அன்னையரின் மடியமைதல்

இந்த ஆண்டு கொற்றவை நாவலின் புதிய, அழகிய பதிப்பு விஷ்ணுபுரம் வெளியீடாக வந்துள்ளது. நீண்டநாளாக பரவலாகக் கிடைக்காமல் இருந்தது. இந்த புத்தகச் சந்தையில் பலர் அதை வாங்கினர். சுவாரசியமான ஒரு வாசகருக்கு பதிமூன்று வயதுதான். எட்டாம் வகுப்பு மாணவி.

“இது தூய தமிழ்லே இருக்கு தெரியும்ல?” என்றேன்.

“தெரியும், எங்கப்பா சொன்னார்” என்றார்.

“அப்பா என்ன பண்றார்?” என்றேன்.

“அவரு தமிழ் ஆசிரியர்…”

“சரிதான்” என்று சொல்லி கையெழுத்திட்டு அளித்தேன். மெல்ல “இதுக்கு முன்ன என்ன வாசிச்சீங்க?” என்றேன்

“வேள்பாரி… அதுக்கு முன்னாடி வெண்முரசிலே முதற்கனல்”

மேற்கொண்டு ஒன்றும் கேட்பதற்கில்லை.

கொற்றவை ஒரு புதுக்காப்பியம். அதன் பத்திகளை மடித்து கீழ் கீழாக அடுக்கினால் புதுக்கவிதை என்றே சொல்லிவிடலாம். மரபான உவமை- உருவக அணிகள் அல்ல, நவீனக்கவிதையின் படிமங்களால் ஆனது அது. வசந்தகுமார் அது வெளிவந்தபோது என்னிடம் சொன்னார். ‘நவீன கவிதையிலே ஒட்டுமொத்தமா இருக்கிற கவிதைவரிகளை விட இதிலே அதிகம்”

நான் வெண்முரசு பற்றி அப்படி எண்ணுவதுண்டு. ஒட்டுமொத்த தமிழ் நவீனக் கவிதையின் உலகமே வெண்முரசுக்குள் ஒரு பகுதி என அமையும் அளவும் வீச்சும் கொண்டதுதான். நீர்க்கோலத்தில் ஒரு மாயக்காடு வரும் இடம் ஒரு நவீன காவியமென்றே சொல்லத்தக்கது. கவித்துவம் என்பது கவிதையில் தனித்து வெளிப்படுவதனால் அது அடிக்கோடிடப்படுகிறது. நவீனப்புனைவுகள் கவிதையால் ஆனவை, ஆனால் அவை தங்களை கவிதை என முன்வைப்பதில்லை.

தமிழ் நவீனக் கவிஞர்களில் கொற்றவையை வாசித்த எவரையும் நான் இது வரை சந்தித்ததில்லை. அவர்களின் உலகம் சற்று  எளிய ‘நான்’களால் ஆனது. அவர்கள் உருவகித்துக்கொள்ளும் நான் பெரும்பாலும் சமகாலச் சிக்கல்களால் ஆனது. தனிமை, காதல், வாழ்வின் அர்த்தமின்மை,கொஞ்சம் அரசியல். அந்த நான் அவர்களின் குலதெய்வத்துடன் உரையாடாது. அவர்களின் தந்தையருடன்கூட அது பேச ஒன்றுமில்லை. கொற்றவை காலமில்லாத அகவெளியில் என்றுமென நின்றிருக்கும் வாசகனுடன் உரையாட முற்படும் படைப்பு. தமிழ் நிலத்தின் கனவுப்பரப்பில் மட்டுமே நிலைகொள்வது.

கொற்றவையையும் ஒரு நவீனக் கவிதையெனவே எழுதத் தொடங்கினேன். பல பகுதிகள் தெளிவான மரபான யாப்பிலும் அமைந்துள்ளன- ஆனால் பத்திவடிவில் இருக்கும். வேண்டுமென்றே கொஞ்சம் யாப்பமைதி மாற்றியமைக்கப்பட்டும் இருக்கும். கவிதையாக ஆகவேண்டுமென நினைத்து உருவாக்கப்படவில்லை. கவிதையின் செறிவு அந்நூலுக்கு தேவைப்பட்டது.

தமிழ்நிலத்தில் தமிழ் உருவாகாத தொல்காலத்தில் கொற்றவை தொடங்குகிறது. தமிழ் தோன்றி, தெய்வங்கள் தோன்றி, மூவேந்தர் தோன்றி, முதல் நகர்கள் தோன்றி, பின் அழிந்து, இன்றைய மாமதுரை உருவாகிய பின்னர் கதை தொடங்குகிறது. அதுவரையிலான நவீனக் கதையாடல் ஒரு தனிப்பகுதி. வாசகர்களில் எவர் அந்த ஐம்பது பக்கங்களைக் கடக்கிறார்களோ அவர்களே அதன் அடுத்த அலைமேல் ஏறிக்கொள்ள முடியும். ஆனால் அது விசை கொண்டது. இறுதிவரை ஏற்றிச்செல்லும் ஆற்றல் மிக்கது.

ஆதிமந்தி முதல் நப்பின்னை வரை, கிரிஷா கௌதமி முதல் சாலினி வரையிலான பெண்களின் கதைகள் செறிந்த ஓர் உலகம் கொற்றவையுடையது. அடித்தளத்தில் சங்ககால நிலம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த மானுடரின் கனவுகளை இணைத்துக்கொண்டு அது ஒரு வலைப்படலமாக ஆகிறது. தமிழ்நிலத்தில் நிகழ்ந்த எல்லா தத்துவ விவாதங்களும் அதில் உள்ளன. அடிப்படையான எல்லா படிமங்களும் அதில் பேசப்படுகின்றன.

கொற்றவையை இன்று புரட்டிப் பார்க்கும்போது அதன் ஒட்டுமொத்தத் தன்மையும், நகைகளைப்போல நுணுக்கமான பகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்டிருக்கும் அமைப்பும் எனக்கு திகைப்பை உருவாக்குபவை. தமிழின் தனிப்பண்பாட்டை முழுமையாக முன்வைக்கும் நவீனத் தமிழிலக்கியப்படைப்பு பிறிதொன்றில்லை என்றே பெருமிதத்துடன் எண்ணிக்கொள்கிறேன். உண்மை, அது சற்றே சேரர் நிலத்திற்கும் சேரர் மணிமுடிக்கும் முதன்மை அளிப்பது. அதை தவிர்க்க முடியாது. நான் சேரநிலத்தவன். அதிலிருந்து கணமும் விடுதலை அடையாதவன், அடைய விரும்பவுமில்லை.

கொற்றவை எழுதுவதற்கு முன் நானும் வசந்தகுமாரும் அ.கா.பெருமாளும் நண்பர் மதுரை சண்முகம் காரில் கேரளத்தின் கண்ணகி ஆலயங்கள் வழியாக ஒரு நீண்ட பயணம் செய்தோம். பாலக்காடு சிற்றூரில் தொடங்கி தெற்கே ஆற்றுகால் வரை. அதன்பின் பல கண்ணகி எனும் குறும்பா பகவதி ஆலயங்களுக்குச் சென்றுள்ளேன். கொடுங்கல்லூருக்கு திரும்பத் திரும்பச் செல்கிறேன். தமிழ்நிலத்தில் கண்ணகி சிலம்பு எனும் காவிய வாசிப்பினூடாக மட்டுமே நிலைகொள்பவள். கேரளத்தில் அவள் மாமங்கலையாக ஊர் தோறும் வாழ்பவள். இந்தப் புதுக்காவியம் வழியாக நான் என்றுமுள்ள என் அன்னையரின் முழுமை வடிவை சொல்லில் சென்று தொட்டிருக்கிறேன் என நினைக்கிறேன்.

தமிழ்ப்பண்பாடு ஆண்மைய- தந்தை மையத் தன்மை கொண்டது. வீரர் வழிபாட்டுத்தன்மை கொண்டது. ஆனால் அதை உண்மையில் புரிந்துகொள்ள அன்னையர் வாழும் ஓர் ஆழத்தை சென்றடைந்தாகவேண்டும். அங்கு செல்வது வெறும் பண்பாட்டுப் பயணம் அல்ல. அது ஓர் ஆன்மிகப்பயணமும் கூட. எந்த மெய்யான பண்பாட்டுப் பயணமும் ஆன்மிகப் பயணமே ஆகும். அதை மேற்கொள்பவர்கள் தமிழ் நிலத்தில் அடிக்கொரு இடமென அமைந்துள்ள அன்னைதெய்வங்களை அறியலாகும். கொற்றவை அதற்கான வாசலும் வழியுமாக திகழும் படைப்பு. அந்தப் பயணத்தை மொழிவழி நிகழ்த்திக்கொள்ள உளம்கொள்பவர்களுக்கானது.

ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம்பேர் சக்குளத்து பகவதி முதல் சோட்டானிக்கரை பகவதி வரை அன்னையரைத் தேடி கேரளம் வந்துகொண்டே இருக்கிறார்கள். இத்தனை தெய்வங்களின் பேராலயங்கள அமைந்த சோழ பாண்டிய பல்லவ நிலத்திலிருந்து சேரர்நிலத்திற்கு அவர்களை வரச்செய்வது ஒன்றுண்டு. பிற தெய்வங்களை அடிபணிகிறோம், அன்னை தெய்வங்களின் மடியமைகிறோம். அந்த வேறுபாடு மிகப்பெரியது. இந்நாவலும் அத்தகைய ஒரு தவத்தின் விளைவாக உருவானதே

கொற்றவை வாங்க

கொற்றவை மின்னூல் வாங்க

முந்தைய கட்டுரைரமீஸ் பிலாலி
அடுத்த கட்டுரைகாகமும் கதைகளும்