தயக்கம், கடிதம்

தயக்கமெனும் நோய்

அன்புள்ள ஜெ,

தயக்கமெனும் நோய் கட்டுரையை என் தோழி ஒருத்தி எனக்கு அனுப்பியிருந்தாள். அது என்னை கொஞ்சம் சீண்டினாலும் யோசிக்க வைத்தது. உண்மைதானோ என எனக்கே கேட்டுக்கொள்ளச் செய்தது. ஆழமான ஒரு சுயபரிசோதனைக்கு கொண்டுசென்றது. நன்றி. அக்கட்டுரை பற்றி முகநூலில் பெரிய சீற்றங்கள் எல்லாம் கண்ணில் பட்டன. அவர்கள் எதனால் சீற்றமடைகிறார்கள் என்று புரியவுமில்லை. இதையெல்லாம் எவரும் சொல்லக்கூடாது என நினைக்கிறார்களா என்று தெரியவில்லை.

பத்மாவதி சுப்ரமணியம்

அன்புள்ள பத்மாவதி,

நான் நேரடியாக தொடர்ச்சியாக மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அனேகமாக ஒவ்வொரு நாளும் பயிலரங்குகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறேன். நான் சொல்வன என் அனுபவம் சார்ந்த கருத்துக்கள். முகநூலே உலகமென வாழ்வோருக்கு அவை அயலானவை. அவர்கள் என் உலகில் இல்லை.

இச்சொற்களை நான் ஓர் எழுத்தாளராக முன்வைக்கிறேன். எழுத்தாளர்களுக்கு சமூகத்தை விமர்சனம் செய்யும் முழு உரிமை உண்டு. அது எழுத்தாளனின் இடமென்ன என அறியாதவர்களுக்கு சீற்றம் அளிக்கலாம். ஆனால் உலகமெங்கும் எழுத்தாளர்கள் அப்படித்தான் வரலாறு முழுக்க செயல்பட்டுள்ளனர். நான் மற்ற எழுத்தாளர்கள் போல விமர்சனங்களை மட்டும் முன்வைப்பவன் அல்ல. அதற்கப்பால் நேரடிச்செயல்பாடுகளும் கொண்டவன்.

இந்த விமர்சனங்கள் சிலருக்கு தங்களை பரிசோதனைசெய்துகொள்ள உதவலாம். அவர்கள் வாழ்க்கையில் மாற்றமும் உருவாகலாம்- அப்படி உருவான சிலநூறு பேரையாவது எனக்குத் தெரியும். நான் எழுதுவன நான் ஆற்றிக்கொண்டிருக்கும் தொடர் பணிகளின் ஒரு பகுதியாக உருவாகும் சொற்கள்.

இந்தக் கருத்தை வேறுவகையில் ஆண்கள் பற்றியும் சொல்லியிருக்கிறேன். நான் எதிர்கொள்வது நம் சமூகத்தைச் சூழ்ந்துள்ள மெய்யான ஒரு சிக்கலை. அதை உடைக்க முயல்கிறேன். அது என் பணி என உணர்வதனால். முகநூல் வம்பர்களுக்கு அந்த உலகை புரிந்துகொள்ள முடியாது. எல்லாமே இரண்டுநாள் வம்புதான் அவர்களுக்கு.

ஜெ

செயலின்மையின் இனிய மது

அரதி

முந்தைய கட்டுரைஞானத்தை நோக்கிய பாதை
அடுத்த கட்டுரைமகத்தான இரவின் துஆ