பேரன்புள்ள எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். நான் ப. சரவணன். மதுரை. மகனின் திருமணப் பணிகளில் தீவிரமாக இருப்பீர்கள் என உணர்கிறேன். அது இனிதே நிறைவுபெற வாழ்த்துகிறேன்.
தங்களின் வெண்முரசினை நான் முதல் முறை படித்தபோது, அது தொடர்பான கட்டுரைகளைத் தங்களின் இணையதளத்தில் எழுதியும் பின்னர் அவற்றைத் தொகுத்துப் ‘புனைவுலகில் ஜெயமோகன்’ என்ற தலைப்பில் புத்தகமாக்கினேன். நான் வெவ்வேறு பொருண்மைகளில் 108 புத்தகங்களை எழுதி முடித்த பின்னர் தங்களின் வெண்முரசினை இரண்டாம் முறை படித்தேன். அதன் தாக்கத்தால் உந்தப்பட்டு, ராமாயணத்தை ‘ராமபாணம்’ என்ற பொதுத்தலைப்பில் சில ஆயிரம் பக்கங்களில் தொடர் நாவலாக எழுத விழைந்துள்ளேன். அந்த வரிசையில் முதல் நாவலின் பெயர் ‘பிறவிநூல்’. அதனைத் தைப்பொங்கல் அன்று எழுதத் தொடங்கியுள்ளேன். நாளொன்றுக்கு இருபது பக்கங்கள் வீதம் எழுதி வருகிறேன். இந்தப் பெரும்பணியினைப் பத்து நாவல்களாக இரண்டாண்டுகளுக்குள் முடிக்கத் திட்டம்.
பழங்கதைகளை மீட்டுருவாக்கம் செய்ய பிற எழுத்தாளர்களுக்கு முன்னத்தி ஏராக அமைந்துவிட்டது தங்களின் வெண்முரசு. ஒரு பெருநாவலினை எவ்வாறு தொடங்க வேண்டும், அதன் கட்டமைப்பு எத்தகையதாக இருக்க வேண்டும், அதன் செல்வழி, இலக்கு முதலானவை எவ்வகையில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதற்கு முன்மாதிரி வரைபடமாக வெண்முரசு பிற எழுத்தாளர்களுக்குப் பயன்படுகிறது. அந்த வகையில் நான் வெண்முரசின் நிழலில் மிக இனிதாகவும் எளிதாகவும் பயணித்து ராமபாணத்தைத் தொடங்கியுள்ளேன். ஓவியர் ஷண்முகவேல் அவர்கள் ராமபாண நாவல்களின் முன்னட்டைகளுக்கு ஓவியம் வரைந்து தர இசைவு தெரிவித்துள்ளார். இனிமேல்தான் ராயல்டி தரக்கூடிய தரமான பதிப்பகத்தினை அணுக வேண்டும். வெண்முரசு என்பது ஜெயமோகனின் மகாபாரதம் என்று இன்று அறியப்படுவதைப் போலவே ராமபாணம் சரவணனின் ராமாயணம் என்று நாளை அறியப்படும் என நம்புகிறேன். என் வாழ்நாள் விருப்பமும் அதுவே. அதற்காகவே இந்தப் பெரும்பணியினை ஏற்றுள்ளேன்.
ஸ்ரீராமரின் பாதங்களை என் தலையில் தாங்கியும் எழுத்துலகில் எனக்குக் குருவான தங்களின் பாதங்களைப் பணிந்தும் எப்போதும் என்னை ஆதரிக்கும் எழுத்தாளர் கனடா அ. முத்துலிங்கம் ஐயாவின் நல்லாசிகளோடும் இந்தப் பணியினைத் தொடங்கியுள்ளேன். இது இனிதே நிறைவேற தங்களின் ஒருவரி வாழ்த்தே எனக்குப் போதுமானது என நம்புகிறேன். அதனை நாடி நிற்கின்றேன். நன்றி.
தங்கள்,
ப. சரவணன்.