பின்நவீனத்துவமும் பிறகும்- கடிதம்

அன்புள்ள ஜெ

அஜிதனின் ஆர்வமூட்டும் உரை கேட்டேன். அவரது நாவல்களை இனிமேல்தான் வாசிக்கவேண்டும். பாவனைகள் ஏதுமில்லாமல், மென்மையான குரலில், யோசித்தும், இணைத்துக்கொண்டும் ஆற்றப்பட்ட இயல்பான சிறந்த இலக்கிய உரை.

என் வகுப்பில் நான் சொன்ன ஒரு உவமை. விலங்குகள் அவ்வப்போது தங்களை உதறிக்கொள்வதுண்டு. உடலில் தூசி ஈரம் ஏதாவது இருந்தால் அப்படிச் செய்யும். சோம்பல் முறிக்கவும் அப்படிச் செய்யும். அதேபோல சிந்தனையிலும் சிலவகையான உதறுதல்கள் நிகழும். ஒரு சிந்தனை கெட்டிதட்டிப்போகிறது என்று தோன்றும்போது அப்படி நிகழும். அல்லது அவநம்பிக்கைக்காலகட்டத்திலும் நிகழும். அப்போது மனித சிந்தனை தன்னை ஒருமுறை உதறிக்கொள்வதுண்டு. அதுதான் பின் நவீனத்துவம். ஆனால் உதறிக்கொண்டே இருக்க முடியாது. அது ஒரு தத்துவநிலை அல்ல. அது ஒரு சிந்தனையும் அல்ல. அது ஒரு எதிர்தத்துவ நிலை. அல்லது எதிர்சிந்தனைநிலை. ஆகவே அது நீடிக்கமுடியாது. மனித சிந்தனையில் ஸ்கெப்டிஸிஸம், நிஹிலிஸம் . லாஜிக்கல் பாஸிட்டிவிஸம் போல பல காலகட்டங்கள் இதேபோல வந்துசென்றதுண்டு.

நம் சிக்கலென்னவென்றால் அதை ஒரு சிந்தனை முறை என எடுத்துக்கொண்டு அதை ஒரு நம்பிக்கையாக ஏற்றுக்கொண்டதுதான். இப்போது இதுதான் புதிசு என்று சொல்வதுதான் நம்முடைய பிரச்சினை. எது புதிசோ அதை பிடித்துக்கொள்வது சிந்தனையோ கலையோ அல்ல. எது உள்ளிருந்து வருகிறதோ அதை வெளிப்படுத்தவேண்டும். ஐரோப்பா பின்நவீனத்துவத்துக்குச் சென்றால் நாம் பின்நவீனத்துவர்களாக ஆகவேண்டியதில்லை. நாம் நமக்குரிய சிந்தனைக் காலகட்டத்தில் இருக்கலாம். நமக்கான வளர்ச்சியை அடையலாம். இது நமக்குப் புரிவதே இல்லை. அஜிதன் அவருடைய ஒரு டிவீட்டில் சொல்வதுபோல கலைத்திறன் இன்மை, சிந்தனைவறுமை ஆகியவற்றைத்தான் ‘புதியவற்றை சொல்வது’ என்ற போர்வையில் மறைத்துக் கொள்கிறார்கள்.

பின்நவீனத்துவத்தின் கலககம், கலைப்பு எல்லாம் இன்றைக்கு சிந்தனைத்துறையில் பின்நகர்ந்துவிட்டன. ஆனால் இன்றும்கூட இலக்கியவாதிகள் அந்த மனநிலையை விட்டுவிடவில்லை. தத்துவம் செல்லும் வேகத்துக்கு இலக்கியம் வருவதில்லை. ஏனென்றால் இலக்கியவாதிகள் தத்துவத்தை இளம் வயதில் கொஞ்சம் அறிமுகம் செய்துகொள்கிறார்கள். பிறகு வாசிப்பதில்லை. பின்நவீனத்துவம் 70- 80 களின் சிந்தனை. இங்கே 2000த்தில் வந்தது. அரைநூற்றாண்டு பழையது அது. ஆனால் இங்கே இன்னும் பின்நவீனத்துவம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். டெல்லியில் எல்லா இலக்கிய செமினார்களிலும் பின்நவீனத்துவம் பற்றி எவராவது பேசுகிறார்கள்.

பின்நவீனத்துவம் வந்தபோதே மார்க்ஸியரான என் ஆசிரியர் சொன்னார். ‘அதிகாரத்தை கேலிசெய்தால் அது அழிந்துவிடும் என்ற நம்பிக்கை பிரார்த்தனை செய்தால் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையைவிட எந்த வகையிலும் தர்க்கபூர்வமானது அல்ல. கேலி செய்பவர்களுக்கு ஒரு மேடை போட்டுக்கொடுத்தால் அந்தக் கேலியும் அதிகாரத்தின் பகுதியாக ஆகிவிடும்’ அதுதான் நடந்தது. இன்றைய பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் நட்சத்திர ஓட்டல்களில் தங்கி செமினார்களில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

பின்நவீனத்துவம் அடிப்படையில் ஒரு வகை இலக்கியமையவாதம். இலக்கியத்தை எழுதினால் போதும், வேறேதும் தேவையில்லை என்பது அதன் மனநிலை. இலக்கியத்தை விட இலக்கிய விமர்சனத்தை அது முன்னிறுத்தியது. ஆகவே ஒருவகை விமர்சனம், அல்லது பகடியாகவே அது நின்றுவிட்டது. கொள்கைகளையும் வடிவங்களையும் கலைத்துப்போட்டதில் அதற்கு ஒரு பங்களிப்பு உண்டு. அவ்வளவுதான் அதன் இடம். அதற்குமேல் இல்லை.

டிரான்ஸ்மாடர்னிஸம், போஸ்ட்போஸ்ட்மாடர்னிசம் என்று சொல்லப்படும் சிந்தனைகள் எல்லாம் சிந்தனையின் பயன் என்ன, விளைவு என்ன என்ற கேள்வியை அடிப்படையாகக் கொண்டவை. இந்த உலகத்திற்கு என்ன சொல்கிறீர்கள் என்பதே முக்கியம் என்று அஜிதன் சொல்வதுதான் அதன் மையக்கேள்வி.  ‘கடைசிகட்ட உண்மையை’ சொல்கிறோம் என்று சொல்லவேண்டியதில்லை. மதம் அல்லது தத்துவம் ஆகியவற்றின் உறுப்பாக நிலைகொள்ளவேண்டும் என்பதுமில்லை. ஆனால் இலக்கியம் தனக்கென ஒரு பார்வையைச் சொல்லவேண்டும். அதைத்தான் 30 ஆண்டுகளுக்கு முன்னரே தரிசனம் என்று நீங்கள் சொன்னீர்கள்.

அந்த தர்சனத்தை ஒட்டி ஒரு படைப்பாளி உருவாக்கும் புனைவுலகம்தான் முக்கியமானது. அந்த உலகம் ஒரு தனியான கொள்கைவட்டம். அங்கே சென்று கற்பனையால் வாழ்ந்து அந்தக் கொள்கைகளை ஓர்  இலக்கியவாசகன் பரிசீலிக்கலாம். அந்த தர்சனத்தை வாழ்க்கையில் இருந்து அடைந்தவனின் படைப்புகளுக்கே மதிப்பு. அவன் அதை தன் வாழ்க்கை வழியாகவும் செயல்பாடுகள் வழியாகவும் பரிசீலனை செய்துகொண்டும் இருக்கவேண்டும். அதுவே இலக்கியமாக நிலைகொள்ள முடியும்.

இலக்கியம் என்பது விளையாட்டு அல்ல. புள்ளி வைக்காமல் முப்பது பக்கம் எழுதினால் அது புதிய புனைவும் அல்ல. புள்ளிவைத்து எழுதிவிட்டு ஒரே ஒரு சாப்ட்வேரைக்கொண்டு புள்ளி இல்லாமல் ஆக்கிவிட முடியும். எழுதிய படைப்பை ஒரு சாப்ட்வேர் மூலம் சிக்கலான புதிராக ஆக்கிவிட முடியும். இன்றைய எழுத்து என்பது மொத்தமான ஒரு செயல்பாட்டின் ஒரு பகுதியாகவே இருக்கும்.

மூர்த்தி ராமானுஜம்

முந்தைய கட்டுரைஇலக்கிய விழாக்களினூடாக…
அடுத்த கட்டுரைகாட்டின் ஆற்றல்- கடிதம்