாலதி உடனே, “அவர் தெய்வத்தோட இருக்கப் போயிட்டார்” என்றாள்.  இதைக்கேட்ட சரோஜினிக்கு கோபம் வந்தது.  “என்ன இது… யாரு தெய்வத்தோட இருக்கப் போனது?  அவர் வீட்டை விட்டுப் போயிட்டார்னு சொல்லு.  உலக பந்தத்தையெல்லாம் துறந்து சாமியாராப் போயிட்டார்னு குழந்தைக்கு சொல்லு…  இல்லைன்னா எனக்குத் தெரியாதுன்னு சொல்லு… அபசகுனமா எதுவும் சொல்லாதே… நான் இன்னும் தாலியும் வளையலும் போட்டுட்டு இருக்கிறது உனக்குத் தெரியலையா?”  சரோஜினியின் வார்த்தைகள் அவர்களைப் பேச்சிழக்கச் செய்தன.

பயத்தில் வெளிறிப் போயிருந்த அர்ஜுனை இறுக அணைத்துக் கொண்டாள் சரோஜினி.

[கன்னட மூலம் விவேக் ஷன்பேக்.  ஆங்கில மொழியாக்கம் தீபா கணேஷ்  . தமிழில்  சீனிவாசன்]

முந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரே-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅண்ணா ஹசாரே-கடிதங்கள்