வெண்முரசை வாசித்து முடித்தல்

அன்புள்ள ஜெ,

இப்போதுதான் முதலாவிண் படித்து முடித்தேன். ஒரே ஒரு வரி உங்களை இருபத்தி மூன்றாயிரம் பக்கங்களை படிக்க வைக்க ஊக்கமளிக்கும் என்றால் உங்களால் நம்பமுடியுமா?… நம்புவது சற்று கடினம்தான் இல்லையா?… ஆனால் எனக்கு அதுதான் நிகழ்ந்தது.

வெண்முரசின் முதல் நூலான முதற்கனலை படித்துக் கொண்டிருக்கும்போது நான் நினைத்திருக்கவில்லை, இந்நாவல்நிரை முழுவதையும் படிப்பேனென்று. அப்போதுதான் அந்த வரியை கண்டடைந்தேன்

ஞானம் என்பது அடைவதல்ல, ஒவ்வொன்றாய் இழந்தபின்பு எஞ்சுவது“.

இந்த ஒற்றை வரியை படித்த அடுத்த நொடி நான் உணர்ந்துவிட்டேன், வெண்முரசை நான் கற்றுக் கடப்பேனென்று. இதோ, முதலாவிண் முடித்தாயிற்று. கடும்புனல் நீந்திக் கடந்தாயிற்று. எல்லாம் அந்த ஒற்றை வரியால்தான்.

இப்பெரும் படைப்பானது என்னுள் வெவ்வேறு உணர்வுநிலைகளை நிகழ்த்திக்கொண்டே சென்றது. முதலில் உவகை அளித்தது, பின்பு ஒவ்வாமை கொடுத்தது, பேரன்பை கடத்தியது, பிறகோ பெருஞ்சீற்றத்தையும் ஏற்படுத்தியது.

ஒரு கட்டத்திற்கு பிறகு நான் உங்களை வெறுக்கவே தொடங்கிவிட்டேன். இனி இவர் படைப்புகள் எதையும் படிக்கவே கூடாது என்று முடிவு செய்தேன். அவ்வளவு அலைக்கழிப்பை ஏற்படுத்தியது இப்பெரும் முரசின் ஓசை. அவ்வளவு காயங்களை கொடுத்தது இப்பெருங்கடல். எத்தனை முறை மன அழுத்தத்தை பரிசென கையில் திணித்துவிட்டு சென்றிருக்கிறது இந்தக் கொடுந்தெயவம்.

ஆனாலும் தொடர்ந்து படிப்பதை மட்டும் என்னால் நிறுத்தவே முடியவில்லை. எதையோ கற்பித்துக்கொண்டே இருந்தது. நானும் கற்றுக்கொண்டே இருந்தேன். என் கொள்ளளவையும் மீறி நிறைத்துக்கொண்டேன்.

இப்போதும் நிறைய முரண்கள் என்னை முட்களாய் தைக்கின்றன. ஆனாலும் கற்றவையோ எண்ணிறந்த கோடி.

மணிமாறன்

அன்புள்ள மணிமாறன்,

இப்போது வெண்முரசு அனைத்து நூல்களையும் முழுமையாகன் அச்சில்கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறோம். அதன் பக்க அளவைப்பற்றிக் கேள்விப்பட்டதுமே பெரும்பாலானவர்கள் சொல்வது அவர்களால் அவற்றை முழுக்க வாசித்து முடிக்க முடியுமா என்னும் பிரமிப்பு உருவாகிறது என்றுதான். ஆனால் உண்மை என்னவென்றால் தமிழ் நவீன இலக்கியத்திலேயே ‘எடுத்தால் விடமுடியாத’ படைப்பு என்றால் வெண்முரசுதான். அதை தொடங்கியவர்களில் முடிக்காதவர்கள் மிகச்சொற்பம்.

முடிக்காதவர்கள் எப்படி அதை விட்டுவிட்டிருக்கிறார்கள் என்றால் நான் அறிந்தவரை எவருமே ஆர்வமிழந்து விடவில்லை. ஒவ்வொரு நாளும் தொடராக வாசித்தவர்கள் நடுவே வேலை முதலிய நெருக்கடிகளினால் விட்டிருக்கிறார்கள். நூல்களாக வாங்கியவர்கள் அடுத்த நூல் கிடைக்க தாமதனமானதனால் விட்டுவிட்டு மீண்டும் தொடங்காமலிருந்திருக்கிறார்கள். மொத்தத் தொகுதியும் கையில் இருந்தவர்கள் அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குள் வாசித்து முடித்திருக்கிறார்கள். ஆகவேதான் முழுத்தொகுதியும் வெளியிடும் எண்ணம் வந்தது.

அவ்வாறு வாசித்தவர்களில் வழக்கமான இலக்கியவாசகர்கள் கால்பங்கினர் தான். எந்தப்புத்தகமும் வாசிக்கும் வழக்கமே இல்லாதவர்கள் கால்பங்கினர் என்றால் வியப்பாக இருக்கும், ஆனால் அது உண்மை. ஏனென்றால் மகாபாரதக் கதையின் ஈர்ப்பு ஒரு காரணம். மதம், மரபுகள், தத்துவம், ஆன்மிகம் என தான் கொண்டிருக்கும் பல ஐயங்களுக்குத் தெளிவை அளிப்பதாக அந்த வாசிப்பு அமைந்திருப்பதைக் கண்டமையால்தான் அத்தனை தீவிரமாக வாசிக்கிறார்கள். வெண்முரசை வாசித்து முடித்து இரண்டாம் முறை வாசிப்பவர்கள் என் அறிதலிலேயே நூற்றைம்பதுபேருக்கு மேல். மூன்றாம் முறை முழுமையாக வாசித்தவர்களே இருபதுபேருக்குமேல் உண்டு.

திரும்பத் திரும்ப என்னிடம் சொல்லப்படும் அனுபவங்கள் முதியவர்களைப் பற்றி. தங்கள் வாழ்நாளின் இறுதியில் ஒரு பெரிய நோன்பு போல வெண்முரசை வாசித்து முடித்தவர்கள் பலர் உண்டு. இந்தப் புத்தகக் கண்காட்சியிலேயே ஒருவரை சந்தித்தேன். தன் தந்தை பற்றிச் சொன்னார். 88 வயதான அவருடைய தந்தை வழக்கறிஞராக பணியாற்றியவர். பெரிதுபடுத்தும் லென்ஸ் வைத்துக்கொண்டு வெண்முரசை வாசித்து முடித்து மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறார். அப்படிப் பலர் பற்றிய செய்திகளை இந்த தளத்தில் காணலாம்.

வெண்முரசு ஒரு முழு வாழ்க்கைதான். அதில் எல்லாம் உண்டு. நானே ஒரு கட்டத்தில் உச்சகட்ட கொந்தளிப்பும் அலைக்கழிப்பும் கொண்டுதான் அதை எழுதினேன். அது ஒரு தியானம். தியானத்தில் எல்லா நஞ்சுகளும் கலங்கி எழும். அமுது விளையும்

ஜெ

முந்தைய கட்டுரைஆலயக்கலைப் பயிற்சிமுகாம் மீண்டும்….
அடுத்த கட்டுரைமார்க்ஸிய வகுப்பு- கடிதம்