அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம்.
கடந்த ஆண்டு டிசம்பர் 31 ல் வாட்ஸாப்பிலும் சமூக வலைத்தளங்களிலும் நண்பர்கள் 2023 ல் வாசித்த புத்தகங்களை பட்டியலிட்டிருந்தனர். அதைப் பார்த்த பின் நானும் எந்த எந்த புத்தகங்கள் வாசித்தேன் என எழுதிப்பார்த்தேன் . என்னை தொகுத்து சீர்தூக்கிப் பார்க்க அது உதவியாக இருந்தது.
தங்களின் விஷ்ணுபுரத்தில் தொடங்கி பஷீர், சாம்ராஜ் , இசை , கு.அழகிரிசாமி ,தேவதேவன், கு.ப.ரா , புதுமைப்பித்தன், மௌனி , எஸ்.பொன்னுத்துரை , தி.ஜா , அஜிதன் , எம்.எஸ்.கலியாணசுந்தரம் , ல.ச.ரா , கல்பற்றா நாராயணன் , பவா , மனுஷ்யபுத்திரன் , விக்ரமாதித்யன் , சி.எஸ்.செல்லப்பா , தெளிவத்தை ஜோசப் , ஆத்மாநாம் , பெருந்தேவி , லஷ்மி மணிவண்ணன் , ஜே. சி . குமரப்பா என இவர்கள் எழுத்தையும் நான் ஓரளவேனும் வாசித்த ஆண்டாக 2023 இருந்தது . இவர்கள் அனைவரும் எனக்கு அறிமுகமானது தங்கள் மூலமே. மிக்க நன்றி.
2024 ல் நிச்சயமாக அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என எனக்கு நானே சொல்லிக்கொண்டு 2024 முதல் நாள் நான் எடுத்தது தங்களின் புறப்பாடு. அதற்கு உந்துதலாக இருந்தது திரு.சுனில் கிருஷ்ணனின் தங்களுக்கான சியமந்தக கட்டுரையே.
நான் தங்களை வாசிக்க ஆரம்பித்த(பவாவின் கதை சொல்லலில் அறிந்து, தன்மீட்சியில் திளைத்து, அறம் எனப்பட்டதே நம் வழியென உணர்ந்து) கடந்த ஓரிரு ஆண்டுகளில் நான் அறிந்த என் ஆசிரியர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் தனக்கான ஒரு நாளை திட்டமிடுபவர், அவரை நெருங்கவே ஒரு ஒழுங்கும் தயாரிப்பும் தேவை , அவரின் எழுத்துக்கு வேறெங்கும் இல்லாத தனித்துவமிருக்கும் , ஆசிரியராய் பல்வேறு தளங்களில் பலருக்கு வழிகாட்டுபவராய் இருப்பவர் , க்ரீன் பார்க்கில் தான் தங்குவார் , நூற்பு , ஆலன் சாலி சட்டை அணிவார் . இப்படி தங்களின் இன்றைய நாட்களைப் பார்த்த எனக்கு இந்த நூல் அளித்த அதிர்ச்சிகள் உண்மைகள் ஏராளம்.
நூலை வாசித்து முடித்த பின் அருமைதாசனும் , ராவும் , கேசவட்டனும் நிறைந்து இருந்தார்கள்.
எல்லாம் இருந்தும் இல்லாமல் ஆகும் நிலைகொண்டோர் மிகுந்த இந்த நாட்களில் , ஏதும் இல்லாமல் ஒரு நீண்ட பயணத்தை அதே நேரத்தில் தன்னின் அந்த நேர மனநிலைகளை சமரசமின்றி எடுத்திக்காட்டியது நான் வணங்க வேண்டிய தருணங்கள்(மாரியம்மாள் , அருளப்பசாமி போன்றோரிடம் தங்களுக்கு எழுந்த உரையாடல்கள் , எண்ண ஓட்டங்கள் )
விடுதிகளிலும் , சாலைகளிலும் , பட்டிக்காடுகளிலும் , ரயிலிலும் எந்த முன்தயாரிப்பும் இன்றி கையில் காசும் இன்றி செல்ல அதே நேரத்தில் நான் இவனல்ல என எல்லா நேரத்திலும் உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே ஓடியது அசாதாரண நிலைப்பாடு.
லட்சங்களில் வருமானம் வந்தாலும் சற்று நேரம் அமர்ந்து ஒரு பாட்டுக் கேட்க தனக்குப் பிடித்ததை செய்ய லட்சணம் இல்லாத நிலை தான் பலருக்கு. வாசிக்க வேண்டும் அவர்கள் இந்த புத்தகத்தை ..குறிப்பாக ராவ் , ரயிலில் ரசனையுடன் பாட்டுப் போட்டு வந்தவர் , சாலை ஓரத்தில் படுத்து டிரான்சிஸ்ட்டரில் பாட்டு கேட்கும் மனிதர்களை.
நரிக்குறவர்கள் பற்றி சிறிது அறிந்து இருக்கிறேன் . அவர்களை, அவர்களின் குணநலன்களை சொல்லிய விதம் உண்மையிலேயே அவர்களின் சார்பில் ‘ கும்பிடுறேன் சாமி’ _/\_
முரண்களின் தொகை தான் வாழ்க்கை , முரணியக்கங்களின் நகர்வு தான் அன்றாடம் என நான் அறிந்தது தங்களின் எழுத்தின் மூலமே. அது இந்த நூலில் விரவிக் கிடைக்கிறது . குறிப்பிட்டு சொல்ல வேண்டியது
அருமைதாசன் , தோழர் நெல்சன் , சரஸ்வதியக்கா , மற்றும் உங்கள் அப்பா பற்றிய குறிப்புகள்.
புத்தகங்களைப் பார்த்து முகர்ந்து நெகிழும் தங்களை நினைத்து மகிழ்ந்தேன்.
‘நுதல்விழி‘ வாசித்து சொல்ல முடியாத பரவசத்தை அடைந்தேன் ..ஆனால் அப்படியெல்லாம் நினைத்ததும் அருளப்பசாமி ஆகி விட முடியாது என எனக்கு தோணாமல் இல்லை . அதையே தங்களின் வரிகளும் உறுதி செய்தது.
எனது மகளை அழைக்க பள்ளிக்கு சென்று காத்துக்கொண்டிருக்கும் போது .. ‘ஜோதி‘ வாசித்துக் கொண்டிருந்த அன்று தற்செயலாய் தைப்பூசம் என்றைக்கு என கைபேசியில் உள்ள தமிழ் நாட்காட்டியில் தேடினேன் . அது தற்செயலா அல்லது இறை செயலா எனத் தெரியவில்லை . அன்று(25.1.2024) தான் தைப்பூசம். ஆசிர்வதிக்கப்பட்டதாய் உணர்ந்தேன். பல நாட்களாய் வடலூர் செல்ல நினைத்துக் கொண்டிருக்கிறேன் . உங்களின் மூலம் அன்று சற்று நிறைவேறியது அது.
ஒரு வரியை உரக்க சொல்ல, சொல்லிக்கொள்ள வேண்டுமென்றால். அது ‘ உயிரோடிருப்பது என்பது உயிரோடிருப்பதற்கான போராட்டம் மட்டும் அல்ல‘ (தங்களின் வரி தான் ).
அனைத்தையும் அளித்துக் கொண்டிருக்கும் தங்களுக்கு எனது பணிவான நன்றி கலந்த வணக்கம்.
பி.கு :
அஜிதன் பற்றிய சமீபத்திய கடிதத்திலும் வேறு சில கட்டுரைகளிலும் , ‘எனக்குப் பின் என் எழுத்து நிற்கும்’ , ‘ நாட்கள் கொஞ்சம் தான் இருக்கிறது ‘ என்றோ தாங்கள் அடிக்கடி சொல்லிவருவது ஏனோ எனக்கு உவப்பாக இல்லை. அச்சமே எஞ்சுகிறது.
அது உண்மை தான்! அது இருக்கும்! மேற் சொன்ன அச்சத்தையும் போக்க உங்கள் வரிகள் பல உண்டு . அதில் எனக்கு சந்தேகம் இல்லை.
அகவை அறுபது என்பது அற்பர்கள் உலவும் துறைகள் பலவற்றில் துவக்க வயதே என்றிருக்க ..
அறிவு உலவும் தங்கள் உலகிலும் அது அப்படியே இருக்க ..எல்லாம் வல்ல பேரிறையை வேண்டுகிறேன் !
ஆம் , அவ்வாறே ஆகும் !
அன்புடன் ,
கே.எம்.ஆர் . விக்னேஸ்