ஒரு எழுத்து கலைஞன் முதல் பக்கத்தை தொடங்கிவிட்டதும், அவன் தன் வசத்தை இழக்க ஆரம்பிக்க, மறுபக்கம் அப்படி இழக்காமல் தான் என்ணியதை கொணர ப்ரத்யனப்படும் முயற்சியும் நடக்கிறது. எங்கு அடைந்து கிடந்தன இத்தனை கதைகள் என தானே அச்சப்படும் விதமாக கதைகள் கிளை பரப்பி விரிந்து செல்கிறது.
கொடைமடம், மதுரையின் விரிவை, காலத்தின் ஒரு பகுதியை, அப்பகுதியில்–அக்காலத்தில் வாழ்ந்த மாந்தர்களின் உலகை–வாழ்வை–வாழ்வின் தருணங்களை–நிகழ்வுகளை தூவி வீசியபடி செல்கிறது – காற்றில் மிதக்கும் மென் விதைகளைபோல. படித்து முடித்து சில பல நாட்களுக்கு அப்புறமாக அவை தன்னியல்பாக முளைத்து வந்து கொண்டே இருக்கிறது. மனிதர்கள், தெருக்கள், சிலைகள், நாய்கள், எருமைகள், கூட்டம், கடை நடத்துபவர்கள், நோயாளிகள், கம்மாய்க்கள், ஆறு என மதுரையை ஒரு சிறு வண்டு வடிவில் சுற்றி வந்ததாக இருந்தது. மதுரையில் வாழ்ந்து விட்டு வந்ததாக தோன்றுகிறது. 600 பக்கங்கள். தகவல்கள், வர்ணனை, துக்கங்கள், விவரிப்பு, பகடி, வாழ்ந்த ஒவ்வொரு இடத்தின் மீதும் இருந்த–இருக்கும் பிடிப்பான அன்பு, மனிதர்கள் மேல் தீரா நேசம் என நாவல் சென்று கொண்டே இருந்தது. எழுத்து தரும் வலி, மகிழ்ச்சி, துயர், ஒரு நாள் பொழுதின் மாற்றம், மனிதர்கள் எதனால் ஈர்க்கப்படுகின்றனர் ஒதுக்கப்படுகின்றனர் அலைகழிகின்றனர் தொலைகின்றனர் என சொல்லி செல்கிறது கதை என்பது அது தானே? சிரிப்பு கொப்பளித்தபடியே படித்து வந்தேன். ரொம்ப நாட்கள் இயங்காமல் இருந்த கன்னத் தசைகள் நினைத்திருக்கும் – புதிதாக இது என்ன மாற்றம் என. ஒரு கட்டத்தில் எல்லா வரியையும் குறித்து வைக்கும் படியாய் ஆகி போனது.
எது மையம் – வாழ்வு அன்றி வேறு என்ன இருக்க முடியும்? எது தரிசனம் –அவர்கள் இட்டு சென்ற வாழ்வுகள் எனும் நிகழ்வுகள் தான். எது உச்சம் – ஒவ்வொருவரின் வாழ்விலும் வரும் கனலின் கொதி அனைத்தும் உச்சமே. சாமானியனின் வாழ்தலும் வீழ்தலும் தெரியாமல் முடிந்து விடுவது தொடுதலின் கணங்களே.
எத்தனை மனிதர்கள்?
சிரிப்பு தொலையா சின்னன், சீனி, திரும்பாமலேயே போன செம்முகில் [ராமகிருஷ்ணன்], திரும்பி வந்த சுதாகர், விலக நினைத்தாலும் முடியாமல் மரித்த தாமஸ், விலகிய மேஜிக் வர்கீஸ், போடி நடேசன், அழுகாத சிரிக்காத கலைகோ, ஜெகதீசன், ஹோமியோ டாக்டர், ஞானம் என நீளும் தோழர்களின் பட்டியல போலவே, சையது அண்ணன்,லாடம் யூசப், க்ருஷ்ணன், நந்தினி, சேவியர் ரவி, நீதிபதி வெங்கட்ராமன், சத்தார் சிங், சாமியாகி போன பொன்னாம்மாள்,ஒச்சு என பதியவைக்க வேண்டி மண்ணில் முளைத்து சில பேர்களின் வாழ்வுகள், சக்திக்ருஷ்ணா,மதுரை வெள்ளம், மணிகண்டவிலாஸ்,நாசே மற்றும் ஸ்ரீனிவாஸ் ஹோட்டல், அமெரிக்கன் ஹவுஸ், சுந்தரம் கோட்ஸ், பாண்டியன் ஹோட்டல், வடமலையான் என வகையறா வேறு. வண்டியை ப்ரான்டி கொடுத்தாலும் நொந்து கொள்ளாமல் குஷ்பு ஒயின்ஸில் பாக்கெட்டில் பணம் வைத்து விட்டு செல்லும் பாபு, தோழனை கை வைக்க அராத்தல் பண்ணும் தோழர்கள், போலீஸை கோர்ட்டை ரவுண்ட் கட்டி விளையாடிய அதே நேரத்தில் கருணாகரன் போல உதவியபடியே இருந்த மனிதர்கள் என கொத்தாய் பூத்து நிற்கும் விஷு மரமென எல்லாரும் நட்பின், அன்பின், பூக்கள். நேசத்தை இயல்ப்பாக பகிர்ந்து கொடுத்தபடி பூத்திருந்து உதிரும் மனித வாழ்வுகள்.
பகடி செய்தல் என எல்லாவற்றையும், எல்லோரையும் தொட்டு நக்கியபடி சென்றன வரிகள். இடத்தை, ஒரு நாளின் பொழுதை, காலத்தை, மரங்களை, பறவைகளை, சூழ்நிலைகளை என விடாமல் துரத்தி பிடித்து கைக்குள் வைத்து காணிக்கும் குழந்தை பார்வை போன்ற நுண்ணிய விவரிப்புகள். அவற்றின் வழியே நிலவும் மனநிலைகள். இவை தான் வாழ்வை ஊரை, உணர்வை எழுத்தில் கொண்டு வருகின்றன அல்லவா? இவ்வளவும் நாவலில் பீறிட்டபடியே இருந்தன. இப்படியான விதங்களில், சரியான புனைவு கலவையில், நிஜங்களின் அஸ்திவாரங்களில், கற்பனையின் விரிதல்களில் மதுரையை சாம்ராஜ் நின்று காட்டி விட்டார். ஊரையும் வாழ்வையும் மக்களையும் காட்டியதற்கு அன்பு பாராட்டுகள்.
நிலவொளியை உடுத்தி உச்சமாகி செல்லும் ஜென்னியுடன் உடல் உணர்ந்து முகுந்தன் கிடக்கிறான். ராஜேஷ் கல்யாணத்தின் அன்றோ அல்லது நாய்க்குட்டியுடன் கன்யாகுமரி சென்ற அன்றோ உதறிவிட்டு சென்று இருந்திராமல், தன்னின் முனைப்பு இன்றி, வீட்டுக்கு வா என்றவுடன் கலைமகள் நகருக்கு நாய்க்குட்டி போல போய்க்கொண்டு இருக்கும் அவன், ஒரு மரணத்தை பகிர இடமில்லாத மனமில்லாத அவளால் உதறப்பட்டவனாக ஒதுங்கி அவளுக்காக மருகி, மறக்க முடியா மனதினாலா, திணறடித்த கலவியினாலா என அல்லாடி, கேரளாவில் மறக்க திரிந்து மூச்சு முட்டி, கடைசியில் தள்ளி நின்று விலகி அழுகிறான்…யார் இந்த மைய ஒட்ட முகுந்தன்? எம்.எல்லில் கலந்தும் கலக்காமல் நின்று கொண்ட வெளி பார்வையாளனா?
ஏமாற்றம் சிலதுண்டு
ஆற்று நீரில் பல வண்ண கலவை பொடியை வீசி விட, பார்த்து பார்த்து கண்கள் ஒரு கட்டத்தில் அற்புத புது வண்ணங்களில் நீர் ஒடுவதை பற்ற தப்பி விடுகிறது. சில பக்கங்களில் முடிந்து விட்ட சஜிதா அவ்வாறே. சகா மற்றும் தோழர் சஜிதா என்ற இருவரின் நேர்கோடு பார்வை உலுக்கி போட்டது. செம்முகில் ஊட்டியில் ஒரு தீக்குச்சி வெளிச்சத்தில் மார்ச்சுவரியில் தெரிந்தடங்கிய காட்சி உலுக்கியதை போல. தாமஸ் இறப்பின் போஸ்டர் போல. இவையாவும் இன்று ஆழத்தில் இருந்து மேலுழுந்து வந்தாலும் படித்து கொண்டிருக்கும் போது இயல்பாக கதையின் விசையில் இழுத்து செல்லப்பட்டது போல தோன்றுகிறது.அல்லது ஒரு நுண்ணிய வாசகன் போல எவை பாய்ந்தாலும் தனித்து பிடித்து வைத்து கொள்ள வேண்டுமா? தாமஸ் வந்து இவனிடம் உடைந்து அழுது போன பின் போஸ்டரில் இறப்பாகி தெரிய, இவனின் அலைகழிப்பு மட்டும் பல பக்கங்களில் பதிவாகி வந்ததை போல, தன் அம்மாவின் இறப்புக்கு வந்துவிட்டு பறந்து போன அந்த சஜிதா போலிஸ் நிலையத்தில் இறப்பது சில பத்திகளில் வரிகளில் எனும் போது சற்று ஏமாற்றமாகி போகிறது. அவ்வளவுதான் அர்த்தம் அல்லவா ?
இவர்கள் மின்னி மறைவதை. தவற வீட்டீர்களோ? ஜிலேபியை பார்த்தபடி நின்ற ஞானம், கை விடப்பட்டது தெரியாமல் வெளியேற்றப்பட்ட வர்கீஸ், அணுமின் நிலைய நாடகம் முடித்து கேட்காமல் பசியில் கிடந்த அந்த பெண்கள், சுடப்பட்டு இறந்த தாமஸ், மரித்து கொண்ட ராமகிருஷ்ணன் என எத்தனை உணர்வுகள். தியாகம் என சொல்லி செல்லுதல் எளிது. வாழ்வை ஒன்றின் பொருட்டு கொடுத்து, காலம் காற்றென கடந்து சென்ற பின் திரும்பி பார்கைகையில் கொடுத்த விலையின் மதிப்பின் துயர் அறிந்து நின்றவர்களின் வாழ்வு வெறும் சில பத்தி, பக்கங்கள் போதுமென எடுத்து கொள்ள மாயவில்லை.
அல்லது மீதமிருக்கும் எல்லாரின் கதை போலவே இந்த தோழர்களின் வாழ்வும் ஒன்றுதான் என்று தோன்றியதா? சில கூடுதல் பக்கங்கள் அல்லது உபகதை போன்ற ஒரு தனி அத்யாயங்கள் கொடுத்து இருக்க இல்லாததான வாழ்வுதானே அவர்களுக்கும்? ஒரு சராசரி, சென்னை போய் பையை வைத்து விட்டு காசின்றி சோறுமின்றி, திரும்பி வந்தவன் கோடியில் இல்லா ஒன்றா அல்லது கோடியில் வெறும் ஒன்றா? இப்போது பார்த்தால் இத்தனை பக்கங்களிலும் இருக்கும் அத்தனை சிரிப்பும் இவர்களின் வாழ்வை மறந்து மூச்சு முட்டாமல் இருக்க தானா?
ஒய்ந்து போன மாலை பொழுதில் இதை எழுதும் போது, இத்தனை சிரிப்புகளுக்கப்பால் உள் நெளிந்தபடி இருக்கும் இவர்கள் தரும் துயர்களும், அவை தாண்டி விரையும் வாழ்வும் தான் கொடைமடம் என சொல்லிக்கொள்கிறேன்.
தோழர்… ஒரு சின்ன சொல். விரிந்தபடியே இருக்கின்றன இன்னமும்
அன்புகளுடன்,
லிங்கராஜ்