அறிதல்-அறிதலுக்கு அப்பால்

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களுடைய கட்டுரைகளை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தங்களுடைய பணி தமிழில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. உங்களுடைய ஒரு கருத்துடன் நான் மாறுபாடுகிறேன். இந்திய மதங்களில் தத்துவமே அதி கடைசி எல்லையாக அல்லது தத்துவமே அதனுடைய இறுதி லட்சியமாக முன்வைக்கப்படுகிறதாகத் தாங்கள் எழுதுவது (அல்லது நான் அப்படிப் புரிந்துகொள்கிறேனா என்று தெரியவில்லை) மிகவும் முரணாகத் தெரிகிறது.

இந்திய மதங்களின் சாரமே தத்துவத்தின் எல்லையை எப்படி மீறுவது என்பதே. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதே பிரமம் என்பதே இந்து சிந்தனையின் உச்சம். மகாபாரதத்தில் தருமத்தின் மறுஉருவாகச் சித்தரிக்கபடும் விதுரர் தன்னுடைய கடைசி காலத்தில் வார்த்தைகள் அற்ற மௌனத்தில் மறைந்துவிடுவதாகக் குறிக்கப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணனும் “ரகசியங்களுள் நான் மௌனம்” என்று சொல்லுகிறார். தத்துவம் வார்த்தைகளின் விளையாட்டு, சத்தியத்தைத் தேடுபவர்கள் அந்த விளையாட்டில் ஈடுபடுவதில்லை. ரமணர் அவர்களும் “கற்றதெல்லாம் ஒருநாள் மறக்க வேண்டிவரும்” என்று சொல்லி இருக்கிறார். தத்துவம் மிக முக்கியமானதுதான், ஆனால் கீழை மரபில் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட சூனியத்தில் அல்லது பிரமத்தில் அல்லது பக்தியில் கரைந்து ஒன்றுவதே ஒரே லட்சியம்.

தத்துவத்திற்கு ஒரு முக்கியமான பணி இருக்கிறது, அது தத்துவ விசாரணை செய்பவனை மேலான ஒன்றின் மேல் நாட்டம்கொள்ள வைப்பதே. வார்த்தைகளில் இருந்து விடுபட்டு சூனியத்தை நோக்கிச் செல்வதே… எப்படி பக்தி பக்தனை பகவானுடன் ஒன்றச் செய்வதோ அது மாதிரி… நம்முடைய மரபின் உயிரே அதில்தான் இருப்பதாக நான் கருதுகிறேன். நாம் மேலைச் சிந்தனை முறையில் நம்முடைய மதத்தைப் புரிந்துகொள்ள நினைத்தால் அது ஒரு கேலிக்கூத்தாக முடியும், நாம் காலமாற்றத்தைப் பேசுகிறோம், பேசுவதால் காலமற்றத்தை உணர்ந்துகொள்ள முடியும் என்பதால் அல்ல, அதை நோக்கி சில பேராவது செல்வார்கள் என்பதற்காக மட்டுமே. மேற்கத்திய சிந்தனைக் காலத்திலேயே உழன்று கொண்டிருப்பது, அது அதனுடைய வரமும் சாபமும் ஆகும். அவர்கள் புத்தரையே வெறும் தத்துவவாதியாக முன்னிலைபடுத்தியவர்கள். புகழ்பெற்ற தத்துவமேதை ரஸ்ஸலே புத்தரையும் சாக்கரடீசும் நிகரானவர்கள் என்றே எழுதுகிறார். சாக்கரடீஸ் ஒரு தத்துவவாதி அவர் லாஜிக்கைத் தாண்டிச் செல்வதே இல்லை, ஆனால் புத்தரோ தர்க்கத்தைத் தாண்டிச் செல்கிறார். அந்தத் தாண்டிச் செல்லும் கோட்டை எல்லா மேற்கத்திய சிந்தனையும் நிராகரிக்கும் அல்லது தவறாக விளக்கம் அளிக்கும்.

ஆகவே தாங்கள் நம்முடைய தத்துவத்தின் உயிரான “தர்க்கத்தைத் தாண்டிச் செல்லத் தூண்டும் லட்சியத்தையும்” கொஞ்சம் எழுத வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இந்தக் கடிதத்தில் எதாவது பொருட்பிழை இருந்தால் என்னை மன்னிக்கவும்.

தங்களுடைய நெடுநாள் வாசகன்

க.வேல்முருகன்

***

அன்புள்ள வேல்முருகன்,

இந்திய ஞானமரபைத் தத்துவம் என்று சொல்லமுடியுமா என்பது எப்போதும் விவாதிக்கப்பட்டுவரும் ஒரு கேள்வி. நானே இதை எழுதியிருக்கிறேன். மேலைதத்துவம் என்பது தர்க்கம் மூலம் விடைகாணமுடியும் என்ற நம்பிக்கையை சாரமாகக் கொண்டது. அதன் வேர்ச்சொல்லே Philo Sophia என்று விரிவது. அறிவுத்தேவதைமேல் கொண்ட பிரியம் எனப் பொருள்.

இந்தச் சரியான அர்த்தத்தில் இந்திய சிந்தனைமரபில் நியாய தரிசனம் ஒன்றை மட்டுமே தத்துவம் என்று சொல்லமுடியும். பிற அனைத்துமே முக்தி அல்லது மோட்சம் என்பதை மட்டுமே இலக்காகக் கொண்டவை. முக்தி என்பது பல்வேறு பொருட்களில் அவற்றால் பேசப்படுகிறது. பொதுவாகத் துயர்களில் இருந்து விடுதலை. துயர் உருவாவது மனமயக்கத்தால், அறியாமையால். ஆகவே அறிவே முக்தி என ஜடவாத சிந்தனைகள் வாதிடுகின்றன. அதற்காகவே அவை பேசுகின்றன.

அறிவு அல்ல அவற்றின் இலக்கு. அறிவைக் கையாண்டு விடுதலை பெறுவதுதான். ஆகவே அறிவை நடைமுறைப்படுத்துவது பற்றியும் அறிந்ததை உணர்வது பற்றியும் அவை பேசுகின்றன. ஒன்றை அறிவதற்கும் அந்த அறிவை உணர்ந்து வாழ்ந்து அதுவேயாக ஆவதற்கும் இடையேயான வேறுபாடு பெரிது என எல்லா சிந்தனைகளும் அறிந்திருந்தன. அறிதல் என்பது முதல்படியே என்றும் அதை மிதித்து ஏறி மேலே செல்லவேண்டியிருக்கிறது என்றும் அவை சொல்கின்றன.

அத்வைத மரபுப்படி அறிதல்-அறிபடுபொருள்-அறிபவன் மூன்றுமே ஒன்றேயாகும் ஒரு நிலையே முக்தி. அத்வைத நூல்களின் அனைத்துத் தர்க்கங்களும் அந்த மையம்நோக்கி நம் அறிவைக் கொண்டு செல்லும் முயற்சிகளே.

ஆகவே இந்திய ஞானமரபை இந்தியதத்துவம் என்று சொல்லமுடியாது. நான் அச்சொல்லை மிகக் கவனமாகவே கையாள்கிறேன். தத்துவம் என்னும்போது நான் ஞானமரபு அறிவைச் சந்திக்கும் புள்ளிகளை மட்டுமே குறிக்கிறேன். ஞானமரபு என்பது உள்ளுணர்வைச் சந்திக்கும் தளங்களும் கடந்துசெல்லும் தளங்களும் அடங்கிய ஒன்று. எல்லா தரிசனங்களிலும் தத்துவமும் மெய்ஞானமும் உள்ளன. தத்துவம் அதன் கால்,மெய்ஞானம் அதன் சிரம். கால்தான் நிலத்தைத் தொடுகிறது. தலை காலை இயக்குகிறது.

இந்திய ஞானிகள் அனைவருமே அறிவின் எல்லைகளைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள். ‘அறியாமை ஒரு முள், அதை எடுப்பதற்கான முள் அறிவு. முள்ளை எடுத்தபின் இருமுட்களையும் வீசிவிட்டு மேலே செல்லவேண்டும்’என்ற ராமகிருஷ்ண பரமஹம்சரின் வரியே மிக அழகானது.

ஆனால் இதைத் தத்துவநிராகரிப்பு எனக் கொள்ளவேண்டியதில்லை. தத்துவமாக மட்டுமே பார்ப்பது எப்படி முழுமையற்றதோ அப்படியே தத்துவமே இல்லாமல் தூய உள்ளுணர்வு எனக் கற்பனைசெய்துகொண்டு எதையும் கற்காமலிருப்பதும் முழுமையற்றது. எந்த ஞானியும் அதைப் பரிந்துரைத்ததில்லை. இயல்பான சோம்பல் மற்றும் தகுதியின்மை காரணமாகக் கல்வியைத் தவிர்ப்பதற்காக நம்மில் பலர் இப்படித் தத்துவ எதிர்ப்பை ஒரு நிலைப்பாடாக மேற்கொள்வதுண்டு. தாங்கள் தத்துவமற்ற உள்ளுணர்வு வெளிக்கு- சுயம்புவாகச் சென்றுவிட்டதாகப் பாவனையும் செய்வார்கள். அது சாத்தியமல்ல.

அறியாமை என்ற முள் பிறப்பிலேயே வருவது. அதை ஆணவமலம் என்றது மரபு. ஆகவே அதை எடுக்க அறிவு இன்றியமையாதது. அந்த முள்ளைக் காலில் வைத்துக்கொண்டு வெகுதூரம் செல்லமுடியாது. நம் உள்ளுணர்வு வலுவான தர்க்கத்தால் மூடப்பட்டுள்ளது. அந்த ஓட்டை உடைத்து மட்டுமே உள்ளுணர்வைத் தீண்டமுடியும். ஆகவே தீவிரமான அறிவுத்தளம் இல்லாத இலக்கியமோ ஆன்மீகமோ சாத்தியமல்ல. அப்படி ஒன்றை முன்வைத்தால் அது வெற்று பாவனையாகவே இருக்கும்.

ஆகவேதான் மெய்மையின் வாசலை அத்தனை நுண்ணியதாக உருவகித்த நம் மரபு,இத்தனை சிந்தனைகளையும் தர்க்கங்களையும் உருவாக்கியது. அவை வீண் மயிர்பிளப்புகள் அல்ல. அவற்றையே இறுதியாகக் கொள்வதே பிழை. அது அறியாமையின் இன்னொரு முகம் மட்டுமே.

நீங்கள் சொன்னது போலத் ‘தர்க்கத்தைத் தாண்டிச் செல்லத் தூண்டும் லட்சியத்தை’ப் பற்றி எளிதாக நேரடியாக எழுதிவிடமுடியாது. என் ஊடகம் இலக்கியம். அதில் விரிவாகவே எழுதியிருக்கிறேன். விஷ்ணுபுரம் நாவலே அறிதல்-அறிதலுக்கு அப்பால் என நகரும் ஆக்கம்தான்.

ஜெ

***

முதற்பிரசுரம் செப் 2011/ மறுபிரசுரம்

முந்தைய கட்டுரைர.சு.நல்லபெருமாள்
அடுத்த கட்டுரைகி.ராஜநாராயணன், கடிதங்கள்