வெண்முரசு வாசிப்பை தொடங்குதல்

அன்பின் ஜெமோ அவர்களுக்கு

நாங்கள்வாசிப்பை நேசிப்போம்என்ற பெயரில் குழுவாக இயங்கி வாசிப்பவர்கள். இக்கடிதம் எழுதுகையில்எங்களது முகநூல் குழுமத்தில்  65187 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எண்ணிக்கையைக் குறிப்பிடுவதற்குக் காரணமுன்டு. கடந்த ஆண்டுச் சரவணகார்த்திகேயனின்ஆதித்த கரிகாலன் கொலைவழக்குநூல் வெளியீட்டில் உங்களைச் சந்தித்த பொழுது ஐம்பதாயிரத்துச் சொச்சம் என்று குறிப்பிட்டதற்குத் தோளைத் தட்டிக் கொடுத்தீர்கள். இது என்னை நினைவூட்ட உதவும் என்பதற்காகத்தான்.

வெண்முரசு முன்பதிவு குறித்த அறிவிப்பினை கண்டதிலிருந்து எங்கள் வாசகர்கள் பலரும் ஆர்வமாகி விட, அத்தனை செலவு செய்து வாங்க வேண்டுமா? வாங்கினால் வாசிப்போமா? என்ற கேள்விகள் எழுந்தன. ஆக முதலில் வாசிக்கத் துவங்குவது என முடிவானது. தனியாக வேண்டாம். குழுவாக வாசிப்போம் எனத் தீர்மானித்தோம். உண்மையில் ஆர்வமுள்ளவர்களை மட்டும் வடிகட்ட 100 ரூ நுழைவுக் கட்டணம் என நிர்ணயித்தோம். இக்கணம் வரை இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 70.

தினம் ஓர் அத்தியாயத்தின் பாகம் வாசிப்பது, ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஓர் இணையவழி கலந்துரையாடல், ஒவ்வொரு புத்தகத்தின் முடிவிலும் அனைவரும் விமர்சனக் கட்டுரை எழுதுதல் என்பதாகத் திட்டம்.

நேற்று(18-01-2024) துவங்கினோம். வெண்முரசு இணையதளத்தில்தான் பெரும்பாலும் வாசிக்கிறோம். புத்தகம் வைத்திருப்பவர்கள் குறைவு. கூடி வாசித்து, ரசித்ததைப் பகிர்ந்து உற்சாகமடைகிறோம். இறுதிவரை இது தொடரும் என நம்புகிறோம். கணக்கிட்டுப் பார்த்ததில் மே 2, 2029 அன்று எங்கள் வாசிப்பு நிறைவு பெறுகிறது. அப்பட்டியலை இணைத்துள்ளேன்.

வாசிப்பனுபவமே இல்லாத குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காகவும், தமிழ் வாசிப்பில் பின் தங்கியுள்ள ஆனால் மகாபாரத ரசிகர்களாக வெண்முரசு  படிக்க விருப்பமுள்ளவர்களுக்காகவும், வெண்முரசினை கதையாகச் சொல்லும் முயற்சியையும் துவங்கியுள்ளோம். புத்தகத்தை அப்படியே வாசித்து ஒலிப்புத்தகமாக்கவில்லை என்பதையும் முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் கலந்துரையாடலும் இதில் வெளியாகும். இதற்கு உங்கள் அனுமதியும் ஆசியும் வேண்டுகிறோம்.

ஐந்தாண்டுகள் திட்டம். இதற்கு முன்பு தமிழ் வாசிப்புலகில் இப்படி முழுமையாக வெளியான புதினத்தை இத்தனை ஆண்டுகள் திட்டமிட்டு குழுவாக இணைந்து யாரேனும் வாசித்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

உற்சாகமாகத் துவங்கி விட்டோம்.

நல்லபடியாக முடிப்போம் என நம்புகிறோம்.

இப்படிக்கு

கதிரவன் இரத்தினவேல்

ஒருங்கிணைப்பாளர்வாசிப்பை நேசிப்போம் குழுமம்

09600891269

அன்புள்ள வாசிப்பை நேசிப்போம் குழும நண்பர்களுக்கு,

சிறந்த முயற்சி. கூட்டு வாசிப்பு என்பது நான் தொடர்ச்சியாகப் பரிந்துரை செய்து வருவது. அது பலகோணங்களிலானான வாசிப்பை முன்வைத்து ஒவ்வொரு தனிமனிதரின் வாசிப்பையும் மேம்படுத்துகிறது. கூட்டாக வாசிப்பு நிகழ்வதனால் வாசிப்புக்கான ஒரு தொடர்ச்சி நிகழ்கிறது. எதிர்மறை மனநிலையும் கசப்பும் நிறைந்த இன்றைய சூழலுக்கு மாற்றாக ஆரோக்கியமான உளநிறைவூட்டும் ஒரு நிகழ்வாகவும் ஆகிறது. ஒன்றை மட்டும் கவனிக்கவேண்டும். பொருத்தமில்லாமல் நீளமாக பேசி பொழுதை வீணடிப்பவர்கள், சம்பந்தமில்லாதவற்றை உள்ளே கொண்டுவருபவர்களை கொஞ்சம் கடுமையாகவே விலக்க வேண்டும்.

வெண்முரசு வெளிவந்தபோது ஒவ்வொரு நாளும் கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. அவை என்னும் இணையப்பக்கத்தில் சேமிக்கப்பட்டுள்ளன. எந்நாவலை வாசிக்கிறீர்களோ அதைச்சார்ந்த கடிதங்களை அந்த இணையப்பக்கத்தில் பார்த்து வாசித்து அவற்றையும் விவாதங்களில் கருத்தில்கொள்ளலாம்

ஜெ 

முந்தைய கட்டுரைரசனை கிடைக்கப்பெறுவதா ?
அடுத்த கட்டுரைதொலைவில் – கடிதங்கள்