திருவேட்கை-தெய்வீகன்

காலையில் ஹோட்டலில் இரண்டு வெங்காய தோசைகளை விழுங்கிவிட்டு, ஓலாவுக்காக வெளியே வந்தேன். ஒரு சனிக்கிழமைக்கான அத்தனை அகங்காரங்களுடனும் அண்ணா சாலை நெரிசலுக்குள் விடிந்துகிடந்தது. பத்துமணிக்கேற்ற பரபரப்பில் பேருந்துகள் சத்தங்களில் மிதந்தோடிக்கொண்டிருந்தன. சென்னையின் பெரும்பாலான வாகனங்கள் சித் சிறிராம் விசிறிகள்போலுள்ளன. உச்சஸ்தாயியில் கதறுகின்றன. ஹோர்ன் சத்தங்களும் பிறேக் சந்தங்களும் கலந்திசைக்க மயிலாப்பூரைச் சென்றடைந்தபோது, மொத்த ஏரியாவிலும் காங்கிரஸ் வாடை வீசியது. ஆனால், கவிக்கோ அரங்கம் திருவேட்கைக்காகத் தயாராயிருந்தது. சுருதி டிவி கபிலன் அரங்கில் வயராடிக்கொண்டிருந்தார்.

புத்தகச் சந்தையின் கடைசி வார விடுமுறை, அடுக்கடுக்கான பொங்கல்களின் நீட்சியில் அமைந்த ஒரு சனிக்கிழமை. இவற்றிலிருந்து தமிழ் இலக்கியம் சோம்பல் முறித்து எழுந்துகொள்வதற்குச் சற்றுத் தாமதமானது.

ரோஜாக்கூட்டம் – சொல்லாமலே போன்ற படங்களின் இயக்குனர் பூ சசி முதல் விருந்தினராக அரங்கில் நுழைந்தார். அருகிலிருந்து திருவேட்கை பற்றிப் பேசினார். தனக்கு நிறைவான வாசிப்பு அனுபவத்தை தரவல்ல பிரதியை வழங்கியமைக்கு நன்றி கூறினார். புதிய களம், புதிய மனிதர்கள், கேட்காத செய்திகள் என்று அனைத்தும் நிறைந்த கதைகளின் சுவாரஸ்யத்தை நுட்பமாகப் பேசினார். சசி பரந்த வாசிப்பாளர். சிறுகதைகளைப் படமாக்கும் நுட்பமும் விருப்பமும் தேர்ச்சியும் கொண்டவர். ஒரு திரைக்கலைஞராக திருவேட்கை குறித்த அவரது பார்வையும் கேள்விகளும் நிறைவைத் தந்தன. அடுத்து வந்த பேச்சாளர் பார்கவி, புளொட் என்றால் என்ன என்று கேட்டார்.

சுற்று முற்றும் பார்த்துவிட்டு, விரிவாக்கத்தைச் சொன்னேன். இளம்பரிதியுடனான தனிப்பட்ட உரையாடல் மிகவும் நெகிழ்ச்சியாய் அமைந்தது. எனது அத்தனை கதைகளையும் படித்திருககிறார். அவை அனைத்திலுமிருந்து தான் தொகுத்த சித்திரத்தை மிகச் சரளமாக எடுத்துச் சொன்னார். சொல்லிமுடித்துவிட்டு, ‘இவை அனைத்தையும் மேடையில் கூறிவிடமுடியுமா தெரியவில்லை, ஆனால், உங்களிடம் பகிர்ந்துகொண்டதில் திருப்தி” – என்றார். அவரிடம் ஈழ இலக்கியம் குறித்த நிறைந்த வாசிப்பும் அது குறித்த ஆழமான புரிதலும் உள்ளது. எம். கோபாலகிருஷ்ணன், காளி ப்ரசாத் ஆகியோரும் வந்துவிட நிகழ்வு பதினொரு மணியளவில் ஆரம்பமானது.

அகரமுதல்வனின் நெறியாள்கை, வழக்கம்போல வாழ்த்தாய் – வரவேற்பாய் – வசீகரமாய் ஆரம்பமானது.

பார்கவியின் உரை அவருக்கே உரிய சரளங்களோடு அமைந்தது. மூன்றாம் வெளியாய் இயங்கும் புலம்பெயர் எழுத்துக்களை பக்தி இலக்கியத்தோடு இணைத்து முன்வைத்த மகாபலி மன்னன் – விஷ்ணு ஒப்பீடு அழகு. வரலாற்றைப் புனைவோடு இணைக்கும் திருவேட்கையின் பெரும்பாலான கதைகள், ஊழின் விசையில் இயங்குபவையாய் அமையப்பெற்றுள்ளன என்றார் இளம்பரிதி. மொழியினதும் சிந்தனையினதும் தொடர்ச்சியை முன்னெடுக்கும் கதைகளாக திருவேட்கை அமையப்பெற்றுள்ளன என்றார் எழுத்தாளர் காளி ப்ரசாத். உயிர்த்தரிப்பு என்ற ஒரு சிறுகதையை தனது உரையில் முன்வைத்து, அதன் மீதான நுட்பமான அவதானங்களை அரங்கத்தில் கவனப்படுத்தினார் இயக்குனர் பூ சசி. எழுத்தாளர் கோபாலகிருஷ்ணன், அமீலா – உன் கடவுளிடம் போ – திருவேட்கை ஆகிய மூன்று தொகுப்புக்களிலும் உள்ள கதைகளை ஐந்து பிரிவுகளாக்கி, அவை தொடர்பான தனது அவதானிப்புக்களை முன்வைத்தார்.

நேற்றைய நிகழ்வு திருவேட்கைக்கானது என்றாலும் அநேகமாக அனைவரும் “உன் கடவுளிடம் போ” தொகுப்பின் கதைகளையும் தங்களது உரையில் தொட்டுப் பேசினார்கள். அவனை எனக்குத் தெரியாது, புலரியில் மறைந்த மஞ்சள் கடல், பொதுச்சுடர் போன்ற கதைகள் நினைவில் அகலாதவையாக இன்றும் வாசகர்களது மனதில் இடம்பிடித்திருந்தமை நெகிழ்ச்சியைத் தந்தது.

பேச்சாளர்கள் அனைவரும் தொகுப்பை முழுமையாக வாசித்து, கதைகளின் அனைத்து ஆள்கூறுகளிலும் தங்களது கருத்துக்களை முன்வைத்தது மாத்திரமல்லாமல், நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களாக வந்திருந்த சிலர்கூட, தாங்கள் படித்த திருவேட்கை கதை குறித்து காலையில் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்கள். இதைவிட, எழுதுபவனுக்கு என்ன வாய்த்துவிடப்போகிறது.

நிகழ்வின் இறுதியாக அடியேனின் ஏற்புரை. சென்னையின் வெயிலையும் புழுதியையும் குடித்த தொண்டைக்குள் இரண்டு நாட்களாக ரகுவரன் இறங்கி நின்றிருந்தார். அதைச் சாக்காக வைத்து, ஏதாவது திருக்குறளைச் சொல்லிவிட்டு ஓடிவிடலாம் என்று பார்த்தேன். முடியவில்லை. கடந்த நூற்றாண்டளவில் நவீன இலக்கியத்தில் பேரெழுச்சிகொண்ட ஈழ எழுத்து, இன்று புலம்பெயர் இலக்கியமாகக் கிளைவிரித்து, அதில் எங்கே எனக்கான இடத்தை உவந்தளித்திருக்கிறது என்பதைக் குறிப்பிட்டேன். புலம்பெயர் எழுத்தென்பது, நினைந்துருகும் எழுத்தாகவும் அரசியல் கேவல்களாகவும் மாத்திரமன்றி, அந்தந்த நாட்டின் பூர்வீகத்தை அறத்தின் முன் நிறுத்தும் புள்ளியை அடைந்திருப்பதைச் சென்னேன்.

ஏற்புரையை நிறைவுசெய்துவிட்டு, திரும்பியதும் – “இலங்கை வானொலி கேட்டது போலிருந்தது” – என்றார் கோபாலகிருஷ்ணன். கம்பீர நடைபோட்டு இருக்கையில் போய் அமர்ந்துகொண்டேன். ஒரே மேடையில், நான்காவது சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டது போன்றிருந்தது.

நிகழ்ச்சி இனிதாய் நிறைவடைந்தது. மொத்த நிகழ்வையும் நேர்த்தியோடு பதிவு செய்த Shruti Ilakkiyam கபிலனுக்கும் அன்பு முத்தங்கள்

தெய்வீகன்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : ஆகுதி

முந்தைய கட்டுரைகிருமி, ரே பிராட்பரி- கடிதம்
அடுத்த கட்டுரைவண்ணான் வண்ணாத்தி கூத்து