மண்ணும் மனிதரும் வாசிப்பு- பழனிவேல்ராஜா

மண்ணும் மனிதரும் வாங்க

அன்புள்ள ஜெ

திருமணமாகி நீண்டநாட்கள் கழித்து, குழந்தை பெற்ற என் நண்பன் வீட்டு முற்றத்தில் வாழை குலை போட்டிருந்ததை கவனித்துக் கொண்டிருந்தபோது, “என் தாத்தா வைத்த கன்றுஎன்று சொன்னான். சிறு அதிர்ச்சி என்னுள் வந்து போனது. வாழையின் வயது கிட்டத்தட்ட ஒரு வருடம் என்றால், தாத்தா வைத்த வாழையின் எத்தனையாவது தலைமுறை இது

நண்பன் சிறுவனாக இருந்த சமயம், அடர்ந்த புதராக வளர்ந்து அதிலிருந்து பாம்பு ஒன்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்ததால் நண்பனின் அப்பா, ஒன்றிரண்டை வைத்துவிட்டு கலைத்து எறிந்திருக்கிறார்

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மழையின்றி, கிணறு வற்றி, தண்ணீரின்றி நண்பனின் குடும்பம் அலைந்த இரண்டு வருடங்கள் காய்ந்து கிடந்திருக்கிறது. மழைக்கு பின்பு அதில் சில துளிர்த்து ஒன்று குலை விட்டிருக்கிறது. அதைத்தான் நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்தநேரத்தில், தாத்தா வைத்த முதல் வித்து கண்முன் தெரிந்தது. அப்போது என் மனதில் தோன்றிய உணர்வுகளை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை

காலத்தின் விளிம்பில் நின்று தலைமுறைகள் தாண்டி பின்னோக்கி காணும் போது தோன்றும் உணர்வுகளை எந்த வகையில் விளக்கிவிட முடியும். நம் தர்க்கங்களும், அறிவு விளக்கங்களும், செயல் அறிவும், காரண காரிய வாதங்களும் அர்த்தமற்றுப் போகும் தருணம் அது. அது ஒரு வெறுமை

சிவராம காரந்த்அவர்களின்மண்ணும் மனிதரும்வாசித்து மூடிவைத்ததும் இது போன்றதொரு உணர்வை அடைந்தேன்.   

*

இயற்கையின் கை ஓங்கி, அதன் உச்சங்களில் கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மாலை கிராமமானகோடிஎன்ற கதை நிகழ்விடம். அங்கிருக்கும் மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் சிலர் துளிர்த்து மேலே வருகின்றனர். சிலர் மூழ்கி தவிக்கின்றனர். ஒரு தலைமுறையில் கீழே இருந்த குடும்பம் அடுத்த தலைமுறையில் மேலே வருகிறது. மேலே இருப்பது கீழே செல்கிறது

எங்கோ ஒரு மலையோர கிராமத்து மூலையில் இருந்தாலும், நாடு என்ற ஒட்டுமொத்த இயக்கத்தின் வளர்ச்சி மற்றும் தளர்ச்சிகள் அங்கிருக்கும் உயிர்க்குலத்தின் தனி வாழ்வில் எதிரொலிக்கின்றன. இந்தியாவின் ஆங்கிலேயர் காலம், சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டம். சுதந்திரத்திற்கு பிறகான முதல் காலகட்டம் ஆகிய மூன்று காலகட்டமும் அவர்கள் வாழ்வோட்டத்தில் தன்னியல்பாக இணைந்து கொள்கின்றன.  

நாவலின் பொதுக்கூறாக நான் உணர்வது அங்கு இருப்பவர்களின் உயிர் வாழ்தலுக்கான தவிப்பும், அதன் தார்மீக போராட்டங்களும்தான். குறிப்பாக பெண்கள்

அங்கிருக்கும் பெண்கள் குடும்பத்தை மண்ணில் நிலைநிறுத்தும் வேராக, உறவுகளை சேர்த்துக் கட்டும் கொடியாக, குடும்பம் என்ற அமைப்பு சிதைந்துவிடாமல் காக்கும் தூணாக, உணவையும் உயிர்ப்பையும் கொடுக்கும் ஆதாரமாக, மண்ணின் மேலும் கீழுமாக பெரும் போராட்டத்தை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள்

அப்படி அந்த பெண்களின் செயல் இயல்பாக இருந்த காரணம் என்ன என்று யோசித்தேன். வெறும் சமூகக் கட்டுப்பாடும் ஆண்களின் அடக்குமுறையும் என்று சொன்னால் அது, மேலோட்டமாக இருக்கும். எனக்கென்னவோ, சாகும் தருவாயில் பிறந்த குழந்தையை காணவேண்டும் என்ற தவிப்பையும், அதற்காக ஆற்றைத் தாண்டிமஞ்சலில்தூக்கி வரப்படும்சத்தியபாமையின்தாய் அடைந்தது என்னவோ, பார்வதி இறக்கும் தருவாயில் ஐதாளரிடம் தன் தலையை ஐதாளர் மடியில் வைத்துக் கொள்ள தன்னுடைய ஆசையை சொல்கிறாளே, அதுவே அதன் ஆதாரம் என்று தோன்றுகிறது.  

லட்சுமியும் பார்வதியும் ஐதாளர் என்ற மனிதரை மண்ணில் ஒன்றவைக்கும் வேர் என்றால் நாகவேணி ராமனுக்கு வேர். ஆனால் இவர்கள் அனைவர் இருந்தும்லட்சன்அந்த சூழலில் ஒட்ட இயலாதவனாக இருக்கிறான். பெண்களை பார்க்கும் பார்வையில்ஐதாளர்”, “லட்சன்மற்றும் ராமனின் தலைமுறை இடைவெளிகளில் ஏற்படும் மாற்றங்களை அவர்களின் தனி இயல்புகளின் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது

*

ஆண்கள் மனதாலும், உடலாலும் அலைந்துகொண்டே இருக்கிறார்கள். ஐதாளர் ஆறு, கடல் கிராமம் தாண்டிச் சென்று பொருள் செய்கிறார். ராமன் பெங்களூர், சென்னை, பாம்பே என்று ஊர் தாண்டி செல்கிறார். சீனமையர் தன்னுடைய பையன்கள் அனைவரையும் நகரத்துக்கு பொருள் தேட அனுப்புகிறார்

கிராமத்தின் கழிமுகத்தின் சகதிமண் அள்ளி தோட்டத்தில் இட்டு அதில் பாடுபட்டு அன்றாட உணவுப் போராட்டத்தில் இருந்த அன்றைய கிராமத்தை தற்சார்பு கிராமம் என்று கூறி விட இயலுமா?. நகரம் நோக்கி சிலர் வெளியேறி பொருள் கொண்டுவந்த பிறகே ஓட்டு வீடுகள் வருகின்றன. தற்சார்பு என்றாலும் வெளியுலக தொடர்பின்றி பொருளாதாரம் வளர்ச்சியடையாமல் இருப்பதை கண்கூடாக காண முடிகின்றது. ராமன் காலத்தில் பணப்பயிர்கள் பயிரிட்டு சிறிது முன்னேற்றம் அடைய முயற்சிக்கிறார்கள்.  

நாவலின் தருணம் என்று சொல்லத்தக்க நிகழ்வுகளாக சிலவற்றை சொல்லலாம். தனது போட்டியாளராக, எதிரியாக பகைமையும் வெறுப்பும் காட்டிய ஐதாளர் சாகக் கிடக்கிறார் என்று தெரிந்தவுடன், “அவன் எப்படிப்பட்டவனானாலும், சாகிற நேரத்தில் பார்க்காமல் இருக்கக் கூடாது என்று சீனமையர் ஐதாளரை பார்க்க வருகிறார். “நான் என்ன சொல்லியிருந்தாலும் என்னை மன்னிக்க வேண்டும்என்று சொல்லி அழுகிறார். லட்சனிடம்அவர் காலைப் பிடித்துக் கொள். அவருடைய விரோதம் நமக்கு இருந்திருக்க வேண்டாம்என்கிறார். எனக்கு இதைப் படித்தநேரத்தில், “முதற்கனல்ஞாபகத்திற்கு வந்தது

அதுபோலவே கடலும் இசையும், ஓவியமும் அவர்கள் வாழ்வில் எதை கொடுக்கின்றது என்பது மெல்லிய சித்தரிப்பாக வந்துகொண்டே இருக்கின்றது. முதல் தலைமுறை மனிதர்களுக்கு அவை  எப்போதாவது திருவிழா காலங்களில் கிடைத்து, அந்த அனுபவங்கள் வாழ்நாள் நினைவாக ஒட்டிக்கிடக்கின்றன. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நகரத்தின் வழியாக வெளி உலகமும் இசைக் கருவிகளும் வாழ்க்கையில் நுழைகின்றன.

*

என்ன எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறாய், நான் சொல்வது கேட்கிறதாஎன்று நண்பன் உலுக்கினான்

என்ன சொன்னாய்”. 

ஒரு மரத்திற்கு ஒரு பக்கக்கன்று மட்டும் விட்டுவிட்டு மற்றவற்றை வெட்டிவிடவேண்டும் என்று ‘ZBNF இயற்கை விவசாய முறையில்சுரேஷ் பாலேக்கர் சொல்கிறார். அதைத்தான் நான் செய்கிறேன் இப்போது நல்ல செழிப்பாகவே வருகிறதுஎன்றான்

என்று தலையாட்டினாலும் மறுபடியும் மனம் திக் என்றது. ஏனென்றால் , “ஐதாளர்ஓட்டு வீட்டில் மூன்று பேர் மட்டுமே வாழ முடிகிறது என்று நாவலில் வருகிறது

அவ்வளவுதான், மறுபடியும் மனம் எதை எதையோ யோசித்து எங்கோ செல்ல ஆரம்பித்து விட்டது. எல்லாம்மண்ணும் மனிதரும்கொடுத்த பாதிப்புதான்.

அன்புடன்

சி. பழனிவேல் ராஜா

முந்தைய கட்டுரைகொடைமடம், வாசிப்பு- முத்துக்குமார்
அடுத்த கட்டுரைகாசியபன்