Youth and Age – Sir John Lavery
வாரிசா?
அஜிதனின் உரையும் நானும்.
ஜெ,
வாரிசா? இப்படிக் குறிப்பிட்டிருந்தீர்கள். “நான் ஓர் அகவையில் அடுத்த தலைமுறையினரை மகன்கள், மகள்கள் என இயல்பாகவே எண்ண தொடங்கினேன். அந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என எனக்கே தெரியாது. ஆனால் அதன்பின் அவர்கள் ஒவ்வொருவரின் வளர்ச்சியையும் விழைகிறேன். ஒவ்வொருவர் மீதும் கவனத்துடன் இருக்கிறேன்”
பொதுவாக இன்று எழுத்தாளர்கள் இப்படிச் சொல்வதில்லை. தாங்கள் இளமையானவர்கள் என்று காட்டிக்கொள்ளவே விரும்புகிறார்கள். ஆகவே காதலிகளைப் பற்றியெல்லாம் எழுதுகிறார்கள். உங்கள் மனநிலை ஆச்சரியமளிக்கிறது. முதுமையை வரவேற்பதுபோல் உள்ளது. அது நல்ல மனநிலையா?
ஆ. கார்த்திகேயன்
அன்புள்ள கார்த்திகேயன்,
நம் சூழலிலேயே சென்ற முப்பதாண்டுகளாக உள்ள மனநிலை இது. ‘நான் என்னை வயசானவனா நினைச்சுக்கிடறதில்லை’ என்று பலர் சொல்வதுண்டு. ‘மனசுக்குள்ள நான் இன்னமும் இளைஞன்தான்’ என்று சொல்வது இங்கே ஒரு மோஸ்தராகவே உள்ளது. அத்துடன் உளவியலாளர்கள், மருத்துவர்கள், பேச்சாளர்கள் ‘வயசானவரா நினைச்சுக்கிட்டாத்தான் வயசு ஆகும்’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த மனநிலை காரணமாகவே பலர் முடிச்சாயம் அடித்துக்கொள்கிறார்கள். இளைஞர்கள் போல உடையணிகிறார்கள். இளைஞர்களுக்குரிய பேச்சு, பழக்கவழக்கங்களை மேற்கொள்கிறார்கள். நம் சூழலில் ஆணும் பெண்ணும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பின் தங்கள் வயதுடன் ஒரு பெரும் போராட்டத்தையே நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பெரும் பணமும் செலவிடுகிறார்கள். அது ஒரு பெருந்தொழில்– வ்ணிகம்.
சென்ற தலைமுறையில் அப்படி இல்லை. என் அப்பாவெல்லாம் ஐம்பது வயதிலேயே முதுமைக்கு தயாராகிவிட்டவர். அவரது தோழர்களும் அப்படித்தான். ஏனென்றால் அன்றெல்லாம் முதுமைக்குத்தான் மதிப்பு. எந்த சபையிலும் கொஞ்சம் வயதானால்தான் அமர்ந்து பேசமுடியும். சீக்கிரம் வயதாகவேண்டும் என அவர்கள் ஏங்கியதுபோலவே தோன்றும்.
இளமை மீதான இந்தப் பற்று எங்கிருந்து வந்தது? நான் கவனித்தவரை 1960கள் முதல் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் எழுதிய டேல் கார்னகி வகை தன்னம்பிக்கை எழுத்தாளர்கள் இன்று சொல்லப்படும் ‘மனசுக்குள்ளே இளமையா இருக்கேன்’ வகையான சொற்றொடர்களை உருவாக்கி நிலைநிறுத்தினர். அங்கிருந்து அவை உலகமெங்கும் பரவின. அவை முன்வைத்த வாழ்க்கைப்பார்வை உலகமெங்கும் ஏற்கப்பட்டது.
அந்த வாழ்க்கைப்பார்வை ஐரோப்பிய அறிவொளிக் காலப் பண்பாட்டில் ஒரு துணைப்பொருளாக உருவாகி வந்த ஒன்று. ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தத்துவார்த்தமான உள்ளுறை என்பது ‘இகத்தை’ முன்வைப்பதும் ‘தனிமனிதனை’ முன்வைப்பதும்தான். ஏனென்றால் அதற்கு முந்தைய கிறிஸ்தவ மரபுகள் பரலோகத்துக்காக மட்டுமே இகவாழ்க்கையை செலவிடவேண்டும் என்றும், தனிமனிதன் என்னும் எண்ணம் பாவமானது என்றும் முன்வைத்தன. இவ்விரண்டு கருத்துக்களுக்கும் கிறிஸ்தவத்திற்கு முந்தைய பண்டைய கிரேக்கப் பண்பாட்டில் வேர் உண்டு.
ஒவ்வொரு தனிமனிதனும் தன் வாழ்க்கையை பற்றிய முடிவை தானே எடுக்கவேண்டும், அதற்கான உரிமையும் தகுதியும் அவனுக்குண்டு என்று ஐரோப்பிய அறிவொளசிக்காலம் கூறியது. உலக வாழ்க்கையின் மகிழ்ச்சியை அடைவது ஒன்றும் பாவமோ பிழையோ அல்ல என்றும், அது ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய உரிமை என்றும் அது வாதிட்டது. இன்பத்தை தேடும் உரிமை என அமெரிக்க அரசியல் சட்டம் அதை வரையறுத்தது.
உலக இன்பங்கள் எல்லாமே இளமையை சார்ந்தவை என ஐரோப்பிய– அமெரிக்க உள்ளம் எண்ணியது. ஏனென்றால் அவை உடல் சார்ந்தவை. உடல் இளமையில் ஆற்றலுடன் இருக்கிறது. ஐரோப்பிய அமெரிக்கப் பண்பாட்டில் இளமைவழிபாடு அவ்வாறு ஒரு முதன்மை இடம் பெற்றது.
அதற்கும் கிரேக்க –ரோமப் பண்பாடே அடிப்படை. இலியட் காவியத்தில் போர்முடிந்து, பல்லாயிரம் பேரின் சாவுக்குக் காரணமான ஹெலனை கொல்ல வாளுடன் செல்லும் வீரர்கள் அவள் பேரழகை கண்டு அப்படியே அடிபணிந்ததாக ஒரு தருணம் உண்டு. அதையே கிரேக்கப் பண்பாட்டின் மனநிலை எனலாம். மைக்கலாஞ்சலோவின் டேவிட் அந்த இளமைவழிபாட்டின் தூலவடிவமான சிலை.
இளமையே வாழ்க்கை, இளமையே இன்பம், இளமையை இழந்தால் எதுவுமே மிஞ்சுவதில்லை, இளமைக்குப் பின்னர் எஞ்சியிருப்பது சாவை நோக்கிய காத்திருப்பு மட்டுமே – இந்த மனநிலை மேலைநாட்டை ஆள்கிறது என அவர்களின் இலக்கியங்கள், சினிமா, விளம்பரங்கள் அனைத்துமே காட்டுகின்றன. அங்கே மூத்தவர் மீதான தனிமதிப்ப்பு என்பது இல்லை. (அதை ஓர் உயர்பண்பாடு என பலர் சொல்லிக் கேட்டதுமுண்டு)
அந்த மனநிலை இங்கும் இன்று வந்துள்ளது. அதை இங்கே கொண்டுவரவேண்டிய தேவை முதலாளித்துவப் பொருளியலுக்கு இருக்கிறது. ஏனென்றால் உலகவாழ்க்கையைக் கொண்டாடுதல் என்றால் அதன் நேர்ப்பொருள் நுகர்வைக் கொண்டாடுதல் என்பதுதான். நுகர்வே முதலாளித்துவ பொருளியலின் அடிப்படை. ஆகவே விளம்பரங்கள் இளமை இளமை என நம் முன் அள்ளி வைத்துக் கொண்டே இருக்கின்றன. இளமையாக இருப்பதும், இளமையிலேயே நீடிப்பதும்தான் வாழ்க்கை என நம்ப வைக்கின்றன. இன்பத்தின் வெற்றி என அதை பர்ட்ரண்ட் ரஸ்ஸல் சொல்கிறார். அவருடைய நூல் ஒன்றின் தலைப்பு அது. இளமையின் வெற்றி என அதைச் சொல்லவேண்டும்.
இலக்கியம் நேரடியாக இந்த வணிகத்துக்குச் சேவை செய்வது அல்ல. அது இலக்கியவாதியின் உள்ளத்தின் வெளிப்பாடே. ஆனால் பொதுவாக ஆற்றலுள்ள எழுத்தாளர்கள் சிலர் தவிர பெரும்பாலானவர்கள் சூழலிலுள்ள பொதுவான போக்குக்கு அடிபணிபவர்களே. அவர்கள் தங்களை அறியாமலேயே இளமையின் வெற்றியை தாங்களும் ஏற்றுக்கொண்டு அதை முன்வைக்க ஆரம்பிக்கிறார்கள். அது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக ஆகிவிட்டது. அதற்கு முந்தைய தலைமுறை வரை நாம் முதுமையை மதிப்பவர்களாக இருந்தோம். ஒரு சின்ன விவாதம் கூட இல்லாமல் நம் கருத்து மாறிவிட்டது.
*
நான் எல்லாவற்றிலும் என இதிலும் நடுப்பாதை கொண்டவன். அல்லது தர்க்கபூர்வமான பாதை. அல்லது நிதர்சனத்தின் பாதை. இளமையை அல்லது உலக இன்பங்களை நான் நிராகரிப்பவன் அல்ல. இளமையின் ஆற்றலை நன்கறிந்தவன். ஆகவே அதை துளியும் வீணடிக்காதவன். ஆனால் இளமை மட்டுமே வாழ்க்கை என்னும் அபத்தத்தையும் ஏற்றுக்கொண்டவன் அல்ல. வாழ்க்கை முழுமையாகவே அரியது, இனியது என எண்ணுபவன்.
ஒவ்வொரு அகவைக்கும் அதற்கான வாய்ப்புகளும் அதற்கான இன்பங்களும் உண்டு. அவற்றில் எதுவுமே தவறவிடக்கூடியவை அல்ல. இளமையே இன்பம் என எண்ணுபவர் குழந்தைப் பருவத்தையும் முதுமைப் பருவத்தையும் தவறவிடுபவர் ஆகிறார். கடைசிவரை இளமையுடன் இருக்க முயல்பவர் உண்மையில் இளமைக்குத் திரும்பிச் செல்வதுமில்லை, முதுமையையும் இழந்துவிடுகிறார். அது அசட்டுத்தனம் என நினைக்கிறேன்.
நான் என் வாழ்க்கையில் இளமையை உரிய முறையில் கொண்டாடியவன். இளமையைக் கொண்டாடுவது என்றால் பலர் எண்ணுவதுபோல உடலின்பங்களில் திளைப்பது, குடி முதலியவற்றில் அலைவது அல்ல. அது இளமையை வீணடிப்பது. அது ‘அனுபவிப்பது’ அல்ல ‘உழல்வது’. உடலையும் உள்ளத்தையும் நலிவுறச்செய்வது. ஒன்றில் நாம் சிக்கிக்கொண்டிருந்தால் அதில் நாம் அடைவது எவ்வகையிலும் இன்பம் அல்ல.
இளமையான உடல், இளமையான உள்ளம் என்பது ஒரு கருவி. அதைக்கொண்டு இங்கே அடையச் சாத்தியமான இன்பங்களை அடைவதுதான் சரியானது. அதற்கான வழிகள் என்னென்ன என்பதே வினா. மாறாக உடலின் விழைவுக்கும் உள்ளத்தின் விழைவுக்கும் நம்மை அளித்து, அவற்றின்போக்கில் போனால் நாம் அடைவன ஏதுமில்லை. நாம் அடித்துச்செல்லப்படுகிறோம், அவ்வளவுதான்.
நான் என் இளமையில் அறிந்த ஒன்றுண்டு. உடல் நம் உள்ளத்தையும், நம் மொத்த வாழ்க்கையையும் தன கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது. இங்குள்ள ஒவ்வொரு உடலும் தங்களை மண்ணை நோக்கி அழுத்திக் கொண்டே இருக்கின்றது, ஆனால் அவற்றின் உயிர்விசை அவற்றை மேலே வளரச்செய்கிறது, நிலைகொள்ளச் செய்கிறது. உயிர் அரைக்கணம் தளர்ந்தால் உடல் மண்ணை நோக்கி விழுகிறது. உடலுக்கு எதிரான விசையே உயிர் என்பது. உடலுக்கு நம்மை அளித்தல் என்பது சாவுக்கு அளித்தல்தான்.
உடலின் பழக்கங்கள், உடல் அளிக்கும் விழைவுகள் எல்லாமே சாவுக்கானவை. உயிர் என்பது அவற்றுக்கு எதிரானது. உள்ளத்தை உடலுக்கு அளிப்பதா உயிருக்கு அளிப்பதா என்பதே நம் முன் உள்ள கேள்வி. உடலை ஓம்பினேன் உயிரை ஓம்பினேன் என திருமந்திரம். உடலை உயிரை வளர்க்கும் கருவியாக ஆக்குதல் என்பதே அதன் சாரம்.
என்னை நொய்வுறச் செய்யும் எதையும் என் உடலுக்கு பழக்கக்கூடாது என்பதையே நான் நெறி எனக் கொண்டேன். எந்தவகையான போதைகளையும் என் உடலுக்கு அளித்ததில்லை. நான் எப்போதும் அகவிழிப்பு நிலை நோக்கிச் செல்லவே முயன்றுகொண்டிருந்தேன். இலக்கியம் அதற்கான யோகம் எனக்கு. அதைச் செய்வதற்கு என் மூளை ஆரோக்கியமாக இருந்தாகவேண்டும். ஆகவே துயிலும் நல்லுணவும் அதற்கு இன்றியமையாதவை. என் உடலை என் மூளையை தாங்கும் அமைப்பு என்றே கருதுகிறேன். ஆகவே உடலையும் பேணுகிறேன்.
என் தவம் என நான் சொல்லும் ‘அகவிழிப்பு’ என்பது பலவகை மயக்கநிலைகள் கொண்டது. உச்சகட்ட பித்தும் அதைக் கடந்த நிலைகள் சிலவும் கொண்டது. ஆனால் அடிப்படையான தெளிவுநிலையில் இருந்து மேலே சென்றுதான் அதை அடையமுடியும். போதை என்பது தொடக்கநிலையிலேயே மூளையை களிம்பில் சிக்கவைத்துச் செயலிழக்கச் செய்வது. அந்தப் பறவை வான்வெளியில் திசையிலாமல் அடையும் திகைப்புகளும் பரவசங்களும் பல உண்டு. அதை மண்ணிலேயே சேற்றில் சிக்கவைத்தல் பெரும்பிழை.
இவ்வாழ்க்கையின் இன்பங்கள் என்ன என நானே எனக்குள் உசாவிக்கொண்டேன். முதலில் ஓஷோ, பின்னர் நித்ய சைதன்ய யதி அவ்வினாக்களை கூர்மையாக உருவாக்கிக் கொள்ள உதவினர். இவ்வாழ்க்கையின் இன்பங்களென நான் கண்டவை முதன்மையாக கற்கும் இன்பம். அடுத்தபடியாகக், கலையிலக்கியம் போன்றவை அளிக்கும் நுண்ணுணர்வுகளின் இன்பம். மூன்றாவதாக, உறவுகளின் இன்பம்.அவற்றின் உணர்வுநிலைகளின் இன்பம். அவை மூன்றையும் அடைவதும், அதற்காக என்னை தயார்ப்படுத்திக் கொள்வதுமே நான் இளமையைக் கொண்டு செய்யவேண்டியவை என அறிந்தேன்.
கற்பதன் பொருட்டு வெறிகொண்டு என்னை செலுத்திக் கொண்டிருக்கிறேன். பித்துகொண்டு இலக்கியங்களை வாசித்திருக்கிறேன். நினைத்தபோது கிளம்பி பயணங்கள் செய்திருக்கிறேன். முன்பதிவெல்லாம் வழக்கமில்லை. எங்கும் படுக்கமுடியும். எதையும் சாப்பிடமுடியும். அறிஞர்களைச் சென்று சந்தித்தேன். புதிய நிலங்களில் அலைந்தேன். திருவிழாக்களுக்குச் சென்றேன். கலைகளில் நாள், வாரம், மாதம் என்னும் போதமே இல்லாமல் திளைத்தேன். எல்லா தருணங்களிலும் சாகசக்காரனாகவே இருந்தேன்.
இளமையின் உளநிலைகளை நான் சிதறடிக்கவில்லை. எனக்கு மிகத்தீவிரமான நட்புகள் இருந்தன. அந்நண்பர்களுடன் விடிய விடிய பேசி களித்து கொண்டாடியிருக்கிறேன். இன்றும் அந்நட்புகள் நீடிக்கின்றன. தீவிரமான காதலை அடைந்தேன். அக்காதலும் நீடிக்கிறது. என் இனிய குழந்தைகளுடன் மிகச்சிறந்த நாட்களைச் செலவிட்டிருக்கிறேன். அரசியல் தொழிற்சங்கம் என அதற்குரிய பித்துக்களும் இருந்தன. குறிஞ்சி மலரைப் பார்க்க முப்பது கிலோமீட்டர் மலையேறியிருக்கிறேன். கைலாசத்தை பார்க்க நூறு கிலோமீட்டர் இமையமலையில் நடந்திருக்கிறேன். நீலகண்ட பறவையைத் தேடி வாசித்ததுமே கிளம்பி அதீன் பந்த்யோபாத்யாயவை காணச் சென்றிருக்கிறேன். அருண்மொழியை பார்க்க அவள் விடுதி முன் எதையும் எண்ணாமல் காத்து நின்றிருக்கிறேன்
இன்று எண்ணும்போது இப்படிச் சொல்லத் தோன்றுகிறது, இளமை என்பது நமக்கு அளிப்பது ஆற்றல்கொண்ட உடலையும் தயங்காத உள்ளத்தையும் மட்டுமே என. அவற்றைக் கொண்டு உரியவற்றை அடைவதே நாம் செய்யவேண்டியது.அதுதான் இளமையின் கொண்டாட்டம்.
இளமையில் சாத்தியமான எதையும் தவறவிட்டதில்லை. அந்த பருவத்தில் முழுமையாக வாழ்ந்தேன். எதிர்காலம் என்னும் அச்சம் என்னை அலைக்கழித்ததே இல்லை. பிறருடன் என்னை ஒப்பிட்டுக்கொள்ளுதல், மானசீகமான அதீதச் சவால்களை விட்டு அவற்றை நோக்கிச் சென்றுகொண்டிருத்தல் என பலரும் வாழ்வை வீணாக்கும் செயல்கள் எவற்றையும் நான் செய்ததில்லை.
ஆகவேதான் இளமை குறித்த ஏக்கம் ஏதும் எனக்கில்லை. இளமைக்கான ஏக்கம் கொண்ட பலர் உரிய பருவத்தில் இளமையை தவறவிட்டவர்கள். எதிர்காலத்துக்காக நிகழ்காலத்தை விட்டுவிட்டவர்கள். அல்லது, உடலின் விழைவுகளுக்கும் பழக்கங்களுக்கும் வாழ்க்கையை அளித்து உடலை நலிவுறச் செய்து, அவற்றின் விளைவாக எதையும் அடையாமல் நாட்களை இழந்தவர்கள்.
வாழ்க்கையில் ஒவ்வொன்றுக்கும் அதற்கான பருவம் உண்டு. அந்தப்பருவத்திலேயே அவை இயல்பாக அமையும். எதன்பொருட்டேனும் அதிலொன்றை இழந்தவர்கள் இழந்தவர்கள்தான். இழந்தவை மீளாது என்பது வாழ்க்கையின் அடிப்படை விதிகளில் ஒன்று. இளமை கடந்தபின் இளமையை பாவனை செய்யலாம். ஆனால் அது இளமையே அல்ல.
இளமையை இயல்பாகவே கடந்தேன். நிறைவாகவே. அதற்கடுத்த அகவைகளில் அதற்கான வாழ்க்கை உள்ளது. அதற்கான அறைகூவல்களும் கொண்டாட்டங்களும். இளமை கடந்த நடுவயதின் இன்பம் முதன்மையாக, நமக்கென உருவாகி வந்த ஆளுமையும் அடையாளமும்தான். அந்த ஆளுமையும் அடையாளமும் ஏற்கப்படும்போது கிடைக்கும் மனநிறைவு. அது இளமையில் இல்லாத ஒன்று. இளமையை முறையாக வாழ்ந்தால் மட்டுமே இளமை கடந்தபின் கிடப்பது.
இளமை என்பது ‘கனவுகளின் காலம்’. அன்று எதிர்பார்ப்புகளே நம் இன்பங்கள். நடுவயதில் நம் கனவுகள் நிறைவேறும் இன்பத்தை அடையத் தொடங்குகிறோம். அது ‘நிறைவேற்றங்களின் காலம்’. அடையாளம், அங்கீகாரம், வெற்றி, சாதனை ஆகியவை இளமையின் எந்த இன்பங்களையும் விட ஒரு படி மேலானவை என அவற்றை அடைந்தவர்கள் அறிவார்கள். சொல்லப்போனால் இந்த உலகில் பெரும்பாலான போராட்டங்கள் அந்த இரண்டாம்கட்ட இன்பங்களை அடையும் பொருட்டே நிகழ்கின்றன.
ஒரே சொல்லில் அதை அதிகாரம் என்று சொல்பவர்கள் உண்டு. அதிகாரம் பலவகை. சமூகத்தின் மீது ஒரு மனிதர் செலுத்தும் செல்வாக்கு என்பதே அதிகாரம் எனப்படுகிறது. சமூக அதிகாரம், அரசியலதிகாரம் என பல வகை அதிகாரங்களுண்டு. அவற்றில் முதன்மையானது அறிவதிகாரம். தன் அறிவால் மானுட அறிவுத்தொகை மேல் செலுத்தும் செல்வாக்கு அது. தல்ஸ்தோயின் செல்வாக்கு முதன்மையான ஓர் அறிவதிகாரம்.
இளமை என்பது அதிகாரமே அற்ற நிலை. அதில் சுதந்திரம் உள்ளது. ஆனால் மானுடனுக்குள் உள்ள ‘இருப்பதற்கான விழைவை’ அதிகாரமே நிறைவு செய்கிறது. தியாகமே கூட ஒருவகை அதிகாரமே. ஒவ்வொரு மனிதனும் இப்புவியில் தன் முழுமையான இருப்பை நிகழ்த்தவே விரும்புகிறான். அறிவால், செல்வத்தால், பதவியால், புகழால்… இங்கே எதையாவது நிகழ்த்த, எதையாவது அடைய, எதையாவது விட்டுச்செல்ல விரும்புகிறான். சமூகத்திற்கு, மானுட குலத்திற்கு தங்கள் பங்கை அளிப்பர்களே தங்களை நிறைவுசெய்து கொள்கிறார்கள்.
இளமை வழியாக அந்த அதிகாரநிலை நோக்கித்தான் மனிதர்கள் வளர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள். அதை அடைவதைப்பற்றிய கனவுகளே இளமையை தீவிரமாக்குகின்றன. இளமை ஒரு பாதை மட்டுமே. பாதையிலேயே எவரும் வாழ்ந்துவிட முடியாது. எப்போது தன் கனவுகளை ஒருவன் நிகழ்த்தத் தொடங்குகிறானோ அப்போதே இளமை முடிவுக்கு வர ஆரம்பிக்கிறது. அவன் தன்னை நிகழ்த்தி, அதனூடாக அடையாளத்தையும் அதிகாரத்தையும் அடையுந்தோறும் இளமை மறைகிறது. அது இயல்பான ஒரு பரிணாமநிலை.
ஒருவர் தன் பணியில் நிறைவை உணரத் தொடங்கும்போது இயல்பாகவே முதுமை வந்தமைகிறது. முதுமை என்பது ஒரு தளர்வுநிலை அல்ல. முதுமையில் உடல்நிலை மோசமாக ஆகவேண்டும் என்றில்லை. முதுமை ஓய்வுக்காலமும் அல்ல. மனித உடல் செயலுக்கானது. ஆகவே ஓய்வு வாழ்க்கை என ஒன்று மனிதனுக்கு உண்டு என நான் நினைக்கவில்லை. முதுமையை ‘அமைவுகளின் காலகட்டம்’ என்று சொல்லலாம்.
இளமையிலும் சரி, நடுவயதிலும் சரி, முதுமையிலும் சரி உடலை துல்லியமாக வைத்துக்கொண்டே ஆகவேண்டும். எல்லா அகவையிலும் அந்தந்த அகவைக்குரிய செயலூக்கத்துடன் இருந்தே ஆகவேண்டும். பலர் செயலூக்கமும் உடல்நலமும் இளமைக்கு மட்டுமே உரியவை என்றும் நினைக்கிறார்கள். நலமாகவும் செயலூக்கத்துடனும் இருப்பதையே இளமையாக இருப்பதாகச் சொல்கிறார்கள். நான் பேசிக்கொண்டிருப்பது உளநிலையைப் பற்றி.
ஒருவர் அவர் எந்த அகவைநிலையில் இருக்கிறாரோ அதற்குரிய உளநிலை கொண்டிருக்கையிலேயே இயல்பாக இருக்கிறார். அறுபதை அடைந்த ஒருவர் தன்னை இளைஞராக பாவனைசெய்துகொண்டால் அவர் அறுபதின் இன்பங்களை இழக்கிறார், முப்பதின் இன்பங்கள் கைகூடுவதுமில்லை. அறுபதுக்குரிய மனநிலை என்பது தன் பணிகளின் நிறைவை நோக்கி ஒருவர் செல்லும் தொடக்கநிலை. அப்போது சாதனையுணர்வும் அதன் இனிமைகளும் உருவாகவேண்டும். எஞ்சியவற்றைச் செய்து முடிக்கவேண்டும் என்னும் ஆவலும் உருவாகவேண்டும். அதற்கான உடல்நலமும் உளவிசையும் தேவை.
நடுவயதில் அடையாளம் மற்றும் அங்கீகாரம் ஆகியவை அளித்த மகிழ்ச்சியையும் தன்முனைப்பையும் முதுமையின் தொடக்கத்தில் நாம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிடவேண்டும். அவற்றை இயல்பாக எடுத்துக்கொண்டு, அவையல்ல தான் என வகுத்துக்கொண்டு, எளிமையாக இருக்க பழகிக்கொள்ளவேண்டும். அதுவே முதுமையில் மெய்யான நிறைவை அளிக்கும். இனி இந்த உலகில் எவருடனும் போட்டியில் இல்லை. எவரும் எதிரியுமல்ல. எதை நோக்கியும் சென்றுகொண்டிருக்கவுமில்லை. எதையும் எதிர்பார்க்கவுமில்லை. தொடங்கியவற்றை உரியவகையில் முடிப்பதே பணியாக இருக்கமுடியும்.
துறவுதான் முதுமையின் வாழ்க்கை என்று மரபு வகுத்தது. காவிகட்டிக்கொண்டு முழுத்துறவி ஆகவேண்டியதில்லை. எவையெல்லாம் தனக்குச் சுமை என உள்ளனவோ அவற்றை எல்லாம் துறந்தால் போதும். எவையெல்லாம் தன்னால் மகிழ்ச்சியாகச் செய்யத்தக்கவையோ அவற்றைச் செய்தால் போதும். மென்மையான ஓர் ஒதுங்கிக்கொள்ளுதல். இயல்பாக நிகழும் ஒரு விடுபடல். உலகில் இருந்து மட்டும் அல்ல, தன்னைப்பற்றி தான் கொண்டுள்ள பல மனநிலைகளில் இருந்தும் விடுபடுதல்.
நான் மட்டுமே ஆக எனக்குள் மகிழ்வுடனும் நிறைவுடனும் இருக்க முடிந்தால் வருவதும் வெற்றிகரமான காலகட்டமே. அதற்காக முயலவேண்டும் என்று சொல்லிக்கொள்கிறேன்.
ஜெ