வாரிசா?

அன்புள்ள ஜெ

தமிழிலக்கியத்தில் நீங்கள் உங்கள் வாரிசை முன்வைக்கிறீர்கள் என்னும் குற்றச்சாட்டு உள்ளது. உங்கள் குடும்பத்தை முன்வைக்கிறீர்கள் என்றும் சொல்லப்படுகிறது. அரசியலில் வாரிசுகள் முன்வைக்கப்படும்போது அதை எதிர்க்கிறோம். இலக்கியத்தில் அதையே நாம் செய்வது முறையான செயலாகுமா?

மதிக்குமார்

அன்புள்ள மதிக்குமார்

சென்ற 30 ஆண்டுக்காலத்தில் நான் செய்த எல்லாச் செயல்களும் கடுமையாக எதிர்க்கப்பட்டுள்ளன. விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் உருவாக்கப்பட்டு விருதுகள் அளிக்கப்படுவது பற்றி இரண்டு ஆண்டுக்காலம் வசைகளும் அவதூறுகளும் உள்நோக்கம் கற்பித்தல்களும் நிகழ்ந்தன. செயலை ஐயப்படுதல் என்பது செயலின்மையெனும் இருளில் ஆழ்துள்ளவர்களின் இயல்பு. உண்மையில் அது அந்த இருளின் இயல்பு. ஆகவே இவற்றை கவனிக்கக்கூடாதென்பது நான் கற்றறிந்த நெறிகளில் ஒன்று. அவற்றுக்குச் செவியளிப்பதைப்போல செயலுக்கு எதிரான ஒன்று இல்லை.

உங்கள் வினா உண்மையானது எனில் இது என் பதில். மேற்கொண்டு விவாதம் நிகழ்த்த விரும்பவில்லை. உண்மையில் இங்கே அரசியலில் வாரிசுகள் முன்வைக்கப்படுவதற்கு எதிராக எவரேனும் ஏதாவது ஒவ்வாமை கொண்டிருக்கிறார்களா என்ன? அதை நியாயப்படுத்தித்தானே அறிவுஜீவிகள் எழுதிக்குவித்துள்ளனர்?

*

அரசியலில் அல்லது பிற துறைகளிலுள்ள வாரிசுகளை நுழைக்கும் போக்கு ஏன் கண்டிக்கப்படுகிறது? அங்கே இயல்பான திறமை கொண்ட ஒருவர் மேலெழுந்து வருவது அதனால் தடுக்கப்படுகிறது. தகுதியற்ற ஒருவர் வாரிசு என்பதனால் மட்டுமே அந்த இடத்தை அடைகிறார். அது அத்துறையின் இயல்பான இயக்கமுறைக்கு எதிரானது. 

அரசியலிலும் தொழிலிலும் வாரிசுகளுக்கு அளிக்கப்படுவது ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள ஒரு கட்டமைப்பு, செல்வம் மற்றும் அடையாளம் ஆகியவை. அரசியலிலும் தொழிலிலும் 90 சதவீத ஆற்றலும் அந்த மூன்றிலுமே உள்ளன. அந்த மூன்றும் அமைந்த ஒருவர் பலருடைய உதவிகளை பெற்றுக்கொண்டு வெற்றிகரமாகத் தொடர முடியும். பெரிய தனித்திறமைகள் தேவை இல்லை. (ஆனால் இன்றைய சூழலில் அரசியலிலும் தொழிலிலுமேகூட திறமையற்ற வாரிசுகள் திணறிக்கொண்டிருப்பதையே நாம் காண்கிறோம். அனில் அம்பானியை எவரும் காப்பாற்ற முடியவில்லை.)

அரசியலில் ஒருவர் வாரிசாக முன்வைக்கப்படுவது ஏன் கண்டிக்கப்படுகிறதென்றால், அரசியல்த் தலைமை தன்னியல்பாக மக்களிடமிருந்து உருவாகி வரவேண்டும் என்பதனால்தான். அவ்வாறு முட்டிமோதி திரண்டு வரும் தலைமையே மக்களின் விழைவை, வரலாற்றின் உண்மையான விசையை பிரநிதித்துவம் செய்யும். அவ்வாறு உருவாகும் தலைவர் அனுபவங்கள் வழியாக முதிர்ச்சி அடைந்தவராகவும் இருப்பார். அதுவே ஜனநாயகத்தின் வழிமுறை. அவ்வாறன்றி மேலிருந்து முன்வைக்கப்படுபவர் ஓர் அமைப்பின் முகம் மட்டுமே.

 *

இலக்கியத்தில் வாரிசு என ஒன்று முன்னிறுத்தப்பட முடியுமா? ஓர் இலக்கியவாதி தன் வாரிசுக்கு எதை அளிக்க முடியும்? ஒரு தொடக்கநிலைக் கவனத்தை அவர் தன் பெயரால் தன் வாரிசுக்கு உருவாக்கி அளிக்க முடியும். ஆனால் அந்த வாரிசு தரமான படைப்பாளி அல்ல என்றால் அந்தக் கவனமே எதிர்மறையாகச் சென்று அவரை மேலே எழமுடியாமலேயே ஆக்கிவிடும்.

இன்னும் சொல்லப்போனால், ஒரு முக்கியமான எழுத்தாளரின் வாரிசு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் அணுகப்படுகிறார். கடுமையான முன்முடிவுகளுடன் மதிப்பிடப்படுகிறார்.  அந்த எழுத்தாளரின் எதிரிகள் அந்த வாரிசின் எதிரிகளாக முதலியேயே வந்து நின்றுவிடுவார்கள். அதிலும் என்னைப்போல வாழ்நாள் முழுக்க எதிரிகளைச் சேமித்தவர்களின் வாரிசு மிகக்கடுமையான எதிர்விசையைச் சந்திக்கவேண்டிய விதி கொண்டவர். 

இயல்பாக ஓர் இளம் எழுத்தாளன் தரமாக எழுதிக்கொண்டு அறிமுகமாகும்போது உருவாகும் முன்முடிவுகள் அற்ற வாசிப்பு அந்த வாரிசுக்கு அமைவதில்லை. பரிவுள்ள பார்வையும் கிடைப்பதில்லை.அந்த வாரிசு தன் தந்தையுடன் தொடர்ச்சியாக ஒப்பிடப்படுவார். அந்த வாரிசு அறிவார்ந்த திண்மை இல்லாதவர் என்றால் அந்த ஒப்பிடப்படுதலின் விளைவான திரிபுகள் அவரை அழித்துவிடும். அப்படி முளையிலேயே அழிந்த சில இலக்கியவாரிசுகள் தமிழகத்திலும் உண்டு. 

இரண்டு வகை திரிபுகள் நிகழும். முதல் திரிபு அந்த வாரிசுக்கு அவர் கொண்டுள்ள படைப்புசார் அகந்தையால் தந்தையை மிஞ்சவேண்டும் என்னும் எண்ணம் உருவாகும் என்பது. அது தொடக்கநிலையில் நன்று. ஒரு மெல்லிய சவாலை அளித்து தீவிரத்தைக் கூட்டும். ஆனால் இலக்கியம் என்பது போட்டி அல்ல. ஒருவர் தன்னியல்பாக தன்னை வெளிப்படுத்துவதும், தன் அகத்தேடலை இலக்கியம் வழியாக நிகழ்த்துவதுமே நல்ல படைப்புகளை உருவாக்கும்.

இரண்டாம்  திரிபு, தான் தன்னுடைய தந்தையின் வெறும் தொடர்ச்சி அல்ல என்று தனக்கும் பிறருக்கும் காட்டுவதற்காக வேண்டுமென்றே தந்தைக்கு எதிர்நிலை எடுப்பது.  அதுவே  எங்கும் அதிகம் காணக்கிடைப்பது. ஏனென்றால் இலக்கியத்திலுள்ள வம்புச்சூழல் அந்த வாரிசிடம் அவர் தன் தந்தையை நிராகரிக்கும்படி நெருக்கடி அளித்தபடியே இருக்கும்.  வேண்டுமென்றே செய்பவர்கள் உண்டு. ஒருவகைகள்ளமற்றதன்மையுடன் அதைச் செய்பவர்கள் உண்டு. 

முதல் வகையினர்இவர் அவர் தந்தையின்  வெறும் தொடர்ச்சிஎன வேண்டுமென்றே திரும்பத் திரும்பச் சொல்வார்கள். வாசிக்காமலேயே அந்த கூச்சலை பல ஆண்டுகளுக்கு எழுப்புவார்கள்.  அந்த இளம்படைப்பாளியின் எந்தச் சாதனையையும் ஏற்க மாட்டார்கள். இரண்டாம் சாரார் அப்பாவித்தனமாகஅப்பா மாதிரி இல்லாம எழுதணும்என தட்டிக்கொடுப்பார்கள். இரண்டும் எங்கோ அந்த வாரிசின் ஆணவத்தைச் சீண்டுமென்றால் அவர் எதிர்நிலை நோக்கிச் செலுத்தப்படுவார். 

திரிபுகளை தவிர்க்க ஆழமான அறிவாணவமும், படைப்பாணவமும் தேவை. ‘நான் எழுதுவது என் எழுத்தை. இது இந்த உலகின் முன் என்னை நான் முன்வைத்தல். எவர் என்ன சொன்னாலும் என்னை நான் வெளிப்படுத்துவதே எனக்கு முக்கியம். வாசிப்பவர்கள் அறிந்துகொள்ளட்டும் என்னை. இன்று இல்லையேல் நாளைஎன நிலைகொள்ளும் தெளிவு. எந்த எழுத்தாளனானாலும் அற்பத்தனத்தை கையாள கற்றுக்கொள்ளும் போதே அவன் மெய்யான இலக்கியவாதியாக ஆகிறான்.

ஆகவே இலக்கியத்தில் வாரிசு என ஒன்று இல்லை. ஓர் எழுத்தாளர் தன் வாரிசுக்கு அளிக்கும் சொத்து என ஏதுமில்லை. எதிர்மறை அழுத்தம் என்னும் சுமையைத் தவிர. (இக்காரணத்தாலேயே இலக்கியத்துறைக்கு வரவே கூடாது என்று எண்ணியிருப்பதாக அஜிதன் பலமுறை சொன்னதுண்டு) 

*

தமிழ்ச்சூழலில் ஒரு முக்கியமான எழுத்தாளரின் மகனோ மகளோ முக்கியமான எழுத்தாளராக ஆவது நமக்கு அறிமுகமில்லை. ஆகவே அதைவாரிசு வருகைஎன நினைத்துக் கொள்கிறோம்.  அது வாரிசுரிமை அல்ல, அறிவுலக நீட்சி.  ஐரோப்பிய இலக்கியச் சூழலில் அது மிக முக்கியமான அம்சம். மூன்று தலைமுறைக் கவிஞர்கள், எழுத்தாளர்கள் எல்லாம் அங்கே சாதாரணம். ஐரோப்பியச் சிந்தனைமரபின் வெற்றிக்குக் காரணமான பலவற்றில் குடும்பத்தொடர்ச்சியும் ஒன்று. இந்திய இலக்கியச் சூழலிலும் அந்த நிகழ்வு குறைவாகவேனும் உண்டு

ஓர் எழுத்தாளரின் மகனோ மகளோ இலக்கியச் சூழலிலேயே பிறந்து வளர்கிறார்கள்.  இளமையிலேயே தங்கள் துறையை கண்டடைகிறார்கள், அதில் முழுமூச்சாக ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு சரியான வழிகாட்டிகள் அமைகிறார்கள். ஆகவே அவர்கள் செல்லும் தொலைவு மிகுதி. ஒருவர் தன் தந்தையிடமிருந்து கற்றுக்கொள்ளும் தொடக்கக் கல்வியை வேறெந்த ஆசிரியரிடமிருந்தும் பெற முடியாது. (நமக்கு இசையில் மட்டுமே அந்த தொடர்ச்சி உள்ளது. ஓரளவுக்குக் ஓவியக் கலையிலும்)

அவ்வாறு மிகச்சிறந்த சூழலில் பிறந்து மேலெழுந்தவர்கள் பலர் ஐரோப்பியச் சிந்தனையிலும் கலையிலும் பெரும் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஐரோப்பிய மேதைகளை கூர்ந்து கவனியுங்கள். பலசமயம் பெயர்களே ஒன்றாக இருக்கும். ஜே.எஸ்.மில் மகன் ஜே.எஸ்.மில் போல. இங்கும் அவ்வாறுண்டு, டி.டி.கோசாம்பியின் மகன் டி.டி.கோசாம்பி.

அவர்களுடன் ஒப்பிடும்போது பிறர் வெவ்வேறு துறைகளில் அலைமோதி தங்கள் ரசனையையும், துறையையும் கண்டடையவே மிகத் தாமதமாகும். சம்பந்தமே இல்லாத கல்வியில் ஆண்டுகள் விரயமாகியிருக்கும். ஒன்ற முடியாத தொழிலைச் செய்தேயாகவேண்டிய சூழலும் உருவாகியிருக்கும். ஆசிரியர்கள், வழிகாட்டிகள் அமைவது தற்செயல். சமயங்களில் அது நிகழ்வதே இல்லை. இந்தியச் சூழலில் ஒவ்வொரு இளைஞருக்கும் அறிவியக்கச் செயல்பாட்டுக்கு எதிரான கடும் அழுத்தமே குடும்பத்தில் இருந்தும் சூழலில் இருக்கும் கிடைக்கிறது.  

இதில் ஒரு சமமற்ற போட்டி உள்ளது என்பது உண்மை. ஆனால் வேறு வழியே இல்லை. ஒருவருக்கு மாணவப்பருவத்தில் இலக்கிய அறிமுகம் அமைகிறது, இன்னொருவருக்கு வேலைகிடைத்தபின் அமைகிறது என்றாலே அது சமமற்ற போட்டிதான். ஒருவரின் வேலை நிறைய ஓய்வுப்பொழுது கொண்டது, இன்னொருவரின் வேலை நேரமே அளிக்காதது என்றாலும் அது சமமற்ற போட்டிதான்.  

உண்மையில், ஓர் எழுத்தாளரின் வாரிசு எழுத்தாளர் ஆவதென்பது அறிவியக்கத்திற்கு ஒரு கொடை என்றே பொருள். அவர் மிகவிரைவாக முன்னால் செல்ல, பிறரைவிட முன்னகர வாய்ப்புள்ளது. அது ஒட்டுமொத்தமான அறிவியக்கத்தின் முன்னகர்தலே.ஒருவர் சென்ற தொலைவின் இறுதியில் இருந்து இன்னொருவர் தொடங்குவது போன்றது அது. உலகமெங்கும் அவ்வாறுதான் கொள்ளப்பட்டுள்ளதே ஒழிய எழுத்தாளரின் மகன் எழுத்தாளர் ஆவது ஒருவகை ஊழல் என்னும் மனநிலை எங்கும் எப்போதும் இருந்ததில்லை.

அந்தத் தொடர்ச்சி ஏன் தமிழ்ச்சூழலில் நிகழ்வதில்லை ? இங்கே எழுத்தாளர்களுக்கு சமூக ஏற்பு இல்லை, ஆகவே எங்கும் மதிப்பு இல்லை, விளைவாக தங்கள் வாரிசுகள் தவறியும் தங்களைப்போல ஆகிவிடக்கூடாது என்றே அவர்கள் எண்ணுகிறார்கள். தங்கள் வாரிசுகளை சமூக மதிப்புள்ள துறைகளில் செலுத்த முழுமூச்சாக முயன்று வெல்கிறார்கள். இதனால் இங்கே  வாரிசுவழியாக அமையும் அறிவுத்தொடர்ச்சி என்பது அமைவதே இல்லை. 

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அப்படி ஒன்று அரிதாக நிகழும்போது உருவாகும் ஒவ்வாமைதான். அதன்மேல் பொறாமையும் காழ்ப்பும் மட்டுமே வெளிப்படுகிறது. அதை மட்டம்தட்ட முண்டியடிக்கிறார்கள். இது நம் சூழலின் அறிவுசார்ந்த வறுமையையும் தாழ்வுணர்ச்சியையும் மட்டுமே காட்டுகிறது.

*

சரி, அஜிதன் என் இலக்கியத்திற்கு வாரிசா?  அஜிதனுக்கு நான் கற்கவும் வளரவும் வேண்டிய சூழலை அளித்தேன். அது தந்தையாக என் கடமை. ஒவ்வொரு தந்தையும் அதைச் செய்யவேண்டும் என்றே சொல்லி வருகிறேன். ‘அவையத்து முந்தியிருப்பச் செயல்’ என அதை வள்ளுவர் சொன்னார். அவை என்றால் தன் மைந்தனுக்குரிய அவை, அவனே தெரிவுசெய்யும் அவை என்று பொருள். பொதுச்சூழல் முன்வைக்கும் அவை அல்ல. தான் உருவாக்கி அளிக்கும் அவையும் அல்ல.

அஜிதன் வெவ்வேறு களங்கள் வழியாக முட்டிமோதிக்கொண்டிருந்தான். முதலில் இயற்கையியல். சூழியல். அதன்பின் திரைப்படம், மேலைச்செவ்வியல் இசை. அங்கிருந்து மேலைத் தத்துவம். கொஞ்சநாள் கதகளியும்கூட. இந்த ஒவ்வொரு களத்திலும் அவனுக்கு நான் வேண்டியன செய்தேன்.  அவன் கடந்துசென்றுகொண்டே இருந்தபோது அவ்வப்போது சலிப்பும் பதற்றமும் வராமலுமில்லை.

சராசரிகளாலான சூழல் அளிக்கும் அழுத்தம், மைந்தன் பலவாறாக திசைதேடி தத்தளிக்கும் போது தந்தையாக  தனக்கே உருவாகும் எதிர்காலம் பற்றிய  பதற்றம் ஆகியவற்றைக் கடந்து தன் மைந்தன் செல்ல விரும்பும் பாதையை முடிந்தவரை அமைத்துக் கொடுப்பதே தந்தை செய்யவேண்டியது. நான் செய்துள்ளது அது மட்டுமே. இன்றியமையாத கடமை, ஆனால் நம் சூழலில் அது எளிதல்ல. பெரும் பொறுமை தேவை. அத்துடன் தன் மகனுக்கும் சேர்த்து பொருள் சேர்த்துக் கொள்ளவேண்டிய தேவையும் உண்டு.

தேர்வு என அஜிதன் பற்றி ஒரு கட்டுரை 2008 ல் எழுதியிருக்கிறேன். (அதில் அஜிதனைப் பற்றி பாவண்ணனிடம் புலம்ப அவர் என்னை ஆறுதல்படுத்துகிறார். அவரே இன்று அவன் நூலை வெளியிட்டு உரையாற்றியிருக்கிறார். அவருடைய சொல் வென்ற தருணம் அது) அக்கட்டுரையை இப்போது கவனப்படுத்தவேண்டும். 

அக்கட்டுரையில் ஓர் இடம். 2003ல் அஜிதனை அரசுப்பள்ளியில் சேர்க்க முடிவெடுத்தபோது அவனிடம் நான் சொன்னேன் ”எங்க அப்பாட்ட பணம் இல்லை. அதனால பயப்பட்டார். நான் அப்டி இல்லை. பணம் வேணும்ணா அதை நான் சம்பாதிப்பேன். அதனால் நீ இனிமே உனக்குப் பிடிச்சதை மட்டும் படி… உனக்கு வேண்டிய பணத்தை நானே சம்பாதிக்கிறேன்”.

2004ல் நான் திரைத்துறைக்குச் சென்று தேவையான பணத்தை உருவாக்கிக் கொண்டேன். அது அஜிதனுக்கு நான் அளித்த சொல். நான் இப்பிறவியில் எந்தச் சொல்லையும் தவறவிடுபவன் அல்ல. எந்தச் செயலையும் செய்யாமல் நிறுத்தி விடுபவனும் அல்ல. அந்த உறுதியுடன் 1986ல் சாவின் முனையில் இருந்து திரும்பி வந்தவன். 

மற்றபடி, ஆசிரியனாக என்னை அணுகும் எந்த இளைஞனுக்கும் எதை அளிக்கிறேனோ அதையே அஜிதனுக்கும் அளித்தேன். இன்று எல்லா இளைஞர்களுக்கும் இதற்கிணையான வழிகாட்டலையும் அளிக்க கூடுமானவரை முயல்கிறேன்.

*

எழுத்தாளனுக்கு இலக்கியத்தில் நேரடி வாரிசு என எவரும் இருக்க முடியாது. அப்படி ஒருவனுக்கு ஒரே ஒரு வாரிசு மட்டும் இருக்கும் என்றால் அவனுடைய இலக்கியச்  செயல்பாடு பொருளற்றது என்றே கொள்ளவேண்டும்.

ஓர் எழுத்தாளனாக நான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றை அளிக்கிறேன். ஒருவருக்கு மொழியையும் வடிவத்தையும் அளித்திருக்கலாம். ஒருவருக்கு தத்துவப் பார்வையை அளித்திருக்கலாம். ஒருவருக்கு இலட்சியவாத நம்பிக்கையை அளித்திருக்கலாம். நான் ஒருவருக்கு எதை அளிக்கிறேன் என நானே கூட சொல்லிவிடமுடியாது. அவர்கள் அனைவருமே என் வாரிசுகளே. அதை சிலர் ஒப்புக்கொள்ளலாம், சிலர் மறுக்கவும் கூடும். ஆனால் வாசகனுக்கும் விமர்சகனுக்கும் அது தெரியும். அப்படி ஓர் அறிவுமையமாக திகழ்வதென்பதே எழுத்தாளனின் பணி.  

அவ்வாறு நான் அளிப்பவை என்னுடையவை கொஞ்சம், நான் பெற்றுக்கொண்டவை மிகுதி. ஏனென்றால் இலக்கியம் என்பது எப்போதுமே ஒரு தொடர்ச்சிதான். ஒருவகையான ஒட்டுமொத்தப் பேரியக்கம்தான். ஆகவே என்னை நான் தல்ஸ்தோய் அல்லது தாமஸ் மன் அல்லது ஹெர்மன் ஹெஸ்ஸின் வாரிசு என சொல்லிக்கொண்டால் அதுவும் ஒருவகையில் சரிதான்.

என் வாரிசுகள் எவர்? நான் மறைந்து என் எழுத்து மட்டும் இங்கே இருக்கையில் எவரிடமெல்லாம் என் எழுத்தில் இருந்தும் என் ஆளுமையில் இருந்தும் பெற்றுக்கொண்ட அம்சங்கள் எஞ்சியிருக்கின்றனவோ அவர்கள் அனைவரும்தான். எவரெல்லாம் அவற்றை வளர்த்து தங்களுடையவை என ஆக்கிக்கொள்கிறார்களோ அவர்களே எனக்கு கடன் செய்கிறார்கள். பெற்ற மைந்தன் நீர்க்கடன் செய்கிறான். மாணவர்களாக அமைபவர்கள் சொற்கடன் செய்கிறார்கள். நான் என் ஆசிரியர்களுக்கு அதைச் செய்கிறேன்.  

நான் ஓர் அகவையில் அடுத்த தலைமுறையினரை மகன்கள், மகள்கள் என இயல்பாகவே எண்ண தொடங்கினேன். அந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என எனக்கே தெரியாது. ஆனால் அதன்பின் அவர்கள் ஒவ்வொருவரின் வளர்ச்சியையும் விழைகிறேன். ஒவ்வொருவர் மீதும் கவனத்துடன் இருக்கிறேன். ஒருவரை இன்னொருவரிடம் இருந்து தகுதி சார்ந்து மட்டுமே மேலே தூக்குகிறேன். கண்டித்தாக வேண்டும் என்றால் கண்டிக்கிறேன். என் கணிப்புகள் தவறாகவும் இருக்கலாம். ஆனால் இன்று நான் என் ரசனை, மதிப்பீடு ஆகியவற்றை நம்பி முன்வைத்தாகவேண்டும். மானசீகமாக இவர்கள் அனைவரையுமே என் வாரிசுகள் என்றே எண்ணுகிறேன். அவர்கள் அவ்வாறல்ல என என்னை நிராகரித்தால் அது அவர்களின் பிரச்சினை, அவ்வளவுதான்.

அஜிதனை மட்டும் எழுத்தாளனாக நான் முன்வைக்கிறேனா? இந்த பக்கங்களைப் பார்க்கும் எவருக்கும் தெரியும், இதில் எவரெவரெல்லாம் எப்படியெல்லாம் முன்னிறுத்தப்பட்டுள்ளனர் என. இப்பக்கங்களில் பிற படைப்பாளிகள் பற்றிய எழுத்துக்களே அளவில் பெரும்பங்கு. படைப்புத்திறன் கொண்ட, என் கவனத்திற்கு வந்த ஒருவரையேனும் நான் கவனப்படுத்தாமல் விட்டுவிட்டேன் என எவரும் சொல்லமுடியாது.  அவர்களில் எனக்கு எதிரான காழ்ப்புகளை பதிவுசெய்தவர்களும் உண்டு . அதை என் இலக்கியக்கடமை என்றே நினைக்கிறேன். 

ஆனால் வம்பாளர்களுக்குச் செவிகொடுத்து நான் பெருமதிப்பு கொண்டுள்ள அஜிதன் என்னும் எழுத்தாளனை, அறிஞனை நான் முழுமையாகப் புறக்கணிக்கவேண்டும் என நான் எண்ணவில்லை. நான் செய்யவேண்டியதை என்றும் நானே முடிவுசெய்து வந்துள்ளேன். என்னை செலுத்த எவரையும் அனுமதித்ததில்லை. 

இந்த புத்தகக் கண்காட்சியில் மட்டும் எனக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்ட பன்னிரண்டு  நூல்கள்  பார்வைக்கு வந்தன. அவர்கள் அனைவருடனும் நான் இருந்து கொண்டிருக்கிறேன். அவர்களே இலக்கியத்தில் வாரிசுகள். நான் சென்றபின்னரும் அவர்களிடம் நான் எஞ்சுவேன்.

அதற்கும் அப்பால் மகன் என நான் நினைப்பவர்களும் பலர் உண்டு. அதை அவர்களும் அறிவார்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைவண்ணான் வண்ணாத்தி கூத்து
அடுத்த கட்டுரைவாசித்தலெனும் பயணம்… கடிதம்