சிங்காரவேலரின் பிராமண வெறுப்பு

சிங்காரவேலர் தமிழ் விக்கி

அன்புள்ள ஜெ,  உங்கள் பார்வைக்கு:

http://www.kalachuvadu.com/issue-140/page43.asp

சிங்காரவேலு முதலியாரின் நடத்தைக்குக் காரணம்  அப்போது இங்கு வளர்ந்து வந்த திராவிட இயக்கக் கருத்தியலா அல்லது அவரது இயல்பான காழ்ப்புணர்வா தெரியவில்லை.

தமிழக  பௌத்த இயக்கங்களுக்கும்  திராவிட இயக்கத்திற்கும் இடையே ஏதாவது ஊடுபாடுகள்  நடந்ததா என்றும் தெரியவில்லை.

அன்புடன்,
ஜடாயு

 

அன்புள்ள ஜடாயு

வரலாற்றாசிரியர் டி. டி. கோசாம்பியின் அப்பா தாமோதர தர்மானந்த கோஸாம்பி அக்கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறார். அவர் எழுதிய ‘பகவான் புத்தர்’ என்ற நூல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்துள்ளது.

சிங்காரவேலு அவர்களின் நடத்தை புரிந்துகொள்ளத்தக்கதே.  அது அன்றைய செல்வந்தர்களான பிராமணரல்லாதவர்களின் பொதுமனநிலை.அன்றைய மனநிலை.அந்த மனநிலை அதே அளவுக்குக் கேரள நாயர்களிடமும் இருந்தது, என் குடும்பத்திலும்.

காரணம் அவர்கள் நிலப்பிரபுத்துவ சாதி. ஒரு காலகட்டம் வரை பிராமணர்கள் சில பகுதிகளைத் தவிர்த்த இடங்களில் இந்த பிராமணரல்லா உயர்ச்சாதிளின் ஆதிக்கத்துக்குக் கீழேதான் இருந்தார்கள். அறிவார்ந்த , மதம் சார்ந்த ஓர் அதிகாரம் பிராமணர்களுக்கு இருந்தாலும் நேரடியான நில, பொருளியல் அதிகாரம் இவர்களிடமே இருந்தது

ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சி அளித்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு  பிராமணர் இவர்களுக்கு மேலே சென்று அதிகாரத்தைக் கையாள்பவர்களாக ஆனார்கள். கணிசமான பிராமணர்கள் அக்ரஹாரத்தின் கொடுமையான வறுமையில் இருந்து ஆங்கிலக் கல்வி மூலம் மேலே சென்றிருப்பதை அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கண்டால் அறியலாம்.

ஆனால் நிலப்பிரபுத்துவசாதிகள் நிலத்தை நிரந்தரச் சொத்து என நினைத்தன. வேலைசெய்வதைக் கௌரவப்பிரச்ச்னையாக எடுத்துக்கொண்டன. ஆனால் உருவாகிவந்த முதலாளித்துவ அமைப்பு அளித்த வாய்ப்புகள் காரணமாகக் குறைந்த கூலிக்கு அடிமைச்சாதியினரின் உடலுழைப்பு கிடைப்பது தடைப்பட்டதனால் வேளாண்மை நஷ்டமாக ஆரம்பித்தது. இது,நிலப்பிரபுத்துவ சாதிகளை பொருளியல் ரீதியாக கீழே தள்ளியது. இவ்வீழ்ச்சி ஒரு ஐம்பது வருடங்களில் நடந்திருப்பதைக் கணிசமான வேளாள-முதலியார் குடும்பங்களில் காணலாம். என் குடும்பமே ஒரு அரிய ஆவணம்.

கூடவே இரு உலகப்போர்களில் பிரிட்டன் விதித்த கடுமையான வரிகளும் அவர்களை அழித்தன. அந்த வரிகளை வசூலிக்கும் பொறுப்பில் இருந்தவர்கள் பிராமணர்கள் என்பதனால் கசப்பு இன்னும் அதிகரித்தது. ஒட்டுமொத்தமாகப் பிராமணர்களின் எழுச்சி இச்சாதியினரை எரிச்சலூட்டியது. தமிழகத்திலும் கேரளத்திலும் உருவான பிராமணவெறுப்பின் ஊற்றுமுகம் இதுவே. பின்னர் வரலாற்றிலும் அதற்கான காரணங்களைத் தோண்டி கண்டுபிடித்தார்கள்.

இவ்வாறு பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் படிப்படியாக பிராமணர்களுக்கு எதிராக பிராமணரல்லாத உயர்சாதியினரின் வெறுப்பு உருவம் கொண்டு நாற்பதுகளில் உச்சம்கொண்டிருப்பதை காணலாம்.  இந்தபரிணாமத்தின் தொடக்கம் நிகழ்ந்தது சிங்காரவேலரின் காலகட்டதில் என்றால்  உச்சம் நிகழ்ந்தது ஈவேராவின் காலகட்டத்தில். ஒரே சரடின் இருநுனிகள் அவர்கள். சிங்காரவேலரும் ஈவேராவும் மீண்டும் மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சியில் உயர்பதவிகள் பிராமணர்களுக்கு அளிக்கப்படுவதைப்பற்றித்தான் குமுறியிருக்கிறார்கள்.

மறுபக்கம், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் புதியதாக மேலெழுந்து வந்த பிராமணர்கள் தங்களைத் தனிமையாகவும் மேலானவர்க்கமாகவும் காட்டிக்கொள்ளவும் முயன்றனர். தங்களைத் தமிழ்ப்பண்பாட்டில் இருந்து விலக்கிக்கொண்டு சம்ஸ்கிருதப் பண்பாட்டைத் தங்களுடையதாகச் சொல்லிக்கொள்வது அவர்களின் மோஸ்தராகியது.  அதற்கேற்ப அக்காலகட்டத்தில் இந்தியவியல் சம்ஸ்கிருதத்தின் தொன்மையையும் சம்ஸ்கிருத நூல்களின் தத்துவ, இலக்கிய ஆழத்தையும் தொடர்ந்து வெளிக்கொண்டுவந்தபடி இருந்தது. ஆங்கிலம் வழியாக அவற்றை மேலோட்டமாக அறிந்த பிராமணர்கள் அம்மரபை அவர்களுடையதெனச் சொல்லிக்கொள்ள ஆரம்பித்தனர்.

அத்துடன் அன்றைய சமூகச்சூழலில் பதவியையும் செல்வத்தையும் அடைந்த படித்த பிராமணர்களில் கணிசமானவர்கள் மிகமிகப்பிற்போக்கான சிந்தனைகளைப் பொதுவெளியில் முன்வைப்பவர்களாக இருந்தார்கள். சாதியத்தையும் தீண்டாமையையும் நியாயப்படுத்தக்கூடியவர்களாக, பிறசாதியினரின் வளர்ச்சியைப் பொறுக்காதவர்களாக, அதற்கு முடிந்தவரை தடைகளைச் செய்பவர்களாக இருந்தார்கள். அக்கால சுதேசமித்திரன் போன்ற இதழ்களைக் கண்டாலே இதை உணரலாம். இன்று அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஊட்டும் கருத்துவெளிப்பாடுகளைக் கொண்ட கடிதங்கள் அவை.

இன்று இத்தனை முன்னேற்றத்துக்குப் பின்னரும்கூட ஒரு சாராரில் அந்த மேட்டிமைநோக்கும் காழ்ப்பும் நீடிப்பதை உங்கள் தமிழ்ஹிந்து இணைய இதழின் கட்டுரைகளிலும் கடிதங்களிலும் தொடர்ந்து காணத்தானே செய்கிறோம். படித்த, இலக்கியம் எழுதும் இளைஞர்களில்கூட ஒருசாராரிடம் அந்த மனநிலை வலுவாக நீடிப்பதை நான் காண்கிறேன்.

தமிழக முற்போக்குசிந்தனைகளில் பிராமணர்களின் இடம் முக்கியமானது. ஆனால் அவாறு உருவாகிவந்த முற்போக்கு எண்ணம் கொண்ட பிராமணர்களுக்கு முதல்பெரும் தடையாக இருந்தவர்கள் இந்தப் பிற்போக்கு பிராமணச்சமூகத்தினரே.  அன்று பொதுவெளிக்குக் கல்வி,வணிகம் மூலம் எழுந்து வந்த எல்லா சாதியினரும் பிராமணர்களின் நேரடி அடக்குமுறைக்கும் அவமதிப்புக்கும் புறக்கணிப்புக்கும் ஆளானவர்களாக இருந்தார்கள். அதற்கான கசப்புகள் அவர்களிடம் சேர்ந்துகொண்டே இருந்தன.

ஆகவே பிராமண வெறுப்புடன் தங்கள் இடத்தைத் தேடிய வேளாளர்களும் முதலியார்களும் செட்டியார்களும் ஒரு தமிழ்த்தொன்மையைக் கட்டமைத்தனர். சைவ மீட்பு இயக்கம் உருவானது. அது சம்ஸ்கிருத சார்பற்ற தூய தென்னக மதம் என்ற சித்திரம் உருவாக்கப்பட்டது. அது பிஷப் கால்டுவெல் உருவாக்கிய ஆரிய-திராவிட இனவாதக் கொள்கையுடன் முடிச்சிடப்பட்டது. அதற்கு,இந்தியவியல் கண்டுவெளியிட்ட நூல்களும் ஏடுகளில் இருந்து அச்சிலேற்றப்பட்ட நூல்களும் உதவின.

poet--621x414

[ஆச்சாரிய டி டி கோஸாம்பி ]

இந்த வெறுப்புக்கள் முனைதிரண்டுவந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர் சிங்காரவேலர். அவரது தனிப்பட்ட காழ்ப்பாகவோ அல்லது அவரது ஆளுமையின் இருண்ட பக்கமாகவோ நான் அவரது பிராமண வெறுப்பைக் காணவில்லை. அதற்கான சமூகக் காரணங்கள் அன்று இருந்தன. அதற்கான பின்னணியையே மேலே சொன்னேன்.ஒருபக்கம் அவரது பின்னணி மறுபக்கம் அன்றைய பிராமணர்களின் மனநிலை

எல்லாத் தளங்களிலும் ஆதிக்கம் செலுத்திய பிராமணர்,அன்று உருவாகிவந்த அனைத்து முற்போக்கு இயக்கங்களையும் கையகப்படுத்தி,அவற்றையும் தங்கள் பழமைவாத நோக்குகளாலும் குறுகிய இனக்குழு அரசியலாலும் நிரப்பினர் என்பதே உண்மை. தமிழக காங்கிரஸ், ராமகிருஷ்ண இயக்கம், பிரம்மஞான சபை, ஆரியசமாஜம் ஆகியவற்றின் வரலாற்றில் பிராமணர்களின் இந்த கையகப்படுத்தல் நிகழ்ந்திருப்பதை காணலாம். முதலில் இலட்சிவாதிகளான அர்ப்பணிப்புள்ள பிராமணர்களே உள்ளே வந்து அவ்வியக்கத்தின் முன்னோடிகளாகிறார்கள். ஆனால் அவர்களை முன்னால் நிறுத்திக் குறுகிய சாதியவாதிகள் பின்னர் அவ்வியக்கத்தைக் கையகப்படுத்துகிறார்கள் என்பது நடைமுறை உண்மை

சிங்காரவேலருக்கு அவரது சாதிச்சூழல் சார்ந்தும், அன்றைய சமூக அதிகாரப்போட்டி சார்ந்தும் பிராமணர் மேல் கசப்பும் வெறுப்பும் இருந்திருக்கலாம். அத்துடன் அன்று சிறிய அளவில் உருவாகி வந்த நவபௌத்த இயக்கங்களையும் பிராமணர்கள் கைப்பற்றித் தங்கள் குறுங்குழு அரசியலுக்குள் தேக்கிவிடுவார்களோ என அவர் அஞ்சியிருக்கலாம். கோஸாம்பியை அவர் ஐயப்பட்டது அதனால்தான் என நான் நினைக்கிறேன்.

கோஸாம்பி நவபௌத்த இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது வருத்தமானதே. ஆனால் தமிழக ராமகிருஷ்ண இயக்கத்தின் உச்சகட்ட ஆளுமையான சுவாமி சித்பவானந்தர் ராமகிருஷ்ண மடத்தில் நீடிக்க முடியாமல் பிராமண அரசியலால் வெளியேற்றப்பட்டார் என்ற வரலாற்று உண்மையையும் நாம் பார்க்கவேண்டும். நித்ய சைதன்ய யதி தானும்  பிராமண நிர்வாக அமைப்பால் ராமகிருஷ்ண மடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதைச் சுயசரிதையில் பதிவுசெய்திருக்கிறார்.

சித்பவானந்தர்

ஆக, இந்த விஷயத்தை அக்காலகட்டத்தின் சமூக அதிகாரத்துக்கான போட்டியின் ஒரு விளைவாகவே காணவேண்டும். சிங்காரவேலரைத் தமிழக பொதுவுடைமைக் கட்சிக்கு மட்டுமல்ல, திராவிட இயக்கத்துக்கும் முன்னோடியாகச் சொல்லலாம்.பிராமணர்களுக்கு எதிரான உயர்சாதியினரின் ஒருங்கிணைவு பிராமணரல்லாதோர் இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி என பல வடிவங்களைப் பெற்றது. அது முதலியார்களும் நாயர்களும் நாயுடுகளும் சேர்ந்து உருவாக்கிய சுயமேம்பாட்டு இயக்கமே. பின்னர் அது சுயமரியாதை இயக்கமாகவும் திராவிட இயக்கமாகவும் பரிணாமம் கொண்டது.

திராவிட இயக்கம் ஓர் உத்தியாகப் பிற்படுத்தப்பட்டோர் அரசியலைக் கையில் எடுத்தது. அதன் சைவ- உயர்சாதி அரசியல் கோட்பாட்டைத் தக்கவைத்தபடியே பிற்படுத்தப்பட்டோர் அரசியலுக்குள் சென்று இன்றைய வடிவை அடைந்தது.

கேரளத்தில் இருந்த பிராமண வெறுப்பு,மன்னத்து பத்மநாபன் போன்ற காந்திய சீர்திருத்தவாதி சாதிச்சீர்திருத்தத்தில் ஈடுபட்டு நாயர் சாதி பொருளியல் வெற்றியை அடைந்ததும் காணாமலாகியது. நாராயணகுரு மூலம் ஈழவ சாதி பொருளியல் வெற்றியும் சமூக வெற்றியும் அடைந்தபோது முழுமையாக மறைந்தது.அதுவே இயல்பான போக்காக இருக்கவேண்டும். தமிழகத்தில் அந்த வெறுப்பின் அடிப்படையில் கட்டப்பட்ட திராவிட இயக்கம் அதை ஒரு வசதியான கருத்தியலாக நீட்டித்துக்கொண்டிருக்கிறது.

இன்று அந்தக்கருத்தியல்,பிராமணர்களைப் பொது எதிரியாகக் கட்டமைத்துக் காட்டி தலித்துக்களைத் தங்களுக்குக் கீழே வைத்துக்கொள்ளப் பிற்படுத்தப்பட்டோர் செய்யும் ஓர் உத்தியாகச் செயல்பட்டுவருகிறது. அந்தத் தேவை இருக்கும் வரை அது நீடிக்கும். இன்னொருபக்கம் அதையே காரணமாகக் காட்டித் தங்களை ‘அவமதிக்கப்பட்டோர்’ என்று சித்தரித்துக்கொண்டு பிராமணர்களில் ஒருசாரார் தங்கள் பழமைவாத வெறுப்புமனநிலையை நீட்டித்துக்கொள்ளவும் அது காரணமாகிறது.

வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு, காழ்ப்புகளும் தனிப்பட்ட உணர்வுகளும் இல்லாமல், நிதானமாகப் பார்க்கவேண்டிய ஒரு தளம் இது.

ஜெ

 

சித்பவானந்தர் வாழ்க்கை

முந்தைய கட்டுரைஅசோகமித்திரன் என்னைப்பற்றி…
அடுத்த கட்டுரைசுஜாதாவும் இளைஞர்களும் ஒரு கடிதம்