யாத் வஷேம் – இரு தேசங்களின் கதை: சுதா ஶ்ரீனிவாசன்

 

யாத் வஷேம் வாங்க

அன்புள்ள ஜெ,

சென்னை நண்பர் செந்தில் சமீபத்தில்யாத் வஷேம்நாவலை கொடுத்தார். முன்னர்ஒரு கூர் வாளின் நிழலில்லும் அவர்தான் பரிந்துரைத்தார். ஒன்று புனைவு, மற்றொன்று தன்வரலாறு. ஆனால், இரண்டும் பேசுவது ஒரே விஷயம்தான்.

ஒரு கூர் வாளின் நிழலில்இனப்படுகொலையையும் அதனால் ஏற்பட்ட போரையும் பற்றி ஒரு நேரடி வர்ணனை கொடுக்கிறது. அப்போரின் பின்விளைவுகளை நாம் இன்றும் கண்டுகொண்டிருக்கிறோம்.

யாத் வஷேம்பேசுவது நாஜிகள் நடத்திய கொடுமையையும் அதன் விளைவுகளையும். சரித்திர பாடத்தில் சில பக்கங்களில் கூறப்பட்டிருக்கும், பரீட்சைக்கான கேள்விபதிலாக மட்டுமே பார்த்துக்கடந்த, நாம் கற்காத ஒரு பாடத்தை.

தாய், தந்தை, பதின்ம வயதில் இரு பெண்கள், இரண்டு வயதில் ஒரு ஆண்குழந்தை கொண்ட ஒரு யூத குடும்பம். விதிவசத்தால் தந்தையும் இரண்டாவது மகளும் மட்டும் தப்பி இந்தியா வந்தடைகின்றனர். பெங்களூரில் தொடரும் வாழ்க்கையில் அந்தப் பெண் இரண்டு வருடங்களில் தந்தையையும் இழந்துவிடுகிறாள். பிரிந்து வந்த தாயும், தமக்கையும், தம்பியும் என்னவானார்கள் என்ற அவளது தேடலும் அதன் முடிவில், தன்னுடைய எழுபதாவது வயதில், அவள் கண்டடையும் விடையுமே இந்த நாவலின் பேசுபொருள்.

இந்நாவல் கன்னடத்தில் நேமிசந்த்ரா எழுதி தமிழில் கே.நல்லதம்பி மொழிபெயர்ப்பில் வந்துள்ளது. மொழிபெயர்ப்பில் பேச்சுத்தமிழும் எழுத்துத்தமிழும் கலந்து வருவது சற்று இடரளிக்கிறது. ஆனால் அதை மீறி கதை நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது.

நாஜிப்படையின் கோரத் தாண்டவத்தை கண்டவர்கள், அனுபவித்தவர்கள் அதிலிருந்து கற்றுக்கொண்டது என்ன? இஸ்ரேல் உருவான பின்னர் அவர்கள் அடைந்த மாற்றத்தை எப்படி வகைப்படுத்துவது?

போர் எங்கு நடந்தாலும், எக்காலத்திலும், இழப்புகள் முழுவதும் பெண்களுக்கே. வெண்முரசின் குருதிச்சாரலில்  படித்த அதே வரிகள் இந்நாவலிலும். வெண்முரசு நடந்து முடிந்த கதை. ஆனால் இது இன்றும் தொடரும் கதை. யூதர்களும், இஸ்லாமியரும் ஒரு கொடிவழியில் வந்தவர்கள்! இன்றும் தொடர்வது சகோதரர் இடையேயான போரே! அன்றும், இன்றும், என்றும் இழப்பும் துயரும் பெண்களுக்கே!

நாவலில் காந்தியின் நாட்டில் பாதுகாப்பை உணர்ந்த பெண், வயது முதிர்ந்து தன் உறவினரை பற்றி அறிந்துகொள்ள செல்லும் இடத்தில், இஸ்ரேலில், கேட்பதும் காண்பதும் அவளுடைய நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகின்றன. அந்த நாவல் விவரிப்பது நாவலாசிரியரின் கற்பனையை அல்ல, இன்றைய நிலையை.

கொலைபாதகங்களுக்கு தீர்வு கொலைபுரிவதுதான் என்றால், அது சென்றுசேரும் முடிவு என்னவாக இருக்கும்? போர்களின் கொடூர விளைவுகள் இன்றைய மக்களால் மறக்கப்பட்டுவிட்டனவா? மனித நாகரிகம் உண்மையிலேயே வளர்ச்சிதான் கண்டுள்ளதா?

இந்த கேள்விகள் சென்று குவிவது காந்தி என்னும் புள்ளியில் தான். ஆனால், காந்தியின் கொலையையே நியாயப்படுத்தும் ஒரு கும்பல் இருக்கத்தான் செய்கிறது. ஆம், சில நாட்களுக்கு முன் ஒரு whatsapp forward-கோட்ஸேவிற்கு தண்டனை விதித்த நீதிபதியின் தன் வரலாற்று நூலின் ஒரு பகுதியெனஅதில் அவர் அந்தத் தீர்ப்பை வழங்கியதற்காக வருந்துவதாகவும், அந்த பாவம் தன்னை மறுபிறவியிலும் தொடருமென்றும் கூறியிருக்கிறார். தன் இஷ்டப்படி எதையெதையோ cut, copy, paste செய்து இப்படி ஒரு அவதூறு பரப்புபவரின் நோக்கம் என்ன? காந்தி இவர்களின், இவர்கள் தங்களுக்கு தாங்களே மறைக்க/மறக்க விரும்பும், மனசாட்சியை சீண்டிக்கொண்டேயிருப்பதனாலா? ஆகையால் அவரை மூர்க்கமாக நிராகரிக்க வேண்டியுள்ளதா?

இந்த கதையில் காந்தியின் தேசம் ஹ்யானா()அனிதாவில் ஏற்படுத்தும் மாற்றங்களும், கேள்விகளும் தற்போதைய இஸ்ரேல்பாலஸ்தீன நிலையை சில வருடங்களுக்கு முன்னரே கதாசிரியர் ஊகித்ததனாலோ? யூதப் படுகொலை கதையின் முக்கிய பேசுபொருள் என்று தோன்றினாலும், அதன் பின்புலத்தில் ஒரு பெண்ணின் தேடலும், அறிதலும், ஆற்றலுமே துலக்கம் பெறுகின்றன. ஒரு வகையில் இது பெண்ணியத்தை சரியாகச் சித்தரிக்கும் படைப்பு என்றே சொல்வேன். உலகெங்கும் மேல்நிலை பள்ளிப் பருவத்தில் இருக்கும்  மாணவர்கள் அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய ஒரு நூல் இது.

சுதா ஶ்ரீநிவாஸன்  

முந்தைய கட்டுரைஅழிவின் நடனம் -கடிதம்
அடுத்த கட்டுரைசு சமுத்திரம்