காசியபன்
ஜெ,
காசியபனின் தமிழ் விக்கி பக்கத்தை பார்த்ததும் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. தமிழின் மிகச் சிறந்த நாவல்கள் என்னென்ன என்ற எண்ணம் மனதில் தோன்றும் போதெல்லாம் அவருடைய அசடு நாவல்தான் மின்னிக்கொண்டு முதலில் எழும். என்னுள் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய நாவல் அது.
கணேசன் போன்ற ஒரு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு நாவல் எழுதுவதெல்லாம் பெரும் துணிச்சலான காரியம் என்று நினைக்கிறேன்.
வென்றவர்கள் பற்றி நிறைய எழுதப்பட்டிருக்கிறது, தோற்றவர்கள் பற்றியும் நிறைய எழுதப்பட்டிருக்கிறது, ஆனால் எதையுமே செய்யாமல் இருந்தவர்கள் பற்றி நான் இதுவரை படித்த ஒரே நாவல் அசடு மட்டும்தான்.
கணேசன், நாவலின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை எதையுமே செய்யவில்லை. எதையுமே செய்யாமல் இருப்பவனை பற்றி என்ன எழுத முடியும்?. இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தை, ஒரு நாவலில் வரும் உதிரிக் கதாபாத்திரமாக வேண்டுமென்றால் எழுதிச் செல்லலாம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை நாவலின் நாயகனாக ஆக்குவதெல்லாம் சிந்தித்தே பார்க்கமுடியாத ஒரு செயல். ஆனால் காசியபன் அசடு நாவலில் அதைத்தான் சாதித்துக் காட்டியுள்ளார்.
அசடு நாவலில் குறிப்பிடத்தக்க “நிகழ்வு” என்று ஒன்றுமே கிடையாது. ஆனாலும் நாவலின் அந்த நூற்று சொச்ச பக்கங்களில் ஒரு மனிதனின் முழு வாழ்வும் (இருத்தல்) அடங்கியிருக்கிறது.
எந்த தனித்தன்மையும் அற்ற கணேசனின் வாழ்வுபோல்தான் இருக்கிறது அவனுடைய சாவும். ஏதோ ஒரு கோவில் வாசலில் அநாதை பிணம் போல கிடக்கிறான். கணேசனின் ஒரே நண்பனான கதைசொல்லிக்கே அவனுடைய இறப்பு பல மாதங்கள் கழித்துதான் ஒரு துணுக்குச் செய்தி போல வந்தடைகிறது.
கணேசனின் இறப்பை போல்தான் இருக்கிறது இந்நாவலின் இன்றைய நிலையும். யார் விழிகளும் தீண்டாமல் அநாதை பிணம் போல.
வந்துசென்ற உயிரின் காலடித் தடத்தை மண்ணே காட்டும், பறந்து மறையும் பறவைகளில் தடம் வானில் பதிவதே இல்லை.
– மணிமாறன்