தயக்கமெனும் நோய்

அன்புள்ள ஜெ,

புத்தகக் கண்காட்சியில் சொன்னதுபோல பெண்களுக்கான யோக முகாமில் இம்முறை குடும்பச்சிக்கல்களால் நான் கலந்துகொள்ள முடியவில்லை. பெண்கள் குடும்பத்தை விட்டு வருவது மிகவும் கடினம். அதில் நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கிறோம். அடுத்த நிகழ்வு எப்போது என்று சொல்ல முடியுமா?

எஸ்.மீனாட்சி சத்யநாதன்

பெண்களுக்கான யோக முகாம் அறிவிப்பு

யோகமும் சௌந்தரும்

அன்புள்ள மீனாட்சி,

வெவ்வேறு தருணங்களில் இதை என்னிடம் பெண்கள் சொல்வது உண்டு. நான் பொதுவாக ஓர் அனுதாபமான புன்னகையுடன் கேட்டுக்கொள்வேன். ஏனென்றால் அதன்மேல் விவாதிப்பது அவர்களை  ஊடுருவி ஆராய்வதாக அமையும். அது ஓர் அத்துமீறல்.

எப்போதோ ஒருமுறை ஓர் எரிச்சல் மனநிலையில் ஒரு பெண்மணியிடம் கேட்டுவிட்டேன். “உங்கள் தாய்வீட்டில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி. உங்கள் கணவரோ குழந்தைகளோ விரும்பவில்லை என்றால் செல்லாமல் இருப்பீர்களா? அவ்வாறு எத்தனை முறை செல்லாமல் இருந்துள்ளீர்கள்?”

அவர் “அதெப்படீங்க?” என்றார்.

“அதாவது உண்மையிலேயே உங்களுக்கு எது முக்கியமோ அதை யாராலேயும் தடுக்கமுடியாது. அதை செஞ்சிருவீங்க, இல்லியா?”

அவர் நான் சொல்ல வருவது புரிந்ததும் மங்கலான புன்னகையுடன் விடைபெற்றார்.

குடும்பச் சிக்கல் என்னும் பாவனையை பெண்கள் (குறிப்பாக நடுவயதுப் பெண்கள்) மேற்கொள்கிறார்கள். தன்னுடைய சோம்பல், தயக்கம் ஆகியவற்றுக்கான பழியை பிறர்மேல் ஏற்றும் உத்தி மட்டும்தான் அது. இந்தியாவில் உடனே அது செல்லும்படியாகும். ஏனென்றால் ஏற்கனவே புழக்கத்திலுள்ளது. அதை எளிமையான முறையில் கேள்விக்கேட்டால் கூட இங்கே ‘பெண்கள் படும் பாடு தெரியுமா?’ என ஆரம்பித்து பொங்கும் ஒரு பெருங்கூட்டமும் உள்ளது.

மிக அரிதாகச் சிலருக்கு உண்மையிலேயே கடுமையான குடும்பச்சூழல் இருக்கும். ஆனால் 99 சதவீதம்பேருக்கும் அப்படி இல்லை. உண்மையான சிக்கல் பெண்கள் அவர்களின் மரபார்ந்த உளநிலையால் சென்று சிக்கிக்கொள்ளும் ஒரு பொறிதான்.

பெண்கள் மெல்லியலாளர்கள், சுதந்திரம் அவர்களுக்கு தேவையில்லை, குடும்பமே அவர்களின் உலகம் இப்படியெல்லாம் மரபுமனம் பெண்களிடம் சொல்கிறது. ‘எங்க அம்மாவுக்கு குடும்பம்தாங்க உலகம்’ என்று பையன்கள் பெருமிதத்துடன் சொல்வதை அடிக்கடிக் கேட்கிறேன். குடும்பமே உலகம் என்றிருப்பது ஓர் ஆன்மிகமான தேக்கநிலை. ஓர் இருண்ட வாழ்க்கை. எந்த வகையிலும் அது பெருமைக்குரியதோ கொண்டாடக்கூடியதோ அல்ல. ’எங்க அம்மாவை அடைச்சு வைச்சு சோறுபோடுறோம்ங்க’ என்று சொல்வதுதான் அது.

அப்படி நம் மரபு சொல்லவுமில்லை. உண்மையில் மிகச்சில சாதிகளை தவிர எந்தப் பெண்ணுக்கும் சென்ற காலங்களில் அப்படி ஒரு வாழ்க்கை இருந்ததில்லை. நிலவுடைமைச் சாதிகளும் புரோகிதச் சாதிகளும் வாழ்ந்த வாழ்க்கை அது. மிகப்பெரும்பாலான பெண்கள் வெளியே சென்று உழைத்துத்தான் வாழ்ந்தனர். ஆனால் மேலே சொன்ன மனநிலை இன்று அனைவருக்குமுரியதாக பரப்பப்படுகிறது.

ஆகவே பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்குப் பின் ஒரு சிறுவட்டத்தைப் போட்டுக்கொள்கிறார்கள். அதற்குள்ளேயே வாழ பழகிக் கொள்கிறார்கள். அது பாதுகாப்பானது. ஏனென்றால் அங்கே பெரிய சிக்கல்கள் இல்லை. பெரிய சவால்கள் இல்லை. ஒவ்வொரு நாளும் செய்தாகவேண்டிய எளிமையான வேலைகள்தான். எந்த வெளிச்சவாலையும் வெளிச்சிக்கலையும் பிறர்தான் சந்திக்கவேண்டும்.

இந்த அன்றாடச்சுழற்சி  சலிப்பூட்டுவது. ஆகவே அவர்கள் டிவி சீரியல் போன்ற மிகையுணர்ச்சி கொண்ட கேளிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். டிவி சீரியல்கள் நேற்று நேரில் பேசிக்கொண்ட குடும்ப வம்புகள், தெருவம்புகளின் இன்னொரு வடிவம் மட்டுமே. அங்கே உச்சகட்ட எதிர்மறை மனநிலை அமைகிறது. சலிப்பூட்டும் வாழ்க்கைக்கு அது ஒரு போலியான தீவிரத்தை அளிக்கிறது.

ஆனால் அந்த மாறாச்சூழல், எதிர்மனநிலை ஆகியவை நோயூட்டுபவை. எதையாவது படைப்பூக்கத்துடன், உற்சாகத்துடன் செய்யாததும் எதிர்மறைத்தன்மை கொண்டதுமான வாழ்க்கை போல நலிவுறச்செய்வது எதுவுமே இல்லை. தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்வதும், தன்னைப்பற்றிய பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் செயல்கள் வழியாகத் தானே அடைவதும்தான் வாழ்க்கையின் நிறைவு. அது அமையாதபோது உள்ளம் சோர்வை அடித்தளத்தில் நிறைத்துக்கொள்கிறது. நம் நடுவயதுப் பெண்கள் பலர் உளச்சோர்வு நிறைந்தவர்கள்.

பெண்கள் அந்த உளச்சோர்வை சலிப்பாகவும் சீற்றமாகவும் குடும்பத்தின்மேல் காட்டுகிறார்கள். தன் வாழ்க்கையின் சகல துக்கங்களுக்கும் காரணம் குடும்பமே என சித்தரிக்கிறார்கள். வேண்டுமென்றே செய்வதில்லை, அப்படி மெய்யாகவே நம்பி துயரும் கண்ணீருமாகச் சொல்கிறார்கள். குடும்பம் அவர்கள் காட்டும் அந்த எரிச்சலை திரும்ப அளிக்கிறது, ஆகவே உளச்சோர்வு பெருகுகிறது.

சோர்வுள்ள ஒருவரை பிறர் விலக்கிவிடுவார்கள், ஏனென்றால் சோர்வுநிலை எளிதில் தொற்றக்கூடியது. நாம் நம்மை சோர்வுறச்செய்யும் எதையும் விரும்ப மாட்டோம். ஆகவே உளச்சோர்வுச் சிக்கல் கொண்டவர்கள் மேலும் தனிமையடைகிறார்கள்.

உளச்சோர்வு மிக எளிதில் உடலை நோயுறச்செய்யும். பலவகை நோய்களால் உடல்  நலிவுற அது உளச்சோர்வை மீண்டும் கூட்டும். அது ஓர் விஷவட்டம். இது புதிய விஷயம் அல்ல. நெடுங்காலமாகவே இது யோகமரபில் வகுக்கப்பட்டுள்ளது. ‘அரதி’ என்னும் கலைச்சொல் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. தமோ குணம் ஓங்குவதன் விளைவு இது.

நான் குடும்பத்துக்காக உழைத்து நோயுற்றேன். குடும்பம் என்னை தனிமைப்படுத்தி விட்டது’ இது பெண்கள் திரும்பத் திரும்பச் சொல்லும் வரி. தன் நோய்க்கு பெண்கள் குடும்பத்தைக் குற்றம்சாட்டுவது என்பது உண்மையில் ஓர் அநீதி. அதாவது இவர்களின் எல்லா வெளியுலகச் சிக்கல்களையும் குடும்பமே சமாளிக்கவேண்டும். ஆனால் இவர்கள் அப்படி வெளியுலகம் தெரியாமல் வாழ்வதனால் உருவாகும் நோய்க்கும் குடும்பமே பொறுப்பு!

ஒருவரின் துயரமோ மகிழ்ச்சியோ பெரும்பாலும் அவரே உருவாக்கிக் கொள்வது. தனக்கு என்ன வேண்டும் என அவரேதான் முடிவெடுக்கிறார். பெரும்பாலானவர்கள் பொறுப்புகளையும் சவால்களையும் அஞ்சி சலிப்பை தேர்வுசெய்கிறார்கள். பொறுப்புகளிலும் சவால்களிலுமே தன்னைக் கண்டடைதலின் இன்பம் உள்ளது. சலிப்பில் துயரமும் நோயும் மட்டுமே.

நித்யா சொன்ன உதாரணம் ஒன்றுண்டு. எதிரியை அஞ்சி தன்னை ஒருவன் ஒரு சின்ன அறைக்குள் முப்பதாண்டுகள் அடைத்துக்கொண்டு வாழ்ந்தான். ஒரு வீரன் அவனிடம் சொன்னான். ’அந்த எதிரியை நீ கொன்றிருந்தால்கூட பன்னிரண்டு ஆண்டு சிறையில் இருந்திருந்தால்போதும்’. நம்மில் பலர் நமக்கே ஆயுள்தண்டனை விதித்துக் கொண்டவர்கள்.

நமக்கு அந்த சிறிய வாழ்க்கை பழகிவிடுகிறது. அந்த ‘ரொட்டீன்’ கொஞ்சம் தவறினாலும் பதற்றம் ஏற்படுகிறது. அந்த இனிய சோம்பல் ஒரு பசைபோல கவ்வி அழுத்தி வைத்திருக்கிறது. அதை மீறவேண்டும் என அவ்வப்போது ஒரு உந்துதல் ஏற்பட்டாலும் இயல்பான சோம்பல் அதை தடுத்துவிடுகிறது. வீட்டுவேலை மிச்சமிருக்கிறது, பெண்ணுக்கு இதைச் செய்யவேண்டும், பையன் அதை எதிர்பார்ப்பான், நான் இல்லாவிட்டால் இங்கே ஒன்றும் நடக்காது – இப்படி பலவற்றைக் கண்டடைகிறது மனம். அதை நம்புகிறது மூளை.

ஆம், சோம்பலேதான். மூளைச்சோம்பல், உளச்சோம்பல், ஆன்மாவின் சோம்பல். ஆன்மிகமான ஒரு வகை பக்கவாதம் அது.  நோயுற்றவர் முயன்று தன்னை விடுவித்துக்கொண்டால்தான் உண்டு. ஒருவர் சலிப்பில் இருந்து நோயில் இருந்து வெளியேவர இன்னொருவரை எதிர்பார்க்கிறார் என்றால் அவர் வெளிவரப்போவதே இல்லை. தனக்குத்தானே அடையப்படுவன மட்டுமே நமக்கு மெய்யாகவே உரியவை.

ஜெ

முந்தைய கட்டுரைஅசோகாம்பிகை
அடுத்த கட்டுரைஆலயக்கலைப் பயிற்சிமுகாம் மீண்டும்….