பெண்களுக்கான யோக முகாம் அறிவிப்பு

வரும் ஜனவரி 26, 27 மற்றும் 28 தேதிகளில் ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் குரு சௌந்தர் நடத்தும் பெண்களுக்கான தனி யோக முகாம் ஒருங்கிணைக்கப்படுகிறது. ஏற்கனவே இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட பெண்களுக்கான யோக முகாம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அது எந்தெந்த வகையில் பயனுடையதாக இருந்தது என பங்கேற்றவர்கள் உணர்ச்சிகராமாக எழுதிக்கொண்டே இருந்தனர். ஆகவே இன்னுமொரு முகாம்.

பெண்களுக்கான உடல் – உளப்பிரச்சினைகள் தனியானவை. பொதுவான யோகப்பயிற்சி அவர்களுக்கு உதவியானதே. ஆனால் பெண்களுக்கு மட்டுமாக கூடுதலான சில பயிற்சிகளும், சில கவனங்களும் தேவை. பெண்களுக்கு உளநிலையிலும் உடல்நிலையிலும் ஓர் அலை உள்ளது. தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்கள். சோர்வுநிலை, பின் ஊக்கநிலை என அவை தொடர்கின்றன. பலவகையான உளச்சிதறல்களும் உளத்தாழ்வு நிலைகளும் உள்ளன. சிலவகை மருத்துவச் சிகிச்சைகளின் உடன்விளைவாகவும் இவை உருவாகின்றன. அவற்றில் பெரும்பாலானவை யோக முறைப்படி குணப்படுத்தக்கூடியவையே.

மரபான யோகமுறையிலேயே இதற்கான பயிற்சிகள் உள்ளன. ஆனால் முறையான யோக ஆசிரியரின் வழிகாட்டலுல், அவருடைய பரிந்துரைப்படியே இவற்றை செய்யமுடியும்.  மரபான யோகமுறைமையை கற்பிக்கும்  சத்யானந்த யோக மையத்தைச் சேர்ந்தவரான சௌந்தர் இதைக் கற்பிக்கிறார்.

இப்பயிற்சி பெண்களுக்காக மட்டும். இது குருகுல முறைப்படி நேர்ப்பயிற்சியாக நடத்தப்படுகிறது. ஆண்கள் துணையாக உடன்வரலாம். குழந்தைகளும் வரலாம். ஆனால் அவர்கள் யோகப்பயிற்சிகளில் கலந்துகொள்ள முடியாது. பெண்கள் தங்க தனி வசதிகள் உண்டு. கூட்டாக வருவதும் ஒருங்கிணைக்கப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் எழுதலாம்: [email protected]

முந்தைய கட்டுரைநவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை?
அடுத்த கட்டுரைநம் குழந்தைகளுக்கான கதைகள், கடிதம்